டாக்டர் டூ நடிகை...
சமீபத்தில் வெளியான ‘எமகாதகி’ படத்தின் மூலம் பெரும் கவனம் ஈர்த்திருக்கிறார் நடிகை ரூபா கொடுவாயூர். இவர் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற ஒரு மருத்துவர் என்பது ஆச்சரியத் தகவல். அதுமட்டுமல்ல, தேர்ந்த கிளாசிக்கல் டான்ஸரும்கூட!  மருத்துவம் படித்துவிட்டு திரைத்துறைக்குள் பெண்கள் வருவது ரொம்பவே அரிதான விஷயம். நடிப்பின் மீதான ஆர்வத்தால் ரூபா அதனை செய்திருக்கிறார். நடிப்பில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம். 
‘‘எனக்குப் பூர்வீகம் ஆந்திரா. அப்பா ரவிக்குமார் ராணுவத்தில் இருக்கார். அம்மா மங்கா லட்சுமி சமஸ்கிருத பேராசிரியர். அடிப்படையில் நான் ஒரு நடனக் கலைஞர். ‘நாட்டிய மயூரி’ உள்ளிட்ட பல்வேறு விருதுகள் நடனத்திற்காக வாங்கியிருக்கேன்.  ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகள் மாநில மற்றும் தேசிய அளவில் பண்ணியிருக்கேன். என் அஞ்சு வயசுல இருந்தே நான் கிளாசிக்கல் டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சிட்டேன். குச்சிப்புடி, கதகளி, பரதநாட்டியம்னு எல்லா கலையையும் கத்துக்கிட்டேன். 
அம்மாவுக்கு நான் டாக்டராகணும்னு ஆசை. அவங்களுக்காக நல்லா படிச்சேன். அப்புறம், நுழைவுத்தேர்வில் கஷ்டப்பட்டு படிச்சு நல்ல ரேங்க் வாங்கினேன். அப்படியாக குண்டூர் கட்டுரி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் ஃப்ரீ சீட்டில் படிச்சு முடிச்சேன். அப்புறம், நடனப்பயிற்சி பண்ணும்போதே எனக்கு நடிப்புல ஆர்வம் வந்தது.
என் அம்மா பிரபல பரதநாட்டிய கலைஞரும், நடிகையுமான வைஜெயந்திமாலா மேடம், பத்மினி மேடம், பானுப்ரியா மேடம் ஆகியோர் நடிச்ச படங்களையும் அவர்களின் பரதநாட்டிய டான்ஸையும் போட்டுக் காட்டுவாங்க.
வைஜெயந்திமாலா மேடத்தின் பரதநாட்டிய யூடியூப் வீடியோக்களை எல்லாம் பார்த்து நடனத்தில் என்னை இன்னும் மெருகேத்திக்கிட்டேன்.
இப்படியிருந்த நேரம், ‘பாகுபலி பார்ட்2’ படத்துல வர்ற, ‘சாஹோரே பாகுபலி’ பாடலுக்கு பரதநாட்டியம் பண்ணி வீடியோ வெளியிட்டேன்.
இது ரொம்ப வைரலாகிடுச்சு. பலரும் பாராட்டினாங்க. இந்த நடனமே என்னை சினிமா உலகத்தினரைக் கவனிக்க வைச்சது. அப்போ, மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் சார் நடிச்சு ஹிட்டான, ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தை தெலுங்குல ‘உமா மகேஷ்வர உக்ர ரூபஸ்ய’ என்ற பெயரில் ரீமேக் செய்தாங்க. இதுல சத்யதேவ் ஹீரோ. அதாவது ஃபகத் சார் நடிச்ச ரோல். அபர்ணா முரளி நடிச்ச கேரக்டருக்கு டான்ஸ் தெரிஞ்ச, டஸ்கி நிறத்துல இருக்கிற பெண்ணைத் தேடிட்டு இருந்தாங்க. என் வீடியோவைப் பார்த்து எனக்கு காஸ்டிங் கால் வந்தது. பிறகு இயக்குநர் வெங்கடேஷ் மஹா சாரும், தயாரிப்பாளர் பிரவீணா மேடமும் டெஸ்ட் வச்சு என்னைத் தேர்ந்தெடுத்தாங்க. அப்படியாக நான் சினிமாவிற்கு என்ட்ரி ஆனேன்.
கொரோனா நேரம் இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி செமயா ஹிட்டாச்சு. இதுக்கு அறிமுக நடிகைக்கான சைமா விருது எனக்குக் கிடைச்சது. இதனால், ரொம்ப சந்தோஷமாகிட்டேன். ஏன்னா, நான் ஒரு சின்ன கிராமத்திலிருந்து வந்த பொண்ணு.
அதிலும் முதல் படத்திலேயே விருது வாங்கினது பெரிய விஷயம் இல்லையா… இதனால் என் குடும்பத்தினருக்கும் நம்பிக்கை வந்தது.
இதன்பிறகு தெலுங்கில், ‘Mr.Pregnant’ படத்துல ஹீரோயினாக நடிச்சேன். இதுவும் கவனிக்க வச்சது. அப்புறம்தான் தமிழில் ‘எமகாதகி’ வாய்ப்பு வந்தது…’’ என்கிறவர், உற்சாகப் புன்னகையுடன் தொடர்ந்தார்.
‘‘ ‘எமகாதகி’ படத்தின் கதை ஆரம்பத்துல எனக்கு புரியல. அப்போ தமிழும் அவ்வளவாக தெரியாது. பிறகு, எனக்கு விளக்கிச் சொன்னாங்க. இது ரொம்ப வித்தியாசமான கதைனு தெரிஞ்சுக்கிட்டேன். எப்படி, ‘உமா மகேஷ்வர உக்ர ரூபஸ்ய’ ஜோதி கேரக்டர் இருந்ததோ அதேமாதிரி, ‘எமகாதகி’ லீலா கேரக்டர்னு புரிஞ்சது. இதுக்காக நிறைய ஹோம் வொர்க் பண்ணினேன். படக்
குழுவினரும் வொர்க் ஷாப் எல்லாம் வச்சு என்னை ரொம்ப மோல்ட் பண்ணினாங்க. இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் சார் டயலாக் பயிற்சி கொடுத்தார்.
இதனுடன் இந்தப் படத்தின் கேமராமேன் சுஜித் சாரங் சார் தெலுங்கில் ரொம்ப ஃபேமஸ். அவர் இருந்ததால் இன்னும் எளிதாக என்னால் நடிக்க முடிஞ்சது. எல்லோரின் கடும் உழைப்புதான் இந்தப் படத்திற்கு மக்களிடம் பாராட்டை பெற்றுத் தந்திருக்கு.
படம் பார்த்த ஆடியன்ஸ் எல்லோருமே நல்ல ரிசல்ட் கொடுத்திருக்காங்க. அதேபோல பத்திரிகைகள், சமூக ஊடகங்கள் எல்லாமே பாராட்டியிருக்காங்க. ரூபா நல்லா பண்ணியிருக்காங்கனு சொல்றதைக் கேட்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.
தமிழ் மக்கள் செலுத்துகிற அன்பிற்கு அளவேயில்ல. எல்லோருக்கும் நன்றி’’ என்கிறவர், அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.
‘‘இப்ப தெலுங்கில் மோகன கிருஷ்ணா சார் இயக்கத்துல, ‘சாரங்கபாணி ஜாதகம்’னு ஒரு படம் பண்ணியிருக்கேன். இதுல பிரியதர்ஷினி என்ற ரோல்ல நடிச்சிருக்கேன். இப்ப அந்தப் படம் ரிலீஸாக இருக்கு. அப்புறம், தமிழ்ல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சாரின் ‘ஸ்டோன் பென்ச்’ நிறுவனத் தயாரிப்பில் உருவாகியிருக்கும், ‘நீளிரா’ படமும் விரைவில் ரிலீஸாக இருக்கு.
இதுதவிர, இன்னும் சில படங்களுக்குக் கதைகள் கேட்டுக்கிட்டு இருக்கேன். நல்ல கதையாகத் தேர்ந்தெடுத்து சிறப்பாக நடிக்கணும்; சிறந்த நடிகைனு பெயர் வாங்கணும் என்பதே என் ஆசை’’ என முத்தாய்ப்பாகச் சொல்கிறார் டாக்டர் ரூபா கொடுவாயூர்.
ஆர்.சந்திரசேகர்
|