பூமிக்கு வந்த நட்சத்திரம்!



இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்டோர் ‘ஸ்பேஸ் எஸ்’ நிறுவனத்தின் ‘டிராகன்’ விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்குத் திரும்பினர்.இந்திய நேரப்படி மார்ச் 19ம் தேதி அதிகாலை 3.27 மணிக்கு புளோரிடா கடலில் டிராகன் ஸ்பிளாஷ் டவுன் ஆனது. 
சுனிதா மற்றும் வில்மோருடன் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்குத் திரும்பினர். விண்கலம் ஸ்பிளாஷ் டவுன் ஆகும் காட்சியை நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு செய்து வந்தன. இதனை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி புட்ச் வில்மோர் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஓர் ஆய்வுப் பயணத்திற்காக 2024 ஜூன் 5ம் தேதி சென்றனர். ஜூன் 14 அன்று  பூமிக்குத் திரும்பிவிடுவோம் என்ற எதிர்பார்ப்பில்தான் சென்றனர்.அவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக  பூமிக்குத் திரும்பாமல் கடந்த 9 மாதங்கள் 14 நாட்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்தார்கள்.

இந்த ஆண்டு மார்ச் 16ம் தேதி, அமெரிக்காவின் ஆனி மெக்லைன், நிகோல் அயர்ஸ், ஜப்பானின் டகுயா ஒனிஷி, ரஷ்யாவின் கிரிஸ் பெஸ்கோஸ் ஆகியோர் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) சென்றனர். அங்கு ஏற்கனவே ஏழு விண்வெளி வீரர்கள் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.புதிய விண்வெளி வீரர்கள் ISS-ஐ அடைந்தவுடன், பழைய வீரர்கள் அவர்களிடம் பணிகளை ஒப்படைத்து பூமிக்குத் திரும்புவது வழக்கம்.

இது பொதுவாக 3 முதல் 5 நாட்கள் வரை ஆகும். ஆனால், இந்த முறை, சுனிதாவும் மற்றும் 3 வீரர்களும் 2 நாட்களிலேயே பூமிக்குத் திரும்பினர்முன்னதாக, சா்வதேச விண்வெளி நிலையத்தில் இணைக்கப்பட்டிருந்த சுனிதா சென்ற ஸ்டாா்லைனா் விண்வெளி ஓடத்தின் 5 இடங்களில் ஹீலியம் வாயு கசிவு கண்டறியப்பட்டது. அதன் 28 உந்து என்ஜின்களில் 14 என்ஜின்களில் பிரச்னை ஏற்பட்டது.

எனவே சுனிதா வில்லியம்ஸும் அவருடன் சா்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள புட்ச் வில்மோரும் பூமிக்குத் திரும்பும் திட்டம் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதியில் இருந்து ஜூன் 26க்கு தள்ளிவைக்கப்பட்டது. எனவே கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இன்றி பூமிக்குத் திரும்பியது. இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 28ம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் அமெரிக்காவின் நிக் ஹேக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் ஆகிய இரு வீரர்களுடன் ஐஎஸ்எஸ் நிலையம் சென்றது.

சுனிதாவும் மற்ற வீரர்களும் விண்வெளி நிலையத்தில் அறிவியல் சார்ந்த பணிகளையும், விண்வெளியில் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டனர். மேலும் விண்வெளி நடைபயணத்திலும் ஈடுபட்டனர். 

சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்ற கடற்படை ஹெலிகாப்டர் விமானி. வில்மோர் போர் விமானத்தை இயக்கிய முன்னாள் விமானி. இருவரும் விண்வெளிப் பயணம் மற்றும் ஆய்வுகளில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் மணிக்கு 17,500 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் ஐஎஸ்எஸ் - ISS (International Space  Station) இல் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

விண்வெளிக்குச் செல்லும் வீரர், வீராங்கனைகள் ஏற்கனவே இதுபோன்ற சவாலான சூழ்நிலைகளுக்கு தங்களைத் தயார் படுத்திக் கொண்டு அதற்குரிய உடல் மற்றும் மனவலிமையுடன்தான் விண்வெளிக்குச் செல்வார்கள். இந்த இருவருடன் ஏழு விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியுள்ளனர். 

அதனால், அவர்களுக்கு நீண்ட காலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியது சலிப்பை ஏற்படுத்தவில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த நிக் ஹேக், சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் டிராகன் 9 விண்கலத்தில் இந்திய நேரப்படி மார்ச்18ம் தேதி 10.35 மணிக்கு பூமிக்கு புறப்பட்டனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 17 மணி நேர பயணத்துக்குப் பிறகு மார்ச் 19ம் தேதி காலை 3.27 மணி அளவில் அமெரிக்காவின் புளோரிடா  கடல் பகுதியில் டிராகன் விண்
கலம் வந்து சேர்ந்தது.விண்வெளியில் அதிக நாட்களைக் கழித்த 2வது அமெரிக்க வீரர் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். 

சுனிதா வில்லியம்ஸும் பேரி வில்மோரும் விண்வெளியில் சுமார் 20 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளனர். 4,576 முறை பூமியைச் சுற்றி வந்துள்ளனர்.இதுவரை சுனிதா 3 முறை விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளார். மொத்தம் அவர் 608 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார்.

வில்மோர் தனது 3 பயணங்களில் 464 நாட்களும், நிக் ஹேக் 374 நாட்களும் விண்வெளியில் தங்கி இருந்துள்ளனர். அலெக்சாண்டருக்கு இதுதான் முதல் பயணம்.இந்த குழுவினர் 150க்கும் மேற்பட்ட அறிவியல் சோதனைகள் செய்துள்ளனர். 

மொத்தமாக 900 மணி நேரம் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சுனிதா 62 மணி நேரம் 6 நிமிடங்கள் விண்வெளியில் நடந்துள்ளார். இதன்மூலம் அதிக நேரம் நடந்த முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஒட்டு மொத்தமாக அதிக நேரம் விண்வெளியில் நடந்தவர்கள் பட்டியலில் 4ம் இடம் பிடித்துள்ளார். சுனிதா 2 முறையும் வில்மோர் மற்றும் நிக் ஹேக் ஆகியோர் தலா ஒரு முறையும் விண்வெளியில் நடந்துள்ளனர்.

விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும் விண்வெளி வீரர்களின் எலும்புகள், தசைநார்கள் பலவீனம் அடைந்திருக்கும். அவர்களால் எழுந்து நடக்க முடியாது. எனவே நான்கு பேரும் மறுவாழ்வு மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு 6 வாரங்கள் தீவிர பயிற்சி அளிக்கப்படும். குறிப்பாக தரையில் கால் ஊன்றி நடப்பதற்கு பயிற்சி வழங்கப்படும். 

ஊட்டச்சத்துள்ள உணவு வகைகள் வழங்கப்படும். அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு வீடுகளுக்குச் செல்வார்கள்.சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பிற வீரர்கள் விண்வெளியில் இருந்து திரும்பிய பிறகு பூமியில் எதிர்கொள்ளும் தினசரி வாழ்க்கை மாற்றங்கள் பல உண்டு.

உடல்ரீதியான பாதிப்புகள்

தசை மற்றும் எலும்பு பலவீனம்: புவியீர்ப்பு இல்லாத சூழலில், தசைகள் 20 - 30% பலவீனமாகி, எலும்பு அடர்த்தி 1 - 2% குறையும். தினமும் உடற்பயிற்சி செய்தாலும், முதல் சில வாரங்கள் நடப்பது, படிக்கட்டு ஏறுவது கஷ்டமாக இருக்கும். 2007ல் திரும்பியபோது, ‘நடப்பது மறந்துவிட்டது போல உணர்ந்தேன்’ என்றார் சுனிதா. 

இருதயம்: இரத்தம் மேல்நோக்கிச் செல்வதால், இதயம் சிறிது சுருங்கி, தலைச்சுற்றல் ஏற்படலாம். திடீரென எழும்போது மயக்கம் வரலாம்.  பார்வை: கண்களுக்கு பின்னால் அழுத்தம் (SANS) ஏற்பட்டு, பார்வை மங்கலாகலாம்.

மன ரீதியான விளைவுகள்  

தனிமை: 9 மாதங்களுக்கு மேல் குடும்பத்தை பிரிந்து, சிறிய இடத்தில் வாழ்ந்தது மன அழுத்தத்தை தரலாம். 2012ல், ‘என் நாயை மிஸ் செய்தேன்’ என்று சொன்னார். புவியீர்ப்பு மனதுக்கு சோர்வை ஏற்படுத்தலாம். கூட்டமும் சத்தமும் முதலில் அந்நியமாக இருக்கும்.

அன்றாட வாழ்க்கை மாற்றங்கள்  

உணவு: விண்வெளியில் உலர்ந்த உணவுக்குப் பிறகு, புதிய பழங்கள், பீட்சா சுவையாக இருக்கும். செரிமானத்தில் சிறு சிரமம் ஏற்படலாம்.  தூக்கம்: ஒரு நாளில் 16 முறை சூரிய உதயம் பார்த்த பிறகு, 24 மணிநேர சுழற்சிக்கு பழக, தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம் வர வாய்ப்புண்டு.

சமூகம்: பெரிய கூட்டத்தில் பழக சிறிது நேரம் தேவைப்படும்.ஹூஸ்டனில் உள்ள நாசாவின் மறுவாழ்வுத் திட்டத்தில், மருத்துவர்கள், பிசியோதெரபிஸ்டுகள் உதவுவார்கள். 1 - 3 வாரங்களில் நடப்பது சரியாகும், 3 - 6 மாதங்களில் முழு உடல் வலிமை திரும்பும். சுனிதாவின் மன உறுதியும், குடும்ப ஆதரவும் அவர் விரைவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வர உதவும்.

நாடுகளுக்கான அறைகளும் நுண் ஈர்ப்பும்!

ஐஎஸ்எஸ்ஸில் பல்வேறு அறைகள் உள்ளன. டெஸ்டினி, ஹார்மனி ட்ரான்குயிலிட்டி என்ற அறைகள்  இருக்கின்றன. அமெரிக்காவுக்கு என பிரத்யேகமான பகுதி, ரஷ்யாவுக்கு மற்றும் ஐரோப்பிய வீரர்களுக்கு என பிரத்யேகமான பகுதிகள் உள்ளன. ஏழு படுக்கையறைகள், மூன்று குளியலறைகள், கூடவே நீர் மற்றும் உணவு ஆகியவை அங்கு இருக்கின்றன. நீர் மற்றும் உணவு போன்றவை சரக்கு விண்வெளிக் கலன்கள் மூலம் அவ்வப்போது அங்கு சென்று சேர்ந்து விடும்.

விண்வெளி ஆய்வு மையத்தில் நமது பூமியின் நிலப்பரப்பை ஒப்பிடும் போது 90 சதவீத அளவிற்கு ஈர்ப்பு விசையிருக்கும். அங்கு  காற்று இல்லாத காரணத்தால் உடல் எடையை உணர முடியாத நிலை இருக்கும். இதை ‘நுண் ஈர்ப்பு’ (மைக்ரோ கிரேவிட்டி) என்று அழைக்கிறோம்.

நமது உடலின் திரவங்கள் மேலிருந்து கீழ் என்று இல்லாமல் கீழிருந்து மேல்நோக்கிச் செல்லும். இதனால் கண்களில் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். கூடவே தலையில் அழுத்தம் அதிகரிக்கலாம். தண்ணீர் அருந்துதல் இயற்கையாகவே குறைந்து விடும் என்பதால் சிறுநீர் வெளியேற்றுதல் குறையும். இதனால் சிறுநீரகக் கற்கள் தோன்றும் வாய்ப்பு அதிகரிக்கும்.

தீப்பிழம்பாக மாறும் விண்கலம்

விண்வெளியிலிருந்து பூமிக்குள் விண்கலம் நுழையும் போது வளி மண்டலத்துடன் வேகமாக உராயும். இதனால் 1500 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான  வெப்பம் ஏற்படும். அப்போது விண்கலம் தீப்பிழம்பாக மாறும்.

இது விண்கலத்தில் உள்ள வீரர்களைத் தாக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஓர் எடை குறைவான பீனலிக் இம்பிரக்னேட்டட் கார்பன் அப்ளாடர் ஷில்ட் ஒட்டப்பட்டிருக்கும். இதன் காரணமாக  விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு வருகின்றனர்.

நீண்ட நாள் விண்வெளியில் தங்கிய வீரர்

வலேரி விளாதிமீரவிச் பொல்யாக்கொவ் (Valeri Vladimirovich Polyakov) என்ற ரஷ்ய விண்வெளி வீரர் 14 மாதங்களுக்கும் மேலாக (437 நாட்கள் 18 மணிநேரம்) தொடர்ந்து மீர் விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து அதிக நேரம் விண்வெளியில் தங்கியதற்காக சாதனை படைத்தார்.1994ம் ஆண்டு ஜனவரி 8 முதல் 1995 மார்ச் 22 வரை எம்ஐஆர் (MIR)விண்வெளி நிலையத்தில் தனி ஓர் வீரராக பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்தார். கிட்டத்தட்ட 437 நாட்கள் விண்வெளியில் இருந்து உலக சாதனை படைத்தார். அவர் மார்ச் 22, 1995ல் திரும்புவதற்கு முன், பூமியை 7,000 முறைக்கு மேல் சுற்றினார்.

பா.ஸ்ரீகுமார்