சமூகத்தைப் பார்த்து வேம்பு கேள்வி கேட்பாள்!



‘‘பொண்ணுனாலே ஏதாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கணுமா?’’ அழுத்தமாகக் கேட்கிறார் அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு. பெண்களுக்கு சிறப்பு சேர்க்கும் மார்ச் மாதத்தில் இந்தக் கேள்வி கேட்கும் பொழுது இன்னும் வலிமையாகவே நம் காதுகளில் விழுகின்றது.

‘வேம்பு’..?

பெண்கள் ராக்கெட் ஏறி வேறு கிரகத்துக்கே சென்று திரும்பினாலும் இன்னமும் பெண்களை சுட்டிக்காட்டி குறை சொல்லும் பழக்கம் மட்டும் குறையவே இல்ல. அநியாயம் நடந்திருந்தா கூட குற்றவாளியை விட்டுட்டு அவளுடைய குணத்தைத்தான் சமூகம் குறை சொல்லும்.

ஒரு பொண்ணு தன்னுடைய வீட்டில் இருக்கும் பொழுது அங்கே அப்பாவுடைய  கட்டுப்பாடு, ஊருக்காக சீக்கிரம் திருமணம் செய்தாகணும்னு உறவுக்கார பையனுக்கே திருமணம் செய்து வைக்கிறாங்க. இது எந்த அளவுக்கு அவளுடைய வாழ்க்கையையும் லட்சியத்தையும் இடையூறு செய்யுது... அதை வேம்பு எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.

படத்தின் நடிகர்கள் பற்றி சொல்லுங்க..?

நாயகி ஷீலா. காத்திருந்து ‘திரௌபதி’, ‘மண்டேலா’... இப்படி அவங்களுக்கு முக்கியத்துவம் இருக்கிற கேரக்டராதான் செய்வாங்க. இந்தப் படமும்  அப்படிதான்.

முக்கியமா கிராமத்து கதைன்னாலே ஷீலாகிட்ட எதார்த்தமான நடிப்பை ஈஸியா வாங்கிடலாம். ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘தங்கலான்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிச்சிருக்கார்.  

‘பரியேறும் பெருமாள்’ புகழ் ஜானகி ஹீரோவுக்கு அம்மா, ‘மெட்ராஸ்’ பட ஜெயராவ் ஹீரோயினுக்கு அப்பாவா நடிச்சிருக்கார். இவங்கதான் மெயின் கேரக்டர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் ஷூட்டிங் எடுத்தோம். காட்சிகள் இயல்பா இருக்கணும்னு அங்க இருக்கற நாடகக் கலைஞர்கள், கூத்துக் கலைஞர்கள் எல்லாரையும் நடிகர்களாக பயன்படுத்தியிருக்கோம். இதில் பலரும் ‘ஜோக்கர்’ உள்ளிட்ட பல படங்களில் நடிச்சிருக்காங்க.

உங்களைப் பற்றி..?

எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர் அருகே பூண்டி மாதா கோவில் கிராமம். படிச்சு முடிச்சுட்டு ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்தேன். சினிமா ஆசை மனசு பூரா. ஒரு நல்ல நாளா பார்த்து சென்னை வடபழனி வந்து சேர்ந்தேன். 

அசிஸ்டெண்ட் இயக்குநராக சில காலம், அப்புறம் நண்பர்கள் கூட இணைந்து ஷார்ட் ஃபிலிம் உருவாக்கம்... இப்படி போயிட்டே இருந்தது. ‘குப்பைக் காரன்’ என்கிற ஷார்ட் ஃபிலிம் டைரக்ட் செய்தேன். புனே சர்வதேச திரைப்பட விழாவில் இரண்டு விருதுகள், தொடர்ந்து ஒருசில திரைப்பட விழாக்களில் விருதுகள், பாராட்டுகள் கிடைச்சது.

இந்தக் குறும்படத்தை வெள்ளித்திரைக்கான கதையா எழுத ஆரம்பிச்சு ஒருசில நடிகர்களை சந்தித்து கதையும் சொன்னேன். ஆனால், இந்தப் படம் பொறுத்தவரை குறும்படமாக இருக்கிறதுதான் நல்லதுனு அனுபவம் கிடைச்சது. அடுத்து எழுதின கதைதான் ‘வேம்பு’. எந்தக் கதையானாலும் அதில் சமூகத்துக்கான ஏதோ ஒரு கருத்து இருக்கணும்னு நினைச்சுதான் எழுதுறேன். ‘வேம்பு’ படமும் அப்படிதான்.

இயக்குநர்கள் சீனு ராமசாமி, தங்கர் பச்சான்... என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இணைந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு இருக்காங்களே?

அசிஸ்டெண்ட் இயக்குநராக இருந்தபோதே இவங்க எல்லார் கூடவும் ஒரு சில காலம் பயணிச்சிருக்கேன். எப்படி இருந்தாலும் நம்ம பையன் என்கிறதுக்காக போஸ்டர் ரிலீஸ் செய்து ஆதரவு கொடுத்தாங்க.

மேலும் இயக்குநர்கள் நித்திலன் சாமிநாதன், மடோன் அஸ்வின், நடிகர்கள் யோகி பாபு சார் மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் போஸ்டரை ரிலீஸ் செய்தாங்க.
இந்தப் படத்துக்கு சினிமாட்டோகிராபி ஏ.குமரன். இதற்கு முன்பு தனுஷ் சாருடைய ‘தங்கமகன்’, கிருஷ்ணா சாருடைய ‘வீரா’ படங்களில் வேலை செய்திருக்கார். எடிட்டர் வெங்கட்ரமணன், ‘மிருதன்’ படம் எடிட் செய்தவர்.

படத்துக்கு இசை மணிகண்டன் முரளி. பிரபல யூடியூப் சேனலில் வேலை செய்தவர். ‘அதோ முகம்’ படத்தில் இசையமைச்சிருக்கார். இந்தப் படத்தில் கிராமத்து ஸ்டைல் பாடல்களுக்காக டிராமா மற்றும் கூத்துக் கலைஞர்களைப் பயன்படுத்தியே பாடல்களை உருவாக்கியிருக்கார்.

டிராமாவில் பாடல்கள் எழுதும் ராணி அம்மா வரிகளையும் குரலையும் கூட பயன்படுத்தி ஒரு பாட்டு இருக்கு. கோல்டன் சுரேஷ் சார் மற்றும் விஜயலட்சுமி மேடம் சேர்ந்து இந்தப் படத்தை தயாரிச்சிருக்காங்க.சமூகத்துக்கு பயனுள்ள கருத்தை சொல்லணும் என்கிறதுக்காகவே உருவான கதைதான் ‘வேம்பு’. நிச்சயம் அதற்கு நியாயம் செய்யும்.         

ஷாலினி நியூட்டன்