பாகிஸ்தானும், பலூசிஸ்தான் பிரிவினையும், குவாதர் துறைமுகமும்...



சமீபத்தில் பாகிஸ்தானின் குவெட்டா நகரில் நடந்த ரயில் கடத்தல் சம்பவம் உலகையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் 21 பயணிகள் மற்றும் 4 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்ததாகவும், 33 பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வந்தன.  
இந்தத் தாக்குதலுக்கு பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பிரிவினைவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது. சுமார் 25 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்தப் பிரிவினைவாத இயக்கம் தொடர்ந்து பலூசிஸ்தான் விடுதலை கோரி போராடி வருகிறது.

ஏற்கனவே கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானில் கிழக்கு பாகிஸ்தானாக விளங்கிய பகுதி, பங்களாதேஷ் நாடாக சுதந்திரம் பெற்றது. இதற்கும் முன்பிருந்தே பாகிஸ்தானின் தென்மேற்கில் ஆப்கானிஸ்தான், ஈரான் பகுதியில் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாண மக்கள் பிரிவினை கேட்டுப் போராடி வருகின்றனர். 
பொதுவாக, ‘பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவினுள் ஊடுருவல்; பாகிஸ்தான் நாடு பயங்கரவாதத்தைத் தடுக்காமல் ஆதரிக்கிறது...’ என்றெல்லாம் வரும் செய்திகளுக்கு நடுவே, பாகிஸ்தான் உள்ளேயே பிரிவினை கேட்டு நீண்டகாலமாக நடந்துவரும் போராட்டத்தை தற்போது உலக ஊடகங்கள் ஹைலைட்டாக்கி வருகின்றன.  

இதற்குக் காரணம் இரண்டு விஷயங்கள். ஒன்று பாகிஸ்தானில் சீனா இயக்கி வரும் குவாதர் நகரத் துறைமுகமும், அதன் நிதியுதவியுடன் அங்கே உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய விமான நிலையமும். மற்றொன்று பலோச் மனித உரிமை போராளி மஹ்ராங் பலோச், கடந்த வாரம் பாகிஸ்தான் அரசால் கைது செய்யப்பட்டிருப்பது.
சரி பலூசிஸ்தான் ஏன் பிரிவினை கோருகிறது?

பாகிஸ்தானில் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துன்க்வா, பலூசிஸ்தான் உள்ளிட்டவை முக்கியமான மாகாணங்கள். இதில் பலூசிஸ்தான் மாகாணமே பாகிஸ்தானில் மிகப்பெரியது. அதுமட்டுமில்லாமல் மிகவும் ஏழ்மையான மாகாணமும்கூட. 

இதன் தலைநகர்தான் குவெட்டா. பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை சுமார் 24 கோடி. இதில் வெறும் ஒன்றரை கோடி மக்களே இவ்வளவு பெரிய மாகாணத்தில் வசித்து வருகின்றனர். மலையும் மலைசார்ந்த பகுதியும் என்பதால் மக்கள்தொகை குறைவு. இங்கு பலோச் இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.

இந்தப் பகுதியில் எண்ணெய், நிலக்கரி, தங்கம், தாமிரம் மற்றும் எரிவாயு இருப்பு உள்ளிட்ட இயற்கை வளங்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இது பாகிஸ்தான் அரசுக்கு கணிசமான வருவாயையும் ஈட்டித் தருகின்றது.ஆனால், பாகிஸ்தான் அரசு, தங்கள் சமூகத்தைப் புறக்கணித்துவிட்டு மாகாணத்தின் கனிம வளங்களைச் சுரண்டுவதாக பலூச் இன மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

அதாவது அந்த மக்களுக்கு வேலை உட்பட எதிலும் வாய்ப்புகள் வழங்கப்ப்படவில்லை என்கிற கோபம் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.இந்தக் கோபமே பிரிவினைவாத உணர்வுகளைத் தூண்டியது. கடந்த 1947ம் ஆண்டு பாகிஸ்தான் உருவானதிலிருந்து இந்த மாகாணம் குறைந்தது ஐந்து பெரிய கிளர்ச்சிகளைச் சந்தித்துள்ளது.

பெரும்பாலும் பழங்குடியினரால் வழிநடத்தப்படும் இந்தப் பிரிவினைவாத கிளர்ச்சிகள் 1948ம் ஆண்டிலும், பிறகு 1958, 1962 மற்றும் 1973 ஆகிய ஆண்டுகளிலும் நடந்தன.கடைசியாக 2000ம் ஆண்டின் முற்பகுதியில் மாகாணத்தின் வளங்களில் அதிக பங்கைக் கோரியும், முழுமையான சுதந்திரத்திற்கு வித்திட்டும் கிளர்ச்சி தொடங்கியது. இந்நேரமே பலூசிஸ்தான் விடுதலை ராணுவ இயக்கமும் உருவானது.

அதன் பின்னர் இந்தப் பிரிவினைவாத இயக்கம் தற்கொலைப் படை தாக்குதல், படுகொலைகள், தங்களுக்கு எதிரான பொதுமக்கள் மற்றும் துணை ராணுவப் படைகள் மீது தாக்குதல் நடத்தல் என இருந்து வருகிறது. பதிலுக்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள், கிளர்ச்சி செய்பவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறையை நடத்தி வருகிறது. இதில் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில்தான் பொருளாதார முக்கியத்துவமாக விளங்கும் குவாதர் துறைமுகம், ஆயுதமேந்திய பிரிவினைவாதக் குழுக்களுக்கு வன்முறை மையமாக மாறியது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் எட்டு பேர் இந்தக் குவாதர் துறைமுகத்தின் முக்கிய வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது, ​​பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
குவாதர் துறைமுகம்?

அரபிக் கடலின் கரையில் அமைந்துள்ள மீன்பிடி நகரம் குவாதர். நீண்ட வரலாறு கொண்ட இந்நகரம் 1783ம் ஆண்டு முதல் 1958ம் ஆண்டு வரை ஓமன் அரசின் ஆளுகைக்குள் இருந்தது. பாகிஸ்தான் சுதந்திரம் பெற்று பத்து ஆண்டுகள் வரையும் இந்த நகரை ஓமன்தான் ஆட்சி செய்தது.  ஆனால், 1954ம் ஆண்டு பாகிஸ்தான் வேண்டுகோள்படி அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனத்தால் ஆழ்கடல் துறைமுகத்திற்கு ஏற்ற இடமாக குவாதர் அடையாளம் காணப்பட்டது.

இதனால் குவாதரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என பாகிஸ்தான் ஆர்வம் காட்டியது. ஓமன் அரசிடம் பேசியது. அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் ஃபெரோஸ் கான் நூனும், அவரின் மனைவி விகார் உன் நிசா நூனும், ஓமன் சுல்தான் சையத் பின் தைமூரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர் 1958ம் ஆண்டு மூன்று மில்லியன் பவுண்டுகளுக்கு குவாதர் பகுதியை பாகிஸ்தான் வாங்கியது. இதில் மற்றொரு விஷயம் இந்த குவாதர் பகுதியை இந்தியா வாங்க வேண்டும் என ஓமன் அரசு விரும்பியது. ஆனால், பிரதமர் நேரு அதை நிராகரித்ததாகச் சொல்லப்படுகிறது.

பாகிஸ்தான் அரசு ஆரம்பத்தில் இந்த குவாதர் நகரில் எந்த வளர்ச்சிப் பணியும் மேற்கொள்ளவில்லை. 1992ம் ஆண்டு ஒரு சிறிய துறைமுகத்தை உருவாக்கியது. இதன்பிறகு ஆழ்கடல் துறைமுகத்திற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டன. 

ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக 2001ம் ஆண்டு வரை எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ள முடியவில்லை.

அணு ஆயுத சோதனை காரணமாக பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டன. இந்நிலையில் கார்கில் போருக்குப் பிறகு குவாதரின் முக்கியத்துவத்தை உணர்ந்த பாகிஸ்தான், கடற்கரை நெடுஞ்சாலை ஒன்றை அமைத்து குவாதர் நகரைக் கராச்சியுடன் இணைத்தது.

பிறகு 2001ம் ஆண்டு சீன  பிரதமர் ஜூ ரோங்ஜி பாகிஸ்தான் சென்றபோது ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகி 2007ம் ஆண்டு துறைமுகத்தின் முதல்கட்டம் முடிந்தது. பின்னர் சீனாவின் ‘ஒன் பெல்ட் ஒன் ரோடு’ திட்டத்தின் ஒருபகுதியாக ஆனது. அதாவது சீனாவும் பாகிஸ்தானும் பொருளாதார வழித்தடம் ஒன்றை உருவாக்கும் திட்டம் இது. 

இதன்பெயர் சீனா - பாகிஸ்தான் எக்னாமிக் காரிடர். இந்த வழித்தடம் 60 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உருவாகி வருகிறது. 

இது குவாதர் துறைமுகத்தில் தொடங்கி சீனாவின் மேற்கில் உள்ள சின்ஜியாங் பகுதியை (காஷ்மீரின் மேல்பகுதியில் இருக்கிறது) இணைக்கும் விதமாக அமைகிறது.

இதனால், குவாதர் துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது. இப்போது குவாதர் துறைமுகத்தை சீன நிறுவனம்தான் ஆபரேட் செய்து வருகிறது.தற்போது இங்கு சீனா நிதியுதவிடன் 240 மில்லியன் டாலர், அதாவது 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய விமான நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டே முடிக்கப்பட்ட இந்த விமான நிலையத்தில் இருந்து இதுவரை விமானங்கள் இயக்கப்படவில்லை என்கின்றன தகவல்கள்.

அதுமட்டுமல்ல. இந்த விமான நிலையம் 4 லட்சம் பயணிகளைக் கையாளும்விதமாகக் கட்டப்பட்டுள்ளது. ஆனால், நகரத்தின் மொத்த மக்கள் தொகையே 90 ஆயிரம்தான். அப்படியிருக்கையில் ஏன் இவ்வளவு பெரிய விமானநிலையம் என்ற கேள்வியை உள்ளூர் குவாதர் மக்களும் கிளர்ச்சியாளர்களும் எழுப்பி வருகின்றனர். 

இது சீனாவிற்கான விமானநிலையம் என்கின்றனர் சில அதிகாரிகள். இங்கிருந்த வளங்களை சீனா கொண்டு செல்லும் விதமாகவே அமைக்கப்பட்டிருப்பதாகக் கருதுகின்றனர். இதனாலேயே குவாதர் துறைமுகம் கிளர்ச்சியின் மையமாக மாறியிருக்கிறது.

ஆனால், அரசோ இந்த சீனா - பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் 2 ஆயிரம் உள்ளூர் நபர்களுக்கு வேலை வாய்ப்பு தந்திருப்பதாகச் சொல்கிறது. அவர்கள் பலோச் மக்களா அல்லது உள்ளூர் குடியிருப்பாளர்களா என்கிற தகவல்கள் இல்லை. இந்நிலையில்தான் சில ஆண்டுகளாக அமைதியாக இருந்த கிளர்ச்சி, கடந்த ஆண்டிலிருந்து மீண்டும் வேகமெடுத்திருக்கிறது. இந்த இடத்தில் மஹ்ராங் பலோச் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.

மஹ்ராங் பலோச்...

மஹ்ராங் பலோச் 1993ம் ஆண்டு பலோச் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் தந்தை கஃபர் லாங்கோவ் பாகிஸ்தானில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் எழுப்பியவர்.
கடந்த 2009ம் ஆண்டு மஹ்ராங்கின் தந்தை கஃபர் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அப்போதிலிருந்து மஹ்ராங் கடத்தல், காணாமல் போனதாகச் கூறப்படும் சம்பவங்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடத் தொடங்கினார்.

2011ம் ஆண்டு அவரின் தந்தை மீண்டும் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட நிலையில் இறந்துகிடந்தார். இதனால் மஹ்ராங்கின் மனித உரிமை குரல் மேலும் வலுவானது.
பலோச் யக்ஜெஹ்தி கமிட்டி அதாவது பலூசிஸ்தான் ஒற்றுமைக் குழு என்ற அமைப்பை உருவாக்கி பலூசிஸ்தான் மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். அரசு இயற்கை வளங்களை பிரித்தெடுப்பதைக் கண்டித்தார். கடந்த ஆண்டு டைம் இதழ் 100 வளர்ந்துவரும் செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவராக அவரை அங்கீகரித்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு மஹ்ராங், குவாதர் துறைமுக நகரில் பாதுகாப்புப் படையினர் அப்பாவி மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து போராட்டத்தை முன்னெடுத்தார். இதெல்லாம் சேர்ந்துதான் அவரை பாகிஸ்தான் அரசு இப்போது வேறொரு காரணத்தைச் சொல்லி கைது செய்துள்ளது.

ஒட்டுமொத்தமாக பாகிஸ்தான் அரசின் பாகுபாடும், சுரண்டலும், வேலைவாய்ப்பின்மையும், இயற்கை வளங்களை சீனாவிற்கு தாரைவார்த்தலும் பலூசிஸ்தான் மக்களிடையே மீண்டும் பிரிவினைவாத கிளர்ச்சியைத் தூண்டியிருக்கிறது.   

பேராச்சி கண்ணன்