ஒலிம்பிக் கமிட்டியின் முதல் பெண் தலைவர்!



சுமார் 131 ஆண்டுகால சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில் முதல்முறையாக பெண் ஒருவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அவர் பெயர் கிறிஸ்டி கோவென்ட்ரி. ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்தவர். 
இதற்கு முன்பு ஒன்பது பேர் தலைவர் பதவியை வகித்துள்ளனர். அவர்கள் அனைவருமே ஆண்கள். அதுமட்டுமல்ல. இந்த உயரிய பதவிக்கு ஆப்ரிக்கா கண்டத்திலிருந்து வந்திருக்கும் முதல் நபரும் கிறிஸ்டி கோவென்ட்ரிதான்.

யார் இந்த கிறிஸ்டி கோவென்ட்ரி?

ஜிம்பாப்வேயின் தலைநகர் ஹராரேவில் பிறந்தவர் கிறிஸ்டி கோவென்ட்ரி. சிறுவயதிலேயே நீச்சலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளியில் படிக்கும்போதே நீச்சலில் திறமையை வளர்த்திருக்கிறார். அப்படியாக உயர்நிலைப் பள்ளியில் பயிலும்போதே அவருக்கு ஒலிம்பிக்கிற்கான டிக்கெட் கிடைத்துவிட்டது. 
2000ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்றார். இதில் அரையிறுதிக்குத் தகுதிபெற்றார். ஆனால், எந்த மெடலும் அவரால் பெறமுடியவில்லை. இருந்தும் நீச்சலில் அரையிறுதி வரை சென்ற முதல் ஜிம்பாப்வே வீராங்கனை என்ற பெயரைப் பெற்றார். அந்தாண்டு ‘ஜிம்பாப்வே ஸ்போர்ட்ஸ் வுமன் ஆஃப் த இயர்’ என்ற பெருமைக்குரியவர் ஆனார்.

பின்னர் அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு நீச்சல் பயிற்சியையும் எடுத்தார். 2002ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் 200 மீட்டர் ஐ.எம் (Individual Medley) பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.தொடர்ந்து 2004ம் ஆண்டு கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் நடந்த ஒலிம்பிக்கில் முதல்முறையாக 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதே ஒலிம்பிக்கில் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் வெள்ளியும், ஐ.எம் பிரிவில் வெண்கலமும் வென்றார்.

இந்த ஒலிம்பிக்கில் மட்டும் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்கள் வென்றார். அதுமட்டுமல்ல. தனிநபராக ஒரு ஜிம்பாப்வேக்காரர் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது அதுவே முதல்முறை.இதற்குமுன்பு 1980ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் ஜிம்பாப்வே பெண்கள் ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வென்றிருந்தது. அதன்பிறகு ஜிம்பாப்வே நாடு எந்த ஒரு ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்றதில்லை. அந்தக் குறையை ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் துடைத்தெறிந்தார் கிறிஸ்டி கோவென்ட்ரி.

தொடர்ந்து 2005ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் 100 மற்றும் 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் தங்கமும், 200 மற்றும் 400 மீட்டர் ஐ.எம் பிரிவில் வெள்ளியும் வென்றார்.

இதன்பிறகு 2008ம் ஆண்டு சீனா தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் தங்கம் வென்றதுடன் 2:05.24 நிமிடங்களில் கடந்து உலக சாதனையும் படைத்தார். இதில் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக், 200 மற்றும் 400 மீட்டர் ஐ.எம் பிரிவுகளிலும் வெள்ளிப் பதக்கங்கள் வென்றார்.

அப்படியாக 7 ஒலிம்பிக் பதக்கங்களைத் தன்வசப்படுத்தியுள்ளார் கிறிஸ்டி கோவென்ட்ரி. இப்போதுவரை ஜிம்பாப்வே நாடு ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்கள் 8. இதில் ஹாக்கியை தவிர்த்துவிட்டால் மற்ற ஏழும் கிறிஸ்டி வென்றவைதான்!

 இதனுடன் ஆப்ரிக்கா விளையாட்டுப் போட்டிகளில் நிறைய தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார் கிறிஸ்டி. இதனால்தான் அவரை ஜிம்பாப்வேயினர் ‘எங்களின் தங்கப் பெண்’ எனக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இதன்பிறகு அவர் 2012 மற்றும் 2016 ஒலிம்பிக்குகளில் கலந்துகொண்டாலும் பதக்கங்கள் பெறவில்லை. 2016 ஒலிம்பிக்கிற்குப் பிறகு நீச்சல் விளையாட்டிலிருந்து ஓய்வும் பெற்றார்.
இதற்கிடையே அவர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தடகள ஆணையத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

கூடவே ஜிம்பாப்வே ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவராகவும்
இருந்தார். இதனையடுத்து ஜிம்பாப்வேயின் புதிய அதிபராக எம்மர்சன் மனாங்காக்வா வந்தார். இவர் 2018ம் ஆண்டு 34 வயதே நிரம்பிய கிறிஸ்டி கோவென்ட்ரியை இளைஞர் நலன், விளையாட்டு, கலை மற்றும் பொழுதுபோக்குத்துறை அமைச்சராக நியமித்தார்.

அப்போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் இருந்தார் கிறிஸ்டி கோவென்ட்ரி. இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக 12 ஆண்டுகள் இருந்து வந்த தாமஸ் பேச்சின் பதவிக்காலம் முடிவடைந்தது. புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இந்தத் தலைவர் பதவிக்கு ஜிம்பாப்வேயின் விளையாட்டுத்துறை அமைச்சரான கிறிஸ்டியும் போட்டியிட்டார்.

அவருடன் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் துணைத் தலைவர் ஸ்பெயினைச் சேர்ந்த ஜுவான் அன்டோனியோ சமரன்ச் சாலிசாக்ஸ், இங்கிலாந்தைச் சேர்ந்த உலக தடகள சம்மேளன தலைவர் செபாஸ்டியன் கோ, பிரான்ஸைச் சேர்ந்த சர்வதேச சைக்கிள் ஓட்டுதல் சங்கத் தலைவர் டேவிட் லாப்பார்டியண்ட், ஜப்பானைச் சேர்ந்த சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கத் தலைவர் மொரினாரி வட்னாபே, ஸ்வீடனைச் சேர்ந்த சர்வதேச பனிச்சறுக்கு கூட்டமைப்புத் தலைவர் ஜோஹன் எலியாஷ், ஜோர்டான் நாட்டு இளவரசர் ஃபைசல் பின் ஹுசைன் ஆகிய ஏழு பேர் போட்டியிட்டனர்.

இதில் 97 ஓட்டுகளில் கிறிஸ்டி 49 ஓட்டுகள் பெற்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 10வது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் அவர் எட்டு ஆண்டுகள் நீடிப்பார். அப்படியாக 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கையும், 2032ம் ஆண்டு பிரிஸ்பேன் ஒலிம்பிக்கையும் நடத்தும் பொறுப்பு அவரிடம் வந்துள்ளது.

தவிர, 2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா தீவிரமாக முயற்சித்து வருகிறது. அந்த ஒலிம்பிக்கை எந்த நாடு நடத்தும் என்பதை தீர்மானிக்கும் குழுவிலும் அவர் இருக்கிறார். தற்போது அவர், இந்த 2036ம் அண்டு ஒலிம்பிக்கை நடத்தும் உரிமை யாருக்கு என்பது குறித்து வரும்நாட்களில் கருத்து தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.  

சர்வதேச விளையாட்டில் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பதவி என்பது அதிகாரமிக்கது. இதனால் கிறிஸ்டி கோவென்ட்ரிக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. ஒரு பெண்ணாகவும், ஒலிம்பிக் பதக்க வீராங்கனையாகவும் அதனை எப்படி எதிர்கொள்வார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

பேராச்சி கண்ணன்