பெரிய தொகைக்கு விற்பனையான பேரிடர் பெண்!



17 வருடங்கள் கழித்து அடித்த ஜாக்பாட்!

‘பேரிடர் பெண்(Disaster Girl)’ என 2005-ம் வருடம்  வெளியான ஒரு புகைப்படம் மூலம், உலகளவில் படு பிரபலமானனவர் ஜோ ரோத் (Zoe Roth).  2005-ல் நான்கு வயதாக இருந்தபோது, தனது தந்தை தேவ் ரோத் எடுத்த புகைப்படத்தின் மூலம் ‘Disaster Girl’ என்ற மீமாக உலகப்புகழ் பெற்றார். அந்த நாட்களில் உலகம் முழுவதும் பகிரப்பட்ட ஒரு மீமாக பேரிடர் பெண் இருந்தது.
இந்தப் புகைப்படத்தில், தீயில் எரியும் ஒரு கட்டடம், தொடர்ந்து அதனை அணைக்க முயற்சிக்கும்  தீயணைப்பு வீரர்கள் இருக்க, அதற்கு முன்பு மர்மமான குறும்புப் புன்னகையுடன் பார்ப்போரை அதிர்ச்சியாக்கும் படி போஸ் கொடுத்திருப்பார் சிறுமியாக இருந்த ஜோ ரோத்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா, மெபேன் நகரத்தைச் சேர்ந்தவர் ஜோ ரோத். தனது பெற்றோருடன் அவர் வசித்து வந்த வீட்டுக்கு அருகேதான் தீயணைப்பு நிலையமும் இயங்கி வந்தது.

 அங்கே வீரர்களுக்குப் பயிற்சி கொடுக்கும் பொருட்டு அவ்வப்போது போலியாகக் கட்டடங்களை எரிய விட்டு, அதனை எவ்வளவு நிமிடங்களில் அணைக்கலாம், எப்படி நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வரலாம் போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படுவது வழக்கம்.

 இந்தப் பயிற்சிகளை ஒரு கண்காட்சி போல் அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்ப்பது வழக்கம். அப்படித்தான் அன்றைய பயிற்சியைக் காண தன் பெற்றோருடன் நின்றிருக்கிறார் ஜோ ரோத்.
 அதனைப் புகைப்படக் கலைஞர் மற்றும் ஜோவின் தந்தையான தேவ் ரோத் , கட்டடம் முன்பு நின்றிருந்த ஜோவைத் திரும்பச் சொல்லி புகைப்படம் எடுக்க, மிகவும் மர்மமான ஒரு சிரிப்பை உதிர்த்திருக்கிறார் ஜோ.

 இந்தப் புகைப்படத்தைப் பல விருதுகளுக்கும் தேவ் அனுப்பி வைக்க அனைத்தும் வெற்றி பெற்று விருதுகளைக் குவித்தது. மேலும் 2008-ம் ஆண்டு JPG எமோஷன் கேப்சர் போட்டியில் விருது பெற்ற பிறகுதான் இந்தப் புகைப்படம் மிகப்பிரபலம் ஆனது. 

ஒரு கட்டத்தில் அந்த தீ விபத்து உண்மையான விபத்து எனவும், அதற்குக் காரணம் ஜோ என்பது போலவும் கூட உலகம் நம்பத் துவங்கியது. மேலும் பல பத்திரிகைகள் ஜோவின் சிரிப்பை ‘பேய்ச் சிரிப்பு‘, ‘சாத்தான் சிரிப்பு‘, ‘ ஓமன் பார்வை’ , ‘சூன்யப் பார்வை’, ‘பேரிடர் பெண்’ எனப் பல வகையில் விமர்சனம் செய்தனர்.  

நாட்கள் நகர்ந்து, வருடங்கள் ஆகின. ஆனாலும், அந்த மீம் இணையத்தில் முக்கியமான இடத்தை தக்க வைத்திருந்தது. சமூக வலைத்தளப் பயனாளிகள் யாராவது ஒருவர் தினமும் அந்த மீமை பகிர்வார். இன்றும் கூட அது தொடர்கிறது.  கடந்த 2021-ம் ஆண்டு ஜோ இந்தப் புகைப்படத்தின் அசல் பதிப்பை ( Non-Fungible Token (NFT)) ஏலத்தில் விற்றார். இந்திய மதிப்பில் 4 கோடி ரூபாய்க்கு அந்தப் புகைப்படம் ஏலம் போனது.

இந்த தொகையை ஜோவின் கல்விக்கடன்களை அடைப்பதற்கும், சில தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கவும் பயன்படுத்தினார்.

ஜோ ரோத் வடக்குக் கரோலினா சேப்பல் மலையில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் அமைதி, போர் மற்றும் பாதுகாப்புப் பாடங்களில் பி.ஏ இளங்கலை முடித்திருக்கிறார். தற்போது ஜோவிற்கு வயது 20. ‘எஸ் அண்ட் பி குளோபல்’ எனும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

‘‘எனது புகைப்படம் பிரபலம் அடைந்ததையும், அதன் மூலம் பெரும் புகழ் அடைந்ததையும் நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன். மேலும் என்னுடைய புகைப்படத்தை மூழ்கும் டைட்டானிக், இடியும் கோபுரங்கள் என எங்கும் இணையவாசிகள் எடிட் செய்தனர். அவர்களின் கற்பனைத் திறன் எனக்கு ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் கொடுத்தது.

மேலும் இதன் ஒரிஜினல் காபிரைட்ஸ் என் குடும்பத்திடம் இருக்கிறது. தற்சமயம் இந்தப் புகைப்படம்  விளம்பர உத்தியில் எங்கு பயன்படுத்தப்பட்டாலும் எனக்கு உரிமைத் தொகை வருவது போல் என் குடும்பத்தார் புகைப்படத்திற்கு உரிமை வாங்கியிருக்கிறார்கள்.

ஆனால், நாங்கள் இதனை கட்டுப்படுத்த முடியாது என்பதால், கடந்த 2021 -ம் ஆண்டு முழுமையாக ஏலத்தில் விற்று என்னுடைய கல்விக்கடனை அடைத்தேன்...’’என்கிறார் ஜோ.
 சமீபத்தில் தன் தந்தை எங்கு இந்தப் புகைப்படத்தை எடுத்தாரோ அங்கேயே நின்று, இன்னொரு புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இப்போது அந்தப் புகைப்படமும்  வைரலாகி வருகிறது.

 ‘‘ஒரு புகைப்படம் 17 வருடங்கள் கழித்து அவள் படிப்பிற்கே உதவும் எனக் கனவில் கூட நினைக்கவில்லை...’’ என்கிறார்கள் ஜோவின் குடும்பத்தார். மேலும் இந்த ஏலத்தில் விடப்பட்ட புகைப்படத்தை எப்போது எங்கே மறுவிற்பனை செய்தாலும், அதில் 10% ஜோவிற்கு வரும் என்பதுதான் இதில் ஆச்சர்யம்.

ஷாலினி நியூட்டன்