ரிப்பன் பில்டிங்கை பொதுமக்கள் பார்வையிடலாம்!
சென்னையின் ஐகானிக் கட்டடங்களில் ஒன்று ரிப்பன் பில்டிங்! வெள்ளை நிறத்தில், செவ்வக வடிவத்தில் ஓர் அரண்மனைபோல் அத்தனை ரம்மியமாகக் காட்சியளிக்கும் இந்த பில்டிங்கில்தான் பெருநகர சென்னை மாநகராட்சி இயங்கி வருகிறது.  சமீபத்தில் இந்த ரிப்பன் பில்டிங்கை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பாரம்பரிய நடை ஒன்றை முன்னெடுத்திருக்கிறது பெருநகர சென்னை மாநகராட்சி. இதில் நாமும் பங்கேற்றோம். இந்தப் பாரம்பரிய நடையை கைடு செய்பவரும் ஆர்க்கிடெக்டுமான முகிலன் அனைவரையும் வரவேற்றார். ‘‘முதலில் வெளியில் இருக்கும் சிலைகளைப் பார்த்துவிட்டு வந்துவிடுங்கள். பிறகு, நாம் உள்ளே செல்லலாம்’’ என்றார் முகிலன்.  இந்நிலையில் மாநகராட்சியின் உள்ளே நுழையும் இடப்புறத்தில் நிறுவப்பட்டுள்ள ஜார்ஜ் ஃபெரடெரிக் சாம்வேல் எனும் ரிப்பன் பிரபுவின் சிலையைப் பார்த்தோம். பிறகு அவர் அருகிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி கமிஷனர் ராவ் பகதூர் பி.எம்.சிவஞான முதலியார் சிலையையும், மாநகராட்சியின் நடுவில் கவுன்சிலர்களால் முதன்முதலாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிக்கட்சியைச் சேர்ந்த சர்.பிட்டி.தியாகராய செட்டியாரின் சிலையையும் பார்வையிட்டோம்.
தொடர்ந்து வலதுபுறத்தில் சென்னை மாநகர முதல் மேயராக இருந்த எம்.ஏ.முத்தையா செட்டியாரின் சிலையையும், அவர் அருகில் 1939ம் ஆண்டு சென்னை மேயராக இருந்த சத்தியமூர்த்தி சிலையையும் பார்த்துவிட்டு வர சரியாக எட்டு மணி ஆகியிருந்தது.
மாநகராட்சியின் போர்ட்டிகோவிலிருந்து முகிலன் தொடங்கினார். முதலில் சென்னை உருவான கதையை ஒரு குட்டிக் கதைபோல் சொன்னவர், 1688ம் ஆண்டு பிறந்த மெட்ராஸ் நகராட்சியின் வரலாற்றை அழகாக விவரித்தார்.
லண்டன் நகரத்திற்குப் பிறகு உலகின் இரண்டாவது பழமையான நகராட்சி இது எனச் சொன்னபோது அனைவருக்கும் அத்தனை ஆச்சரியம். தொடர்ந்து நுழைவுவாயிலில் நிறுவப்பட்டுள்ள மெட்ராஸ் மாநகராட்சியின் ஆணையராக 1928 முதல் 1931 வரை இருந்த எரிக் கான்ரான் ஸ்மித்தின் சிலை குறித்து பேசினார்.
‘‘ரிப்பன் பில்டிங்கிற்கு இப்போது வயது 112. 1909ம் ஆண்டு இதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு 1913ம் ஆண்டு திறந்தாங்க. அன்றைக்கு சுமார் ஏழரை லட்சம் ரூபாய் இந்தக் கட்டடம் கட்ட செலவாகியிருக்கு. இதை ஜி.எஸ்.டி ஹாரிஸ் என்ற கட்டடக்கலை நிபுணர், நியோ கிளாசிக்கல் பாணியில் வடிவமைக்க சென்னையைச் சேர்ந்த லோகநாத முதலியார் கட்டினார்.
1880ம் ஆண்டு முதல் 1884ம் ஆண்டு வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் ரிப்பன் பிரபு. உள்ளாட்சியில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததால், ‘உள்ளாட்சியின் தந்தை’ எனப் போற்றப்பட்டவர்.
அதனால் அவரின் பெயரை இந்த நகராட்சி பில்டிங்கிற்குச் சூட்டினாங்க’’ என்றவர், தொடர்ந்து ரிப்பன் பில்டிங்கின் கட்டிடக் கலைக்குள் சென்றார்.
‘‘இங்க தரைத்தளம், முதல்மாடி, இரண்டாம் மாடினு மொத்தம் மூன்று தளங்கள் இருக்கு. இந்த மேற்கூரைப் பகுதியை, ‘மெட்ராஸ் டெரஸ் ரூஃபிங்’ என்ற பாரம்பரியமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டியிருக்காங்க.
இது செங்கற்களால் கட்டப்பட்ட ஒரு டெரஸ் அமைப்பு. இதில் அயன் பீம்னு சொல்லப்படுற இரும்பு கற்றை மட்டும் தயாரிப்பு மெட்டீரியல். அதனை லண்டன்ல இருந்து கப்பல் வழியாக கொண்டு வந்தாங்க.
மற்றது இயற்கையாக கிடைத்தவை.மாடிக்குப் போகும் படிக்கட்டுகள் மரத்தாலானவை. இந்த மாடிகளுக்குப் போகும் இரண்டு பாதைகளிலும் அழகான Courtyardனு சொல்லப்படுற முற்றமும் இருக்கு. இங்க பேசுறது எல்லாம் தெளிவாக இருக்கும். அதேநேரம் கைதட்டினால் எதிெராலிக்காது.
இந்த பில்டிங்கைப் பொறுத்தவரை கூலிங்கா இருக்கும். காரணம் இரண்டு பக்கமும் காற்று போகும்படியான கட்டமைப்பை உருவாக்கியிருப்பதுதான். நடுவில் வெட்டவெளியுடன் கட்டியிருப்பாங்க.
இது ஓர் அழகான ப்ளானிங். அதேபோல் இந்தத் தரைத்தளத்தில் உள்ள மரத்திலான சரவிளக்கைப் பாருங்க. பொதுவாக நாம் கிரிஸ்டல் பாணி சரவிளக்கு, பெல்ஜியம் கிளாஸ் சரவிளக்குதான் பார்த்திருப்போம். ஆனா, இந்த மரச் சரவிளக்கு ரொம்ப வித்தியாசமானது. இதிலுள்ள வேலைப்பாடுகளைப் பார்த்தால் நாம் எந்த அளவுக்கு திறமையானவர்களாக இருந்திருக்கோம்னு புரியும்’’ எனப் பார்வையாளர்களைப் பரவசம் அடையச் செய்தவர், ‘‘முதல்மாடியில் ஆணையாளர் அறை, அலுவலகம் எல்லாம் இருக்கு. நாம் நேரடியாக ரெண்டாவது மாடியிலுள்ள கவுன்சில் மன்றத்திற்குப் போயிடுவோம். படி ஏறமுடியாதவங்க லிஃப்ட்ல வாங்க...’’ என்றார்.
இரண்டாவது தளத்தில் இருந்த மேயர் அறையையும், அலுவலகத்தையும் சுட்டிக்காட்டிவிட்டு மாநகராட்சி கூட்டம் நடக்கும் கவுன்சில் மன்றத்திற்குள் அழைத்துச் சென்றார். ‘‘ஆரம்பத்துல கவுன்சிலர்கள், ஆல்டர்மேன்னு அழைக்கப்பட்டாங்க. அப்ப 12 ஆல்டர்மேன்கள் இருந்தாங்க. நகரம் விரிவாக வார்டு எண்ணிக்கையும், கவுன்சிலர்கள் எண்ணிக்கையும் கூடுச்சு. இப்ப பெருநகர மாநகராட்சியில் 15 மண்டலங்கள் இருக்குது. 200 கவுன்சிலர்கள் இருக்காங்க.
இதுதான் மன்றக் கூடம். இந்த மாநகராட்சி உள்ளே நுழையும் போது பில்டிங்கின் மேலே மூன்று கொடிக் கம்பங்களைப் பார்த்திருப்பீங்க. நடுவில் உள்ளது தேசியக் கொடி. அருகில் நீலநிறத்தில் மற்றொரு கொடி இருக்கும். இது மேயர் நகரில் இருந்தால் ஏற்றப்படும். அவங்க வெளியூரில் இருந்தால் இது இறக்கப்பட்டுவிடும்...’’ என்றவர், கவுன்சில் மன்றம் குறித்து விளக்கினார்.
‘‘இதிலுள்ள மர வேலைப்பாடுகள் எல்லாம் தேக்கு, ரோஸ்வுட் இரண்டிலும் செய்திருக்காங்க. இந்த மேயர் சேரிலும் ஒரு வரலாறு இருக்கு. 1933ம் ஆண்டு சென்னையின் முதல் மேயராக இருந்த எம்.ஏ.முத்தையா செட்டியார் மாநகராட்சிக்காக இந்தச் சேரை அன்பளிப்பாக வழங்கினார். இந்த மேயரின் டேபிள் சீட்டில் ஹுக் மாதிரி உள்ள இடத்தில் செங்கோல் வைப்பாங்க.
அப்புறம், ஆணையர் சீட்டில் உள்ள சின்னம்-குதிரையில் ஒருவர் அமர்ந்தபடி கீழே டிராகன் இருக்கும். இது செயிண்ட் ஜார்ஜ் குதிரையில் வந்தபடி டிராகனை கொல்லும் சின்னம். அதன் கீழே கடல், கப்பல், கோட்டை போன்ற சின்னங்கள் இருக்கும்.
இந்தச் சின்னங்களை எல்லா சிலைகளிலும் பார்க்கலாம். இது கார்ப்பரேஷன் ஆஃப் மெட்ராஸின் அப்போதைய சின்னம். இப்ப சென்னை மாநகராட்சியின் சின்னத்துல மூவேந்தர்களைக் குறிக்கும் புலி, வில் அம்பு, மீன் மற்றும் கடல், கப்பல் இருக்கும். அதன்மேல் ரிப்பன் பில்டிங்கின் கோட்டோவியம் வரைஞ்சிருப்பாங்க. அப்புறம், இந்த மாநகராட்சி கடிகாரம் பத்தியும் சொல்லணும். நான்கு பக்கம் கொண்ட கடிகாரம் இது.
லண்டன்ல இயங்கும் பிக்பென் மணிக்கூண்டை நினைவுபடுத்தும் விதமாக இதனை அமைச்சிருக்காங்க...’’ என்கிறவர், அதன் அழகைக் காட்டிவிட்டு முதல் தளம் வழியாக பின்னால் அமைந்துள்ள புதிய மூன்று கட்டடங்களுக்கு அழைத்துச் சென்றார். ‘‘இப்ப நகரம் விரிவாக்கம் ஆகியிருக்கிறதால இந்த பில்டிங் போதாது. அதனால் பின்னாடி அம்மா மாளிகை, ரெவின்யூ பில்டிங், கிரீன் பில்டிங்னு சொல்லப்படும் முத்தமிழ்அறிஞர்
மு.கருணாநிதி மாளிகை என மூன்று பில்டிங் கொண்டு வந்தாங்க.
இதுல கிரீன் பில்டிங் லேட்டஸ்ட்டாக வந்தது. ஸ்கைவாக் மூலம் எல்லா பில்டிங்கையும் இணைச்சிருக்காங்க. அதாவது இந்த பில்டிங்குகளுக்குச் செல்ல கீழே போக வேண்டியதில்ல. இந்த ஸ்கைவாக் மூலமே போகலாம்’’ என்றபடி கிரீன் பில்டிங்கிற்கு ஸ்கைவாக் வழியாக அழைத்துச் சென்றார்.
‘‘சென்னை மாநகராட்சியின் கீழ் கல்வி, சுகாதாரம், மின்சாரம் உள்ளிட்ட 16 துறைகள் இயங்குது. இவை தனித்தனி பில்டிங்கில் இயங்கினாலும் எல்லாவற்றையும் கிரீன் பில்டிங்கிலுள்ள இந்த ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையமே கண்ட்ரோல் செய்யும். அத்துடன் ஒட்டுமொத்த சென்னையையும் இங்கிருந்து கண்காணிக்கிறாங்க.
இப்ப பொதுமக்கள் தங்கள் குறைகளைச் சொல்ல ‘1913’ டோல் ஃப்ரீ நம்பர் கொடுத்திருக்காங்க. இந்த 1913 என்பது ரிப்பன் பில்டிங் தொடங்கப்பட்ட ஆண்டு. இதில் குறைகளைத் தெரிவிக்கலாம்...’’ என்றபடி பாரம்பரிய நடையை முடித்தார் முகிலன்.
இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் தொடர்புத்துறை பொறுப்பாளர் கிறிஸ்டி லீமாவிடம் பேசினோம். ‘‘இது நீண்டகாலமாகவே நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயம். முன்பு ரிப்பன் பில்டிங்கை பார்வையிட மாநகராட்சி கமிஷனருக்குக் கோரிக்கை கடிதம் அளிக்கணும். அவர் ஒப்புதல் தந்ததும் பிஆர்ஓ டீம்ல உள்ளவங்க பில்டிங்கின் வரலாறு உள்ளிட்ட விஷயங்களை விளக்குவாங்க.
இப்போது இருக்கும் கமிஷனர் குமரகுருபரன் சார், ‘இதை ஏன் தொடர்ச்சியா செய்யக்கூடாது’னு கேட்டார். பிறகு சிங்காரச் சென்னை திட்டத்தின் கீழ் இதனையும் மேற்கொள்ளலாம்னு மேயர் பிரியா மேடமும், கமிஷனர் குமரகுருபரன் சாரும் முடிவெடுத்து ஒப்புதல் தந்தாங்க.
அப்ப ஒரு போன் நம்பரை கொடுத்தோம். இதில் யார் கால் பண்றாங்களோ அவங்களைப் பார்வையிட அனுமதிக்கிற மாதிரி திட்டம். அந்நேரம் மீடியாக்களில் இந்தச் செய்தி வந்ததும் ஒரே நாளில் 2 ஆயிரம் கால்ஸ் வந்து ரொம்ப பாப்புலராகிடுச்சு. மக்கள்கிட்ட ஆர்வம் இருப்பது தெரிஞ்சது.
அதனால், ஆன்லைன் புக்கிங் வசதியை ஏற்படுத்தினோம். பிறகு, இதற்கென தனியாக ஒரு டீமை உருவாக்கினோம். சென்னையில் நிறைய ஹெரிடேஜ் வாக்கிங் டூர்ஸ் நடக்குது. அதுல ‘நம் வீடு நம் ஊர் நம் கதை’ குழு நடத்தும் சென்னை வரலாற்றாளர் திரிபுரசுந்தரியிடம் கைடு பண்ண கேட்டோம். அவங்க ஆர்க்கிடெக்டும்கூட. அப்படியாக ரிப்பன் பில்டிங்கின் புரொஃபைலை அவங்களுக்குக் கொடுத்தோம். அவங்களும், அவங்க ஆர்க்கிடெக்ட் டீமும் இதன் வரலாறு, பாரம்பரியம், கட்டிடக்கலை பத்தி எல்லாம் பார்வையாளர்களிடம் பேசிட்டு கவுன்சில் ஹால் எல்லாம் காட்டுவாங்க. இந்தக் கவுன்சில் ஹால் லண்டன் கவுன்சில் ஹாலின் ரெப்ளிக்கா. இது ஒலியியலையும் கணக்கில் எடுத்து செய்த கவுன்சில். அதாவது மேயர் இடத்திலிருந்து பேசும்போது கவுன்சிலில் எங்க உட்கார்ந்து இருந்தாலும் கேட்கும்படியாக இருக்கும்.
பிறகு, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையம் அழைச்சிட்டுப் போவோம். அங்கே எப்படி முழு சென்னையையும் மானிட்டர் பண்ணிட்டு இருக்கோம் என்பதையும், மக்கள் குறைகளைச் சொன்னதும் எப்படி உடனடியாக மாநகராட்சி தீர்த்து வைக்கிறதுனும் சொல்வோம். இந்த பாரம்பரிய நடைக்கு ஆன்லைனில் பதிவு செய்யணும். இணையத்தில் ரிப்பன் பில்டிங் ஹெரிடேஜ் வாக்னு போட்டாலே வந்திடும். அதில் உங்கள் பெயர், ஆதார் எண், வயது, முகவரி, எந்த நாளில் வேண்டும் என்ற விவரங்களைக் கொடுக்கணும்.
இது முழுக்க இலவசம்தான். ஆனா, பதிவு செய்யணும். அப்பதான் எவ்வளவு பேர்னு எங்களுக்குத் தெரியும். சனி, ஞாயிறு, செவ்வாய், வியாழன் என வாரத்தில் நான்கு நாட்கள் காலை 8 டூ 9 மணி வரை இந்தப் பாரம்பரிய நடையைப் பண்றோம். இதனுடன் அருகிலுள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலும் விரைவில் மக்களின் பார்வைக்கு வர இருக்கு. எதிர்காலத்தில் ஒரு பெரிய ஹெரிடேஜ் வாக்கிங் டூராக இதை மாத்தணும்னு மாநகராட்சி நினைச்சிருக்காங்க...’’ என்கிறார் கிறிஸ்டி லீமா.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|