சிறுகதை - அப்பாவின் கடிகாரம்
அப்பா இறந்துபோய் இன்றுடன் முப்பது நாட்கள் முடிந்துவிட்டன. அப்பாவின் படத்திற்கு சின்னதாய் பூமாலை போட்டு, பொங்கல் பண்ணி சாமி கும்பிட்டாயிற்று. ‘‘நா... பரசு வீட்டுக்குப் போயிடுறேன்டா. இங்கே எனக்கு சரிப்படாது. வேணும்னா அப்பாவோட தெவசத்துக்கு வந்துடறேனே...’’ அம்மா கிளம்பிவிட்டாள்.  பொட்டு இல்லாத அம்மாவின் வெற்று நெற்றி மனசை நிரடியது. விசு அவளைத் தடுக்கவில்லை.அம்மாவுக்கு இங்கே சரிப் படாது. சுகந்திக்கும் அவளுக்கும் எள்ளளவு கூட ஒத்து வராது. அதனால்தான் அம்மா நாசுக்காக நகர்ந்து விட்டாள். இந்த முப்பது நாட்களுமே பல்லைக் கடித்துக் கொண்டுதான் அம்மா இருந்திருப்பாள் போல் தோன்றியது.‘‘சரிம்மா...’’ ஆமோதிப்பது போல் தலையாட்டினான். அவன் கண்கள் கலங்கி இருந்தன.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள். விசுவைப் பொறுத்தவரை சாபம் என்றுதான் சொல்ல வேண்டும். இதே வேறொரு ஆணாக இருந்திருந்தால் சுகந்தியோடு குடும்பம் நடத்திக் கொண்டிருக்க மாட்டான். கோர்ட்டு, கேஸ் என போய் விவகாரத்தில் முடிந்திருக்கும்.
ஏனெனில் சுகந்தியின் குணம் அப்படி. எந்த நேரமும் யாரையாவது கரித்துக் கொட்டிக் கொண்டேயிருப்பாள். எவ்வளவுதான் சம்பாதித்துக் கொண்டு வந்தாலும் அவளைத் திருப்திப்படுத்த முடியாது. ஒன்று விசுவைத் திட்டுவாள் அல்லது குழந்தைகளைத் திட்டுவாள் அல்லது பாத்திரங்களைப் போட்டு உடைப்பாள். அப்பா விசயத்தில் கூட நிறையவே அடங்கித்தான் போனான். அப்பாவுக்கு பொறுமை அதிகம். பரசு அப்பாவை எவ்வளவோ வற்புறுத்தி கூப்பிட்டான். ‘‘எங்களிடமே வந்துருங்கப்பா, அம்மாவும் நீங்களும் சேர்ந்து இருக்கலாம்...’’ கெஞ்சாத குறைதான். ஆனால், அப்பாதான் மறுத்துவிட்டார்.‘‘நா... சின்னவனோடயே இருக்கேன் டா...’’அப்பா எதுவுமே கேட்டதில்லை. ஒரே ஒருமுறை தன்னுடைய கடிகாரத்திற்கு வார் வாங்கி போட்டுத் தருமாறு கேட்டார். அப்பாவுக்கு கடிகாரம் இல்லாமல் இருக்க முடியாது.
அப்பாவின் கையில் கடிகாரம் இருந்துகொண்டேதான் இருக்கும். அவர் இளைஞனாக இருக்கிறபொழுது பர்மாவிலிருந்து உறவுக்காரர் வாங்கி வந்து கொடுத்த கடிகாரமாம்.இத்தனை வருடத்தில் அந்தக் கடிகாரம் பழுதானதே இல்லை.
ஓடாமல் நின்றதே இல்லை. எந்த பிரச்னையும் இல்லை. அடிக்கடி வார் மட்டும்தான் அறுந்து போகும்.அவ்வப்பொழுது அப்பா அதை மாற்றிக் கொள்வார். இப்போது அப்பாவிற்கு வருமானத்திற்கு வழியில்லை. ஒரு தலைவலி மாத்திரை என்றாலும் விசுவைத்தான் கேட்க வேண்டும். அவர் குளிக்கப் போனாலும் சரி, கொல்லைக்குப் போனாலும் சரி, அவர் கையில் அந்த கடிகாரம் இருந்து கொண்டே இருக்கும். அந்தக் கிராமத்திலேயே அப்பா ஒருத்தர்தான் கடிகாரம் கட்டியிருந்தார்.அந்த ஊருக்கு காலையில் ஒரு தடவையும், சாயங்காலம் ஒருதடவையும் மினி பஸ் வரும். அந்த மினி பஸ் வருகிற நேரத்தை அப்பாவின் கடிகாரத்தின் மூலமாகத்தான் தெரிந்து கொள்வார்கள்.
மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு மணிக்கட்டை உயர்த்தி கடிகாரத்தை புன்முறுவலோடு பார்த்துக் கேட்கிறவர்களுக்கெல்லாம் மணி பார்த்துச் சொல்வதில் அப்பாவுக்கு அவ்வளவு ஆனந்தம். அவ்வளவு உற்சாகம்.அந்தக் கடிகாரத்தில் எண்கள் இருக்காது. ஒன்று முதல் 12 வரை கோடுகளாகத்தான் இருக்கும். கோடுகளைப்பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். பளிச்சென்று அந்த கோடுகள் தெரியும் .
அப்பா தினமும் மூன்று வேளையும் சாப்பிட வருவது கூட அந்தக் கடிகாரத்தில் மணியைப் பார்த்துக்கொண்டுதான். தூங்கப்போவது... படுக்கையில் இருந்து எழுவது... எல்லாமே கடிகாரத்தைப் பார்த்துப் பார்த்து மணிக் கணக்கு ப்படிதான் செய்வார். அந்தக் கடிகாரம் அவருக்கு ஒரு வரப்பிரசாதம். வார் அறுந்து போய்விட்டதால் கட்டிலில் தலையணைக்கு அருகில் கழற்றி வைத்திருந்தார். ‘‘டவுனுக்கு போறப்ப எனக்கு ஒரு வார் போட்டு வாரியா விசு?’’ ‘‘சரிப்பா...’’அதற்குள் எங்கிருந்தோ வந்து விட்டாள் சுதந்தி.
‘‘உங்க அப்பா கடிகாரம் கட்டிக்கலன்னு யார் அழுதா? என்னமோ பெரிய கலெக்டர் வேலை பார்க்கிறது மாதிரி கடிகாரத்தை கழட்டவே மாட்டாரு...’’‘‘அப்போ கலெக்டர் வேலை பாக்குறவங்கதான் கடிகாரம் கட்டிக்கனுமா? உங்க அப்பா கட்டிக்கலையா?” என கேட்க நாக்கு துடித்தது. கேட்டால் நாலு நாளைக்கு வீட்டில் சண்டைதான். அப்பாவின் முகம் சுருங்கி விட்டது, கண்கள் கலங்கிவிட்டன, முகத்தில் ஒரு வருத்தம் தேய்ந்து மறைந்தது.‘‘அவ கிடக்கிறா. விடுங்கப்பா. நீங்க கடிகாரத்தை கொடுங்க, நான் வார் போட்டுக் கொண்டு வந்து தரேன்...’’ ‘‘வேணாம் விசு...’’‘‘மனசுல வச்சுட்டீங்களாப்பா?’’
‘‘இல்லப்பா. உம் மனைவி சொல்றதும் ஒரு விதத்துல சரிதான். கடிகாரத்துக்கு வார் போடணும்னா எப்படியும் அம்பது ரூபாய் வேணும். அந்த அம்பது ரூபாய்க்கு காய்கறி வாங்கிட்டு வந்தேன்னா ஒரு நாள் ஓடிடுமே...’’முடிந்தவரை மன்றாடினான்.
ஆனால், அப்பா கடிகாரத்தை கொடுக்கவே இல்லை. தனது இடுப்பு பெல்ட்டுக்குள் அதை திணித்துக் கொண்டார்.
சரி கொஞ்ச நாள் போகட்டும்... அப்பாவின் மனசு மாறிவிடும். வார் போட்டுக் கொடுக்கலாம் என நினைத்தான். அதை அப்படியே விட்டுவிட்டான். மறந்தும் போய் விட்டான். இப்பொழுதுதான் அதெல்லாம் நினைவுக்கு வருகிறது.
இப்பொழுதுதான் அப்பாஇல்லையே... அந்தக் கடிகாரத்தை எடுத்து அதற்கு வார் போட்டு அப்பாவின் நினைவாக வைத்துக் கொள்ளலாம் என்று வீடு முழுக்க தேடினான். எங்கேயும் அகப்படவில்லை .அப்பா பெரும்பாலும் வீட்டுக்குள்ள வர மாட்டார். திண்ணையில்தான் படுத்திருப்பார். கயிற்றுக் கட்டிலைச் சுற்றிலும் அலசி ஆராய்ந்தான்.
நாலாப் புறமும் அவர் பொருட்கள் சாக்குப் பையில் திணித்துக் கிடந்தன.எல்லாவற்றையும் உதறினான். எதிலும் அந்தக் கடிகாரம் இல்லை. உத்திரத்துக்கு மேலே ஓட்டிடுக்கில் விரலை விட்டு துழாவினான். மஞ்சள் பைக்குள் அவர் கட்டியிருந்த பச்சை பெல்ட் சுருட்டிக் கிடந்தது. அந்த பெல்ட்டின் ஜிப்பை இழுத்துப் பார்த்தான். ஏமாற்றமே மிஞ்சியது. ஓரிடம் விடாமல் தேடியும் அகப்படவே இல்லை. தயங்கித் தயங்கித்தான் சுகந்தியிடம் கேட்டான். ‘‘அப்பாவோட கடிகாரத்தைப் பாத்தியா சுகந்தி?’’
‘‘பார்த்தேனே... அதில இருந்த வைரக்கல்லத்தான் மூக்குத்தியா பண்ணி போட்டு இருக்கேன்...’’ நக்கல் நையாண்டி பேசினாள். அதற்குமேல் அவளிடம் அவன் கேட்கவில்லை. அந்தக் கடிகாரம் எங்கேதான் போயிருக்கும்?அது ஒரு தடவை கூட பழுதானது இல்லை.
ஓடிக் கொண்டே இருக்கும். நள்ளிரவின் நிசப்தத்தில் காதை உன்னிப்பாக்கி கேட்பான், எங்காவது டிக் டிக் என்று துடிக்கிறதா என்று. அப்பா எங்கயாவது மறைத்து வைத்திருக்கலாம். அந்த டிக் டிக் சத்தம் தனக்கு காட்டிக் கொடுக்குமா என்றெல்லாம் தவித்தான். எந்தச் சப்தமும் கேட்கவில்லை.
அவனால் அதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. எங்கேதான் போயிருக்கும்? அந்தக் கடிகாரம் அழகாக வட்ட வடிவமாக இருக்கும். அழுத்தமான கண்ணாடிக்குள் மங்கலான பின்னணியில் கருப்பில்... கோடு போட்டு... எண்கள் ரோமன்லெட்டரில்தான் இருக்கும். எண்ணுரு இருக்காது. கோடுகள்தான் இருக்கும்.
அவ்வளவு சீக்கிரத்தில் அதை தொலைத்திருக்கமாட்டார், வீசியிருக்கமாட்டார். ஒரு தடவை அண்ணன் பரசு கல்லூரிக்குப் போகிறபொழுது தனக்கு கைக் கடிகாரம் வேண்டுமென்று கேட்டான். அம்மாகூட அதைக் கொடுக்கச் சொன்னாள். ஆனால், அப்பா அதைக் கொடுக்க மறுத்துவிட்டார். பரசு படித்து அரசாங்க வேலைக்குப் போய்விட்டான். விசுவுக்குதான் படிப்பு ஏறவில்லை. அதனால்தான் அச்சகத்தில் தினக்கூலிக்கு வேலை செய்கிறான். விசுவை நினைத்து அப்பா கவலைப்படாத நாளே இல்லை.‘‘கடிகாரத்தில இருக்கற பெரிய முள்ளு பரசுன்னா... சின்ன முள்ளு நீ. ஆனா, பெரிய முள்ளுதான் நல்லா ஓடிக்கிட்டு இருக்கு. சின்ன முள்ளு முன்னேறவே இல்லை!’’ அடிக்கடி தன் கைக்கடிகாரத்தைப் பார்த்து புலம்பிக் கொண்டேயிருப்பார்.
அப்பா விவசாயம் செய்துதான் பரசுவையும் ஆளாக்கினார். கொஞ்ச நாள் காய்கறி வியாபாரம் செய்தார். அப்பாவின் அடையாளமே அந்தக் கடிகாரம்தான். அந்தக் கடிகாரத்தை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து விட வேண்டும் என துடியாய் துடித்தான் விசு. ஒருநாள் அவன் தேடுவதை சுகந்தி தன் கண்களாலேயே பார்த்து விட்டாள்.
‘‘என்னமோ பெரிய தங்க புதையல புதைச்சு வச்சுட்டு போனது மாதிரி தேடுறீங்க! வேற வேலை வெட்டியே இல்லையா உங்களுக்கு? இந்தக் கடிகாரத்தினாலே ஒருநாள் பைத்தியம் பிடிச்சுத் திரியப் போறீங்க. இன்னும் ஊர் உலகத்துல இருக்கிற அப்பாங்க மாதிரி சொத்து சுகத்தை சேர்த்து வச்சிட்டு போயிருந்தா உங்கள கையாலேயே பிடிக்க முடியாது!’’ சுகந்தி பொருமினாள். அதனாலேயே அவன் கடிகாரத்தை தேடுவதை நிறுத்திவிட்டான். மாவட்ட ஆட்சியர் அலுவலகம். ஆட்சியர் அலுவலகத்தில் ஏதோ அச்சாபீசில் அச்சடிக்க கொடுத்திருந்தார்கள். அதை டெலிவரி செய்வதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தான்..
குறிப்பிட்ட செக்ஷனில் அந்த அச்சடிக்கப்பட்ட கோப்புகளை கொடுத்துவிட்டு சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வெளியே வருகிறபோதுதான் கவனித்தான்.
வேப்பமரத்து நிழலில் மனு எழுதிக் கொடுக்கிற இடத்தில் அமர்ந்திருந்தார் சபாபதி.சபாபதியும் அப்பாவும் நெருங்கிய சினேகிதர்கள். முன்பெல்லாம் சபாபதி அடிக்கடி வருவார். இப்போது இந்தப் பக்கம் வருவதே இல்லை. அப்பா இறந்த சமயம் கூட அவர் வரவில்லை. அவருக்குத் தெரியுமா தெரியாதா என்றுகூட அவனுக்குத் தெரியவில்லை. இவனைப் பார்த்ததும் சபாபதியே எழுந்து ஓடி வந்தார். ‘‘சௌக்கியமா இருக்கியா விசு?’’ ‘‘இருக்கேன்...’’‘‘உங்க அப்பா செத்தது கூட எனக்குத் தெரியாதுப்பா. தாமதமா தெரிஞ்சப்போ நான் என் பையனோட வேற ஊர்ல இருந்தேன். ரெண்டு கண்ணுலயும் ஆபரேஷன். அதனால என்னால எங்கேயும் கிளம்ப முடியலப்பா...’’ பெருமூச்சு விட்டார். ‘‘நீ எங்க வேலை பாக்குற?’’‘‘பிரஸ்லதான்...’’‘‘பெரியவன் மாதிரி படிச்சி இருக்கலாம்... என்ன பண்றது... உனக்கு ஒரு சேதி தெரியுமா? இந்த கலெக்டர் ஆபீஸ்ல கலெக்டரா இருக்கறது என் சின்னப்பையன் சபரிதான்...’’ ‘‘அப்படியா?’’
‘‘ஆமா. அதோ நிக்கிறான் பாரு...’’
அந்த இடத்தில் ஜனங்கள் மனு கொடுப்பதற்காக கும்பலாக காத்திருக்க அவனுடைய தலை மட்டும்தான் தெரிந்தது.‘‘உங்க பையன்தான் கலெக்டர் ஆயிட்டாரு... அப்புறம் நீங்க என்னத்துக்கு மனு எழுதிக் கொடுத்துட்டு இருக்கீங்க?’’‘‘எப்படி பழசை மறக்க முடியும்? அவன் கலெக்டரா இருந்தா அவன் மனைவி குழந்தைகளுக்குதான் வருமானம். எனக்கு அப்படி இல்லை. எனக்கு இன்னும் ரெண்டு மூணு பசங்க இருக்காங்க.
மத்த பசங்க எல்லாம் குடும்பத்தோட கஷ்டப்ப டுறாங்க. என் சம்பாத்தியத்தை அவங்களுக்கு கொடுப்பேன். அதனாலதான் நான் இன்னமும் மனு எழுதுறத விடல. கண் ஆபரேஷன் பண்ணிக்கிட்டதே மனு எழுதுறதுக்காகத்தான். அதுல கிடைக்கிற ரூபாய மத்த புள்ளைங்க குடும்பத்தில கொடுக்கிறேன். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை இந்த இடத்துல சொல்லியே ஆகணும்!’’‘‘என்ன விஷயம்?’’
‘‘ஒரு வாட்டி உங்க அப்பா உடம்பு முடியாததோடயே எங்க வீட்டுக்கு வந்திருந்தாரு... அப்ப என் பையன் சபரி ஐஏஎஸ் எக்ஸாம் எழுதுறதுக்காக தயாராகிட்டு இருந்தான். என்கிட்ட ஆசீர்வாதம் வாங்கினது மாதிரியே உங்கப்பா கால்லயும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான்.
அப்பதான் உங்க அப்பா அவனை ஆசீர்வாதம் பண்ணி நீ நெனச்சபடியே கலெக்டராயிடுவேன்னு வாழ்த்தி, என்கிட்ட ஒனக்கு குடுக்குறதுக்கு எதுவுமே இல்லைன்னு சொல்லி இடுப்பு பெல்ட்டுலயிருந்து ஒரு வாரில்லாத கடிகாரத்தைக் கொடுத்தாரு...’’நிமிர்ந்தான் விசு .
‘‘அந்தக் கடிகாரம் ரொம்ப பழைய கடிகாரம். ஆனா, நல்லா ஓடிச்சு. அந்த சமயத்துல சபரிக்கு எக்ஸாமுக்கு போறதுக்கு கையில கட்டிட்டு போறதுக்கு கடிகாரம் வாங்கற அளவுக்கு என்கிட்ட எந்த வசதியும் இல்லை. உங்கப்பா தந்த வார் இல்லாத கடிகாரத்துக்கு புதுசா வார் போட்டு வந்து கொடுத்தேன். சபரி அதைக் கட்டிட்டுதான் எக்ஸாம் எழுதி பாஸானான்.
அதுலேர்ந்து அந்தக் கடிகாரம் ராசியான கடிகாரம்னு, தானே வெச்சுகிட்டான். கலெக்டர் ஆன பிறகும் அந்தக் கடிகாரம் அவன் கையிலதான் இருக்கு. அதோ அங்கே பாரேன்...’’விசு நிமிர்ந்தான். கூட்டத்திற்கு நடுவில் சபரி தெரிந்தான். ஜனங்கள் கொடுத்த மனுக்களை, தானே நேரில் வந்து கை நீட்டி வாங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய இடது கையில் அப்பாவின் கடிகாரம்.
மகேஷ்வரன்
|