மாஸ் + கமர்சியல் + ஆக்‌ஷன்! இது சக்தி திருமகன் சீக்ரெட்ஸ்...



15 வருஷத்துக்கு முன்னாடி செகரடேரியட்ல டீ வித்துச்சி, இன்னைக்கு... A Gangster, A Hustler, A Trickster... அவன் பேரு கிட்டு (எ) ‘சக்தி திருமகன்’’’...- என டிரெய்லர் வார்த்தைகளுடன் வந்து விழுகின்றன விஜய் ஆண்டனியின் பெயர். நடிகராக அவருடைய 25வது படம். மிகப்பெரும் ஊழல், அரசியல், அதனுள் கெத்தாக, அமைதியாக வரும் விஜய் ஆண்டனி என டிரெய்லர் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.

‘அருவி’, ‘வாழ்’... என தனது வித்தியாசமான கோணத்தில் கதை சொல்லும் திறமையால் தமிழ் சினிமாவில் தனியிடம் பிடித்தவர் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். அவர் இயக்கத்தில் இப்பொழுது விஜய் ஆண்டனி. பரபரப்பான போஸ்ட் ப்ரொடக்‌ஷன் வேலைகளுக்கு இடையே படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

‘சக்தி திருமகன்’..?

என்னுடைய முந்தைய படங்கள்ல இருந்து முற்றிலும் வேறு மாதிரி அதிக ஜனரஞ்சகமாகவும் அரசியல் திரில்லராகவும் இருக்கும். படத்தில் விஜய் ஆண்டனி சாருடைய பெயர்தான் ‘சக்தி திருமகன்’. நம்மில் இருந்து ஒருத்தன் எப்படி அவ்வளவு பெரிய அரசியல் மேடைக்குப் போறான் என்பதுதான் கதை. இதுக்கு நடுவுல அவன் சந்திக்கும் சம்பவங்கள், எதிர்ப்புகள், இழப்புகள் இதெல்லாம் சேர்ந்துதான் இந்தப் படம்.

விஜய் ஆண்டனியுடன் 25வது படம்... அவருடன் வேலை செய்த அனுபவம்..?

பலரும் விஜய் ஆண்டனி சாருடைய பாசிட்டிவ் குணம் பற்றி சொல்லி இருக்காங்க. இப்போ நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைச்சது. தொடர்ச்சியாக விபத்து, இழப்பு... இப்படி அத்தனையும் கடந்து கூட அவருடைய அமைதியை அசைக்கவே முடியல. அவருக்கு நடந்த பிரச்னை எல்லாம் நமக்கு வந்திருந்தா நிச்சயம் உடைஞ்சு போயிருப்போம். இவர் எப்படி இவ்வளவு பாசிட்டிவா இருக்கார்னு தெரியலை.

‘அருவி’ பார்த்துட்டு அப்போவே சார் எனக்கு போன் செய்தார். ‘நல்ல கதை வச்சிருந்தால் சொல்லுங்க நான் நடிக்கத் தயார்’ அப்படின்னு அப்பவே சொன்னார். அஞ்சு வருஷம் கழிச்சு ஒரு கதையுடன் அவருக்கு போன் செய்தேன். அவ்வளவு இடைவெளிக்குப் பிறகும் ‘அருவி’ படத்தை புகழ்ந்து கிட்டேதான் என்கிட்ட பேச ஆரம்பித்தார். 

‘நீங்க எப்படிப்பட்ட படம் எடுக்கணும்னு நினைக்கிறீங்களோ அதற்கு என்னால என்ன சிறப்பு கொடுக்க முடியுமோ நான் கொடுப்பேன்’னு சொன்னார். ரொம்ப சின்சியரான ஒரு நடிகர். ஒரு தடவை ஷூட்டிங்கில் இருக்கும்போது திடீரென ‘ஒரு பத்து நிமிஷம் அருண்’ அப்படின்னு கேட்டுட்டு போனார்.

என்னாச்சுன்னு பார்க்க கேரவன் போனா... சாருக்கு ஏற்கனவே நடந்த விபத்து காரணமா அவருடைய தாடையில் ரத்தம் வழிஞ்சிட்டு இருந்துச்சு. நான் பதறிட்டேன். அப்ப கூட சார் ‘நீங்க போங்க... ஒரு பத்து நிமிஷத்துல நான் வந்திடறேன்’ அப்படின்னு, அன்னைக்கு ஷூட்டிங் முடிச்சிட்டுதான் கிளம்பினார். அப்படியே இயக்குநர்கிட்ட சரண் அடைஞ்சிடுவார். படு டெடிகேஷன் பர்சன். முகத்தில் மட்டும் எத்தனை பிளேட் இருக்கு அப்படின்னு கேட்டால் அவருக்கே கணக்குத் தெரியல.

ஒரு மனுஷனால இவ்வளவுதான் தாங்கிக்க முடியும்னு ஒரு வரையறை இருக்கு. ஆனால். விஜய் ஆண்டனி சாருக்கு அந்த பவுண்டரி எல்லாம் எதுவுமே கிடையாது போல! எது நடந்தாலும் அவ்வளவு அமைதியா டீல் செய்வார்.

உங்க கதைகளின் நாயகிகளுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு... திருப்தி ரவீந்திரன் மற்றும் மற்ற நடிகர்கள் பற்றி சொல்லுங்க..?

திருப்தி ஒரு மாடல். இதுதான் அவங்களுக்கு முதல் படம். ஆனால், முதல் படம் மாதிரியே தெரியாத அளவுக்கு இருக்கும். ரொம்ப இயல்பா அவங்களுக்கு நடிப்பு வருது.
வாகை சந்திரசேகர் சாருடைய கேரக்டர் இந்தப் படத்தில் அதிகம் பேசப்படும். பெரிய சர்ப்ரைஸ்... இந்தப் படத்தில் ‘காதல் ஓவியம்’ கண்ணன் சார் ஹீரோவுக்கு சரிசமமா ஒரு கேரக்டரில் நடிச்சிருக்கார். சினிமாவுக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாம அமெரிக்காவில் செட்டிலானவர் அவர். இந்தப் படத்தின் கதையைச் சொல்லி அவரை வற்புறுத்திதான் கூட்டிட்டு வந்து நடிக்க வச்சிருக்கோம்.

இவங்க இல்லாம இந்தப் படத்தில் அறிமுக நடிகர்களா ஒரு 20 பேராவது நடிச்சிருக்காங்க. அத்தனை பேருமே முதல் படம் மாதிரி தெரியாமல் அந்த அளவுக்கு இயல்பான நடிகர்கள். இந்தப் படத்துக்கு அப்புறம் நிறைய படங்களில் அவங்களையெல்லாம் பார்க்கலாம்.

இந்த படம் விஷுவல் ஆகவும் நிறைய டோன்கள் பார்க்க முடியும். என்னுடைய முந்தையபடங்களில் இருந்து நிச்சயம் வித்தியாசமான ஃபிரஷ் லுக் இருக்கும். அதற்கு ஷெல்லி கேலிஸ்ட் சினிமாட்டோகிராபி பக்க பலமா இருந்திருக்கு. ரேமண்ட் டெரிக் கிரெஸ்டா, எடிட்டிங்.

நாங்க மூணு பேருமே காலேஜ் காலத்திலிருந்து நண்பர்கள். அதனால் யாருக்கு என்ன தேவை என்பது சொல்லாமலேயே தெரியும். அந்தளவுக்கு எங்களுக்குள்ள ஒரு புரிதல் இருக்கு. விஜய் ஆண்டனி சார்தான் மியூசிக் செய்திருக்கார். அவருடைய மியூசிக் பற்றி சொல்லணுமா என்ன?!

‘சக்தி திருமகன்’ - ‘பராசக்தி’... உண்மை நிலவரம் என்ன?

விஜய் ஆண்டனி சார் எனக்கு எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு சிவகார்த்திகேயன் அண்ணாவும் எனக்கு ரொம்ப முக்கியம். என்னுடைய இரண்டாவது படம் ‘வாழ்’ தயாரிப்பாளரே எஸ். கே. அண்ணாதான். 

நிச்சயம் அவருக்கு மனஸ்தாபம் ஆகுற மாதிரி நான் எதுவும் செய்ய மாட்டேன். தமிழில் எந்தக் குழப்பமும் இல்லை. தெலுங்கு டைட்டில் கில்ட்தான் ஒரே தலைப்பை ரெண்டு தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து இருக்காங்க. அதனால்தான் இவ்வளவு சர்ச்சைகள். சரி யாருக்கும் குழப்பம் வேண்டாம் அப்படின்னு தெலுங்கில் இப்போ ‘பத்ரகாளி’ அப்படின்னு தலைப்பு வெச்சிருக்கோம்.

எப்படிப்பட்ட மெசேஜ் இந்தப் படம் கொடுக்கும்..?

பொழுதுபோக்காகவே இந்தப் படம் என்னுடைய முதல் இரண்டு படங்களை விட அதிக ஜனரஞ்சகமாகவும் தியேட்டர் மொமெண்ட்கள் ஆகவும் இருக்கும். இதுவரையிலும் பார்க்காத விஜய் ஆண்டனி சாரை பார்க்கலாம். பக்கா சமகால அரசியல் படம். பத்து நிமிடங்களுக்கு ஒரு தடவை தியேட்டர் நிச்சயம் தெறிக்கும். இந்தப்பட ரிலீசுக்கு அப்பறம்தான் அடுத்த படம் பற்றி யோசிக்கணும். ஆனால், கதை ரெடியா இருக்கு.

ஷாலினி நியூட்டன்