சிறுகதை - கடைசி அக்ரிமெண்ட்!



மூச்சடங்கிய நிசப்தத்துடன் பேச்சரவமின்றிக் கிடந்தது வீடு. அடிக்கடி முகத்தைத் திருப்பியபடி, வலைவீச்சுப் பார்வையை அப்படியும், இப்படியுமாக சேகர் அலையவிட்டும், கௌரியின் மாமனார் மகாலிங்கம் இருப்பதற்கான அறிகுறி எதையும் காணோம். கல்லூரி விடுமுறை நாளாக இருந்தும், இறந்துபோன கௌரியின் கணவரின் தங்கையான சாவித்திரியும் கண்ணில் தட்டுப்படவேயில்லை.
அஞ்சல் வழியில் முதுகலைப் பட்டப் படிப்புப் படித்து வருகிற கௌரிக்கு டியூஷன் சொல்லித் தருவதற்காக வந்து அவளுக்கு அருகில் உட்கார்ந்து அரைமணி நேரமாகியும், தான் வீட்டில் இருப்பதை உணர்த்தும்விதமாக குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டோ, செருமிக்கொண்டோ இருக்கிற மகாலிங்கத்திடமிருந்து எந்த சமிக்ஞையும் வந்திருக்காதது அவனுக்கு வியப்பாக இருந்தது.

‘எங்க கௌரி... ஒங்க மாமனாரக் காணோம்?’ என்று கேட்க வேண்டும் போல் இருந்தாலும், மனசுக்குள் சட்டென முட்டுக்கட்டை விழுகிறது. காரணம், அப்படித்தான். ஒரு நாள் அவர் வீட்டில் இருப்பது தெரியாமல் ‘‘ஒங்க மாமா ஊருக்கு எங்காச்சும் போயிட்டாரா? ஆளக்காணோம்? ஒருவேள அப்டி அதிசயம் நடந்திருந்தா இன்னிக்காவது ஃப்ரீயா ஏதாச்சும் பேசலாமே..!’’ என்று அவளிடம் சேகரன் சொல்லிக் கொண்டிருக்க...

தனது அறைக்குள்ளிருந்து வேகமாய் வெளியில் வந்த அவர், ‘‘அதுதே நடக்காது தம்பீ. நான் இல்லேன்னா, ரொம்ப நல்லதாப் போச்சு... கௌரிகிட்ட  பல்லிளிச்சுப் பேசிச் சிரிச்சுக் கும்மாளம் போடலாம்ன்னு நெனச்சியாக்கும்?  நாம போட்டுக்கிட்ட அக்ரிமெண்டுப்படி நீ நடக்கலைன்னா வீட்டுக்குள்ள மட்டும் இல்ல... இந்தத் தெருவுக்குள்ளகூட நொழையவுட மாட்டேன்...’’ என்று  சிக்கல் வார்த்தைகளுடன் சினந்திருந்தது நினைவுக்கு வந்து முட்களாக மனசில் குத்த, தேவையற்ற ஒரு சொல்லும் வராதபடி நாவடக்கம் காத்தான்.

மகாலிங்கம் போட்டிருந்த வாய்வழி அக்ரிமெண்டின்படி எப்பவும்போல தனக்கு எதிரில் அமர்ந்திருந்த கௌரிக்கும் தனக்கும் இரண்டடி தூரம் இடைவெளி இருக்கும்படியே உட்கார்ந்திருந்த சேகர், “போன வாரத்தவிட இந்த வாரம் ஒங்க படிப்புல நல்ல முன்னேற்றந் தெரியுது. இப்டியே தொடர்ந்தா ஃபர்ஸ்ட் கிளாஸ்ல நிச்சயமா பாஸ் பண்ணிருவீங்க...” என்று  சொல்ல, தனது வலது கையின் சுட்டு விரல் நகத்தைக் கடித்தவாறே கடைவாய்ப் புன்னகையுடன், “சரிங்க சார். நன்றி.  ஃபாலோ பண்ணிக்கிறேன்...” என்றாள்.

பதிலுக்குப் பல்லிளிக்கவும் ஏதாவது பேசிக் கலாய்க்கவும் ஆசை அலைபாய்ந்தாலும் அவன் அப்படிச் செய்யவில்லை.  ‘‘ஏ மருமக கௌரிகிட்ட எதுக்குச் சிரிச்சுப் பேசுற? அப்டியெல்லாஞ் சிரிச்சுப் பேசக்கூடாது. அதுமட்டுமில்லாமெ என்னோட மக சாவித்திரியும் வயசுப்புள்ள. 

நீங்க ரெண்டுபேரும் நடந்துக்கிறதப் பாத்தா அவ மனசு சஞ்சலப்படாதா?” என்று நான்கு தினங்களுக்கு முன்பு மகாலிங்கம் போட்டிருந்த வாய்வழி ‘அக்ரிமெண்ட்’ நினைவுக்கு வந்து முடுக்குகிற ஆசைக்கு அப்படியே தடுப்பணை போட்டுக் கொண்டான்.

கடந்த நான்கு மாதங்களாக அஞ்சல்வழியில் முதுகலைப் பட்டப் படிப்புப் படித்து வருகிற  கௌரிக்கு வீட்டுக்கே வந்து டியூஷன் சொல்லித் தந்து கொண்டு இருக்கிறான் சேகர்.
ஆரம்ப நாட்களில் இவன் பாடம் சொல்லித் தந்து கொண்டிருக்கும்போது கௌரியிடம் ஏதாவது நகைச்சுவையாய்ப் பேசுவதும், அதைக்கேட்டு அவள் வாய்விட்டுச் சிரிப்பதுமாயிருந்தனர்.

இப்படியாய் ஒருவாரம் கடந்த நிலையில் ஒரு நாள் கௌரிக்கு டியூஷன் எடுப்பதற்காக சேகரன் வீட்டுக்குள் நுழைய எதிரில் வந்து நின்ற மகாலிங்கம், “இந்தா தம்பி... கொஞ்சம் நில்லுப்பா...” என்றார்.

“சொல்லுங்க ஐயா. என்ன விஷயம்?” திடுக்கிட்டுக் கேட்டான்.நெருப்புப் பார்வையுடன் வெறுப்புக் காட்டியது அவரது முகம். “நீ செய்யிறது கொஞ்சங்கூட நல்லா இல்ல. நமக்குள்ள ஒரு வாய்வழி அக்ரிமெண்ட் போட்டுக்கலாம். 

அதாவது, நீ என் மருமக கௌரிகூடச் சிரிச்சுப் பேசுறது கொஞ்சங்கூட எனக்குப் பிடிக்கலை. ஒனக்கும் கல்யாணம் ஆகலை. கௌரியும் கொஞ்ச வயசுலயே புருஷன எழந்திட்ட வயசுப்புள்ள. காலேஜ்ல படிச்சிட்டு வர்ற ஏ மக சாவித்திரியும் வயசுப்புள்ள.

வயசுப் புள்ளைங்க இருக்குற வீட்ல இதச் சாதாரணமா வுட்டா தப்பாப் போய்ரும். அதனால இனிமேல் இப்படிச் சிரிச்சுப் பேசக்கூடாது. மீறிப் பேசினா, இனி டியூஷன் எடுக்க வரக்கூடாதுங்கற என்னோட கண்டிஷனுக்கு நீ ஒத்துக்கணும். இதுதே அந்த அக்ரிமெண்ட். இதுக்குச் சம்மதிச்சா நீ அவளுக்கு டியூஷன் எடுக்கலாம். 

இல்லேன்னா வீட்டுக்குள்ளார நொழையாமெ அப்டியே திரும்பிப் போயிறலாம்...” என்றார்.வெள்ளந்தியாய்ப் பேசிச் சிரித்ததை, கள்ளத்தனமாகக்  கணித்துவிட்ட அவரது வார்த்தைகள் ‘சுள்’ளென வலியெடுக்க வைத்திருந்தன சேகருக்கு.   

அக்ரிமெண்ட்டைக் கேட்டு ஆடிப்போன அவனது முகம், சட்டென வாடித் துவண்டது. சமாளித்துக் கொண்டபடி, ‘‘சரிங்க ஐயா... ஒங்க அக்ரிமெண்ட்டுக்குச் சம்மதிக்கிறேன். இது படிப்பு விஷயம். பாதியிலேயே விட்டுட்டுப் போய்றக் கூடாது...’’ என்று அவன் சொல்ல, மறித்து நின்ற கைகளை, கீழாக சரித்தவாறு வழிவிட்டிருந்தார்.  

அவன் உள்ளுக்குள் போய் ஹாலில் இருந்த நாற்காலியில் உட்கார, உடனே ‘‘யம்மா, கௌரி... வாத்தியார் தம்பி வந்துர்க்குமா. ரெடியாயிட்டு வந்து படிக்க ஒக்காரு...’’ என்று குரல் கொடுத்தார் மகாலிங்கம்.  அடுத்த ஐந்து நிமிடங்களில் சேகருக்கு பக்கத்தில் ஒரு சேரைப் போட்டு பாடப் புத்தகங்களுடன் வந்து உட்கார்ந்தாள் கௌரி.

டியூஷன் தொடங்கவும் பத்து நிமிடங்களுக்கு ஒரு தடவை தனது அறைக்குள்ளிருந்து வெளியில் வந்தவாறு புலனாய்வு மூளையை அவர்கள் மீது அலையவிட்ட
படியிருப்பார் மகாலிங்கம்.

இடைப்பட்ட நேரத்தில் அவரே சமையலறைக்குச் சென்று டீ போட்டுக் கொண்டு வந்து இருவருக்கும் தந்துவிட்டுப் போனார். கல்லூரி விடுமுறை நாட்களில் மகள் சாவித்திரிதான் டீ போட்டுக்கொண்டு வந்து தருவாள்.

கௌரியுடன் சேகர் போனில் பேசினாலும் கொதித்துப் போவார். ‘‘அதான் வீட்டுக்கு டியூசன் எடுக்க வரும்போது பேசுறீயே... அப்புறம் எதுக்கு கௌரிகிட்ட போன்ல பேசுற? இனிமே அப்டியெல்லாம் பேசக் கூடாதுங்கற என்னோட அக்ரிமெண்ட்டுக்கு  சம்மதிச்சாதே உள்ள நொழைய வுடுவேன்...’’ என்றும், ‘‘தேவையில்லாமெ அவ அழகா இருக்குறதாச் சொல்லி வர்ணிக்கிறதையும், அந்தப்புள்ள சாப்ட்ட எச்சில் டீயை நீ வாங்கிச் சாப்ட்டு சந்தோஷப்பட்றதையும் நான் கவனிச்சேன்.

இது என்ன பழக்கம்? அப்டியெல்லாஞ் செய்யக்கூடாதுங்குற என்னோட அக்ரிமெண்ட்டை மீறினா வீட்டுக்கு வராத...’’ என்றுமாக வாரத்தில் இரண்டு  தினங்களாவது ஏதாவது ஒன்றை வாய்வழி ‘அக்ரிமெண்ட்டாக’ச் சொல்லி அவனைச் சம்மதிக்க வைத்த பின்பே அவளுக்கு டியூஷன் சொல்லித் தர அனுமதிப்பதை  வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தார் மகாலிங்கம்.  
ஆனால், சாவித்திரி இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை.

ஒவ்வொரு நாளும் அந்த வீட்டுக்குள் நுழையும்போதும் ஏதோ சிங்கத்தின் குகைக்குள் நுழைவதைப்போல அங்கமே வெடவெடக்கும் சேகருக்கு.இன்று இன்னும் கௌரியின் மாமனாரைக் காணாததால் அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த சேகர் ஒருவித அச்சத்துடன் அங்கிட்டும் இங்கிட்டுமாக அவரைத்  தேடி கண்களை அலையவிட்டபடியிருக்க, “ஆமா... அடிக்கொருவாட்டி யாரையோ தேட்றாப்ல தெரியுதே. எங்க மாமாவையா தேடுறீங்க?” என்று அவனிடம் கேட்டாள் கௌரி.

“ஆமா கௌரி..! ரூம்ல தூங்கிட்டு இருக்காரா?” என்றான்.“இல்லீங்க சார். ராத்திரியிலேர்ந்து அவருக்கு கொஞ்சம் கால் வலின்னு சொல்லி சாவித்திரி அவர ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போயிருக்கா. 

கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க...” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே...வாசலில் ஆட்டோ ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து இறங்கி சாவித்திரி மட்டும் வீட்டுக்குள் வருவது தெரிந்தது.கௌரிக்கு ஆச்சரியமாய் இருந்தது. “மாமாவ எங்க காணோம் சாவித்திரி?” வாசலையே பார்த்தவாறு கேட்டாள்.

“அவர் கொஞ்ச நாளைக்கு இங்க வர மாட்டார். முதியோர் இல்லத்துல சேர்த்துவிட்டுட்டு வந்துருக்கேன் அண்ணி..!”“அவர முதியோர் இல்லத்துல சேர்த்துட்டியா? அவரு என்ன யாருமேயில்லாத அநாதையா?” அதிர்ச்சியில் முகமெங்கும் குப்பென்று வேர்த்துக்கொட்ட நீர்த்துப்போன குரலில் கேட்டாள்.அதற்கு சாவித்திரி எந்தப் பதிலும் சொல்லவில்லை. மௌனமாக  இருந்தாள்.

வீச்சரிவாளாக பயங்காட்டிய சூழல் நீங்கி நிம்மதிப் பெருமூச்சு விடுவதுபோல இருந்தது சேகருக்கு. ‘‘அப்பாடா... இன்னிக்கி அக்ரிமெண்ட் இம்சையிலேர்ந்து நான் தப்பிச்சிட்டேன். அப்போ நான் கௌம்புறேன் கௌரி. நாளைக்கு வர்றேன்...” என்றவாறு தனது ஜோல்னாப் பையை எடுத்து தோளில் தொங்கப்போட்டுக் கொண்டு கிளம்ப ஆயத்தமானான்.

“ஹலோ சார்... இன்னிக்கு அக்ரிமெண்ட் இருக்கு. எங்க ஓடப் பாக்குறீங்க..? போக வுட்ருவனா ஒங்கள?.” என்று சொன்னவாறு வேகமாய்ப் போய் வாசலை மறித்தவாறு நின்றாள் சாவித்திரி.
வழி மறித்து நின்ற அவளின் அந்தத் திடீர்ச் சிலிர்ப்பு அவர்கள் இருவரையும் விழி பிதுங்க வைத்தது. 

“என்னங்க சாவித்திரி... நீங்களும் அக்ரிமெண்ட் வெச்சிருக்கீங்களா... என்ன அது?” என்றான் சேகர். ‘இனிமே டியூசன் சொல்லித்தர வேண்டாம்ங்கிற அக்ரிமெண்டா இருக்குமோ?’ என வேகமாய்  திகிலுடன் தவிலடித்தது இதயம்.   

மெதுவாக சேகரின் பக்கத்தில் வந்த சாவித்திரி, “இத பாருங்க சார்... எங்க அண்ணி சின்ன வயசுலேயே விடோ ஆகி வாழ்க்கைய எழந்து நிக்கிறாங்க. அவுங்க பொழப்பு இப்டியே மண்ணாப் போய்றக்கூடாது. நீங்களும் எங்க அண்ணியும் ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சு பழகுறதும், ஒங்களுக்குள்ள ஒரு காதல் இருக்குறதும் நல்லாவே தெரியுது. 

இந்தக் காதல் கல்யாணமா கைகூடணும்னு நான் ஆசப்பட்றேன்.  எங்க மாமா இங்க இருந்தார்ன்னா, நீங்க ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்க எப்பவும் சம்மதிக்க மாட்டாரு. போலீஸ், கட்டப் பஞ்சாயத்துன்னு தகராறு பண்ணிட்டே இருப்பாரு. அதனாலதான் டவுன்ல இருக்குற முதியோர் இல்லத்துல ஒரு மாசத்துக்கு மட்டும் ஃபீஸ் கட்டிச் சேர்த்துவுட்டுட்டு வந்துருக்கேன்.

ஒங்க வீட்டுக்காரங்க சம்மதிச்சாலும், சம்மதிக்காட்டியும் நீங்க எங்க அண்ணிய மனப்பூர்வமா ஏத்துக்கணும். ஒங்கக் கல்யாணம் முடிஞ்ச பெறகு அவர வீட்டுக்குக் கூப்ட்டுட்டு வந்துருவேன். இதுதே கடைசி அக்ரிமெண்ட்...” ஒரே மூச்சில் சாவித்திரி சொல்லி முடித்தாள்.

உயிர் வலியெடுக்க வைத்துக் கொண்டிருந்த அக்ரிமென்டுகள், இன்று, மயிலிறகாய் மாறி இதயத்தை வருடியதுபோல இன்பச் சிலிர்ப்பை உண்டாக்கிட, நெக்குருகலுடன் சாவித்திரியின் முகத்தைப் பார்த்தான் சேகரன்.  அவளது கண்கள் கசிந்திருந்தன.“யாரும் கண் கலங்க வேண்டாம் சாவித்திரி. சுந்தோஷமா இருக்கலாம். இனி, இது என் குடும்பம்!” என்றான் சேகரன். கெளரி தலைகுனிந்தாள், வெட்கத்துடன்.

அல்லிநகரம்  தாமோதரன்