க்ரீன் கார்டு சர்ச்சை?



டிரம்ப் அமெரிக்க அதிபரானது முதல் நாளொருமேனியும் பொழுதொரு சர்ச்சையுமாகக் கழிகிறது.அதில், லேட்டஸ்ட் க்ரீன் கார்ட்.அமெரிக்க நாட்டுக் குடியுரிமைக்கு அத்தாட்சியாகத் திகழும் க்ரீன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் அமெரிக்க குடியுரிமைத் துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகத் தகவல்கள் வருகின்றன.
விமான நிலையங்களில் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு உட்படுத்தி இந்தியர்கள் உள்பட க்ரீன் கார்டு வைத்திருக்கும் முதியவர்களை குறி வைத்து குடியுரிமைத் துறை அதிகாரிகள் கடும் அழுத்தம் கொடுப்பதாகவும், தாங்களாகவே முன்வந்து க்ரீன் கார்டுகளை ஒப்படைக்குமாறு கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் க்ரீன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு சட்டத் துறையிடமிருந்து ஓர் அறிவுரை வந்திருக்கிறது. யாரும் க்ரீன் கார்டை ஒப்படைக்கத் தேவையில்லை... க்ரீன் கார்டு வைத்திருப்பவர்கள், குடியுரிமைத் துறை நீதிபதியின் ஆலோசனையைப் பெறலாம்...

இதை ஆமோதிக்கும் வகையில் க்ரீன் கார்டுகளை ஒப்படைக்க அழுத்தம் கொடுக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்காக பணியாற்றும் குடியுரிமைத் துறை வழக்குரைஞர்கள், ‘அமெரிக்காவில் தங்களது பிள்ளைகளுடன் தங்கியிருக்கும் பெற்றோர், குளிர்காலத்தில் மட்டும், அதாவது 180 நாள்களுக்கு தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்.

குளிர்காலம் முடிந்து அவர்கள் அமெரிக்கா திரும்பும் போது நிச்சயம் அவர்களது க்ரீன் கார்டுகளை ஏற்க வேண்டும். அமெரிக்க சட்டம், ஒருவர் 365 நாட்களுக்கும் மேலாக வெளியே சென்று எங்காவது தங்கியிருந்தால்தான் க்ரீன் கார்டு உரிமத்தை ரத்து செய்ய பரிசீலிக்க முடியும் என்கிறது...’ என வலியுறுத்துகிறார்கள்.

மேலும், க்ரீன் கார்டு வைத்திருக்கும் இந்திய மூத்த குடிமக்களுக்காக பணியாற்றி வரும் வழக்குரைஞர் ஒருவர், ‘குறிப்பிட்ட கால இடைவெளியில் அமெரிக்காவிலிருந்து வெளியேறி இந்தியாவில் தங்கியிருக்கும் மூத்த குடிமக்கள், தங்களது க்ரீன் கார்டுகளை ஒப்படைக்குமாறு மிரட்டப்படுவதாகவும், இல்லாவிட்டால் திடீர் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என அச்சுறுத்தல்கள் வருவதாகவும்’ புகார் தெரிவித்திருப்பதாகக் கூறுகிறார்.எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்.மூத்த குடிமக்கள் யாரும் தங்களது க்ரீன் கார்டுகளை ஒப்படைக்க வேண்டாம். மிரட்டப்பட்டால் நீதிமன்றத்தை நாடலாம்.  

ஜான்சி