குழந்தைகளுக்கான ரயில்



இஸ்ரேலியப் படைகளால் காஸாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்படுவது குறித்து தினமும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இஸ்ரேலுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்தாலும், இந்த துயரச் சம்பவம் நிற்கவில்லை. 
இந்நிலையில் குழந்தைகளின் முக்கியத்துவத்தையும், மனிதாபிமான செயலையும் முன்னிறுத்தும் ஒரு வரலாற்றுச் சம்பவம் பல சர்வதேச இணைய இதழ்களிலும், பத்திரிகைகளிலும் வைரலாகி வருகிறது. இதோ அந்தச் சம்பவம்:

இரண்டாம் உலகப்போரில்  மட்டுமே சுமார் 15 லட்சம் குழந்தைகள் கொல்லப்பட்டதாகச் சொல்கின்றனர். தவிர, போருக்குப் பிந்தைய நாட்களின் வறுமையும், நோய்மையும் பல குழந்தைகளின் உயிரைப் பறித்தது. இந்நிலையில் இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சியும், இத்தாலியப் பெண்கள் ஒன்றியமும் ஒருங்கிணைந்து, குழந்தைகளுக்காக மகிழ்ச்சியின் ரயில்களை அறிமுகப்படுத்தியது.

தெற்கு இத்தாலியில் வசித்து வந்த ஏழ்மையான குழந்தைகளை, வடக்கு இத்தாலியில் உள்ள வசதியான கம்யூனிஸ்ட் குடும்பங்களுக்கு ரயில்கள் மூலம் அனுப்பி வைப்பார்கள்.

இந்த ரயில்களை மகிழ்ச்சியான ரயில்கள் என்று அழைத்தனர். அந்தக் குழந்தைகளைத் தங்களின் குழந்தைகள் போல கம்யூனிஸ்ட் குடும்பங்கள் வளர்த்தெடுத்தனர். 1945-ம் வருடத்திலிருந்து, 1952-ம் வருடம் வரையில் இந்த மகிழ்ச்சியின் ரயில்கள் ஓடிக்கொண்டிருந்தன.

 இத்தாலிய தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்த தெரசா நோஸ் என்ற பெண்மணியும், இத்தாலியப் பெண்கள் ஒன்றியமும் இணைந்து மகிழ்ச்சியின் ரயில்கள் திட்டத்தை உருவாக்கியது. இதற்கு தனது முழு ஆதரவையும் இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கியது. 1945-களில் மிலன் நகரத்தின் புறநகர் பகுதிகள் முழுவதும் ஏழைக் குழந்தைகளால் நிரம்பியிருந்தது. 

இந்தக் குழந்தைகளுக்கு சில மாதங்கள் அடைக்கலம் கொடுக்க முடியுமா என்று ரெக்கியோ எமிலியா நகரில் வசித்து வந்த கம்யூனிஸ்ட் தோழர்களிடம் கேட்டார் தெரசா. எமிலியாவிலிருந்த தோழர்கள் 2000 குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகச் சொல்ல, 1945-ம் வருடம், டிசம்பர் 19-ம் தேதியன்று மிலனிலிருந்து 1800 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு, ரெக்கியோ எமிலியாவுக்கு மகிழ்ச்சியின் ரயில் புறப்பட்டது.

இதுதான் முதல் மகிழ்ச்சியின் ரயில். 1945 முதல் 1952-ம் வருடம் வரையில் இத்தாலியின் பல்வேறு நகரங்களிலிருந்த 70 ஆயிரம் ஏழைக் குழந்தைகள் வசதியான கம்யூனிஸ்ட் குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டனர். சில இடங்களில் வசதி குறைவான குடும்பங்கள் கூட, குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து, அவர்களுக்குத் தேவையான உணவு, உடை உட்பட அடிப்படை வசதிகளைச் செய்துகொடுத்தனர்.

தங்களின் குடும்பங்களில் நிலைமை சரியான பிறகு அந்தக் குழந்தைகள் தாங்கள் பிறந்த இடத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். தங்களுடைய வீட்டுக்குத் திரும்பிய பிறகும் கூட, தங்களை வளர்த்த தோழர்களின் குடும்பங்களுடனான உறவைத் தொடர்ந்தனர் அந்தக் குழந்தைகள்.

 இந்த வரலாற்றுச் சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஒவ்வொரு இஸ்ரேலியக் குடிமகனும் இதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் வலியுறுத்தப்படுகின்றனர். 

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை மையமாக வைத்து வயோலா ஆர்டோன் என்பவர், ‘த சில்ரன்’ஸ் டிரெய்ன்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார்.  இந்நாவலைத் தழுவிய இத்தாலியப் படம் ஒன்று ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது. அதன் பெயர் கூட ‘த சில்ரன்’ஸ் டிரெய்ன்’ தான்.

த.சக்திவேல்