ஐபிஎல்: சாதனை மேல் சாதனை... சாதிக்கும் சன்ரைசர்ஸ் அணி!
கடந்த வாரம் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது 18வது ஐபிஎல் சீசன் போட்டிகள். வழக்கம்போலவே எலலா அணிகளும் களத்தில் சீறிப் பாய்ந்து வருகின்றன. குறிப்பாக இந்த சீசன் ஆரம்பத்திலேயே சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சாதனைகள் படைக்கத் தொடங்கியிருப்பது ஹைலைட்டாகி உள்ளது. காரணம், கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக 287 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை எடுத்த அணியாக சன்ரைசர்ஸ் வலம் வந்தது.
 இந்நிலையில் இந்த சீசனின் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதிய சன்ரைசர்ஸ் அணி 286 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரும் தாங்கள்தான் என தம்ஸ்அப் காட்டியுள்ளது. அதுமட்டுமல்ல. ஒட்டுமொத்த ஐபிஎல்லில் அதிகபட்ச ரன்கள் எடுத்த முதல் ஐந்து அணிகளின் பட்டியலில் நான்கில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியே உள்ளது.
அதாவது 250 ரன்களுக்கும் மேல் நான்கு முறை எடுத்த ஒரே அணி என்ற பெயரைப்பெற்றுள்ளது சன்ரைசர்ஸ். இதன்மூலம் உலக அளவில் அதிகமுறை 250 ரன்களுக்கும் மேல் குவித்த அணி என்ற சாதனையையும் தன்வசப்படுத்தியுள்ளது சன்ரைசர்ஸ்! இதுதவிர, இந்த சீசனில் தற்போதுவரை பவர் ப்ளேயில் (6 ஓவர்கள்) ஒரு விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் குவித்து அதிகபட்ச ரன்கள் எடுத்த அணியாகவும் உள்ளது சன்ரைசர்ஸ்.
இப்படி பவர் ப்ளேயில் அதிகபட்ச ரன்கள் எடுத்த பட்டியலிலும் முதல் ஐந்து இடங்களில் மூன்றில் சன்ரைசர்ஸ் அணிதான் உள்ளது. கடந்த 2024 சீசனில் பவர் ப்ளேயில் தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக விக்கெட் இழப்பின்றி 125 ரன்களும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக விக்கெட் இழப்பின்றி 107 ரன்களும் குவித்திருந்தது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் முறையே 105 - 0, 100 - 2 என உள்ளன. இப்போது மீண்டும் அசத்தியுள்ளது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி!
பி.கே
|