ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இடம் பிடித்த 6 வயது சிறுவன்!
உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகம், ஆக்ஸ்ஃபோர்டு. இங்கிலாந்தின் பிரதமர்கள், சர்வதேசத் தலைவர்கள், நோபல் பரிசு பெற்றவர்கள், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் என 200க்கும் மேலான புகழ்பெற்ற ஆளுமைகள் இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 929 வருடங்களாக இயங்கி வரும் ஆக்ஸ்ஃபோர்டில் படிப்பதற்கு இடம் கிடைப்பதே பெரும் சாதனை. ஆம்; நுழைவுத்தேர்வில் கடும் போட்டி நிலவும்.

இந்நிலையில் மிக இளம் வயதில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இடம் கிடைத்தவர் என்ற சாதனையைச் செய்திருக்கிறார் ஜோஸ்வா பெக்ஃபோர்டு. ஆக்ஸ்ஃபோர்டில் தத்துவம் படிப்பதற்காக இடம் கிடைத்தபோது ஜோஸ்வாவின் வயது 6.
இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் நைஜீரியக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தவர் ஜோஸ்வா பெக்ஃபோர்டு. பிறந்த பத்து மாதங்களிலேயே எண்களையும், எழுத்துக்களையும் அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய பிறவி மேதையாக இருந்தார். இதைக் கவனித்த தந்தை நாக்ஸ் டேனியலுக்கு பயங்கர ஆச்சர்யம். மகனின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான எல்லா வேலைகளையும் செய்ய ஆரம்பித்தார். இரண்டரை வயதில் துல்லியமாக ஆங்கிலத்தில் வாசிக்க ஆரம்பித்துவிட்டார் ஜோஸ்வா. அத்துடன் ஜப்பான் மற்றும் சீன மொழிகளையும் கற்றுக்கொண்டார். இந்நிலையில் இந்த இளம் மேதைக்கு ஆட்டிச குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும், ஜோஸ்வாவின் சாதனைப் பயணம் தொடர்ந்தது.
நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என்பது ஜோஸ்வாவின் லட்சியம். சிறு வயதிலேயே தனக்கிருந்த மருத்துவ நிபுணத்துவத்தை வெளிப்படுத்தி, மருத்துவர்களையே ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். ஆம்; இணையத்தில் அறுவை சிகிச்சை செய்வது மாதிரி பல விளையாட்டுகள் இருக்கின்றன.
கண்புரை நீக்கம், ஹெர்னியா, கால் எலும்பு முறிவு போன்ற அறுவை சிகிச்சை விளையாட்டுகளை வெற்றிகரமாக விளையாடியிருக்கிறார். ஒரு தேர்ந்த மருத்துவரைப் போல இந்த விளையாட்டில் அறுவை சிகிச்சைக்கான கருவிகளை ஜோஸ்வா பயன்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவத்தைத் தாண்டி, கலை, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு, அந்நிய மொழிகளில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார் ஜோஸ்வா. பத்து வயதுக்குள்ளேயே ஜப்பானீஸ், பிரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மன், சீனம் ஆகிய மொழிகளைக் கற்றுப் பேசி, அசத்தினார்.
2017ம் வருடம் நேர்மையான ரோல் மாடல் என்ற இங்கிலாந்தின் நேஷனல் டைவர்சிட்டி விருது ஜோஸ்வாவுக்குக் கிடைத்தது. இதுபோக உலக அளவில் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அசாத்தியமான 30 நபர்கள் என்ற சிறப்புப் பட்டியலை வடக்கு கரோலினாவைச் சேர்ந்த ஓர் அமைப்பு வெளியிட்டது. இதில் இடம்பிடித்த வயது குறைவான நபர், ஜோஸ்வாதான்.
மட்டுமல்ல, ஆப்பிரிக்காவில் உள்ள ‘பிமேன்’ என்ற தொண்டு நிறுவனத்தின் அம்பாஸிடராகவும் இருக்கிறார். பதின்பருவத்தினருக்கு உரிய வழிகாட்டுதலை ‘பிமேன்’ அமைப்பு செய்து வருகிறது. மாதத்தில் இரண்டு முறை நூற்றுக்கணக்கான பதின்பருவத்தினர் மத்தியில் உரையாடி, அவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கிறார் ஜோஸ்வா.
இதுபோக நைஜீரியா, கானா, கென்யா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்களில் பிறந்த குழந்தைகளின் கல்விக்காக தொண்டு நிறுவனங்களின் மூலம் உதவி வருகிறார். தவிர, இங்கிலாந்தில் வாழும் ஆப்பிரிக்க குழந்தைகளின் கல்விக்காகவும் குரல் கொடுத்து வருகிறார் ஜோஸ்வா.
தவிர, கறுப்பினத்தவர்களுக்கான தேசிய ஆட்டிஸ அமைப்பில் இணைந்து, ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பணியாற்றி வருகிறார். கடந்த 2019ம் வருடம் தந்தையுடன் நைஜீரியாவுக்குப் பயணம் செய்து, லாகோஸில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து, 5000 பேர் முன்னிலையில் உரையாற்றினார் ஜோஸ்வா.
நைஜீரியாவின் கிராமங்களில் பள்ளிகள் அமைப்பதற்கான நிதி திரட்டுவதற்காக இந்த உரையை நிகழ்த்தியிருக்கிறார். இந்த உரையின்போது கிடைத்த நன்கொடைகளைப் பள்ளிகள் அமைக்க வழங்கிவிட்டார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் குழந்தைகளுக்கான ஆன்லைன் படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். 8 வயது முதல் 13 வயது குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி. இந்நிலையில் ஜோஸ்வாவின் தந்தையான நாக்ஸ் டேனியல், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துக்குத் தனது மகனின் கல்வித் திறமையைப் பற்றி கடிதம் எழுதினார்.
அவரது கடிதத்தைப் பரிசீலித்து, ஜோஸ்வாவின் திறமையைப் பரிசோதித்துப் பார்த்த ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமே ஆச்சர்யத்தில் உறைந்துபோய், ஜோஸ்வாவுக்கு இடம் கொடுத்தது. தத்துவம்தான் முதன்மையான பாடம். அதிலும் கலக்கியிருக்கிறார் ஜோஸ்வா.
இப்போது பழங்கால எகிப்தைப் பற்றிய புத்தகத்தை எழுத வேண்டும் என்பது ஜோஸ்வாவின் விருப்பம். இதற்காக எகிப்தின் வரலாறு குறித்து ஏராளமான புத்தகங்களைப் படித்து வருகிறார். இணையமும் அவரது தேடலுக்கு உதவுகிறது.
த.சக்திவேல்
|