இரவில் நடக்கும் மாஸ் படம் இது!
வீர தீர சூரன் சீக்ரெட்ஸ்
‘‘இதுவரை பார்க்காத விக்ரம் சாரை ‘வீர தீர சூரன்’ படத்தில் பார்க்கலாம். அது ரசிகர்களுக்கு மிகப் பெரிய அனுபவமாக இருக்கும்...’’ என்கிறார் அதன் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ போன்ற தமிழ் சினிமாவின் சிறந்த படைப்புகளுக்கு இவர்தான் ஒளி ஓவியம் தீட்டியவர். படத்துக்கான அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டாலும் டிஐ ஸ்டூடியோவில் படத்தை மேலும் மெருகேற்றிக் கொண்டிருந்தவரிடம் பேசினோம்.
 ‘வீர தீர சூரன்’ அனுபவம் எப்படி இருந்துச்சு?
இயக்குநர் ராம், ‘மாவீரன்’ தயாரிப்பாளர் அருண் கே.விஸ்வா ஆகிய இருவரும் என்னுடைய நண்பர்கள். அவர்கள்தான் இயக்குநர் அருண்குமார் பற்றி சொன்னார்கள். ஏற்கனவே அருண்குமாருடன் படம் பண்ணுவதாக இருந்தேன். அப்போது அது நடக்கவில்லை.கதை கேட்டதும் ரொம்ப பிடிச்சது.  கதை சொல்லும்போதே தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த படமாக வரும்னு தோணுச்சு. நான் வேலை செய்த ‘மாமன்னன்’, ‘கர்ணன்’ மாதிரி இது பெரிய பட்ஜெட் படம். இந்த மாதிரி படங்களில் பட்ஜெட்டோட பிரமாண்டத்தை காண்பிக்கணும். படம் பார்க்கும்போது அது உங்களுக்கே தெரியும். 
இரவுல நடக்கும் கதை. அதை இயக்குநர் பிரமாதமா டிசைன் பண்ணியிருந்தார். அவருக்கு என்ன வேணும்னு தெளிவா இருப்பார். கேரக்டருக்கான டீடைலை அழகா கொடுத்திருப்பார். இந்தப் படம் எப்படி இருக்கணும் என்பதற்கு இந்தப் படம்தான் ரெபரன்ஸ்னு பேசி எடுத்தோம்.மெயின் சீக்வென்ஸ் எல்லாமே யதார்த்தமா இருக்கும்.  ஏன் அப்படி என்றால் இரவுல பல்வேறு இரவுகள் இருக்கு. சிட்டில ஒரு மாதிரியும், கிராமத்தில் வேற மாதிரியும், அடர்ந்த காட்டுல வேற மாதிரியும், திருவிழாவுல வேற மாதிரியும் இரவு இருக்கும்.  இது மாதிரி பல்வேறு இரவுகளைக் காண்பிச்சுள்ளோம். இரவைக் காட்டுவதாக இருந்தால் லைட் பண்ணிதான் காட்ட முடியும். அப்போதுதான் வித்தியாசங்களை காண்பிக்க முடியும். படத்துல வேற என்ன சவால் இருந்துச்சு?
சவால் என்று பார்த்தால் நிறையவே இருந்துச்சு. சினிமா என்பது விஷுவல் மீடியா. காம்போசிஷன், லைட்டிங், லென்ஸிங், கேமரா மூவ்மெண்ட்ஸ், கலர்ஸ் எல்லாம் சேர்ந்துதான் கதையை சுவாரஸ்யமா சொல்ல முடியும்.விக்ரம் சார், எஸ்.ஜே.சூர்யா சார், துஷாரா, பிருத்வி, ரமேஷ் என எல்லோரும் பிரமாதமா பெர்ஃபாமன்ஸ் பண்ணினார்கள். எந்த இடத்திலும் நடிக்கிற மாதிரியே தெரியாது.
அதே சமயம் லைட்டிங்கிலும் வழக்கமான சீன்களில் இருக்கும் டெம்ப்ளேட் இல்லாம ரசனையோடும், கதையோடும் கலந்துதர வேண்டும் என்ற தேவை இருந்துச்சு. இரவுல நடக்கிற கதை என்பதால் மாலை 6 முதல் காலை 6 வரைதான் எடுக்க முடியும். மதியம் 2 மணிக்கே லைட் பண்ண ஆரம்பிச்சு 7 மணிக்கு முடிப்போம். அதன் பிறகு ஷூட் பண்ணுவோம்.
டெக்னிக்கலாகவும், டீமாகவும் ஒர்க் பண்ணினோம். நைட் ஷூட், டே ஷூட்டை விட செலவு அதிகம் பிடிக்கும். எக்ஸ்ட்ரா கால்ஷீட் கொடுத்து செய்தோம். அதற்கு தயாரிப்பாளர் சிபு சாருக்கு நன்றி சொல்லணும்.
விக்ரம் சினிமா நாலெட்ஜ் அதிகம் உள்ளவர். அவர் எப்படி?
விக்ரம் சாருடன் எனக்கு இது முதல் படம். அவருடன் வேலை செய்தது எனக்குப் பெருமை. அவருக்கு என்னுடைய ஒர்க் ஆரம்பத்துலேயே பிடிச்சுப் போச்சு. அவருக்கு போட்டோகிராஃபிமீது ஆர்வம் அதிகம். அந்த ஆர்வத்தை என்னிடம் பகிர்ந்துகொள்வார். என்னுடைய லைட்டிங் எப்பவுமே ஆர்ட்டிஸ்ட்டை தொந்தரவு பண்ணாத மாதிரி இருக்கும். அது அவருக்கு பிடிச்சிருந்தது.
விக்ரம் சாருடைய டெடிகேஷன் எல்லோருக்கும் தெரியும். படத்துல அவர் நிறைய ரிஸ்க் எடுத்தார். ரன்னிங்கில போகும் வண்டியில் கதவு திறந்து வரணும். அந்த காட்சிக்காக அவர் எடுத்த மெனக்கெடல் அதிகம்.
இவ்வளவு படங்கள் செய்தபிறகும் இவரால் அதே பேஷனுடன் எப்படி வேலை செய்ய முடிகிறது என்று வியந்து போனேன். அதுவும்இரவு இரண்டு மணிக்கு பண்ணுவது பெரிய விஷயம். சக்கரத்துக்கும் அவருக்கும் சிறிய இடைவெளிதான் இருக்கும். ஆனால், ரிஸ்க் எடுக்க தயங்கமாட்டார்.
முதல் பாகம் தெரியாமல் இரண்டாம் பாகம் செய்யும்போது அழுத்தம் இருந்ததா?
அதுதான் இயக்குநர் அருண்குமாரின் திறமை. முதல் பாகத்தை மிஸ்ட்ரியா கொடுத்திருப்பார். இப்படி நடந்திருக்கும்ன்னு நீங்க யூகிக்க முடியும். அதுலதான் இயக்குநரின் திறமையை வியந்து பார்க்கிறேன். முதல் பாகத்துல இதெல்லாம் இருக்கும் என்ற மனநிலையில் படம் பார்க்க வைத்திருப்பார். அது படத்தை சுவாரஸ்யத்துக்கு அழைத்துச் செல்லும். அருண் ஆகச்சிறந்த படைப்பாளி.
படத்துல வேறென்ன ஹைலைட்ஸ்?
படத்துல வர்ற ஒவ்வொரு காட்சியும் எப்படி எடுத்தார்கள், இது சாத்தியமா என்ற கேள்வி வரும். சராசரி நபரின் வாழ்க்கைதான் படம். அந்த நபர் வாழும் இடங்கள் எல்லாமே உருவாக்கப்பட்டவை. எப்படி இந்தக் கூட்டத்துக்குள் விக்ரம் சார் நடிச்சிருக்க முடியும் என்ற கேள்வி வரும்.எல்லாமே கிரியேட் பண்ணியது. ஒரு காட்சியில் விக்ரம் சார், துஷாராவை பஸ் ஸ்டாப்பிலிருந்து அழைச்சுட்டுப் போவார். பஸ் ஸ்டாப் மட்டும் நிஜமா தெரியும். மற்றபடி அதைச்சுற்றி இருக்கும் கடைகள், மற்ற வாகனங்கள் எல்லாமே செட்.
லொகேஷன்தான் ஒரிஜினல். மற்றபடி எல்லாமே கிரியேட் பண்ணியது. ஆர்ட் டிபார்ட்மெண்ட், மியூசிக் டைரக்டர் எல்லாரும் அபாரமா உழைத்தார்கள். அந்த வகையில் இந்தப் படம் சினிமாவை கத்துக்க நினைப்பவர்களுக்கு பாடமா இருக்கும்.‘கர்ணன்’, ‘வாழை’ மாதிரி வாழ்வியல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வது, ‘வீர தீர சூரன்’ மாதிரி கமர்ஷியல் படத்துக்கு ஒளிப்பதிவு செய்வது, இவ்விரண்டில் எது பிடித்துள்ளது?
எல்லா படத்தையும் மனசுக்கு பிடிச்சுதான் பண்றேன். என்னைப் பொறுத்தவரை எல்லா படமும் ஆகச் சிறந்த படங்கள். கமர்ஷியல் படம், ஆர்ட் படம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. ‘வாழை‘, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘பேச்சுலர்’, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ உட்பட எல்லாமே வெற்றிப்கரமாக ஓடியவை. சக்ஸ்ஃபுல்லா ஓடினா அது வெற்றிப் படம். அதுவும் கமர்ஷியல் படம். பார்க்கும் விதம் வேறுவிதமாக இருக்கலாம்.
இப்போது ஓடிடி வந்துள்ளது. உலக சினிமா, மலையாள சினிமா என பல மொழி படங்களை எல்லோரும் ரசிச்சுப் பார்க்கிறாங்க. யாரும் பிரித்துப் பார்ப்பதில்லை. ஃபிலிம் மேக்கிங், கன்டன்ட் வேற விதமா இருக்குமே தவிர எல்லாமே சினிமாவுக்குள்தான் வருகிறது.
சிறந்த ஒளிப்பதிவுக்கான அடிப்படை என்ன?
இயக்குநர் கதை எழுதியதும் அது குறித்து ஒரு விஷன் வைத்திருப்பார். அதை புரிஞ்சு அப்படியே இரண்டு மணி நேரத்துக்கு காட்சிகளாக எடுத்து வந்து ஆடியன்ஸுக்கு கொடுக்கணும். அதுக்கு என்ன தேவை என்றால் மிகச் சிறந்த ஆர்ட் டைரக்ஷன், காஸ்டியூம், கேமரா சைட்ல அபரிமிதமான நாலெட்ஜ் வேணும். அதாவது கதையை புரிந்துகொள்ளும் நாலெட்ஜ். கதை புரிஞ்சு நடிகர்கள் நடிக்க ஆரம்பிச்சதும், லைட்டிங் மிக முக்கியம்.
பெர்ஃபாமன்ஸ் எவ்வளவு முக்கியமோ அதற்கு இணையாக லைட்டிங் பேட்டர்ன், லென்சிங் ஐடியாக்கள், காம்போஸிஷன், கேமரா மூவ்மெண்ட் முக்கியம். கேமரா சைட்ல இதெல்லாம் மறைக்கப்பட்ட லேயர்ஸ். இது சேர்ந்து வந்தால்தான் சிறந்த படம் சாத்தியம். இதுதான் போட்டோகிராபிக்கான இலக்கணமாக பார்க்கிறேன்.
எந்த மாதிரி படங்களில் ஒளிப்பதிவாளர்களுக்கு அதிக சுதந்திரம் இருக்கும்?
இயக்குநர் கதையை சொன்னதும் கேமராமேன் தரும் இன்புட்ஸை வெச்சு டைரக்டர் முடிவு எடுப்பார். கேமராமேன் டெக்னிக்கலாக சில விஷயம் சொல்லும்போதே இயக்குநர்களுக்கு கேமராமேன் பற்றிய புரிதல் கிடைத்துவிடும். இயக்குநர்கள் பாலா, ராம், சுசீந்திரன், மாரி செல்வராஜ் ஆகியோரின் படங்களை அப்படித்தான் பண்ணினேன். எல்லோரும் சிறந்த இயக்குநர்கள். அடிப்படை கதை. அதை எப்படி புரிஞ்சு பண்றோம் என்பது முக்கியம்.
பாலிவுட்டிலிருந்து அழைப்பு வருகிறதா?
‘தண்டேல்’ நான் பண்ணவேண்டிய படம். மலையாளத்தில் பண்ணியிருக்கிறேன். ‘அந்தாதூன்’ கம்பெனியில் கேட்டார்கள் அப்போது கால்ஷீட் இல்லை. தொடர்ந்து பாலிவுட் அழைப்புகள் வருகின்றன. சீக்கிரத்துல பாலிவுட் படம் பண்ணுவேன்.
எஸ்.ராஜா
|