பக்கா ஃபேன் பாய் சம்பவம் loading....



குட் பேட் அக்லி Exclusive

‘‘ஒரு ரசிகனா அஜித் சாருக்கு ஒரு படம் கொடுத்தால் எப்படி இருக்கும்? அப்படிதான் இந்த படம் இருக்கும்...’’ உற்சாகமும், மகிழ்ச்சியும் துள்ள ஒரு ரசிகனாகவே பேசுகிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.

‘குட் பேட் அக்லி’... ?

உங்களுக்கு... எனக்கு... நம்ம வாழ்க்கையில் எல்லாருக்குமே... மூணு லெவல் இருக்கும். அந்த மூணு லெவல் வாழ்க்கையைதான் இந்தப் படம் காட்டும். இந்த உலகம் ‘குட்’டா இருந்தால் நாமளும் ‘குட்’டாக இருக்கலாம். அது ‘பேடா’ இருக்கும்பொழுது நாமளும் அதற்கேற்ற மாதிரி ‘பேடாக’ மாறிதான் ஆகணும்.
 அதேதான் இந்தப் படம் பேசும். ரொம்ப நாள் கதை எழுதிட்டு என்ன தலைப்பு வைக்கலாம் அப்படின்னு யோசிச்சிட்டு இருந்தேன். ‘குட் பேட் அக்லி’  அப்படின்னு இந்தத் தலைப்பை வைத்தது அஜித் சார்தான். இதைத் தாண்டி ஒரு தலைப்பு நிச்சயமா என்னால் யோசிக்க முடியாது. அந்த அளவுக்கு பொருத்தமான தலைப்பு இது.

மாஸ் AK சம்பவம் லோட் ஆகுதா..?!

OG சம்பவம் பாடலிலேயே பார்த்திருப்பீங்க எந்த அளவுக்கு பயர் இருக்கப் போகுதுன்னு. ‘மச்சான்’, ‘மாமே’, இதெல்லாம் ஃபிரண்ட்ஸ் கூட நாம பேசிக்கிற வார்த்தைகள். இதை தலைப்பில் பயன்படுத்தும் பொழுது ரசிகர்கள் கிட்ட இன்னும் கொஞ்சம் அதிகமா நெருங்கலாம். கேஷுவலா பயன்படுத்தியதுதான். ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் ஒரு சின்ன ரோல் நடிச்சிருந்தேன். அந்தவேளை கூட அதிகம் நான் சார்கிட்ட பேசினது கிடையாது. இப்பவும் அவர் பத்து வார்த்தை பேசினால் நான் நாலு வார்த்தை பேசுவதே பெரிய விஷயம்.

ஒரு பெரியண்ணன் மாதிரிதான் அவரை நான் பார்ப்பேன். ஆனால், எந்தச் சூழலிலும் அவர், தான் ஒரு பெரிய நடிகர் என்கிற பந்தா காட்ட மாட்டார். இப்படி எதுவுமே அவர்கிட்ட பார்க்க முடியாது. ‘என்ன பண்ணணும் சொல்லுங்க... நான் செய்யறேன்’ அப்படின்னு சொல்வார். 
ரொம்ப சின்ன வயசு... ஆறாவது, ஏழாவது படிச்சிட்டு இருந்த நேரம். அப்போ சாருடைய படங்கள் பார்த்து ரசிகன் ஆனேன். அந்த வயசுப் பையனை இம்ப்ரஸ் செய்யணும்னா அவர் எவ்வளவு  டெடிகேஷன் கொடுத்திருப்பார்!

அவருடைய ஸ்டார்டமுக்கு மேற்கொண்டு ஒரு கிரீடம் வைக்கணும் அப்படின்னு நினைச்சேன். அதுதான் இந்த ‘குட் பேட் அக்லி’. அதனால்தான் சாரை இதுவரையிலும் பார்க்காத ஒரு கலர் டோனில் இந்தப் படத்தில் காட்ட முயற்சி செய்திருக்கேன்.அவருடைய காஸ்ட்யூம்ஸ் கூட ரொம்ப கலர்ஃபுல்லா, மாஸா இருக்கும். சார் எதுக்குமே அலட்டிக்க மாட்டார். எல்லாத்திலும் ஒரு பக்குவம் தெரியும்.

என்ன கதை... இந்தக் கதைக்கு எப்படி அஜித் ஓகே சொன்னார்?

என்னுடைய முந்தைய படங்களை பார்க்கும் பொழுது ‘மார்க் ஆண்டனி’ தவிர மற்ற படங்கள் எல்லாமே கமர்சியலாகவோ அல்லது சமூக நோக்கத்துடனோ இருக்காது. அப்படிப்பட்ட ஓர் இயக்குநராக இருந்த வேளையில்தான் அஜித் சாரை நான் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் சந்தித்தேன். அப்போ ‘மார்க் ஆண்டனி’ படம் கூட வெளியாகலை. ஆனால், ஏதோ அவருடைய உள்ளுணர்வு என்னை நம்பி இருக்கு. அவராகவே ‘நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படம் செய்கிறோம் ஆதிக்’ அப்படின்னு சொன்னார்.

இப்போ வரைக்கும் எனக்கு அஜித் சார் மாதிரியான ஒரு பெரிய ஸ்டார் கூப்பிட்டு ஒரு படம் கொடுத்திருக்கிறது கனவு மாதிரிதான் இருக்கு. சொன்னதுடன் நிறுத்தாமல் போனி கபூர் சார்கிட்ட கூட அறிமுகம் கொடுத்தார்.மாஸ் கேங்ஸ்டர் படம்... இதுதான் ட்ரெய்லரில் பார்த்திருப்பீங்க. 

உண்மையில் இந்தப் படம் ஒரு கேங்ஸ்டர் அப்பா மகன் கதை. வெறுமனே மாஸ் காட்சிகள் மட்டும் கிடையாது. கதையாகவே பின்னணியில் நிறைய உணர்வுகள் படத்தில் இருக்கும்.  அஜித் சார் கொடுத்த அட்வைஸ் காரணமாகதான் நான் ‘மார்க் ஆண்
டனி’ மாதிரியான பெரியபடங்கள் செய்ய ஆரம்பிச்சேன். என்னை வேறு ஒரு களத்தில் திசைதிருப்பினது அவர்தான்.

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ செல்ல சண்டைகள் இருந்ததா?!

த்ரிஷா மேம்... ஒரு நடிகையா ஆன் ஸ்கிரீன் மற்றும் ஆஃப் ஸ்கிரீன் இரண்டிலும் தன்னை எப்படி காண்பிச்சுக்கணும் அப்படின்னு தெளிவுடன் இருக்கறவங்க.

இந்தப் படத்தில் ரொம்ப முக்கியமான ஒரு ரோல் செய்திருக்காங்க. ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தில் தலைப்பு வைக்கிறதுக்கு முன்னாடி த்ரிஷா மேடம் அம்மாவுக்கு போன் செய்து சம்மதம் கேட்டுட்டுதான் வச்சோம்.

மேம் எப்பவுமே சூப்பர் கூல்தான். ஜாலியா இருப்பாங்க. நிறைய நடிகர்கள் இந்தப் படத்தில் இருக்காங்க. எல்லாருமே சூப்பர் டூப்பர் நடிப்பை கொடுக்கக்கூடிய நடிகர்கள். அர்ஜுன் தாஸ் சார்  இதுவரையில் முந்தைய படங்களில் என்னவெல்லாம் செய்யலையோ அதையெல்லாம் இந்தப் படத்தில் செய்ய வச்சிருக்கோம். 

பிரபு சார் இருக்கார், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஒரு முக்கியமான கேரக்டரில் நடிச்சிருக்கார். பிரசன்னா சார், யோகி பாபு சார், சுனில் சார், இன்னும் நிறைய சர்ப்ரைஸ் கேரக்டர்கள் இருக்காங்க.

அபிநந்தன் ராமானுஜம் என்னுடைய முந்தைய படங்களிலும் என் கூட வேலை செய்திருக்கிறார். இந்தப் படத்திலும் அவர்தான் சினிமாட்டோகிராபி. விஜய் வேலு குட்டி... ‘மார்க் ஆண்டனி’ படத்தில் இவருடைய எடிட்டிங் நீங்க பார்த்திருப்பீங்க. இந்தப் படத்திலும் டிரைலர் பார்த்துட்டு எடிட்டிங் அதிகம் பாராட்டப்பட்டிருக்கு. அதே அளவுக்கு மாஸ் எடிட்டிங் கொடுத்திருக்கார்.

உணர்வுபூர்வமாகவே ஜிவி பிரகாஷ் சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் இயக்குநர் நாற்காலியில் உட்கார முதல் அடித்தளம் போட்டவர் அவர்தான். என்னுடைய முதல் பட இசையமைப்பாளர் மற்றும் நடிகர்.

அவருக்கும் எனக்கும் வேலை தாண்டி நட்பாகவே நிறைய கனெக்சன் இருக்கு. எந்நேரமும் கிரிக்கெட்  விளையாடிட்டு இருப்போம். விளையாட்டுக்கு நடுவிலேதான் ‘ஆதிக் இந்த டியூன் கேளேன்...’ அப்படின்னு சொல்வார். இந்தப் படத்தில் மூணு பாடல்கள் இருக்கு. ஏற்கனவே ‘OG சம்பவம்’ ரிலீஸ் ஆகிடுச்சு. என்னையும் ஒரு ஓரமா ஜிவி பிரகாஷ் பாட வச்சிருக்கார். உண்மையில் நான் கத்தினேன்! மேலும் இரண்டு பாடல்களும் கூட இன்னும் சூப்பரா வந்திருக்கு.

உங்கள் பட வேலையில்தான் அஜித் ரேஸ் வெற்றி, பத்மபூஷண் விருது... இப்படி பல உண்மையான OG சம்பவங்கள் செய்தார்!அஜித் சாரைக் கார் ஓட்ட வைத்துப் பார்க்கணும் என்கிறது என்னுடைய ஆசை. படத்திலும் கார் சேசிங் மொமெண்ட் இருக்கு. அவருடைய துபாய் ரேஸ் மொமெண்ட்டையும் நேரில் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.அவருடைய எமோஷன், ஜெயித்தவுடன் குழந்தை மாதிரி அவர் துள்ளிக் குதித்தது அத்தனையும் ஒரு ரசிகனாக நான் பார்த்தேன்.

ஒரு மனுஷனா இரண்டு வெவ்வேறு கரியரை சரிசமமா பேலன்ஸ் செய்ய முடியும் என்பதையும் அஜித் சார் கிட்டதான் கத்துக்கிட்டேன். அவருடைய எல்லா பட வேலைகளையும் முடிச்சிட்டுதான் கார் ரேஸிங் பயிற்சிக்கு திரும்பினார். எங்கேயும் எங்களை காத்திருக்க வைக்கலை. ரெண்டு கரியருக்குமே அவ்வளவு நியாயமா நடந்துக்குவார் சார்.

 அதேபோல் ஸ்கிரிப்டில் என்ன இருக்கோ அதைக் கொடுக்க எப்பவும் தயாராக இருக்கிற ஒரு நடிகர். சரியா எங்களுடைய ப்ரொமோஷன் ஆரம்பிக்கும் பொழுது அதற்கு இன்னும் கிராண்ட் மொமெண்ட்களை அவருடைய கார் பந்தயம், பத்மபூஷண் விருது இப்படி எல்லாமே ஒரு பாசிட்டிவ் வைபை உண்டாக்கிக்கிட்டே இருந்துச்சு.

ஆடியன்ஸ், குறிப்பா ரசிகர்கள் என்ன எதிர்பார்த்து வரணும்? சிறப்பு கேமியோ உண்டா?

இன்னைக்கு ஆடியன்ஸ் ரொம்ப புத்திசாலிகளா இருக்காங்க. அவ்வளவு சுலபமாக அவங்களை ஏமாத்திட முடியாது. இந்தப் படம் அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என எந்த எதிர்பார்ப்பையும் நான் உருவாக்க விரும்பலை. ஜாலியா வாங்க... ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் ஒரு மாஸ் கமர்ஷியல் அஜித் சார் படம். அதற்கு என்ன செய்யணுமோ அதைச் செய்திருக்கோம்.

‘காசு சம்பாதிக்க சினிமா செய்யாதே...’ அஜித் சார் எனக்கு சொன்ன அட்வைஸ். இதற்கு முன்பு ஒரு சில படங்கள் கருத்தாகவே தவறா எனக்கு அமைஞ்சிடுச்சு. இனிமேல் அந்த மாதிரியான படங்கள் இல்லாம அடுத்தடுத்து பெரிய படங்கள் செய்யணும் அப்படின்னு நான் முடிவு செய்திருக்கேன். 

என்னுடைய கரியரை பாசிட்டிவ் பாதையில் திருப்பியதும் அஜித் சார்தான். அவர் நம்பி வாய்ப்பு கொடுத்திருக்கார். அந்த நம்பிக்கைக்கு என்னால் என்ன நியாயம் செய்ய முடியுமோ செய்திருக்கேன். நிச்சயம் திரையரங்கம் தெறிக்கும் மாஸ் காட்சிகள் இருக்கு. அதை மட்டும் இப்போ சொல்லிக்கிறேன். கேமியோ இருக்கா இல்லையா என்பதை படத்தைப் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. இந்தப் படத்துக்குப் பிறகுதான் அடுத்த பட வேலை.

ஷாலினி நியூட்டன்