‘டெஸ்ட்’ மேட்சும் வாழ்க்கையும் ஒன்றுதான்..!
‘‘வாழ்க்கையே விளையாட்டு போலதான்... ரூல்ஸ்தான் அதோட அழகே...’’ டீசரில் இது கிரிக்கெட் டெஸ்ட் மட்டுமல்ல அதைத் தாண்டிய வாழ்க்கையின் டெஸ்ட்டும் சேர்ந்த கதை என்பதை உணர்த்துகிறது ‘டெஸ்ட்’. சித்தார்த், மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் என நால்வர் கூட்டணியில் ‘டெஸ்ட்’ படம் எதிர்பார்ப்புகளை கூட்டியிருக்கும் நிலையில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ‘ஓய்நாட் பிக்சர்ஸ்’ சஷிகாந்த்தை சந்தித்தோம்.
 யாருக்கான ‘டெஸ்ட்’ இது..?
முதல்ல எனக்கான டெஸ்ட். இயக்குநராக முதல் படம். இதனுடைய ரிசல்ட்டைப் பொறுத்துதான் டைரக்டர் நாற்காலி நமக்கு செட்டாகுமா இல்லையான்னு முடிவு செய்யணும்.
என்ன கதை..?டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சாதித்தே ஆகணும் என்கிற கட்டாயம் சித்தார்த்துக்கு.  அவருடைய வெற்றி யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம், அதைச் சார்ந்து உருவாகும் வினைகள் என்ன... இதுதான் மெயின் கதை. அதில் மாதவன், நயன்தாரா, சித்தார்த் மூவரும் அவங்கவங்க பர்சனல் வாழ்க்கைக்குள்ள பெரிய அளவிலான சோதனைகளை சந்திக்கிறாங்க. அதெல்லாம் சேர்ந்து முடிவு என்ன என்பதே ‘டெஸ்ட்’ கதை.  சித்தார்த், மாதவன், நயன்தாரா... நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீரா ஜாஸ்மின்..?
‘காதலில் சொதப்புவது எப்படி’ படம் முடிஞ்சு தொடர்ந்து ‘காவியத்தலைவன்’ பட வேலைகளில் இருந்தப்ப இந்தக் கதை எழுதினேன். எனக்கு எந்தளவுக்கு கிரிக்கெட் பிடிக்குமோ அதே அளவு சித்தார்த்துக்கும் பிடிக்கும். அவரை மனசுல வெச்சிதான் அர்ஜுன் கேரக்டரை உருவாக்கினேன். அதற்கேற்ப ஒரு டெஸ்ட் கிரிக்கெட் பிளேயராகவே மாறி நின்னார் சித்தார்த்.
தொடர்ந்து குமுதா கேரக்டரை இன்னும் வலிமையா ஒரு பெண் கேரக்டராக மாற்றி எழுதினேன். நயன்தாரா மேடம்கிட்ட ஒரு பத்து நிமிஷம்தான் பேசி இருப்பேன். எந்தக் கேள்வியும் கேட்காமல் கதைக்குள் வந்தவங்க.
எனக்கு பெரிய டாஸ்க் மேடி சார்தான். நானே அவ்வளவு ஈசியா ஒரு கதையை தேர்வு செய்ய மாட்டேன். ஆனா, மேடி சார் கதைக்குள் வரதுக்கு முன்னாடி அவ்ளோ விஷயம் கேட்டு, கதையை இன்னும் இன்னும் பெஸ்ட்டா மாற்றினார். அவர் வந்த பிறகுதான் கதை 100% படமா மாறிச்சு. அவருக்கு சரவணன் கேரக்டர். அவரும் ஒரு பெரிய பிசினஸ் அரசியலுக்குள் பல சோதனைகளை சந்திக்கிற கேரக்டர்.
இவங்க கூட மீரா ஜாஸ்மின். அமெரிக்காவில் இருந்தவங்க கதை கேட்டு பிடித்துப் போய் சம்மதிச்சு நடிச்சிருக்காங்க. நாசர் சார், காளி வெங்கட்... இன்னும் நிறைய முக்கியமான கேரக்டர்கள் படத்தில் இருக்கு.
தயாரிப்பாளரா ஒரு படத்தை இயக்கும் போது இருக்கும் பிளஸ் என்ன?
நான் நினைச்சிருந்தா என்னைக்கோ ஒரு படம் இயக்கியிருக்க முடியும். ஆனா, நானே எனக்கு வாய்ப்பு கொடுக்கலை. அந்த அளவுக்கு நான் ஒரு கதையை தேர்வு செய்ய யோசிப்பேன். அதனால்தான் ‘மண்டேலா’ மாதிரி கதைகளை என்னால் தயாரிக்க முடிஞ்சது. கதை எழுதி 12 வருடங்கள் ஆச்சு. ஆனா, இந்தக் கதையை இன்னும் சிறப்பா சொல்லணும்ன்னு காத்திருந்தேன். ஐபிஎல், டி20... என கிரிக்கெட் உலகம் கூட ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்திற்கு மாறிடுச்சு. இப்ப டெஸ்ட் மேட்ச் குறித்த ஒரு படம் இளைஞர்களிடம் எடுபடுமா?
எந்தப் போட்டியில் எந்த கிரிக்கெட் பிளேயர் உட்கார்ந்தாலும் டெஸ்ட் மேட்ச் பத்திதான் பேசுவாங்க. ஏன்னா ஒரு கிரிக்கெட் பிளேயரை முழுமையா மாத்துறது டெஸ்ட் மேட்ச்தான்.
எல்லா கிரிக்கெட் பிளேயருக்கும் அவங்க டெஸ்ட் மேட்ச்லதான் ஏகப்பட்ட பாடம் கிடைச்சிருக்கும்.
குயிக் போட்டிகள் உலகக் கோப்பை மாதிரியான பெரிய சவால்களை சந்திக்க உதவாது. மனதளவிலும் உடலளவிலும் வலிமையாக மாற்ற டெஸ்ட் மேட்ச்தான் முக்கியம். அதனால்தான் நான் டெஸ்ட் மேட்ச்சை மையமா வச்சு இந்தப் படத்தை உருவாக்கினேன். இந்தக் கதை மூலமா என்ன சொல்லப் போறீங்க..?
ரொம்ப வருடங்களுக்கு முன்பு கோஹ்லி ஒரு பேட்டியில் சொன்னார். அவர் கிரிக்கெட் செலக்ஷனுக்கான போட்டிக்கு அடுத்த நாள் கலந்துக்கணும். அன்னைக்கு இரவு அவருடைய அப்பா மரணம். ஆனா, அடுத்த நாள் காலை கோஹ்லி செலக்ஷனுக்கு போயிட்டார்.
எப்படி உங்களால் முடிந்ததுனு கேட்டப்ப, ‘விளையாடாமல் இருப்பது என் விருப்பம் இல்ல’னு (Not playing is not my choice) சொன்னார். நாம வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவெடுக்கும் பொழுது இப்படி நிறைய சோதனைகள் வரும். அதை மீறி மேலே வரும் பொழுதுதான் நமக்கான வெற்றி கிடைக்கும். போராட்டத்தையும் அது கொடுக்கும் சோதனைகளையும் கடந்து நின்றால் கிடைக்கும் வெற்றியும் சேர்த்துதான் இந்தப் படம் பேசும்.இந்தப் படத்தில் டெஸ்ட் மேட்ச் காட்சிகளை உண்மையான கிரவுண்டில் நம்ம சிதம்பரம் ஸ்டேடியத்தில் சிறப்பு அனுமதி பெற்று எடுத்திருக்கோம். முதல் முறையா லைவ் மேட்ச் கேமராக்களில் இந்தப் படத்தின் மேட்ச் சார்ந்த காட்சிகளை ஷூட் செய்திருக்கோம்.
சினிமாட்டோகிராபர் விராஜ் சிங். லைவ் கிரிக்கெட் மேட்ச் கேமரா கான்செப்டுக்கு நிறைய இடங்களில் அனுமதி வாங்க வேண்டி இருந்துச்சு. ஒருசில தனியார் ஸ்போர்ட்ஸ் சேனல்களையும் இதில் சேர்த்திருக்கோம். டி.எஸ்.சுரேஷ் எடிட்டிங். இதற்கு முன்னாடி தமிழ்ப் படம் துவங்கி, 30க்கும் மேலான படங்களில் எடிட்டிங் வேலை செய்திருக்கார். இந்தப்படத்திலும் அவருடைய எடிட்டிங் பாராட்டப்படும்.
முதல் முறையா நயன்தாரா லைவ் ரெக்கார்டிங்கில் சொந்தக் குரலில் பேசி நடிச்சிருக்காங்க. கிரிக்கெட் மேட்ச் தவிர எல்லா காட்சிகளும் லைவ் ரெக்கார்டிங். முதல் முறையா சக்தி கோபாலன் இந்த படம் மூலமாக இசையமைப்பாளரா அறிமுகமாகறாங்க. பேக்ரவுண்ட் ஸ்கோர் ரொம்ப அற்புதமா வந்திருக்கு. ‘இந்தப் படத்தில் நீங்கதான் இசையமைப்பாளர்’னு சொன்னதும் அதற்காகவே பிரத்தியேகமா ஃபாரின் போய் இசையில் அப்டேட் கோர்ஸ் எல்லாம் செய்தாங்க.
இவ்வளவும் செய்துட்டு ஏன் தியேட்டர் ரிலீஸ் இல்லை எனத் தோன்றும். என்னைப் பொருத்தவரை ஆடியன்ஸ் படத்தை பார்க்கற ஸ்கிரீன்தான் வேற. எத்தனை பேர்கிட்ட இந்தப் படம் சேருது என்கிறதுதான் முக்கியம்.ஒரே நேரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருக்கிறவங்க கூட ‘டெஸ்ட்’ படத்தைப் பார்க்க முடியும் என்பதுதான் ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் எனக்கு சந்தோசம்.
ஷாலினி நியூட்டன்
|