MUMBAI
இந்த ஆய்வை அறிந்தால் உண்மை புரியும்
மெக்சிகோ,இந்தோனேசியா, ஆப்பிரிக்காவுடன் சேர்த்து மொத்தம் 3 நாடுகள் இந்தியாவுக்குள் இருக்கின்றன!

ஒரே நாடு ஒரே தேர்தல்... ஒரே நாடு ஒரே மொழி... ஒரே நாடு ஒரே கட்சி... என இந்தியா ஒற்றை இந்தியாவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கையில் இந்தியா என்பது ஒன்றல்ல மூன்று எனச் சொல்கிறது ஓர் ஆய்வு.ப்ளூம் வென்சர் (Blume Venture) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் உலகளவில் நாடுகளின் வளர்ச்சியைப் பல்வேறு காரணிகளை வைத்துக்கொண்டு ஆராய்ந்து வருகிறது.
அண்மையில் அது வெளியிட்ட ஆய்வறிக்கையில் ‘இந்தியா ஒரு நாடு அல்ல…அதற்குள் 3 நாடுகள் இருக்கின்றன’ எனச் சொல்கிறது. அந்த நாடுகள் மெக்சிகோ, இந்தோனேசியா மற்றும் ஆப்பிரிக்கா. என்ன... இந்தியாவுக்குள் ஆப்பிரிக்காவா எனக் கேட்பவர்களுக்கு ப்ளூம் ஆராய்ச்சியின் முடிவுகளைப் பற்றிப் பார்ப்போம்.
 இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 144 கோடி. இதில் எலைட் எனச் சொல்லப்படும் மேல்தட்டு கோடீஸ்வரர்கள் 14 கோடி. மிடில் க்ளாஸ் 30 கோடி. ஏழைகள் 100 கோடி. முதல் வகுப்பினரை இந்தியன் 1, இரண்டாம் வகுப்பாரை இந்தியன் 2, மூன்றாம் வகுப்பாரை இந்தியன் 3 என பகுக்கும் ப்ளூம் நிறுவனம், முதல் வகுப்பினரை மெக்சிகோ நாட்டுக்கும், இரண்டாம் வகுப்பினரை இந்தோனேசியாவுக்கும், மூன்றாம் வகுப்பினரை ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்துக்கும் ஒப்பிடுகிறது.
இந்த ஒப்பீடுகள் வெறும் பொருளாதார காரணங்களால் மட்டுமல்லாமல் கல்வி, சேமிப்பு, சுகாதாரம், நுகர்வு போன்ற பல்வேறு காரணங்களை ஒட்டியும் ஒப்பிடுகிறது.
முதலில் இந்த 3 இந்தியர்களின் பொருளாதார நிலை என்ன? ப்ளூம் சொல்வதைப் பார்ப்போம்.
இந்தியன் 1 வகுப்பில் வரும் 14 கோடி பேர்தான் பெரிய சம்பாத்தியம் உடையவர்கள். பணக்காரர்கள். இந்தியாவில் நுகர்வில் ஈடுபடும் 3 பேரில் 2 பேர் இந்த வகுப்பிலிருந்து வருபவர்கள். மீதி ஒருவர் மிடில் கிளாஸ் மாதவன்கள். முதல் வகுப்பினர் யோசிக்காமல் செலவு செய்தால் இரண்டாம் வகுப்பினர் நோட்டை பலதடவை எச்சில் வைத்து எண்ணித்தான் கொடுப்பார். ஆனால், மக்கள்தொகையில் 3ல் 2 பங்கு வகிக்கும் இந்தியன் 3 வகுப்பினர் உணவுக்கே அல்லாடும் நிலை இருப்பதால் இவர்கள் மத்தியில் நுகர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை எனச் சொல்லும் இந்த ஆய்வு மேலும் இந்த 3 வகுப்பினரையும் பிரித்து மேய்கிறது.
இந்தியன் 1
மக்கள்தொகையில் 14 கோடியாக இருக்கும் இந்த வகுப்பு, எப்போதுமே நிலையானதான எண்ணிக்கையிலேயே இருக்கிறது. அதாவது உயர்வதும் இல்லை, குறைவதும் இல்லை. இவர்களுக்கு அடிமை சேவகம் செய்வதே மற்ற இரு இந்தியர்களின் வாழ்நாள் வேலையாக இருக்கிறது. இந்த வகுப்பினரின் முக்கிய நுகர்வு ரியல் எஸ்டேட் பெயரில் மாளிகை வீடுகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள்.
இந்தியன் 2
30 கோடியாக இருக்கும் இந்த வகுப்பினர் சம்பளக்காரர்கள். மாதம் பிறந்தால் பேங்க் புக்கில் எப்போது சம்பளம் விழும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள். இவர்களின் முக்கியப் பிரச்னை என்றுமே உயராத சம்பளம், உயர்ந்து கொண்டேயிருக்கும் விலைவாசி மற்றும் சமூக பாதுகாப்பு இன்மை. இந்த வகுப்பில் சம்பளத்தாரோடு சிறு வணிகம் செய்பவர்களும் திறன் வாய்ந்த தொழில்களில் ஈடுபடுவோரும் உண்டு.
இவர்கள் நுகர்வு மூன்றில் 1 பங்கு இருந்தாலும் அதற்கான பணத்தை ஈஎம்ஐ, லோன், க்ரெடிட் கார்டுகளில் மட்டும் செலுத்துவதால் வாழ்க்கை முழுக்க அல்லாடிக் கொண்டிருப்பார்கள். இவர்களின் சேமிப்புகூட கடந்த சில பத்தாண்டுகளில் 84 சதவீதத்திலிருந்து 61 ஆக குறைந்திருப்பதாக சொல்கிறது இந்த ஆய்வு.
மற்ற பொருளாதார விஷயங்கள்?
இந்தியாவின் மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) 54 சதவீதம் சேவை துறையால் வருகிறது. இந்தத் துறையில் மட்டுமே சுமார் 31 சதவீதத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் ‘இந்தியன் 2’ அல்லது ‘இந்தியன் 3’ வகுப்பினர் சேவைத் துறையில் திறன்களை வளர்த்துக் கொள்ளாவிட்டால் வேலையில்லாப் பிரச்னையை அதிகளவு சந்திக்க நேரிடும். எனவே இந்தியா, சேவைத் துறையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. உற்பத்தித் துறையிலும் இந்தியா மேலும் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது.
உதாரணமாக உற்பத்தித் துறையில் இந்தியா மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) வெறும் 12.9 சதவீதம்தான். இதுவே சீனா 26, தாய்லாந்து 25, மலேசியா 23, மெக்சிகோ 20, பங்களாதேஷ் 22...
இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி ஒருகாலத்தில் அதாவது 60களில் 15 ஆக இருந்தது. ஆனால், 90களில் 16.6ல் இருந்து இன்று 12.9 சதவீதத்துக்கு இறங்கியிருக்கிறது என்று சுட்டிக்காட்டும் ஆய்வு, கல்வியையும் ஒப்பிடுகிறது.
இந்தியா தன் மொத்த உற்பத்தியில் கல்விக்காக ஒதுக்குவது வெறும் 2.7 சதவீதம் மட்டுமே. இதுவே சீனா 4.1, அமெரிக்கா 5.0, ஆஸ்திரேலியா 5.5, ஸ்வீடன் 6.9, இங்கிலாந்து 5.5 எனச் சொல்லும் ஆய்வு இதை கல்வியின் மூலம் சீனா எப்படி சாதித்தது என்பது பற்றியும் விளக்குகிறது.
இந்தியாவைப் போல உயர்கல்விக்காக மட்டும் முன்னுரிமை கொடுத்து ஆரம்பக் கல்வியை சீனா புறம் தள்ளவில்லை. ஆரம்பக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இந்தியாவின் ஆரம்பக் கல்வியின் சாதனையை 1950களிலும், மேல்நிலை கல்வியை 1975களிலும், உயர்நிலைக் கல்வியை 2000ம் ஆண்டுகளிலும் சீனா பின்னுக்குத் தள்ளியது எனச் சொல்கிறது இந்த ஆய்வு.
பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்காக இருந்தால்தானே பாடி நன்றாக இருக்கும் என்பதை சீனா இந்த விஷயத்தில் நமக்கு நன்றாக உணர்த்துகிறது என சொல்லாமல் சொல்கிறது இந்த ஆய்வு.
சரி... ஏழைகள் பற்றி என்ன சொல்கிறது?
இந்தியாவில் ‘ஏழைகள் கொத்துக் கொத்தாக இறந்தால்தான் மற்றவர் கண்ணுக்கே தெரியும்’ என முகத்தில் அறைகிறது இந்த ஆய்வு. முறைசாராத் தொழில்கள், அந்தத் தொழில்களிலும் ஆபத்துகள் மற்றும் பாதுகாப்பு இன்மை, வறுமை எல்லாம் சேர்ந்து இந்த வகுப்பினரை ஆப்பிரிக்காவின் சகாரா பாலைவனத்துக்கு ஒப்பிடுகிறது ஆய்வு.
இதை எப்படி சரிசெய்வது? ஒன்றிய அரசுதான் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுவே, உணவுக்கே அல்லாடும் ஏழை மக்களின் எதிர்பார்ப்பு.
டி.ரஞ்சித்
|