70 வயதில் அசத்தும் நடிகர்கள்!



அறிவுக்கும் வயதுக்கும் என்றுமே தடை இல்லை என்று சொல்வார்கள். வயது என்பது எண்கள் மட்டுமே என்று சொல்பவர்கள், சொல்வதோடு மட்டுமல்லாமல் இருபது வயது இளைஞர்கள் போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டே இருப்பார்கள். 
அப்படிப்பட்டவர்களை அரசியல், விளையாட்டு என்று பல துறைகளில் பார்க்க முடியும். சினிமா துறையில் இருப்பவர்கள்,  நாங்களும் அதற்கு சளைத்தவர்கள் அல்ல என்பதுபோல் 70 வயது கடந்தபிறகும் இளம் நடிகர்களுக்கு சவால் விடுவதுபோல் பிசியாகவே இருக்கிறார்கள்.

தமிழ்  சினிமாவைப் பொறுத்தவரை மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள் ரஜினி, கமல் என்றால் அது மிகையாகாது!ரஜினி தற்போது ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் ‘கூலி’ படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு  நிறைவடைந்துவிட்டது  என்கிற செய்தி வந்த சில நாட்களுக்கு முன்பாகவே அதே ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்கிற செய்தி வெளியானது.
பாக்ஸ் ஆபீஸ் நாயகனாகவும், ரசிகர்களின் அபிமானத்தை வென்றெடுத்தவருமான ரஜினி வந்தோம் சென்றோம் என்றில்லாமல், வெயில், மழையை பொருட்படுத்தாமல் கேரக்டருக்காக  தன்னை வருத்திக் கொள்வதை அவருடைய படங்களில் பார்க்க முடியும்.

அந்த வகையில் ‘சன் பிக்சர்ஸ்’, ரஜினி, லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவரவுள்ள ‘கூலி’ ரசிகர்களுக்கு மாபெரும் கொண்டாட்டமாக இருக்கும் என்பது கோலிவுட்டின் எதிர்பார்ப்பாக உள்ளது.ஒரு படத்தை முழுமையாக முடித்து வெளியிடும் முன்னரே அடுத்த படத்தின் படப்பிடிப்புக்குக் கிளம்பிவிட்ட ரஜினி யார் என்பதை யாருக்கும் சொல்லவேண்டியதில்லை. அவர், புதுமுக நடிகரோ, வளர்ந்து வரும் நடிகரோ இல்லை.

தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி தென்னிந்தியா மற்றும் வட இந்தியாவிலும் செல்வாக்கு பெற்ற உச்ச நட்சத்திரம். 1975ம் ஆண்டு தொடங்கிய அவருடைய சினிமா பயணத்தின் ஐம்பதாவது ஆண்டு இது.

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்... அவருக்கு வயது 74.ஐம்பதாண்டுகளாகத் திரைத்துறையில் கோலோச்சும் நட்சத்திரம், இந்த வயதுக்குரிய பல உடலியல் சிக்கல்கள் உள்ளவர். அவருக்கு பணம் சம்பாதித்தாக வேண்டும் என்கிற கட்டாயமில்லை. புகழடைய வேண்டும் என்கிற தேவையுமில்லை.

பணமும் புகழும் அவர் காலடியில் கொட்டிக் கிடக்கின்றன. இவ்வளவு இருந்தும் இந்த வயதிலும் ஒரு படம் நிறைவடையும் முன்னரே அடுத்த படத்தின் படப்பிடிப்புக்குப் புறப்பட்டுச் செல்லும் ஆச்சரியம் அவர்.ரஜினி மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகின் மாபெரும் அடையாளமான கமல்ஹாசனும் அப்படித்தான். 

அவருக்கு வயது 70.அவர், மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அவருடைய தயாரிப்பில் வெளியாகவிருக்கும் படத்தின் வெளியீட்டு வேலைகளை உறுதி செய்துவிட்டு இன்றைய உலகை ஆளும் புதிய தொழில்நுட்பமான ஏஐ தொழில்நுட்பம் பற்றிப் பயில அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற மாணவர்.

பள்ளி மாணவனாக இருக்க வேண்டிய வயதிலேயே திரைக்கலைஞனாக மாறியவர். ரஜினிக்கு பதினைந்து ஆண்டுகள் முன்பே திரைத்துறைக்குள் வந்தவர். ‘இன்னமும் பயின்று கொண்டிருக்கிறேன்’ என்கிறார்.‘தக் லைஃப்’ படம் வெளியாகும் நேரத்தில் அவர் அடுத்தபடத்தின் படப்பிடிப்பில் இருப்பார். 

‘கல்கி’ இரண்டாம் பாகம் மற்றும் அன்பறிவ் இயக்கும் படம் என தொடர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.கமல் படம் என்றாலே அதில் கேரக்டருக்காக அவர் எடுக்கும் ரிஸ்க், பிரத்யேக மேக்கப் எப்போதும் பேசுபொருளாக இருக்கும். அதை வரவருக்கும் படங்களில் பல மடங்கு எதிர்பார்க்கலாம் என்கிறது ஆழ்வார்பேட்டை வட்டாரங்கள்.

தமிழ்நாடு மட்டுமல்ல, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளாவிலும் இதுபோல் வியக்கத்தக்க நடிகர்கள் இன்றும் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.கேரளாவின் முன்னணி நட்சத்திரங்களான மம்மூட்டிக்கு வயது 73. 

மோகன்லாலுக்கு வயது 64.மலையாளம், தமிழ், இந்தி உட்பட மம்மூட்டி இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த வயதிலும் கெட்டப்புக்காக தன்னை அர்ப்பணிக்க தயங்காதவர். இப்போது ‘பசூக்கா’, ‘கலம்காவல்’ உட்பட மூன்று படங்களில் பிசியாக இருக்கிறவர்.

மம்மூட்டியைப் போல் மலையாள சினிமாவின் சூப்பர் ஹீரோ மோகன்லால். இவருடைய சினிமா பயணம் நான்காவது செஞ்சுரியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் வெளியான ‘எம்பிரான்’ படத்தைத் தொடர்ந்து ‘கண்ணப்பா’, ‘இருதயபூர்வம்’ உட்பட இந்த ஆண்டு மட்டுமே ஐந்து படங்களில் கமிட்டாகியுள்ளார்.

மலையாள சினிமாவின் உச்ச நடிகர்களான இவர்கள் வயதை ப் பொருட்படுத்தாமல் ஆண்டுக்கு நான்கைந்து படங்களில் நடித்துக்கொண்டே இருக்கிறார்கள். உழைக்கத் தயங்காத காரணத்தால் அவர்கள் இருவரும் இன்னும் கேரளத் திரையுலகின் உச்ச நடிகர்களாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆந்திராவைப் பொறுத்தவரை அடுத்தடுத்த தலைமுறை நடிகர்கள் உச்சநிலைக்கு வந்துவிட்டாலும் தங்களுக்கென்று தனி இடத்தைப் பிடித்து அதைத் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா மற்றும் நாகார்ஜுனா ஆகியோர்.

சினிமா பயணத்தில் இடைவெளி விட்டு அரசியலுக்குப் போய்விட்டு வந்த பின்பும் ஆந்திரத் திரையுலகின் தற்போதைய முன்னணி நடிகர்களின் படச்செலவுக்கு இணையாகப் பெரும் பொருட்செலவில் சிரஞ்சீவியின் படங்கள் தயாராகின்றன. தற்போது ‘விஸ்வம்பரா’ முடித்துள்ளார். தொடர்ந்து ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் படம், அனில் ரவிபுடி இயக்கும் படம் என பிசி ஷெட்யூலில் இருக்கிறார்.

கமல், ரஜினி, மம்மூட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோருக்கெல்லாம் மூத்த முன்னோடி மும்பையில் இருக்கிறார்.அவர் 82 வயதான அமிதாப்பச்சன். இந்த வயதிலும் கடந்த ஆண்டு அதிகமான வருமான வரி - அதாவது 120 கோடி ரூபாய் வரி செலுத்தியவர் என்கிற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

இந்த வருமானம் அனைத்தும் சினிமா துறை சார்ந்தே அவர் சம்பாதித்தவை என்பதுதான் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய செய்தி.மற்ற துறைகளில் இதே வயதுடையோர் சாதனையாளர்களாக இருப்பதற்கும் நடிகர்கள் சாதிப்பதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது.

மற்றோர் உழைப்பெல்லாம் மூளை உழைப்பு. ஆனால், இவர்கள் மூளை மட்டும் உழைத்தால் போதாது உடலும் ஒத்துழைக்க வேண்டும். வீட்டிலோ, உறவிலோ, நட்பு வட்டத்திலோ ஒரு தாங்கவோண்ணா சோகம் நடந்துவிட்டாலும் சிரித்துக் கொண்டே நடித்தாக வேண்டிய கட்டாயம் உள்ளவர்கள்.நடிப்பு, நடனம், சண்டை என சினிமாவுக்காக உடலை வருத்திக் கொண்டு எல்லாவற்றையும் செய்கிறார்கள். 

அவற்றில் பல ஆபத்தான சண்டைக் காட்சிகளையும் எதிர்கொள்கிறார்கள். வேகமாக நடனமாடி காலோ கையோ சுளுக்கிக் கொண்டுவிட்டால் இந்த வயதில் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள். உச்சி வெயிலோ, கடும் பனியோ அத்தனை சிரமங்களையும் இந்த வயதில் எதிர்கொள்வது ஆச்சர்யமே.

இவ்வளவையும் தாண்டி இவர்கள் பயணிப்பதால் இவர்களுக்கு மட்டுமின்றி ஏராளமானோர் பலன் பெறுகிறார்கள்; வேலை வாய்ப்பு பெறுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்க செய்தி.
கமலோ, ரஜினியோ ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் அந்தப்படத்தின் இயக்குநர் தொடங்கி அதில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரைப்படத் தொழிலாளர்கள் என நூற்றுக்கணக்கான குடும்பங்கள் குறைந்தது ஆறு மாதங்களிலிருந்து ஓராண்டு வரை பசி, பட்டினி இல்லாமல் வாழ்வதற்கான வருமானம் கிடைக்கும்.

அவற்றைத் தாண்டி திரையரங்குகளில் இன்னமும் கூட்டம் கூட்டும் நடிகர்களாகவே அவர்கள் தொடர்வதால் அவ்விடத்திலும் பல நூறு குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறுகின்றன.
மக்களை மகிழ்விப்பவர்கள்தாம் கலைஞர்கள். தம்மை உருக்கிக்கொண்டேனும் மகிழ்வை வெளிப்படுத்தக் கூடிய நிலையில் இருக்கிறார்கள்.

எழுபது வயதைக் கடந்த போதும் இன்னும் சலிப்படையாமல் அவர்கள் இயங்குவது அவர்களுக்காக மட்டுமன்று; அவர்களை வாழவைத்த திரையுலகுக்காகவும்; போற்றிப் புகழ்ந்திட்ட மக்களுக்காகவும்தான்.

நடிகர்களாக மட்டுமின்றி உழைப்பாலும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்கள் என்றால் அது மிகையில்லை, அப்பட்டமான உண்மை.

அந்த வகையில் நமக்குப் பிடித்தமானவற்றைச் செய்வதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்துள்ள இந்த சினிமா ஜாம்பவான்கள் பேசுவதில் மட்டுமல்ல,
செயலிலும் மேன்மக்களே!

எஸ்.ராஜா