குழந்தைகள் விரும்பும் கதை சொல்லி



குழந்தைகள் உலகம் கற்பனைகள் நிறைந்தது. அதில் யானைகள் பறக்கும்.. சுவர் பேசும்.. பட்டாம் பூச்சி பாடும்.. டெடி பியர் ஒளிந்து விளையாடும்.. குழந்தைப் பருவத்தில் கதை சொல்லி நமக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களே மனதில் நிற்பார்கள். 
இப்படியாக நானும் கதை சொல்லியானதே ஒரு கதைதான் என கதை பேசத் தொடங்கிய வித்யா, குழந்தைகள் கூடி இருக்கும் இடத்தை நோக்கி கதை சொல்வதற்காகவே தினம் தினம் செல்கிறார். கூடுதலாக குழந்தைகளுக்காக S4STORIES  எனும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

எனக்கு ஊர் சேலம். எனது குழந்தைப் பருவத்தில் தாய் வழி பாட்டி ஒருவர் நாமக்கல்லில் இருந்து அடிக்கடி வருவார். அவர் வந்ததுமே மொட்டை மாடியில் கயிற்றுக் கட்டிலைப் போட்டு, வானத்தைப் பார்த்தபடி பாட்டி அருகே படுத்து கதை கேட்கத் தொடங்குவேன். தினம் ஒரு கதை பாட்டியிடம் இருந்து வரும். இறுதியாக அதில் ஒரு நல்ல செய்தி இருக்கும்.

நான் இஞ்சினியரிங் முடித்தபோது, டெக் மகிந்திராவில் வேலை கிடைத்தது. ஹைதராபாத், பெங்களூரு என பணி நிமித்தமாக பயணித்தும், எனக்கான வேலை இது இல்லை என மனம் சொல்ல ஆரம்பித்தது.

பொறியியலில் நான் கோல்ட் மெடலிஸ்ட். என்றாலும் எனக்கான தளம் இது இல்லை என்று உணர்ந்தபோது திருமணம் முடிந்திருந்தது. கணவரின் பணி நிமித்தமாக சிங்கப்பூர், லண்டன் எனத் தொடர்ந்து அவரோடு பயணித்துக் கொண்டிருந்தேன்.நாங்கள் லண்டனில் வசித்தபோதுதான் என் மகள் பிறந்தாள். 

அங்கு அரசாங்கமே கைக்குழந்தைகளுக்கான சில்ரன் சென்டர்களை நடத்துவதால், பள்ளி செல்லும்வரை, பெற்றோர் குழந்தைகளை அங்கு கொண்டு செல்லலாம். அது ஒரு நவம்பர் மாதக் குளிர் காலம். ஒரு வயதுக் குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்ச்சி அன்று இருந்தது. இன்று மார்க் வருகிறார். குழந்தைகளுக்கு கதை சொல்லப் போகிறார் என்றார்கள்.

அனைத்து அம்மாக்களும் மார்க் வருகிறார்.. மார்க் வருகிறார்.. என மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, எனக்கோ யார் அந்த மார்க் என ஆர்வம் பொங்கியது. அப்போது 85 வயது மதிக்கத்தக்க ஒருவர் கையில் கிடாரோடு நுழைந்தார். அவரின் தோற்றத்தைப் பார்த்த நான், தவழுகிற, உட்கார முயற்சிக்கிற குழந்தைகளுக்கு இவர் என்ன கதை சொல்லப் போகிறார் என ஆச்சரித்தோடு பார்க்கத் தொடங்கினேன்.

ஒருசில குழந்தைகளுக்கு மார்க் ஏற்கனவே பரிச்சயம் என்பதால் அவரைப் பார்த்ததுமே முகத்தில் அப்படியொரு புன்னகை. மிகமிக உயரமாய் இருந்த மார்க்கை
அண்ணாந்து பார்த்த வண்ணம் இருந்தனர்.மார்க் கிடாரை எடுத்து வாசிக்க ஆரம்பித்ததுமே குழந்தைகள் குதித்து ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். சில குழந்தைகள் வாயைத் திறந்த நிலையில் ஆ வென கண் இமைக்காமல் மார்க்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

கதையினை அவர் பாட்டாய் படித்து படங்களைக் காட்டி, கரடி, பூனைகள் எத்தனை இருக்கு என எண்ணிக் காட்டினார். தன் குரலை விலங்குகளின் குரலில் மாற்றி மாற்றி பேசி வாய்ஸ் மாடுலேசனில் அனிமல் கேரக்டராகவும் மாறினார். குழந்தைகளோ சிரிக்க ஆரம்பித்தனர். 

கதைகளுக்கு நடுவே ஃப்ரிட்ஜ் உள்ளிருந்து வொய்ய்ய்ய்ய்னு சத்தம் வந்தது… கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு அலாரம் அடித்தது.. என சத்தங்களையும் எழுப்புவார். அவரின் சத்தங்களை குழந்தைகள் உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்தனர். எனக்கோ இது ஆச்சரியமாகவும் வியப்பாகவும் இருந்தது.மார்க்கை அப்படியே பின்பற்றி என் மகளுக்கு கதைப் புத்தகங்களை அறிமுகப்படுத்தத் தொடங்கினேன்.

தினம் ஒரு கதையை வாய்ஸ் மாடுலேசன் செய்து வாசிக்கத் தொடங்க, கொஞ்ச நாளில் அவளே புத்தகத்தைக் கொண்டு வந்து என்னை படித்துக் காட்டச் சொல்லி கேட்கத் தொடங்கினாள். கதையில் முடிவடையும் வார்த்தையை  ஆறு மாதத்திலே சொல்லத் தொடங்கினாள். புத்தகம் படிக்கும் ஆர்வம் என் மகள் மனதுக்குள் வரத் தொடங்கியது. 

அடுத்த அடுத்த கதைப் புத்தகத்தை நோக்கி அவளை கொஞ்சம் கொஞ்சமாய் நகர்த்தினேன். அவளுடைய 6 மாதத்தில் தொடங்கி, ஆறு வயதுவரை என் மகளுக்கு புத்தகத்தை வாசித்துக் காட்டினேன். மூன்றாவது படிக்கும்போதே அவள் ஹாரிபாட்டர் புத்தகத்தை பார்வையாலே மதியத்திற்குள் வேகமாகப்படித்து முடித்துவிடுகிறாள்.

குழந்தையில் நான் அவளுக்காக கதை சொல்லும்போது மார்க்கை பார்ப்பதுபோலவே என்னையும் அவள் ஆர்வமாக பார்ப்பதை கவனித்திருக்கிறேன். இதுதான் நான் கதைசொல்லியாவதற்கு எனக்கான ஸ்பார்க்காக இருந்தது. எல்லாக் குழந்தைகளுக்காகவும் கதை சொல்வதை ஏன் ஒரு புரொஃபஷனாக செய்யக் கூடாது என யோசிக்கத் தொடங்கினேன்.

ஒருமுறை மார்க்கை நேரில் சந்தித்து கதை சொல்லி ஆவது குறித்து ஆலோசனை கேட்கத் தொடங்கியதில் அவர் எனக்கு நம்பிக்கையை விதைத்தார். தொடர்ந்து குழந்தைகள் சைக்காலஜி குறித்து ஆழமான வாசிப்பைத் தொடங்கி, டிப்ளமோ இன் ஏர்லி சைல்ட் கேர் படிப்பையும் முடித்தேன்.

எங்கள் மகள் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில்தான் வளர வேண்டும் என நானும் எனது கணவருமாக முடிவெடுத்து தமிழகம் திரும்பினோம்.என் மகளோடு சேர்ந்து அருகில் இருக்கும் குழந்தைகளுக்கும் கதை சொல்லத் தொடங்கியதில், குழந்தைகள் என்னிடம் ஒட்டிக் கொண்டார்கள். 

என்னை அதிகமாக நேசிக்கத் தொடங்கினார்கள்.இன்டர்நேஷனல் ஸ்டோரி டெல்லர் ஜீவா ரகுநாதன் அறிமுகம் எனக்குக் கிடைக்க, குழந்தைகளுக்குள் குழந்தையாக கதை சொல்லும் அவரின் வித்தை கண்டு வியந்ததோடு, அவரிடத்திலும் ஆலோசனைகளைப் பெற்றேன்.

 எப்படி கதைகளை ஃபிரேம் பண்ணலாம், குழந்தைகளுக்கு இன்னும் எப்படி சிறப்பாகக் கதைகளைச் சொல்லலாம் என்பதைக் கற்றுத் தந்தார். அவரின் வாய்ஸ் மாடுலேஷனும் என்னை ஈர்க்க, நானும் குழந்தைகளிடத்தில் வாய்ஸ் மாடுலேஷனை முக்கிய டூலாகப் பயன்படுத்த ஆரம்பித்தேன். 

கூடுதலாக கதை மாந்தர் கேரக்டர்களை வேடமிட்டு கதை சொல்வது, பப்பட் ஷோ, ஆர்ட் அண்ட் க்ராப்ட் என குழந்தைகளிடம் கதைக்குள் இருக்கும் நன்னெறிகளைப் புகுத்தத் தொடங்கினேன்.

குழந்தைகள் கூடியிருக்கும் இடத்திற்கு யார் அழைத்தாலும் உடனே கிளம்பிவிடுவேன். அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், கேன்சரால் பாதிக்கப்பட்டு புற்றுநோய் மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகள் எனத் தேடிச் சென்று கதை சொல்லத் தொடங்கியதில் என்னுடைய S4stories சென்டர் உதயமானது.

15 ஆண்டுகளை இந்தத் துறையில் கடந்தாச்சு. சமூக அக்கறையை வளர்த்தெடுக்கும் நோக்கில், குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டால் வரும் சுற்றுச்சூழல் கேடு, இயற்கையை நேசிப்பது என சமூகம் சார்ந்த விஷயங்களை கதை வடிவில் சொல்வதோடு, தியேட்டர் பயிற்சி, கதை எழுதப் பயிற்சி, எழுதிய கதைகளை புத்தக வடிவில் கொண்டு வரவும் கற்றுத் தருகின்றேன்.
குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது ரொம்பவே முக்கியம் என்றவாறு விடைபெற்றார்.

-மணிமகள்