சோஷியல் மீடியாவும் டீன் ஏஜ் பிள்ளைகளும்!
‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகி பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கும் குறுந்தொடர், ‘அடொலசன்ஸ்’. இத்தொடரைப் பார்த்தவர்கள் எல்லோரும் பிரமித்துப்போய், பாராட்டுகளை அள்ளி வீசுகின்றனர். சமூக வலைத்தளப் பக்கங்களைத் திறந்தாலே ‘அடொலசன்ஸ்’ தொடரைப் பற்றிய பாராட்டுப் பதிவுகள்தான் நிறைந்திருக்கின்றன.
 அப்படி என்ன கதை என்கிறீர்களா?
இங்கிலாந்தில் உள்ள ஒரு நகர்புறத்தில் வசித்து வருகிறது எடி மில்லரின் குடும்பம். ஒரு நாள் காலையில் மில்லரின் வீட்டைச் சுற்றி வளைக்கும் காவல் துறையினர், எடியின் 13 வயது மகனான ஜேமியைக் கைது செய்து, அருகிலிருக்கும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். எடியும் அவரது மனைவியும், மகளும் பதறிப்போகின்றனர்.“நான் எந்த தப்பும் செய்யல...” என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறான் ஜேமி.

காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்படுகிறான். ஜேமியின் குடும்பமும் அங்கே விரைகிறது. உடன் படிக்கும் சக மாணவியான கேட்டியைக் கொலை செய்துவிட்டான் ஜேமி என்று அவன் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. அதிர்ச்சியில் உறைந்து போகும் தந்தை எடி, தன் மகன் அப்படிப்பட்டவன் இல்லை என்று உறுதியாக மகன் பக்கம் நிற்கிறார்.  விசாரணை ஆரம்பமாகிறது. ஜேமியுடன் அவரது தந்தையும் துணை நிற்க, அவன் சார்பாக வாதிட ஒரு வழக்கறிஞரும் நியமிக்கப்படுகிறார். சமூக வலைத்தளங்களில் பல பெண் மாடல்களுக்கு பாலியல் ரீதியான பின்னூட்டங்களை ஜேமி இட்டிருப்பதை சாட்சியுடன் வைக்கிறார் விசாரணை அதிகாரி. அப்போதும் “ நான் எந்த தப்பும் செய்யல...” என்று மட்டுமே சொல்கிறான் ஜேமி. அவனுடைய தந்தை எடியும் மகன் மீது நம்பிக்கையுடன் இருக்கிறார். 
இந்நிலையில் அந்த அதிகாரி ஒரு சிசிடிவி கேமரா பதிவுகளைக் காட்ட, எடி அதிர்ச்சியில் உறைந்து போகிறார். தண் மகனை சரியாக வளர்க்கவில்லையோ என்று குற்றவுணர்வுக்குள் தள்ளப்படுகிறார். ஆம்; அந்த கேமரா பதிவில் ஜேமி கேட்டியைப் பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்யும் காட்சி இருக்கிறது.
அதைப் பார்த்து ஜேமியும் அதிர்ந்து போகிறான்.ஜேமிதான் கொலை செய்தான் என்பதற்கான வீடியோ சாட்சியே கைவசம் இருந்தாலும், அவனைக் குற்றவாளியென்று முத்திரை குத்தி சிறையில் அடைத்து தண்டனையைப் பெற்றுத்தர முடியவில்லை.
ஜேமி எதற்காக கொலை செய்தான்? அவன் கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கத்தி எங்கே... போன்ற விவரங்களைச் சேகரிப்பதற்காக காவல்துறையினர் ஜேமியின் பள்ளிக்குச் செல்கின்றனர். அங்கே பயிலும் மாணவர்களும், மாணவிகளும் பொறுப்பற்று, தங்களின் இஷ்டத்துக்கு இருக்கின்றனர். ஆசிரியர்களாலும் மாணவர்களைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை.
ஜேமியின் நெருங்கிய இரண்டு நண்பர்களிடம் விசாரிக்கின்றனர். அவர்களும் முன்னுக்குப் பின் முரணாக பதில் சொல்கின்றனர். குறிப்பாக நண்பர்களில் ஒருவனான ரியான் காவல்துறையிடமிருந்து தப்பித்து ஓடுகிறான்.
ரியான்தான் ஜேமியிடம் கத்தியைக் கொடுத்திருக்கிறான் என்பது தெரிய வருகிறது. காவல்துறையினர் ரியானையும் பிடித்துக்கொண்டு போகின்றனர். ஜேமி கொலை செய்வதற்கான காரணங்களைக் கண்டறிய ஒரு பெண் உளவியலாளர் வருகிறார். அவரிடம் ஜேமி தன்னை வெளிப்படுத்தும் இடங்கள் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உண்மையில் ஜேமி ஏன் கொலை செய்தான்? அவன் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டானா... என்பதை அறிந்து கொள்ள இத்தொடரை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.
இங்கிலாந்தில் நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு இத்தொடரின் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. இங்கிலாந்தின் கதை என்றாலும் நம்ம ஊருக்கும் பொருந்திப் போகிறது. இன்று உலகமெங்கும் ஸ்மார்ட்போனும், இன்ஸ்டா, ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வளரிளம் பருவத்தினரின் வாழ்க்கையில் முக்கியப் பங்களிப்பு செய்கிறது. இன்ஸ்டாவிலும், ஃபேஸ்புக்கிலும் நடக்கும் பல சம்பவங்கள் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. குறிப்பாக பாலியல் ரீதியான விஷயங்கள், இமோஜிக்கான அர்த்தங்கள், இன்ஸ்டா கலாசாரம், அங்கே நிகழும் அவமதிப்புகள், உட்பூசல்கள் எதுவுமே பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை; தெரிவதற்கும் வாய்ப்புகள் இல்லை.
ஜேமியின் கொலைக் குற்றத்துக்குப் பின்னணியில் அவனது இன்ஸ்டா பக்கம்தான் இருக்கிறது. அது என்னவென்று தொடரில் சிறப்பாகவே சொல்லியிருக்கின்றனர். மட்டுமல்ல, பள்ளியில் நடக்கும் விசயங்கள் கூட பெற்றோர்களின் காதுகளுக்குச் செல்வதில்லை என்பது இன்னுமொரு துயரம்.
முக்கியமாக வளரிளம் பருவத்தைச் சேர்ந்த குழந்தைகள் வீட்டில் என்ன செய்கிறார்கள், கம்ப்யூட்டரில் எதைப் பார்க்கிறார்கள், அவர்களின் நண்பர்கள் யார், அவர்கள் எங்கே செல்கின்றனர், வளரிளம் பருவத்தைச் சேர்ந்த ஆண், தன் வயதுடைய பெண்ணை எப்படிப் பார்க்கிறான், பெண்ணும் ஆணை எப்படி பார்க்கிறாள், அவர்களுடைய பாலியல் விருப்பங்கள் என்ன, தோல்விகளும், ஏமாற்றங்களும் அவர்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது... போன்றவற்றை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இத்தொடர்.
ஒரு குடும்பத்தில் யாராவது ஒருவர் பாலியல் ரீதியான கொலைக் குற்றத்தில் ஈடுபட்டுவிட்டால், குற்றத்தில் ஈடுபட்டவர் மட்டுமல்லாமல், அக்குடும்பமே என்ன மாதிரியான பிரச்னைகளை எல்லாம் சந்திக்கிறது என்பதையும் இத்தொடர் அழகாகச் சொல்லியிருக்கிறது.
தொழில்நுட்ப ரீதியாகவும் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தொடரில் மொத்தம் 4 எபிசோட்கள். ஒவ்வொரு எபிசோடும் ஒரு மணி நேரம் வரை ஓடக்கூடியது. இந்த ஒவ்வொரு எபிசோடையும் சிங்கிள் ஷாட்டில் படமாக்கியிருக்கின்றனர்.
சில நிமிடக் காட்சியை சிங்கிள் ஷாட்டில் படமாக்குவதே பெரிய விஷயம். இதற்கே நிறைய முறை ஒத்திகை பார்க்க வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் திரும்பவும் முதலில் இருந்து படமாக்க வேண்டும்.
அந்தக் காட்சி சரியாக வரும் வரைக்கும் முதலில் இருந்தே தொடங்க வேண்டும். இத்தொடரில் ஒரு மணி நேர எபிசோடை சிங்கிள் ஷாட்டில் எடுத்திருப்பது ஆச்சர்யம். இதிலிருந்தே இத்தொடரில் பங்களிப்பு செய்த ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும் வெளிப்படுகிறது. எடியாக சிறப்பான நடிப்பைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், திரைக்கதையிலும் பங்களிப்பு செய்திருக்கிறார் ஸ்டீபன் கிரஹாம். ஜேமியாக நடித்த ஓவன் கூப்பரின் நடிப்பு அசத்தல். மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர். ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயமாகப் பார்க்க வேண்டிய இத்தொடரை இயக்கியிருக்கிறார் பிலிப் பரந்தினி.இந்த ஆங்கிலத் தொடர் சிறப்பான தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.
த.சக்திவேல்
|