உலகின் அதிக வயதான முடி திருத்துபவர்!
ஜப்பானில் உள்ள நாககவா எனும் நகரில், 1916-ம் வருடம் பிறந்தார் சிட்சு ஹகோய்ஸி. இப்போது இவரது வயது 108. உலகின் அதிக வயதான முடி திருத்துபவர் என்ற கின்னஸ் சாதனையைத் தன்வசமாக்கியிருக்கிறார் சிட்சு.  டோக்கியோ நகரிலிருந்து மூன்று மணி நேரம் வாகனத்தில் பயணம் செய்தால் சிட்சுவின் சலூன் வந்துவிடும். மலைகளால் சூழப்பட்ட டோச்சிக்கி மாகாணத்தில் விளிம்பு பகுதியில் அமைந்திருக்கிறது அந்த சலூன். 
சிட்சுவின் சலூனுக்குள் சென்றாலே பழமையான ஜப்பான் உணர்வு தானாக வந்துவிடும் என்கின்றனர் வாடிக்கையாளர்கள். இரண்டாம் உலகப்போருக்கு முன்பிலிருந்து பயன்படுத்திய கத்தரிக்கோலை இப்போதும் பயன்படுத்துகிறார் சிட்சு.
சிட்சுவுக்கு 14 வயதாக இருந்தபோது, அவருடைய தோழியின் அம்மா, ‘‘டோக்கியோவில் உள்ள ஒரு சலூனில் பயிற்சியாளராக செல்ல விருப்பமா...?’’ என்று சிட்சுவிடம் கேட்டிருக்கிறார். உடனே தயாராகி, தனியாகவே டோக்கியோவுக்குக் கிளம்பிவிட்டார் சிட்சு.
தனது 18-வது வயதில் முடி திருத்துபவருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, பிரபலமான முடிதிருத்துபவராக பெயர் பெற்றார். அவர் காலத்தில் முடி திருத்தும் பெண்களைக் காண்பது அரிது. அவரது ஊரிலேயே ஒரே பெண் முடி திருத்துபவராக வலம் வந்தார்.
தனது 24 வயதில் ஜிரோ என்பவரைத் திருமணம் செய்தார். அத்துடன் சொந்தமாக ஒரு சலூனையும் திறந்தார் சிட்சு. ஆனால், அடுத்த சில வருடங்களிலேயே சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையில் போர் மூண்டது. இதில் சிட்சுவின் கணவரும் பங்கேற்றார்.
ஆனால், போரில் அவர் இறந்துவிட்டார். மட்டுமல்ல, அமெரிக்க குண்டு வீச்சின் போது டோக்கியோவில் இருந்த சிட்சுவின் சலூன் பாதிக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக சிட்சுவுக்கும், அவரது குழந்தைகளுக்கும் எதுவும் ஆகவில்லை.இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, 1953-ல் நாககவாவில் புதிதாக ஒரு சலூனைத் திறந்தார் சிட்சு. இன்று வரை அவரது முடி திருத்தும் பயணம் வெற்றிகரமாகத் தொடர்கிறது.
த.சக்திவேல்
|