BROWNIE - 2K கிட்ஸுக்கு வரமா சாபமா?



சென்னையின் ஏதாவது ஓர் இடத்தில் பத்து பேர் பொதுவாக கூடத் துவங்கினாலே அங்கே திடீரென பிரௌனி ஸ்டால்களையும், டீக்கடைகளையும் ஆரம்பித்து விடுகிறார்கள் இளைஞர்கள். 
இதில் வெறும் 100 அடி, 200 அடியில் குறைந்தபட்சம் மூன்று நான்கு பிரௌனி மற்றும் கேக் ஸ்டால்களை பார்க்க முடிகிறது. இதில் பலரும் லட்சங்களில் சம்பளம் பெறும் ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள் அல்லது நல்ல சம்பளம் கொடுக்கும் வேலையை விட்டுவிட்டு இப்படியான டீக்கடைகளையும் மற்றும் பிரௌனி கடைகளையும் துவங்குகிறார்கள்.

வெற்றியடைந்தால் சந்தோஷம்; ஆனால், பெரும்பாலும் தோல்வியைத்தான் சந்திக்கிறார்கள். உண்மையில் 2K தலைமுறைக்கு என்னதான் வேண்டும்... என்ன பிரச்னையை சந்திக்கிறார்கள்... இவ்வளவு சம்பளம் கொடுக்கும் வேலையை விட்டுவிட்டு சொற்ப வருமானத்தில் இப்படி ஸ்டார்ட் அப் தொழில்கள் ஆரம்பிப்பதன் நோக்கம் என்ன... இவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்... உண்மையில் இந்த ஸ்டார்ட் அப் தொழில்கள் வெற்றியை சந்திக்கின்றனவா..? விவரமாக விளக்கங்கள் கொடுக்கிறார் தொழில் ஆலோசகர் எம்.அழகர்.

‘‘கார்ப்பரேட் ஸ்லேவ்... இப்படித்தான் இக்கால தலைமுறை இதற்கு முந்தைய தலைமுறையை அழைக்கிறார்கள். அதாவது ஒரு நிறுவனத்திற்குக் கீழ் கடுமையாக உழைத்து சம்பாதித்து அதன் மூலம் முன்னேற்றத்தை அடையும் முந்தைய தலைமுறை அத்தனை பேரும் இவர்களுக்கு ஒரு நிறுவனத்தைச் சார்ந்து வாழ்கின்ற அடிமைகளாகத் தான் தெரிகிறார்கள். 
ஆனால், இதில் உண்மை, உழைப்பு, தனக்கு கொடுத்த பொறுப்பு, கடமை என அனைத்தும் ஒன்றிணைந்திருப்பது இவர்களுக்குத் தெரிவதில்லை.

‘இதற்கு முந்தைய தலைமுறை 8 மணி நேரம் ஓர் இடத்தில் அடைந்து கிடந்து வேலை செய்தார்கள் என்பதற்காக நாங்களும் செய்ய வேண்டுமா’ என்கிற கேள்வி இவர்களை இப்படியான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை நோக்கி சிந்திக்க வைக்கிறது. 
அதாவது லட்சங்களில் கொடுக்கும் வேலையை விட்டுவிடுவது... தொடர்ந்து வாழ்வாதாரத்துக்கு பணம் தேவை... ஆனால், 8 மணி நேரம் வேலை செய்ய முடியாது... எனில் எளிமையான வழி இப்படி பொதுமக்கள் கூடும் இடத்தில் ஏதாவது ஓர் உணவுக் கடை ஆரம்பிப்பதுதான்.

ஆனால், இதில் பெரும்பாலும் தோல்வியைத்தான் தழுவுகிறார்கள்...’’ என்னும் அழகர், இப்படி ஆரம்பிக்கும் தொழில்களில் உள்ள எதிர்மறை பிரச்னைகளையும், இழப்புகளையும் குறித்து தொடர்ந்து பேசியதை துணைத் தலைப்புகளுடன் தருகிறோம்.

நிலையான வருவாய் இன்மை

ஐடி வேலைகள் மாத சம்பளத்துடன் அதிகப்படி வருமானத்தைக் கொடுக்கலாம். ஆனால், சிறிய கடைகள் தொடக்க கட்டத்தில் அதிக லாபம் தராது.சீசனல் (Seasonal) வருமானமாக இருக்க வாய்ப்பு அதிகம். அதாவது பொங்கல், தீபாவளி, பிறந்தநாள் காலங்களில் மட்டும் வருவாய் கிடைக்கும்.அத்துடன் இன்னொன்றும் இருக்கிறது. 

அது, நிலையான தொழிலாக இருப்பதில் சிக்கல். காரணம், கடுமையான போட்டி. புதிய கடைகள் அதிகமாக திறக்கப்படுவதால், ஏற்கனவே உள்ள கடைகளுடன் போட்டியிட கடினமாகும். இடத்திற்கேற்ப வாடிக்கையாளர்களை ஈர்ப்பது சவாலாக இருக்கும்.

அடிப்படை பொருளாதார அறிவு தேவை

வணிகம் வெற்றிபெற நல்ல திட்டமிடல், முதலீடு, செலவுக் கணக்கு, லாபநஷ்டம் அறிதல் போன்ற பொருளாதார அறிவு அவசியம். இவற்றை சரியாகப்புரிந்துகொள்ளாமல் தொழிலை ஆரம்பித்தால், நஷ்டத்தில் முடிவடையலாம்.குறிப்பாக நாம் ஆரம்பிக்கும் தொழில் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் வெற்றியைக் கொடுக்குமா என்கிற கள ஆய்வு மிக அவசியம்.

சமூகப் பாதிப்பு & குடும்பப் பொறுப்புகள்

குடும்ப உறவினர்கள் மற்றும் சமூகம் இதை அவ்வளவு எளிதாக ஏற்காது. ஏற்கனவே வசதியான வாழ்க்கை முறையை விட்டுவிட்டு தொழிலை ஆரம்பிக்கும்போது ஆரம்பகட்டத்தில் போராட வேண்டிய சூழ்நிலை இருக்கும்.போலவே ஒரு கடை நீடித்து செயல்பட, ஊழியர்களை நன்கு நிர்வகிக்க வேண்டும். ஊழியர்களின் பிரச்னைகள், தரம் குறைந்த சேவை போன்றவை வாடிக்கையாளர்களை இழக்கச் செய்யலாம்.

ஆகவே தொழிலில் வெற்றிபெற வேறு திறமைகள் தேவை. அவை என்னென்ன?

மார்க்கெட்டிங் (Marketing): ஆன்லைன் & ஆஃப்லைன் முறையில் கடையை பிரபலப்படுத்தல்.உயர்தரமான தயாரிப்பு: தரம், சுகாதாரம், புதிய முயற்சிகள்.

சேவைத் திறன்: வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தல்.இப்படி ஸ்டார்ட் அப் தொழில் துவங்குவதற்கு முன் இவ்வளவு திறமைகளையும் ஒருவர் வளர்த்துக்கொள்ள வேண்டும். 

ஏதோ நண்பர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக வேலையை விட்டுவிட்டு எடுத்தோம் கவிழ்த்தோம் எனும் முடிவெடுக்கும் இளைஞர்கள்தான் இன்று போராடிக் கொண்டிருக்கிறார்கள்...’’ என்று சொல்லும் அழகர், இதில் பலரும் பெரிய பிராண்டில் லைசன்ஸ் எடுத்து கிளைத் தொழிலை துவங்குகிறார்கள் என்றும் அதிலும் பல சிக்கல்கள் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

‘‘முதலில் ஒரு தொழிலை துவங்குவதற்கு முன் கையில் இருக்கும் வேலையை விடாமல் பகுதி நேரமாக ஆரம்பிப்பதே சரியாக இருக்கும். இது பார்க்கும் வேலைக்கும் ஒரு பேக்கப் பிளான் ஆக இருக்கும். மொத்தமாகவே கையில் இருக்கும் கரியரை விட்டுவிட்டு புதிதாக தொழில் துவங்கும் போது கிட்டத்தட்ட அடிப்படையில் இருந்து வாழ்வாதாரத்தை ஆரம்பிக்க வேண்டும்.

ஏனெனில் குறைந்தது மாதச் சம்பளமாக ரூ.30,000 இருந்தாலே இன்று ஒரு குடும்பம் பல பொறுப்புகளையும், மாதத் தவணைகளையும் எடுத்துக்கொள்ளும். அப்படியிருக்க இப்படி வேலையை விட்டுவிட்டு இன்னொரு தொழிலைத் துவங்கும்பொழுது மேற்கொண்டு செலவு செய்யும் பொறுப்பும் வந்து சேரும்.

பெயர் சொல்ல விரும்பவில்லை... நம் பகுதிகளிலேயே பல மிகப்பெரிய பிராண்டுகள் மற்றும் ஷோரூம்களை பந்தாவாக துவங்கி சில மாதங்களில் மூடுவிழா நடத்தப்படுவதைப் பார்க்கலாம்.
அதாவது அவ்வளவு முதலீட்டுடன் சரியான லை சென்ஸ் பெற்று துவங்கப்படும் ஃபிரான்சைஸ் தொழில்களே இன்று பெரிதாக வெற்றியை சந்திப்பதில்லை. இதில் சர்வதேச பிராண்டுகளும் அடக்கம்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சார்ந்த சில கடைகள் மட்டுமே இதில் தப்பிப் பிழைக்கின்றன. அதுவும் அவை உணவுக் கடைகளாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம். வேறு தொழிலகள்... அதாவது உடைகள் மற்றும் நகைகள் சார்ந்த கடைகள், சலூன், ஸ்பா, ஜிம் கிளைகள் எதிர்பார்த்த வருவாயை அடைவதில்லை என்பதே கள நிலவரம்.

இன்று உள்ளூர் பிராண்ட் கிளைகளை துவங்கவே ஒரு கிளைக்கு குறைந்தது ரூ.15 லட்சம் வரை முதலீடு தேவைப்படுகிறது. போலவே பல பிராண்டுகள் தாங்கள் கொடுக்கும் உறுதிகள் அனைத்தையும் பின்பற்றுவதில்லை. 

உதாரணத்திற்கு, ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ள இருவருக்கு ஒரேநேரத்தில் ஃபிரான்சைஸ் கொடுக்கிறார்கள்; அல்லது கிளைகள் தொடங்க சம்பந்தப்பட்ட இருவரும் உரிமை வாங்குகிறார்கள். இதனால் லாபம் இருவருக்கும் வருவதில்லை. இதில் ஓரளவிற்கு டீ மற்றும் காபி கடைகள் அதுவும் உள்ளூர் முறைப்படி எளிமையான கடைகளாக துவங்கும் பட்சத்தில் ஓரளவு தப்பிக்கலாம்.

ஆனால், கஃபே, காபி டே போல் துவங்கும் போது அங்கே அதிகமான நஷ்டத்தை சந்தித்த மக்களை நாங்களே சந்தித்திருக்கிறோம். எனவேதான் பிரான்சைஸ் கடைகளை துவங்கும் முன் அவர்களின் வாக்குறுதிகளை தெளிவாக படித்து அதன் பிறகு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அவசியம் என்கிறோம். இதில் அதிக நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன உடற்பயிற்சிக்  கூடங்கள், ஜவுளி சார்ந்த தொழில்கள், குளிர்பானங்கள் சார்ந்த தொழில்கள்.

ஏனெனில்  இவற்றில் ஜவுளி மற்றும் குளிர்பானக் கடைகள் சீசன் சார்ந்தவை. பண்டிகைக் காலங்களில்தான் ஜவுளிகள் லாபம் கொடுக்கும், கோடைகாலத்தில் மட்டும்தான் குளிர்பானங்கள், ஐஸ் கிரீம் கடைகள் லாபம் கொடுக்கும். 

உடற்பயிற்சிக் கூடங்களைப் பொருத்தவரை ஒரே பகுதியில் இப்போதெல்லாம் நான்கு, ஐந்து ஜிம்மை பார்க்க முடிகிறது. என்கையில் ஒருவருக்கொருவர் போட்டிக்காகவே கட்டணத்தை குறைத்து, தொழிலில் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் இழப்பை சந்திக்கிறார்கள்.

பெரும்பாலும் நேரடியாக ஒரு புது பிராண்டை உருவாக்கி அதற்கு குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது உழைத்து சரியான விளம்பரங்களை உருவாக்கி ஆரம்பிக்கப்படும் தொழில்கள் ஓரளவு தப்பிக்கின்றன. 

இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் திடீரென துவங்கப்படும் டீக்கடைகளும் கேக் கடைகளும், இதர தொழில்களும் நீண்ட நாள் நிலைப்பது கடினம். ஒரு பக்கம் நான் சொல்வது உத்வேகத்தைக் குறைப்பது போல் இருப்பினும் உண்மை நிலைப்பாடு இதுதான். மேலும் ஒரு தொழில் மக்களின் கையிருப்பில் இருக்கும் பணத்தை நம்பியே இயக்கப்படுகிறது.

மக்கள் கையிலேயே பணம் இல்லாத நிலையில் இப்படியான ஸ்டார்ட் அப் தொழில்கள் துவங்கும் முன் நம்மிடம் கையிருப்பு இருப்பது அவசியம்...’’ என்ற அழகர், வேலையில் அக்கறையும் எதிர்காலம் குறித்த பொறுப்பும் வர இளைஞர்களுக்கு நிறுவனங்கள் எப்படிப்பட்ட பயிற்சிகளை கொடுக்க வேண்டும் என்பதையும் விவரித்தார்.

‘‘முதலில் வீட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். தாங்கள் இந்தளவுக்கு முன்னேறி இப்படியான ஒரு நிலையான வாழ்க்கையில் இருப்பதற்கு காரணம் கடின உழைப்பும் அதனால் கிடைத்த பலனும்தான் என்பதை பெற்றோர்கள் அடுத்து வரும் தலைமுறையிடம் சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும்.

நிறுவனங்களும் அதிக அழுத்தங்களை பணியாளர்கள் மேல் திணிக்காமல் யாருக்கு எது வரும், யாரிடம் என்ன திறமை இருக்கிறது என்பதைக் கண்டறிய குறைந்தபட்சம் ஒரு மாத கால பயிற்சியாவது கொடுக்க வேண்டும். மேலும் விடுமுறை காலங்களை பிரித்துக் கொடுத்து அவர்களின் சொந்த வாழ்க்கைக்கான நேரத்தையும் கொடுக்க வேண்டியது நிறுவனங்களின் அவசியம்.

இதைப் புரிந்து கொண்டு செயல்பட்டால் பொருளாதார உற்பத்தி பெருகும். குறிப்பாக அத்தனை பேரும் முதலாளியாக வேண்டும் என யோசிக்கத் துவங்கி விட்டால் கம்பெனிகள் நடத்துவது சிரமமாக மாறிவிடும்.

கம்பெனி முன்னேற்றத்திற்காக எவ்வளவோ செலவு செய்யும் முதலாளிகள் இந்தப் பயிற்சிகளுக்காகவும் விடுமுறைகளுக்காகவும், குறிப்பாக சம்பளத்தில் சரியான உயர்வு என சில சலுகைகளைக் கொடுத்தால் அடுத்து வரும் இளைஞர்களை கம்பெனிகள் தக்க வைத்து வேலை வாங்க முடியும்...’’ என அழுத்தமாகச் சொல்கிறார் அழகர்.

ஷாலினி நியூட்டன்