இந்த நாயின் விலை ரூ.50 கோடி!



‘‘வுல்ஃப்டாக்’ என்கிற இனத்தைச் சேர்ந்த அரிய வகை நாயை 50 கோடிக்கு வாங்கினார் சதீஷ்...’’ என்ற செய்திதான் சமூக வலைத்தளங்களில் செம வைரல்.
ககாசியன் ஷெப்பர்டு என்ற நாய் இனமும், ஓநாயும் கலந்த கலப்பினம்தான் இந்த வுல்ஃப்டாக். இப்படியான கலப்பினத்தில் பிறந்த முதல் நாய் இதுதான். மட்டுமல்ல, உலகில் விலையுயர்ந்த நாய்களில் இதுவும் ஒன்று. இந்த வுல்ஃப்டாக்கிற்கு கடபாம்ப் ஒகாமி என்று பெயர் வைத்துள்ளார், சதீஷ்.

யார் இந்த சதீஷ்?

பெங்களூருவைச் சேர்ந்த பிரபலமான நாய் ஆர்வலர்தான் இந்த சதீஷ். 150க்கும் மேற்பட்ட அரிய  மற்றும் கவர்ச்சியான நாய் இனங்கள் இவரிடம் உள்ளன.
சினிமா நிகழ்ச்சிகள் உட்பட பல நிகழ்வுகளில் நாய்களைக் காட்சிக்கு வைத்து, கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார். இவருடைய பட்டியில் புதிதாக சேர்ந்திருக்கிறது, ஒகாமி.
அமெரிக்காவில் வளர்க்கப்பட்ட ஓகாமியை, இடைத்தரகர் மூலமாக வாங்கியிருக்கிறார் சதீஷ்.

இப்போது ஒகாமிக்கு எட்டு மாதங்கள்தான் ஆகிறது. ஆனால், எடையோ 75 கிலோவைத் தொட்டுவிட்டது. உயரமும் 30 அங்குலத்தை எட்டிவிட்டது. ‘‘மிகவும் அரிய வகை இனம் இது. அச்சு அசல் ஓநாயைப் போல இருக்கிறது. இதற்கு முன்பு உலகத்தில் இப்படியொரு நாயை யாரும் வாங்கியதும் இல்லை; விற்றதும் இல்லை...’’ என்கிறார் சதீஷ்.

ஒகாமியின் தந்தை ககாசியன் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்தது. ரஷ்யா, ஆர்மினியா, அஜர்பைஜான், ஜார்ஜியா போன்ற குளிர்பிரதேசங்களில் வாழக்கூடிய ஒரு நாய் இனம், ககாசியன் ஷெப்பர்டு. வலிமைக்கும், புத்திக்கூர்மைக்கும், பாதுகாப்புக்கும் பெயர் போனது இந்த இன நாய். பெரும்பாலும் ஓநாய் போன்ற விலங்குகளிடமிருந்து கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக ககாசியன் ஷெப்பர்டை வளர்க்கின்றனர்.

கர்நாடகாவில் நடக்கவிருக்கும் சினிமா நிகழ்ச்சிகள், பெரிய இடத்து திருமணங்களில் மக்களைக் கவர்வதற்காக ஒகாமியைக் காட்சிக்கு வைக்கவிருக்கிறார் சதீஷ். ஒகாமியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளவே ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என்று நம்புகிறார். நிகழ்வுகளில் ஒகாமியை 30 நிமிடங்களுக்குக் காட்சிப்படுத்த 2.45 லட்சம் ரூபாய் கட்டணம். 5 மணி நேரத்துக்கு 10 லட்ச ரூபாய் கட்டணம்!  

த.சக்திவேல்