அண்ணன பார்த்தியா... அப்பத்தே தே... தேனா..!
நாயர்... போனவாரம் வரைக்கும் ‘கயாடு கயாடு’னு கத்திட்டு இருந்த ஒருத்தனகூட காணோம்... எங்கதான் போயிருப்பானுங்க?
 ‘அண்ணன பாத்தியா... அப்பத்தே... தேனா... ஆஹ்... பாத்தியா..? அப்பத்தே தே... தே... கூட்’னு பாடிக்கிட்டு தாய்லாந்து நோக்கி படையெடுத்து போய்ட்டானுங்க மேடம்... அது தாய்லாந்து இல்ல... இந்தோனேசியா முருகேசா..! அட உண்மைதாம்ப்பா... ‘டிராகன்’ நாயகி கயாது லொஹார் கனவில் இருந்து இவர்கள் எப்போது எழுந்தார்கள் என்று தெரியவில்லை. அதற்குள் இந்தோனேஷியா பக்கமாக உலாவிக் கொண்டிருக்கிறார்கள் நமது நெட்டிசன்கள்.
 இந்தோனேஷியாவின் பாடல் ஒன்று திடீர் வைரலாக... தொடர்ந்து அதைப் பாடிய பெண் இணையத்தில் மட்டுமல்ல நெட்டிசன்களின் இதயத்திலும் இடம் பிடித்துவிட்டார். சில்வி குமலசரி (Silvy Kumalasari)... கொரியா பார்பி பொம்மை போன்ற அழகு இவரின் ஸ்பெஷல். நம்ம ஊர் ஃபேஷன் ஃபேர்னஸ் கிரீம் விளம்பரங்களில் சொல்லப்படும் அத்தனை அழகுக்கான வார்த்தைகளையும் இவருக்கு பயன்படுத்தலாம்.
 அப்பழுக்கற்ற சருமம், பார்லர் போன்ற பிரகாசம், சூரியன் வெட்கப்படும் அழகு... உடலை வருத்தி , எனர்ஜியை பிழிந்து எல்லாம் நடனம் கிடையாது, அழகான மெல்லசைவுகள், சீரான டெம்போ நடனம், ‘ஜானி’ படத்தின் ‘ஆசையக் காத்துல தூது விட்டு...’ என முதல் வரியை பாடி முடித்தவுடன் ‘டின்டிடி டின், டின்டிடி டின்...’ என நடிகை சுபாஷினி மற்றும் குழுவினர் ஒரு டெம்போ நடனம் ஆடுவார்களே... அதே ஸ்டைல்தான். வாசிப்பு கருவிகள் கூட அந்தப் பாடலில் பயன்படுத்திய வகை பழங்குடி ஸ்டைல்தான்.
யார் இந்தப் பொண்ணு? இந்தோனேஷியாவில் இருந்து இந்தியா வர எதும் வாய்ப்பிருக்கா? நம்மூர் இயக்குநர்களுக்கு ஐடியா ஏதும் வருமா? ‘ஒரு வழியச் சொல்லித் தொலை’ என நம்ம டிஜிட்டல் கிளி கூகுளைத் தட்டினால் பெயரைத் தவிர அத்தனையும் இந்தோனேஷிய மொழியில் வந்து விழுகிறது. சரி... ‘ஐயா ChatGPT நீயாவது ஒரு வழி சொல்லுப்பா’ என்றதும் அந்த கேட்டும் அடைபட்டுக் கிடக்க கடைசியில் இந்தோனேஷிய மொழி டூ ஆங்கில மொழிபெயர்ப்புதான் கைகொடுத்தது.
பெயர் சில்வி குமலசரி, 1997ம் ஆண்டு பிறந்த 27 வயது பெண். சிந்தென் (sinden) என சில்வியை அடையாளப் படுத்துகிறது இந்தோனேஷியாவின் ஜாவனிஸ் மொழி. அதாவது தனியாக பாடும் பெண் பாடகியை சிந் தென் என்கிறார்கள் இந்தோனேஷியர்கள்.
எப்படி தமிழில் கலைஞர், பாடகர், இசையமைப்பாளர் என எத்தனையோ வார்த்தைகள் இருப்பினும் சங்கீத வித்துவான் என்றால் சட்டென நமக்கு நம் கர்நாடக சங்கீதமும் அதைச் சார்ந்த பின்னணி குழு மேடைகளும் நினைவுக்கு வருமோ அப்படி இந்தோனேஷியாவின் பாரம்பரிய ஜாவனிஸ் கலாசார பாடகி இந்த சில்வி. இந்தோனேஷியாவின் பாலி அருகே இருக்கும் அழகிய தீவான ஜாவாவில் பிறந்தவர். பசிபிக் கடலின் ஒரு பகுதியான ஜாவா கடலுக்குச் சொந்தமானது இந்த ஜாவா தீவு. இந்தோனேஷியாவின் மக்கள் தொகையில் 55.7% இந்தத் தீவில்தான் வசிக்கிறார்கள். உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட தீவுகளில் ஜாவா தீவும் ஒன்று. அவர்களில் ஒருவர்தான் சில்வி.
இப்போதும் அவர்களின் பாரம்பரிய பழங்குடி கலைகளை மறவாத இளைஞர்கள், இசை, நடனம் என அசத்துகிறார்கள். அதில் சில்வி தனது இசைக் கலையை டிக்டாக் தளத்தில் காட்ட இந்தோனேஷியா இணையத்தில் டாப் ஸ்டார் ஆனார். அனைத்தும் சொந்தமாக இயற்றிய பாடல்கள். தனியிசைதான் பாடுவார். அவருக்கென ஒரு தனி இசைக்குழு, அவர்களுடன் இந்தோனேசியா முழுக்க பயணித்து மேடைக் கச்சேரிகளும் செய்து வருகிறார்.
‘பியூட்டி வித் டேலன்ட்’ ஆக இணைய உலகில் கால் பதித்தவருக்கு டிக் டாக் தளம் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தது. தொடர்ந்து ஏராளமான தனி இசை பாடல்கள், கச்சேரிகள் என டிக் டாக் தளத்தின் பிரத்தியேக For You Page (FYP) என்னும் தனித்திறமையாளர்களுக்கான ட்ரெண்டில் அடிக்கடி சில்வி தனது சொந்த பாடலுடன் நடனமாடி தனக்கான ரசிகர்களை அதிகரிக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து இந்தோனேஷிய விளம்பரங்கள், மாடலிங், இணையத்தில் ஒரிஜினல் கன்டன்ட் கிரியேட்டர் உள்ளிட்ட பல விதங்களில் இவருக்கான அங்கீகாரம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஜாவாவின் துளுங்ககுங் (Tulun gagung) பகுதியைச் சேர்ந்தவர். இங்கே சில்வி மட்டுமல்ல... இந்த ஊரே திறமையான இசைக் கலைஞர்களையும், பாடகர்களையும் அதிகம் கொண்டிருக்கிறது. எங்கும் எப்போதும் ஏதாவது ஒரு கச்சேரி, மேடை நிகழ்ச்சி, நடனம் என இந்த ஊர் கலாசார இசை பின்னணியில் தன்னை பிசியாகவே வைத்திருக்கிறது. அதில் ஒருவர்தான் சில்வி. 160 செ. மீ உயரம் கொண்ட சில்வி, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்.
அதன் பொருட்டே அவரது உடைகள், நடனம் என அனைத்திலும் ஒரு கட்டுப்பாட்டுடன் காணப்படுவார். விரும்பியே இந்த கட்டுப்பாடுகளையும் கலாசாரத்தையும் பின்பற்றும் சில்வி பாடுவதைக் காட்டிலும் பேசும் வீடியோக்கள் இன்னும் நம் கவனம் ஈர்க்கும்.
@silvykumalasari_reall என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரது கச்சேரிகள், பதிவுகளைப் பார்க்கலாம். இஸ்லாமிய மதம் சார்ந்த பாடல்களிலும் பர்தா சகிதமாக பாடி மகிழ வைக்கிறார். சமீபத்தில் இவர் ஜாவாவின் ‘பெர்காக் டேலன்டா’ ஸ்டூடியோவில் பாடிய ‘Culik AKU’ என்னும் ஆல்பம் பாடலான ‘Anan ta Pad chaye’ வீடியோவுக்குதான் தற்போது இணையவாசிகள் வைப் செய்து கொண்டிருக்கிறார்கள்.
டிக் டாக்... அட விடுங்க, அதுதான் நமக்கு இல்லைன்னு ஆகிடுச்சு. அந்த வேதனைய ஏன் சுரண்டிகிட்டு! அதில் @silvykumalasari_real என்னும் கணக்கில் பல லட்சம் ரசிகர்களுடன் படு பிஸியாக வலம் வருகிறார். தற்போது இவரது பெயரை குறிப்பிட்டால் spotify, gaana உள்ளிட்ட செயலிகளிலும் இவர் இசையமைப்பில் உருவான பாடல்கள் சூப்பர் குவாலிட்டியில் கிடைக்கின்றன.
ஒரு முக்கிய பகீர் செய்தி... மனசத் தேத்திக்கோங்க. சில்விக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் இருக்கிறது. கணவர் பெயர் ஃபைசல் பகருதீன். கடந்த பிப்ரவரி மாதம் கணவருடன் மெக்கா சென்ற புகைப்படம் சகிதமாகத்தான் இவரது இன்ஸ்டா பக்கம் நம்மை வரவேற்கும். சரி, மனசத் தளர விடாதீங்க... வழக்கமான வாழ்த்துதான்... எங்கிருந்தாலும் வாழ்க!
ஷாலினி நியூட்டன்
|