ஜவஹர்லால் நேருவும் ராணி எலிசபெத்தும் ருசித்த உணவகம்!



ஓர் உணவகம் நடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கு நல்ல சமையல் கலைஞர்களும், வேலையாட்களும், கூடவே சுவையாகவும் தரமாகவும் கொடுப்பதற்கான தொழில் நுணுக்கங்களும் தேவை.

அப்போதுதான் ஆண்டுகள் கடந்தும் இந்தத் தொழிலில் சிறப்பாக பயணிக்க முடியும். அப்படியாக சென்னையில் சுமார் 69 ஆண்டுகளாக இயங்கி வருகிறது ஓர் உணவகம். தாத்தா, மகன், பேரன் என மூன்று தலைமுறையைக் கண்ட உணவகமாகவும் திகழ்ந்து வருகிறது. 
அதுமட்டுமல்ல. இவர்களின் கேட்டரிங் உணவை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவும், இங்கிலாந்தின் ராணி எலிசபெத்தும் ருசித்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்தளவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க உணவகம் இது. இதன் பெயர், ‘நைனான்ஸ் ரெஸ்டாரன்ட்’.

சென்னை பாரிஸில் சட்டக் கல்லூரிக்கு எதிரே உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களில் ஒன்றான ஒய்எம்சிஏவின் உள்ளே இருக்கிறது இந்த உணவகம். கடந்த 1956ம் ஆண்டு கே.ஏ.நைனான் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த உணவகத்தின் பின்னணித் தகவல்கள் நிறைய சுவாரஸ்யம் தருபவை. 

அதனை கே.ஏ.நைனானின் மகன் அலெக்சாண்டர் நம்மிடம் பகிர்ந்தார்.  ‘‘எங்களுக்குப் பூர்வீகம் எர்ணாகுளம். 1930ம் ஆண்டு காலகட்டத்தில் கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வேலைக்காகவும் படிப்புக்காகவும் தமிழ்நாட்டுக்குக் குடிபெயர்ந்தவர்கள் அதிகம். அப்படி வேலைக்காக கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்தவர்தான் என் அப்பா கே.ஏ.நைனான்.

இங்கே இன்றைய அண்ணாசாலையான அன்றைய மவுண்ட் ரோட்டில் இருந்த ஸ்பென்சர்ஸில் மேனேஜராக அவருக்கு வேலை கிடைத்தது. அந்த சமயத்தில் ஸ்பென்சர்ஸ் நிறுவனம் சென்னையில் மூன்று மிகப்பெரிய ஹோட்டல்களை நடத்தி வந்தது. 

அந்த மூன்று ஹோட்டல்களின் முக்கியமான வேலைகளையும் அப்பாவே கவனித்து வந்தார்.இந்நேரம் அப்பாவுக்கு சென்னை மருத்துவக் கல்லூரியின் டீன் ஆர்.வி.ராஜமிடம் இருந்து ஒரு போன் கால் வந்தது. அவர், ‘எங்கள் கல்லூரி கேண்டீனை எடுத்து நீங்கள் நடத்துகிறீர்களா’ எனக்  கேட்டுள்ளார்.

ஏற்கனவே ஸ்பென்சர்ஸில் வேலை பார்த்து வருகிறோம். எப்படி கேண்டீனை எடுத்து நடத்துவது என அப்பாவுக்கு தயக்கம். பின்னர் ஒருவழியாக ஸ்பென்சர்ஸின் உரிமையாளரிடம் போய் கேண்டீன் வேலையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

உடனே அவர் ஓகே சொல்ல, 1950ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியின் கேண்டீனை எடுத்து அப்பா நடத்தத் தொடங்கினார். இப்படியாக அவர் உணவகத் தொழிலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்...’’ என்கிற அலெக்சாண்டர், ‘நைனான்ஸ் ரெஸ்டாரன்ட்’ உருவான கதைக்குள் வந்தார். 

‘‘எம்எம்சி கேண்டீன் நடத்திக் கொண்டிருந்தபோதே மெடிக்கல் கான்ஃபரன்ஸ், மீட்டிங்ஸ் மாதிரியான நிகழ்ச்சிகளுக்கும் அப்பா கேட்டரிங் பண்ணினார். இதனால் கணக்கு வழக்குகள் பார்ப்பதற்கென ஒரு ஆபீஸ் தேவைப்பட்டது.

அந்த சமயத்தில் சென்னை ஒய்எம்சிஏ பில்டிங்கில் ஒரு ஹோட்டல் நடத்த முடியாத நிலையில் இருப்பதும், அதை ஆபீஸாக்கலாம் என்பதும் அப்பாவுக்குத் தெரிய வந்தது. விசாரித்தபோது அந்த ஹோட்டல ஒரு ஐரோப்பியர் நடத்தி வந்ததாகவும், அவர் பல மாதங்கள் வாடகை கொடுக்காததால், இழுத்து மூடவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அப்பா தெரிந்து கொண்டார்.

இந்த இடத்தை ஆபீஸாகவோ அல்லது ஹோட்டலாகவோ நடத்தலாம் என அங்குள்ளவர்கள் சொல்ல, உடனே, அந்த இடத்திற்கு கொடுக்கவேண்டிய வாடகை பாக்கியை அப்பாவே கட்டிவிட்டு, 1956ம் ஆண்டு அவர் பெயரிலேயே ஒரு ரெஸ்டாரன்டை அங்கு தொடங்கினார். அதுதான் ‘நைனான்ஸ் ரெஸ்டாரன்ட்!’’ உற்சாகமாகச் சொல்கிற அலெக்சாண்டர், இந்த உணவகத் தொழிலுக்குள், தான் வந்த கதையையும் சொன்னார். ஏனெனில், அலெக்சாண்டர் ஆடிட்டருக்குப் படித்தவர்.

‘‘அப்பாவின் கேட்டரிங் பணி சிறப்பாகச் சென்றது. ஒருமுறை இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு சென்னை வந்தபோது அப்பாவின் கேட்டரிங்கில் இருந்துதான் அவருக்கு இரவு டின்னருக்கான உணவுகள் சென்றன. அதேபோல் எலிசபெத் ராணி சென்னைக்கு வந்திருந்த நேரத்திலும் அப்பாவின் கேண்டீனில் இருந்துதான் அவருக்கு உணவு சென்றது.

அந்தளவிற்கு அனைவருக்கும் பரிச்சயமான கேண்டீன் மற்றும் உணவகத்தை அப்பா நடத்தி வந்தார். அவரைத் தொடர்ந்து அவருக்கு உதவியாக நான் வந்தேன். நான் லயோலா கல்லூரியில் பி.ஏ முடித்ததும் அப்பாவின் வேண்டுகோளுக்காக சிஏ படித்து பாஸானேன்.

பிறகு, ஓராண்டு வெளியில் வேலை பார்த்தேன். அப்போது சென்னை மருத்துவக் கல்லூரியில் மெடிக்கல் கான்ஃபரன்ஸ் ஒருவாரம் நடந்தது. அதற்கு அப்பாதான் கேண்டீன் இன்சார்ஜ். காலை, மதியம், இரவு என எல்லா வேளைகளும் ஃபுட் சப்ளை செய்ய வேண்டும். 

ஆனால், ஒரே நேரத்தில ரெஸ்டாரன்டையும் இந்த கான்ஃபரன்ஸிற்கான உணவு சப்ளையையும் அப்பாவால் கவனிக்க முடியவில்லை. அதனால், கான்ஃப்ரன்ஸ் கேண்டீன் வேலையை என்னைப் பார்க்கப் பணித்தார். அப்பாவுக்காக நான் வேலையை விட்டுவிட்டு வந்தேன். அப்படியே 1981ம் ஆண்டிலிருந்து ரெஸ்டாரன்டையும் கவனித்துக் கொள்ளத் தொடங்கினேன்.

ரெஸ்டாரன்ட் நடத்தும்போதே வெளியில் ஆர்டர் எடுத்து கேண்டீனுக்கான வேலைகளும் செய்து வந்தோம். எங்க ரெஸ்டாரன்ட் சட்டக் கல்லூரி, உயர்நீதிமன்றம் அருகே இருப்பதால் வக்கீல்கள், காவலர்கள் எங்களின் வாடிக்கையாளர்களாக இருந்தனர். இதுதவிர, அருகிலிருந்த சில அலுவலகங்களிலிருந்தும் சாப்பிட வருவார்கள். 

அந்தக் காலத்தில் காலையில் பெரும்பாலும் ஐரோப்பிய உணவுகள்தான். மதியம் ஃபிஷ் மீல்ஸ் தொடங்கி ஃபிஷ் ஃப்ரை, ஃபிஷ் கறி, நெத்திலி ஃப்ரை என இன்னும் பல வகையான உணவுகள் வைத்திருந்தனர். அப்போது ஒரு கிலோ வஞ்சிரம் மீனின் விலை 2 ரூபாய்தான். ஒரு ஃபிஷ் மீல்ஸின் விலையும் ரூ.2.75 என்று இருந்தது.

நான் கடையை முழுமையாக எடுத்தபிறகு பிரியாணி கொண்டு வந்தேன். கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக பிரியாணி எங்கள் ரெஸ்டாரன்டில் தருகிறோம். அதேபோல மதியம் லன்ச்சிற்குத் தயார் செய்த உணவுகள் முடிந்ததும் உணவகத்தை மூடிவிடுவோம். அதிகபட்சம் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த உணவகத்தை நடத்துகிறோம்.  

அப்பாவுடன் சேர்ந்து நான் எட்டு வருடங்கள் உணவகத்தை நடத்தினேன். அதன்பிறகு நான் மட்டும் தனியாக நடத்த ஆரம்பித்தேன். எங்கள் உணவகத்தில் அப்பா காலத்தில் இருந்து இன்று வரை டெசர்ட், ‘கேரமல் கஸ்டர்ட்’ கிடைக்கும். அப்போது அதன் விலை ஒரு ரூபாய். இப்போது 60 ரூபாய்க்குக் கொடுக்கிறோம்.

அதேபோல் அந்தக் காலத்தில் இருந்து இப்போது வரை ஒரே மாதிரியான சுவையையும், தரத்தையும் பராமரிக்கிறோம். இதற்கு காரணம் எங்கள் அப்பா காலத்தில் வேலை செய்த சமையல்காரர் முனுசாமி.அவருக்குப் பிறகு எங்களது உணவகத்தின் சமையலில் அவரது சிஷ்யர்களும் அவர்களின் வாரிசுகளும்தான் இருக்கின்றனர். 

ஓர் உணவை எப்படிச் சமைக்க வேண்டுமென தன்னுடைய சிஷ்யர்களுக்கு சொல்லிக் கொடுத்துச் சென்றார் சமையல் மாஸ்டர் முனுசாமி. தற்போது வரை அந்த பக்குவத்தில்தான் அனைத்து உணவுகளும் தயாராகின்றன...’’ என அலெக்சாண்டர் நிறுத்த அவரின் மகனும் இப்போது உணவகத்தைக் கவனித்து வரும் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவருமான தருண் தொடர்ந்தார்.

‘‘தாத்தா, அப்பாவிற்குப் பிறகு நான் இந்த உணவகத்தை எடுத்து நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களைப் பார்த்துதான் எனக்கு கேட்டரிங் படிக்கும் ஆசையே வந்தது.
அதனால் ஏற்காட்டில் உள்ள ஒரு கல்லூரியில் கேட்டரிங்  படித்தேன். பிறகு, லண்டன் சென்று கேட்டரிங்கிலேயே மாஸ்டர்ஸும் முடித்தேன். 

தொடர்ந்து சில ஸ்டார் ஹோட்டல்களில் வேலை செய்தேன். கொரோனா காலத்திற்குப் பிறகு அப்பாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நானே ரெஸ்டாரன்டை கவனிக்க ஆரம்பித்தேன்.  

தாத்தா காலத்தில் என்னவெல்லாம் உணவுகள் இருந்ததோ அந்த உணவுகளை இன்று வரை நாங்கள் தொடர்கிறோம். அப்பா உணவகத்தை ஏற்றபோது பிரியாணி கொண்டு வந்ததுபோல, நான் உணவகத்தை கையிலெடுத்ததும் சிக்கனில் சில ஸ்டார்ட்டர்ஸ் மட்டும் கொண்டு வந்தேன். மற்றபடி சிக்கன், மட்டனில் கேரளா ஸ்டைல் பிரியாணி, வஞ்சிரம் மீன் குழம்புடன் மீல்ஸ், வஞ்சிரம் ஃப்ரை, இறால் மசாலா என எப்போதும் இருக்கிற மெனுவைேய பின்பற்றுகிறோம்.

போலவே, சமையல் முதல் உணவு பரிமாறும் ஆட்கள் வரை அனைவருமே அப்பா காலத்தில் இருந்தவர்கள்தான். கடைக்கு வாங்கப்படும் உணவுப் பொருட்களும்கூட பல ஆண்டுகளாக ஒரே நபரிடமே வாங்குகிறோம். 

அப்பா இந்த உணவகத்தை நடத்தும்போது ரெஸ்டாரன்ட்டிற்கு யார் சிக்கன் கொடுத்தாரோ அவரது மகன்தான் இப்போதும் சிக்கன் கொடுக்கிறார். மட்டனும் அப்படித்தான். கடல் உணவுகள் மட்டும் அன்றைக்கு எது ஃப்ரஷ்ஷாகக் கிடைக்கிறதோ அதை வாங்கிச் சமைக்கிறோம்.

தாத்தாவும் அப்பாவும் நடத்தும்போது என்ன சுவையையும் தரத்தையும் பராமரித்தார்களோ அதையேதான் இப்போதும்  கொடுக்கிறோம். அதனாலேயே எப்போதும்போல் வாடிக்கையாளர்கள் எங்கள் உணவகத்தை விரும்பி வருகின்றனர்...’’ எனச் சுவைபட சொல்கிறார் தருண்.                                   

செய்தி: ச.விவேக்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்