விளையாட்டு மைதானம் அமைக்க 5 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்த 95 வயது பாட்டி!
ஒடிசா மாநிலத்திலுள்ள நுவாபடா மாவட்டத்தில் அமைந்திருக்கும் கிராமம், சிங்ஜார். நுவாபடாவின் தலைமையகத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த கிராமம். இருந்தாலும் ஒடிசா முழுவதும் பிரபலமான கிராமம் இது.  காரணம், விளையாட்டு. ஆம்; விளையாட்டுதான் சிங்ஜாரின் முக்கிய அடையாளம். அங்கே வசிக்கும் மக்களுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாக பலவகையான விளையாட்டுகள் இருந்து வருகின்றன.
மட்டுமல்ல, கடந்த ஐம்பது வருடங்களாக சிங்ஜாரில் பலவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு வருடமும் மாநிலங்களுக்கு இடையேயான புத்தராஜா கோப்பை கிரிக்கெட் போட்டியை சிங்ஜார் கிராமம் நடத்துகிறது. ராஜ்பூர், பிலாஸ்பூர், கட்டாக், புவனேஸ்வர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிக்கெட் அணிகள் எல்லாம் புத்தராஜா கோப்பையைக் கைப்பற்ற விளையாடும்.
கிரிக்கெட் மட்டுமல்ல, கால்பந்து மற்றும் கபடி போட்டிகளையும் கிராமத்தினர் நடத்துகின்றனர். ஆனால், விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கும், கிராமத்தினர் விளையாடுவதற்கும் உகந்த வகையிலான மைதானம் அங்கே இல்லை. அதனால் பணம் செலுத்தி தனியாருக்குச் சொந்தமான மைதானத்திலோ அல்லது அரசின் மைதானத்திலோ விளையாடுகின்றனர்; போட்டிகளையும் நடத்தி வருகின்றனர். விளையாட்டு மைதானம் என்பது சிங்ஜார் இளைஞர்களின் கனவு. இந்நிலையில் சிங்ஜாரில் விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்காக 5 ஏக்கர் நிலம் கிடைத்துள்ளது.
அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்களோ, பெரும் கோடீஸ்வரர்களோ இந்த நிலத்தை வழங்கவில்லை; சிங்ஜார் கிராமத்தைச் சேர்ந்த சபித்ரி மஜ்ஹி என்ற பாட்டிதான் 5 ஏக்கர் நிலத்தைக் கொடையாக வழங்கியுள்ளார்.
அவரது வயது 95. சிங்ஜாரின் விளையாட்டுப் பாரம்பரியம் இனி வரும் தலைமுறைகளுக்கும் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிலத்தை அவர் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலம் சபித்ரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானது. நூறு வருடங்களுக்கு மேலாக சபித்ரியின் குடும்பத்தினர் அந்த நிலத்தை பாதுகாத்து வருகின்றனர். சபித்ரி கொடுத்த நிலத்தில், அரசாங்கத்தின் உதவியுடன் நவீனமான ஒரு மைதானம் வரப்போகிறது.
நுவாபடாவின் கலெக்டர் சபித்ரியின் வீட்டுக்குச் சென்று, அவரது பெருந்தன்மையை மனதாரப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது பாராட்டுகள் இணையத்தில் வைரலாகவே, சபித்ரியும் பிரபலமாகிவிட்டார்.
‘‘பல வருடங்களாக புத்தராஜா கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகிறோம். ஒவ்வொரு வருடமும் போட்டியை நடத்துவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தை அணுகி, அவர்கள் அனுமதி கொடுக்கும் இடத்தில் போட்டியை நடத்துவோம்.
இடம் கிடைக்கும் நாட்களைப் பொறுத்துதான் போட்டிக்கான நாட்களையே திட்டமிட முடியும். ஊரில் சபித்ரி பாட்டிக்குச் சொந்தமாக இடம் இருந்தது. இளைஞர்கள் எல்லோரும் சேர்ந்து சபித்ரியைச் சந்தித்து எங்களது தேவையைச் சொன்னோம். அவரும் பெருந்தன்மையுடன் நிலத்தைக் கொடுக்க முன்வந்தார்...’’ என்கிறார் சிங்ஜாரைச் சேர்ந்த பிரேம்சந்த்.
சபித்ரி இப்படி நிலத்தைக் கொடுப்பது இது முதல்முறை அல்ல. சபித்ரியின் கணவர் நிலம்பர் மஜ்ஹி இறந்து பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அவர் உயிருடன் இருந்தபோது, சபித்ரியுடன் சேர்ந்து சிங்ஜாரில் ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, கோவில் கட்டுவதற்கான நிலத்தைக் கொடையாக கொடுத்திருக்கிறார்.
சபித்ரி - நிலம்பரின் பொதுச் சேவைக்கு அவர்களது வாரிசுகளும் உறுதுணையாக இருந்திருக்கின்றனர். இத்தனைக்கும் சிங்ஜார் சபித்ரியின் பிறந்த ஊர் கிடையாது. ஒடிசாவில் உள்ள களஹான்டி மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்தவர் சபித்ரி. அவருடைய கணவர்தான் சிங்ஜாரைச் சேர்ந்தவர். ‘‘திருமணத்துக்குப் பிறகு சிங்ஜாருக்கு வந்தேன். அப்போது இருந்தே இந்தக் கிராம மக்களுடைய வாழ்க்கையின் சாட்சியாக இருக்கிறேன். இங்கே வசிக்கும் ஆண்களும், பெண்களும் விளையாட்டில் தீவிர ஆர்வத்துடன் இருப்பதை எழுபது வருடங்களுக்கு மேலாக பார்த்து வருகிறேன். விளையாட்டு சிங்ஜாரின் கலாசாரத்தில் முக்கியமாக இருக்கிறது. இந்தக் கிராம மக்கள் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு விளையாட்டுகளைக் கடத்துகின்றனர்.
உண்மையில் விளையாட்டுதான் சிங்ஜாரின் தனித்துவமான அடையாளம். இந்த விளையாட்டுப் பாரம்பரியத்தை ஊக்குவிக்க ஏதாவது செய்யணும் என்று நினைத்தேன். அதனால்தான் மைதானம் அமைப்பதற்கான நிலத்தைக் கொடுத்தேன்...’’ என்கிறார் சபித்ரி. நுவாபடாவின் கலெக்டரும், விளையாட்டுத்துறையைச் சேர்ந்த நிர்வாகிகளும் நிலத்தைப் பார்வையிட்டிருக்கின்றனர்.
சபித்ரியின் நிலத்துக்கு அருகில் ஏதாவது அரசு நிலம் இருந்தால், அதனையும் இணைத்து மைதானம் அமைக்க பேச்சு வார்த்தைகள் நடந்துவருகின்றன. அரசு நிலத்தில் மைதானம் அமைக்க அனுமதி கிடைக்காவிட்டால், சபித்ரி கொடுத்த நிலத்தில் மட்டும் மைதானம் உறுதியாக அமையும்.
த.சக்திவேல்
|