தமிழ்நாடு இனி தொழில்நாடு
சமீபத்தில் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவிலான தொழில்மயமாக்கலைச் சிறப்பாகச் செய்துள்ளது தமிழ்நாடு அரசு. குறிப்பாக டயர்2, டயர்3 நகரங்களில் நிறைய தொழில் நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.  இப்படித் தொழில் வளர்ச்சி பரவலாக்கப்பட்டுள்ளது மிகச் சிறப்பான விஷயம் எனப் பாராட்டுகின்றனர் பொருளாதார நிபுணர்கள். மட்டுமல்ல, 2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் கனவோடு செயல்பட்டு வருகிறது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.  இந்நிலையில் இந்தத் தொழில் பரவலாக்கல் முன்னெடுப்பு பற்றியும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்தும் பொருளாதார நிபுணரும், சென்னை ஹிந்துஸ்தான் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸின் மேலாண் கவுன்சில் உறுப்பினருமான கௌரி ராமச் சந்திரனிடம் பேசினோம். ஒரு மாநில அரசு தொழில்துறையில் ஏன் அதிக கவனம் செலுத்த வேண்டும்?
 எந்த நாடாக இருந்தாலும் சரி அல்லது மாநிலமாக இருந்தாலும் சரி அதன் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது தொழில்துறை வளர்ச்சி. ஏனெனில் மாநிலத்தின் தொழில்துறை, வேளாண்துறை, சேவைத்துறை ஆகிய மூன்றையும் ஒப்பிடும்போது அதிகமான வருமானம் தரக்கூடியது தொழில்துறையும், சேவைத்துறையும்தான். இவையே ஒரு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபியை உயர்த்தும்.
அதுமட்டுமல்ல, ஒரு தொழில் நிறுவனம் ஆரம்பிக்கும்போது அது நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். தவிர, ஒரு தொழில் நிறுவனம் வரும்போது அதனுடன் கிளைத் துறைகள் என்று சொல்லக்கூடிய போக்குவரத்து, கம்யூனிகேஷன் உள்ளிட்ட மற்ற துறைகளும், தொழில்களும் வளரும்.
அத்துடன் தொழில் நிறுவனங்களைச் சுற்றி ஒரு பகுதி உருவாகும். மக்கள் அந்தப் பகுதியில் குடியேறுவார்கள். இதனால் பள்ளிகள், கடைகள் எல்லாம் வரும். வேறு சில உபதொழில்களும் பெருகும். அதனால், எந்த மாநிலமாக இருந்தாலும் தொழில்துறையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது. தற்போது அதனை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது. இது தமிழகத்திற்கு என்னவிதமான பயன்களைக் கொடுக்கும்?
தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 9.74 டிரில்லியன் டாலர் முதலீட்டை கொண்டு வந்திருக்கிறது. இது 2024ம் ஆண்டு ஆகஸ்டில் எடுத்த புள்ளி விவரம். இதனால், 31 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. இதனுடன் பொது வேலைவாய்ப்புகளும் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதுதவிர தமிழக முதல்வர், அமெரிக்கா சென்று முதலீட்டை ஈர்ப்பதற்கு முன்பே ரூ.68,773 கோடி அளவில் புது புராஜெக்ட்களைத் தொடங்கி வைத்து அதன் மூலமாக ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கச் செய்தார். இப்போது அந்தத் தொழில்துறைகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றில் வேலைவாய்ப்புகளும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வளர்ந்து கொண்டே போகும்.
தமிழ்நாடு எந்தளவுக்குத் தொழில்துறையில் முன்னேறி இருக்கிறது என்பதற்கு இந்தப் புள்ளிவிவரங்களே சான்று. தமிழ்நாடு மற்ற மாநிலங்களைப் போலில்லாமல் தொழில் வளர்ச்சிக்கென ஒரு பாலிசியைக் கொண்டு வந்தது. அதன்மூலமாக 10 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்தது.
குறிப்பாக வளர்ந்து வரும் செக்டர்களாக பார்த்துக் கொண்டு வந்தது. இதில் ஏரோஸ்பேஸ், பயோ டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி உள்ளிட்ட புது துறைகளும் அடங்கும். ஒட்டுமொத்தமாக உற்பத்தியில் ஆண்டாண்டுக்கு 15 சதவீதம் தொழில்துறையிலிருந்து வர வேண்டும் என்றும், அதிலிருந்து 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கின்றனர்.
இதனுடன் சாலை வசதி, கட்டுமானம் என உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்குக் கொண்டு போகிறார்கள். அடுத்து முக்கியமாக இண்டஸ்ட்ரியல் பார்க். முப்பது ஆண்டுகளுக்கு முன்பே கலைஞர் ஆட்சியில் முதல் ஐடி பார்க் என்று சொல்லக்கூடிய டைடல் பார்க் சென்னையில் நிறுவப்பட்டது.
இப்போது ஓசூரில் மினி டைடல் பார்க் நிறுவ சமீபத்திய தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல விருதுநகரிலும் மினி டைடல் பார்க் கொண்டு வரப்படுகிறது. இதெல்லாம் டயர்2, டயர்3 நகரங்களுக்கு நாம் தொழில்நுட்ப வளர்ச்சியை எடுத்துச் செல்கிறோம் என்பதற்கு உதாரணங்கள். இதனால் உற்பத்தியும், செயல்திறனும் அதிகமாகும்.
நாம் தொழில்துறையில் தன்னிறைவு பெறும்போது மற்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்வதைக் குறைக்கலாம். தவிர, மக்களுக்குக் குறைந்த செலவில் சிலவற்றை வழங்கவும் முடியும்.
தற்போது டயர்2, டயர்3 நகரங்களுக்கும் தொழில் நிறுவனங்கள் சமமாக இருக்க வேண்டும் என தமிழக அரசு நினைக்கிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, விழுப்புரம், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களிலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் வந்துள்ளன. இந்த முன்னெடுப்பின் அவசியம் என்ன?
இந்தப் பின்னணியை சர்வதேச அளவில் பார்க்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளான சுவீடன், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, ஸ்பெயின், பிரான்ஸ், நார்வே உள்ளிட்டவற்றில் டயர்2, டயர்3 நகரங்களில் தொழில் வளர்ச்சியை விரிவுபடுத்திக் கொண்டே வருகிறார்கள். இதனால், தொழில் வளத்தை பரவலாக்கியுள்ளனர்.
ஓர் உதாரணம் சொல்கிறேன். கோவிட் தொற்றுக்குப் பிறகு ரிமோட் வொர்க் கல்ச்சர், அதாவது வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாச்சாரம் வந்தபோது அவர்கள் டயர்2, டயர்3 நகரங்களில் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி இருந்ததால் தங்கள் பணியை எளிதாகச் செய்தனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை டயர்2, டயர்3 நகரங்களில் தொழில் வளர்ச்சி வர ஆரம்பித்துவிட்டது. தற்போது குளோபல் கெப்பாசிட்டி சென்டர்ஸ் என்கிற உலகளாவிய திறன் மைய கான்செப்ட்டைத் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதன்மூலமாக ஒவ்வொரு ஐடி நிறுவனங்களும் இந்த டயர்2, டயர்3 நகரங்களில் கொண்டு வரப்படும். இதனால் ஒரு விரிவாக்கப்பட்ட பொருளாதாரமாக தமிழகம் மாறும்.
கோவையில், டெக்ஸ்டைல் மற்றும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் துறை இரண்டுக்கும் 25 உலகளாவிய திறன் மையங்கள் உருவாக்கியுள்ளனர். சேலத்தில் உற்பத்தி சார்ந்த சிறு, குறு தொழில்கள் கொண்டு வந்துள்ளனர். மதுரையும், தஞ்சாவூரும் பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த ஊர்கள். அங்கே சுற்றுலா சார்ந்த விஷயங்களுக்கு முன்னெடுப்பு செய்கின்றனர்.
அங்கேயும் ஐடி நிறுவனங்களைக் கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி துறைமுக நகரம். அங்கே எலக்ட்ரிக்கல் வண்டி தயாரிக்கும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் போன்ற உற்பத்தித் துறை கொண்டு வரப்படுகிறது. விருதுநகரிலும் மினி டைடல் பார்க் போன்ற ஐடி செக்டருக்கு வழிவகுத்துள்ளனர்.
வேலூரில் கல்வி மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர். இப்போது மெடிக்கல் டூரிஸம் பரவலாகி வருவதால் இந்த முன்னெடுப்பை அங்கே செய்துள்ளளனர்.தோல் சார்ந்த தொழில் நிறுவனங்கள் ராணிப் பேட்டை அருகே வருகின்றன.
அந்தவகையில் பெருநகரங்களைத் தவிர்த்து டயர்2, டயர்3 நகரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது அது செலவைக் குறைக்கும். அதேநேரம் அங்குள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகம் வழங்கும். ரூரல் பொருளாதாரமும் பயன்பெறும்.
தமிழ்நாட்டில் 350 உலகளாவிய திறன் மையங்கள் கொண்டு வர நினைத்துள்ளனர். அதாவது எல்லா மாவட்டங்களிலும் பரவலாக இந்த மையங்களைக் கொண்டு போக நினைத்துள்ளனர். இதனால், பன்முக வளர்ச்சி ஏற்படும். நகரமயமாக்கல் வசதிகள் மற்ற நகரங்களுக்கும் கிடைக்கும்.
இதேபோல் சமீபமாகத் தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில்களும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளன. பொதுவாக சிறு, குறு தொழில்களுக்கு எப்போதுமே தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில்களின் ஏற்றுமதியில் கடந்த 2023-24ம் ஆண்டு 43.59 சதவீதமாக இருந்த தமிழகம் இப்போது 45.79 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. தவிர, சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் 51.25 சதவீதம் ரூரல் ஏரியாவில்தான் நிறுவப்பட்டிருக்கிறது. ஆக, நகரப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் அதேநேரத்தில் கிராமப்புற பொருளாதாரத்தையும் நாம் மேம்படுத்துகிறோம் என்பது இந்தப் புள்ளிவிவரங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். பன்முகமாக எல்லா செக்டரிலும் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்பதே உண்மை.
இதற்குக் காரணம், தமிழ்நாட்டில் தொழில்களை ஊக்குவிக்கும்விதமான முறையில் நிறைய மானியங்களும், சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இதனால், மகாராஷ்டிராவிற்குப் பிறகு தொழில்துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. ஆக, தமிழ்நாடு தொழில் நகரமாக தன்னிறைவு பெற்று வருகிறது எனக் கொள்ளலாமா?
கண்டிப்பாகச் சொல்லலாம். தமிழ்நாடு லீடிங் தொழில் வளர்ச்சி மாநிலம்தான். தமிழ்நாடு முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாகவும் உள்ளது. காரணம், தொழில்கள் வளரக்கூடிய சூழ்நிலைகள் இங்கே உள்ளன.
ஓர் இடத்திலிருந்து அடுத்த இடத்திற்கு செல்ல போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வசதிகளும் சிறப்பாக இருக்கின்றன. அடுத்ததாக, திறன் வாய்ந்த ஸ்கில் தொழிலாளர்கள் நம்மிடம் போதுமான அளவில் உள்ளனர். இவையெல்லாம் முதலீட்டிற்கு ஈர்ப்பாக உள்ளது. சில இடங்களை இன்னும் மேம்படுத்த அரசு நடவடிக்கையும் எடுத்து வருகிறது. அதேபோல், வந்த தொழில் நிறுவனங்களை நாம் காப்பாற்றி வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். தொழில்துறையில் உள்ளவர்களும் முதலாளிகளும் தங்கள் நிறுவனங்களை உலகத்தரத்தில் உயர்த்திக் கொண்டே போக வேண்டும். அவர்கள் தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்து தக்க வைக்க வேண்டும். அப்போதுதான் உலகத் தரத்திலான பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.
இதனுடன் தமிழக அரசும் இனி எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சம்பந்தமான செக்டர்கள், உணவுப் பதப்படுத்தும் தொழில்கள், எலக்ட்ரிக் வண்டி நிறுவனங்கள், மெட் டெக் எனப்படும் மருத்துவம் சார்ந்த தொழில்நுட்ப தொழில்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட சன்ரைஸ் செக்டர்களைக் கண்டறிந்து அதற்கான முதலீடுகளை ஈர்க்கும்விதமான நடவடிக்கைகளையும் உள்கட்டமைப்புகளையும் மேற்கொள்ள வேண்டும். அப்போது தொழில் வளர்ச்சியில் நாம் இன்னும் தன்னிறைவு பெற்ற மாநிலமாகத் திகழ்வோம்.
பேராச்சி கண்ணன்
|