ரத்த மகுடம்-99
பிரமாண்டமான சரித்திரத் தொடர்
‘‘கேட்டது புரியவில்லையா அல்லது தொடுத்த வினா அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதா..?’’ புருவங்களை உயர்த்தியபடியே கேட்டார் பாண்டிய மன்னரான அரிகேசரி மாறவர்மர்.
 ‘‘இரண்டுமே அல்ல மன்னா...’’ நிதானத் துடன் பதிலளித்தான் கரிகாலன். ‘‘பிறகு ஏன் எதுவும் சொல்லாமல் என்னைப் பார்க்கிறாய்..?’’ ‘‘குழப்பத்தை வெளிப்படுத்த அடியேனுக்கு வேறு உபாயம் தெரியவில்லை...’’
‘‘உனக்கா..?’’ வாய்விட்டு நகைத்தார் அரிகேசரி மாறவர்மர். ‘‘குழம்புவது உன் அகராதியிலேயே கிடையாதே!’’ ‘‘அகராதிக்கு சொற்களே சூழலில் இருந்துதானே மன்னா கிடைக்கின்றன..?’’ ‘‘அப்படியொரு சூழல் இக்கணத்தில் பிறந்திருக்கிறதா..?’’ ‘‘ஆம் மன்னா...’’
‘‘அதாவது நாம் தாயம் ஆடும் சூழலைக் குறிப்பிடுகிறாய்...’’ ‘‘தாயத்தை உருட்டியபடியே நீங்கள் கேட்ட கேள்விகளால் உருவாகி இருக்கும் சூழலைக் குறிப்பிடுகிறேன்...’’
‘‘அப்படியொரு புதிய சூழலை என் வினாக்கள் உருவாக்கி இருக்கிறதா என்ன..?’’ ‘‘உருவாகி இருப்பதால்தானே மன்னா அடியேன் பேச்சிழந்து நிற்கிறேன்...’’ ‘‘ஆனால், தொடுத்த வினாக்கள் பழமையானவை அல்லவா..?’’ ‘‘பழமையில் இருந்துதானே மன்னா புதியவை பிறக்கின்றன...’’
‘‘என்னை பழமையானவன் என்றும் உன்னை புதியவன் என்றும் குறிப்பிடுகிறாயா..?’’ ‘‘மீனே பழமையானது என்ற உயிரியலின் தோற்றச் செயல்பாட்டை ஒருபோதும் நிராகரிக்க முடியாது என்ற உண்மையை நினைவு படுத்துகிறேன் மன்னா...’’
பாண்டிய மன்னரின் நயனங்களில் திருப்தி மலர்ந்தது. ‘‘இதை புலி குறிப்பிடுவதால் ஏற்கத்தான் வேண்டும்!’’ நிறுத்திவிட்டு கரிகாலனின் கண்களை உற்றுப் பார்த்தார். ‘‘ஆனால், இப்பொழுது நான் குழம்பி நிற்கிறேன்...’’ ‘‘எதனால் மன்னா...’’ ‘‘நீ குறிப்பிட்ட வாக்கியத்தில் இருந்து பிறந்திருக்கும் சூழலால்!’’ ‘‘சற்றே விளக்க முடியுமா மன்னா..?’’
‘‘புலியின் இயல்பு ரிஷபத்தை அடித்துக் கொல்வது! இப்படித்தானே நீ குறிப்பிட்ட உயிரியலின் தோற்றச் செயல்பாடு குறிப்பிடுகிறது..?’’ ‘‘ஆம் மன்னா...’’ ‘‘ஆனால், இங்கோ ரிஷபத்தைக் காக்க புலி முன்னால் நிற்கிறது! இதை நான் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்..?’’ ‘‘அதே உயிரியலின் தோற்றச் செயல்பாட்டில் இருந்துதான் மன்னா...’’ ‘‘அப்படியா..?’’
‘‘அப்படித்தான் என்று மட்டுமே இந்த சிறியவனால் விடையளிக்க முடிகிறது மன்னா...’’ ‘‘அது எப்படி என இந்தப் பெரியவனுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்ல முடியுமா...’’ ‘‘தாங்கள் அறியாததா மன்னா... இருந்தாலும் இந்த எளியவனை பரிசோதிக்க கேட்கிறீர்கள்... புரிந்து கொண்டதை சொல்கிறேன்... தவறு இருந்தால் திருத்துங்கள்...’’
சொன்ன கரிகாலனை உற்றுப் பார்த்தார் அரிகேசரி மாறவர்மர். கரிகாலனின் கருவிழிகளில் எந்த பாசாங்கும் இல்லை என்பதைக் கண்டதும் தாயம் இல்லாத தன் கரத்தை உயர்த்தி மேலே சொல்லும்படி சைகை செய்தார்.
அதை ஏற்று கரிகாலன் தொடர்ந்தான். ‘‘வனமிருந்தால்தான் அது புலி... காட்டில் வாழ்ந்தால்தான் அது வேட்டைப் புலி! வனமற்ற நிலத்தில் வாழ சபிக்கப்பட்ட புலி, புலியல்ல... இன்னொரு வளர்ப்புப் பிராணி...’’ ‘‘அவ்வளவுதானா..?’’
‘‘அவ்வளவேதான் மன்னா! சபிக்கப்பட்ட புலிக்கு அடைக்கலம் கொடுத்து வனமற்ற நிலத்திலும் வளமோடு அதை வளர்ப்பது ரிஷபம்தான்! எனவேதான் அந்த ரிஷபத்தை தன் தாய் ஸ்தானத்தில் வைத்து புலி வணங்குகிறது; ரிஷபத்தைக் காக்க முன்னால் வந்து நிற்கிறது, ஒரு வளர்ப்புப் பிராணியைப் போல்..!’’ ‘‘என்றாலும் தன் மீதுள்ள கோடுகளை புலி மறைப்பதில்லையே!’’ ‘‘அது புலியின் இயல்பு மன்னா...’’ ‘‘வேட்டையாடுவதும் புலியின் குணம்தானே..?’’
‘‘அப்படித்தான் உயிரியலின் தோற்றச் செயல்பாடு குறிப்பிடு கிறது மன்னா...’’ ‘‘எனில் தன்னை வளர்க்கும் ரிஷபத்தை எப்பொழுது வேண்டுமானாலும் புலி வேட்டையாடும்... அப்படித்தானே..?’’ ‘‘ஒருபோதும் தன் தாயை வேட்டையாடாது...’’ ‘‘அதே தாயே மாற்றாந் தாயாக இருந்தால்..?’’
‘‘அன்னை என்றுமே அன்னைதான் மன்னா... தன் குழந்தைக்கு மட்டுமல்ல... தாயற்ற குழந்தைக்கும் பால் கொடுப்பதால்தான் அவள் அன்னை!’’ ‘‘ஆனாலும் பெற்ற அன்னைக்கும் வளர்ப்பு அன்னைக்கும் வித்தியாசம் இருக்கிறதே..?’’ ‘‘இதை நாட்டின் மக்களை தன் மக்களாகக் கருதும் மன்னரான நீங்கள் சொல்லலாமா..?’’
‘‘பிரமாதம்...’’ வாய்விட்டு மெச்சினார் பாண்டிய மன்னர். ‘‘வளர்ப்புப் பிராணியாக மாறினாலும் புலி, புலிதான் என்பதை நிரூபிக்கிறாய்...’’ ‘‘தங்கள் ஆசிகள் மன்னா...’’ ‘‘இந்த இடத்தில் இன்னொன்று கேட்கத் தோன்றுகிறது...’’ ‘‘பதிலளிக்க சித்தமாக இருக்கிறேன் மன்னா...’’
‘‘ரிஷபமோ அடைக்கலம்தான் கொடுத்திருக்கிறது... எருதோ, புலிக்காக கானகம் ஒன்றையே சிருஷ்டிக்கத் தயாராக இருக்கிறது... எனில் வளர்ப்புப் பிராணியாக இருக்கும் புலி என்ன செய்ய வேண்டும்..?’’
‘‘எருதின் கோரிக்கையை ஏற்காமல் ரிஷபத்தின் பக்கமே நின்று அதைக் காக்க வேண்டும்!’’ ‘‘ஏனோ? புலிக்கு வனம் வேண்டாமா..?’’ ‘‘சுதந்திரத்தை விட சுவாசம் முக்கியம் மன்னா... கிடைக்கும் கானகமே தனக்கு உயிர் கொடுத்த ரிஷபத்தின் இடமாக இருக்கையில் அதை மறுப்பதே புலிக்கு அழகு!’’ ‘‘வேட்டையாடும் எந்தப் புலியும் விசுவாசம் பார்ப்பதில்லை...’’
‘‘வளர்ப்புப் பிராணி விசுவாசத்தைத் தவிர வேறு எதையும் கணக்கில் கொள்வதில்லை!’’ ‘‘எந்த ஓர் உயிரினமும் தன் தர்மத்தை மறப்பது அதர்மம்...’’ ‘‘தர்மமும் அதர்மமும் தர்க்கத்துக்குள் அடங்குபவை மன்னா... மனித வாழ்க்கையோ தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை... சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்வதே உயிரினத்தின் நியதி...’’
‘‘அதைத்தான் நானும் சொல்கிறேன்! ஒருபோதும் புலி, வளர்ப்புப் பிராணி அல்ல!’’ ‘‘ரிஷபம் இருக்கும்வரையில் புலி வளர்ப்புப் பிராணிதான்...’’ ‘‘ரிஷபத்தை எருது அழித்து விட்டால்..?’’
‘‘பாதுகாப்பாக புலி இருக்கும் வரையில் எருதால் ரிஷபத்தை நெருங்கக் கூட முடியாது!’’ ‘‘ஒருவேளை ரிஷபமும் எருதும் கூட்டு சேர்ந்தால்..?’’ ‘‘அப்படி ஒருபோதும் நடக்காது மன்னா...’’ ‘‘நடந்து விட்டால்..?’’
‘‘கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை அப்படி நடைபெற சாத்தியமே இல்லை மன்னா...’’ ‘‘ஒருவேளை எதிர்காலத்தில் அப்படி நடந்தால்..?’’
‘‘அப்பொழுது புலியின் வாரிசுகள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வார்கள்!’’ ‘‘அதுவரை மீன் என்ன செய்ய வேண்டும்..?’’ ‘‘கழுவும் நீரில் நழுவியபடியே இருக்க வேண்டும்...’’ ‘‘இது புலியின் கட்டளையா..?’’ ‘‘வளர்ப்புப் பிராணியின் வேண்டுகோள்!’’ ‘‘இப்படி இறைஞ்சும்படி புலியை அனுப்பி வைத்தது ரிஷபமா..?’’
‘‘இல்லை! எருதின் திட்டத்தை அறிந்த வளர்ப்புப் பிராணியான புலி, தானாகவே முன்வந்து இந்த கோரிக்கையை மீனின் முன் சமர்ப்பிக்கிறது...’’ ‘‘அது என்ன எருதின் திட்டம்..?’’ ‘‘ரிஷபத்தை அழித்துவிட்டு மீனை ஒழிப்பது!’’ ‘‘அது அவ்வளவு எளிதான செயல் என்று நினைக்கிறாயா..?’’
‘‘இல்லை என எருதே நினைக்கிறது! அதனால்தானே ரிஷபத்தை அழிக்க மீனின் தயவை நாடி அந்த எருதே இங்கு வந்திருக்கிறது!’’ ‘‘ரிஷபமும் மீனின் உதவியை நாடித்தானே...’’‘‘வரவில்லை மன்னா! குறுக்கிட்டுப் பேசுவதற்கு மன்னிக்கவும். மீனின் உதவி தனக்குத் தேவை என ரிஷபம் நினைத்திருந்தால், தனது வளர்ப்புப் பிராணியை இங்கே அனுப்பியிருக்காது. மாறாக ரிஷபமே இங்கு வந்திருக்கும்!’’ ‘‘எவர் உதவியும் இன்றி தன்னால் எருதை வீழ்த்த முடியும் என ரிஷபம் கருதுகிறதா..?’’
‘‘சின்ன திருத்தம் மன்னா... தான், வளர்க்கும் புலியின் உதவியுடன் எருதை வீழ்த்த முடியும் என ரிஷபம் நினைக்கிறது!’’ ‘‘ஆக, வேண்டுகோள் வைக்க மட்டுமே புலி இங்கு வந்திருக்கிறது... அப்படித்தானே!’’ ‘‘ஆம் மன்னா...’’ ‘‘இதை மீன் நம்பும் என நினைக்கிறாயா..?’’
‘‘நம்ப வேண்டும் என்றே புலி மனதார பிரார்த்தனை செய்கிறது! ஏனெனில் ரிஷபத்துக்கும் மீனுக்கும் நட்பும் இல்லை... பகையும் இல்லை. தற்சமயம் அவரவர் இடங்களில் அவரவர் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது ரிஷபத்தின் இடத்தைக் கைப்பற்ற எருது முயல்கிறது. இந்த நேரத்தில் ரிஷபத்துக்கும் எருதுக்கும் இடையில் மீன் நுழையாமல் வேடிக்கை பார்த்தால் நன்றாக இருக்குமே என புலி நினைக்கிறது. ரிஷபமோ எருதோ... இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அதை வைத்து தன் அடுத்த கட்ட நகர்வை மீன் திட்டமிட்டால் அதற்கு சேதாரம் ஏற்படாதே என்று யோசிக்கிறது...’’
‘‘வளர்ப்புப் பிராணியாக இருந்தாலும் தந்திரமாகத்தான் புலி இருக்கிறது!’’ ‘‘தம் கோடுகளை அவை மறைப்பதில்லை என சில கணங்களுக்கு முன் தாங்கள்தானே மன்னா குறிப்பிட்டீர்கள்!’’ ‘‘நிறைய குறிப்பிட்டேன். இது மட்டும்தான் உன் நினைவில் தங்கியிருக்கிறதா..?’’
‘‘சொல்லப்படும் செய்திகளில் தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்வதுதானே உயிரினத்தின் இயல்பு!’’ ‘‘அந்த இயல்புப்படிதான் புலி நடந்து கொள்கிறதா..?’’
‘‘வளர்ப்புப் பிராணி அப்படித்தான் நடந்து கொள்கிறது மன்னா!’’ ‘‘இதன் அடிப்படையில்தான் கோரிக்கை வைக்கப்பட்டதா..?’’ ‘‘ஆம் மன்னா!’’
‘‘இதை சொல்லத்தான் புலி... உன் மொழியில் வளர்ப்புப் பிராணி... இங்கு வந்திருக்கிறதா..?’’ ‘‘அதற்காகவும்தான் மன்னா..!’’ ‘‘எனில் இன்னொரு காரணமும் இருக்கிறது...’’ ‘‘அது மீனுக்கே தெரியும் மன்னா...’’
‘‘கேள்வி, மீனுக்குத் தெரியுமா தெரியாதா என்பதல்ல... இன்னொரு காரணத்தைச் சொல்ல தன் வளர்ப்புப் பிராணிக்கு ரிஷபம் உத்தரவிட்டுள்ளதா இல்லையா என்பதுதான்!’’ ‘‘இதற்கு உத்தரவிட வேண்டுமென்று அவசியமில்லை மன்னா...கடலின் நீள அகலங்களும், ஆழங்களும் எருதை விட, ரிஷபத்தை விட, புலியை விட மீனுக்கு நன்றாகத் தெரியும் என்பது...’’
‘‘...ரிஷபத்துக்கும் வளர்ப்புப் பிராணியான புலிக்கும் நன்றாகவே தெரியும்! அப்படித்தானே..?’’ ‘‘அப்படியேதான் மன்னா...’’ ‘‘இப்படி சொல்லச் சொன்னது...’’ ‘‘...ரிஷபமல்ல மன்னா...’’ ‘‘வளர்ப்புப் பிராணியே சுயமாகச் சொல்கிறதா..?’’
‘‘ஆம் மன்னா! இப்படி சுயத்துடன் புலியை வாழ ரிஷபம் அனுமதித்திருப்பதால்தான்... ரிஷபம், புலியின் அன்னையாக மாறியிருக்கிறது... ரிஷபத்தைக் காக்க புலி முன்னால் நிற்கிறது..!’’‘‘மீனிடம் தைரியமாக நின்று இதை சொல்கிறது! ஆனால், தொடக்கத்தில் கேட்ட இரு கேள்விகளுக்கு மட்டும்் விடை அளிக்காமல் பேச்சை மாற்றுகிறது...’’ தாயத்தை உருட்டினார் அரிகேசரி மாறவர்மர்.
‘‘மன்னா...’’ ‘‘சரி... மூன்றாவது கேள்விக்காவது பதிலைச் சொல்...என் முன் இங்கு அமர்ந்திருப்பது ரிஷபத்தின் உண்மையான வளர்ப்புப் பிராணியா அல்லது எருதின் வளர்ப்புப் பிராணியா..?’’‘‘மன்னா...’’‘‘சொல்! நீ உண்மையான கரிகாலனா அல்லது கரிகாலன் வேடத்தில் வந்திருக்கும் போலியா?!’’
(தொடரும்)
கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்
|