வியக்கிறது உலகம்... நெகிழ்கிறார்கள் மக்கள்.. ஒன்றிணைவோம் வா!



நெருக்கடியான காலம்...கையறு நிலையில் அதிமுக...களத்தில் இறங்கிய திமுக...
இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சியும் முன்னெடுக்காத மகத்தான திட்டம்...


கொரோனா தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவித்தபோதே ஏழை, எளிய, நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. ஆரம்பத்தில் சில நாட்கள் தாக்குப்பிடித்தவர்கள்கூட போகப் போக சாப்பாட்டுக்கே திண்டாட வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். இதில் முதியவர்கள், ஆதரவற்றவர்கள், மாற்றுத் திறனாளிகளின் நிலையை சொல்லத் தேவையில்லை. மருந்து மாத்திரைகள் வாங்க முடியாமல் பலர் சிரமப்பட்டனர்.   

இதையறிந்துதான், பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளைக் களைய அவர்களுக்கு உதவும் வகையில் ஒரு திட்டத்தை முன்னெடுப்பதென முடிவெடுத்தார் திமுக தலைவரான மு.க.ஸ்டாலின். அப்படியாக கடந்த ஏப்ரல் 20ம் தேதி உருவானது, ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டம்.‘‘இதன் நோக்கமே, இக்கட்டான சூழ்நிலையில் ஒற்றுமையுடன் இணைந்து உதவி தேவைப்படுவோருக்கு உதவுவது. இதற்காக ஐந்துவிதமான முன்னெடுப்பு களின் மூலம் உதவிகள் வழங்க எங்கள் தலைமை முடிவெடுத்தது.

உடனடியாக, ondrinaivomvaa.in என வெப்சைட்டை தொடங்கி, முதலாவதாக பொது மக்களுக்கான ‘90730 90730’ என்ற உதவி எண்ணை உருவாக்கியது. அதாவது, உதவி தேவைப்படும் மக்கள் இந்த எண்ணில் அழைக்கலாம். இந்தத் தொலைபேசி சேவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அலுவலகத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டது.  

இரண்டாவதாக, ‘நல்லோர் கூடம்’ என்ற செயல்பாடு. அதாவது, உதவ விரும்பும் தன்னார்வலர்களை உதவி தேவைப்படுவோருடன் இணைப்பது. இதில் பதிவு செய்து கொண்டதும் உங்கள் அருகில் உதவி தேவைப்படுவோரின் பட்டியல் வரும். அவர்களிடம் போனில் தொடர்பு கொண்டு உதவிகள் வழங்க வேண்டியதுதான். இதில், திமுக ஒரு பாலமாக இருந்து உதவிகளைப் பெற்றுத் தரும்.

மூன்றாவதாக, ஏழை, எளியோருக்கு உணவளித்தல். உள்ளூர் தலைவர் மற்றும் உணவு வழங்கும் பங்குதாரர்களின் உதவியுடன் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் உணவுகள் வழங்கப்பட்டு, இல்லாதவர்களுக்கு உணவளிக்கப்படுகிறது.

நான்காவதாக, வர்ச்சுவல் வட்டாரக் குழுக்கள். அதாவது, கட்சிப் பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு அருகிலுள்ள கஷ்டப்படும் பத்து குடும்பங்களுக்கு நம்பிக்கையளித்து உதவ வேண்டும். ஐந்தாவதாக, தலைவர் ஸ்டாலினுடன் இணைவது...’’ என்கிறார்கள் இத்திட்டத்துடன் இணைந்த திமுகவினர். இப்போது 27 நாட்களாக இந்தத் திட்டம் விறுவிறுப்பாகச் செயல்பட்டு வருகிறது.

இதன்வழியே சுமார் 17 லட்சத்து 22 ஆயிரம் கோரிக்கைகளை பொதுமக்களிடமிருந்து பெற்று உதவியிருக்கிறார்கள் திமுகவினர். மட்டுமல்ல. 27 லட்சத்து 20 ஆயிரம் உணவுப் பொட்டலங்களையும் வழங்கியிருக்கிறார்கள். இதில், எந்த கட்சிப் பாகுபாடும் பார்க்கவில்லை என்பதுதான் ஹைலைட்!  
‘‘இந்தத் தொலைபேசித் திட்டம் தொடங்கியதற்குப் பிறகு இந்த எண்ல நூறு இணை இணைப்புகள் உருவாக்கப்பட்டுச்சு. இதுக்காக இருநூறு பேர் வேலை செய்யறாங்க. இவங்க, வரக்கூடிய அழைப்புகளை மாவட்ட வாரியா பிரிப்பாங்க.

மாவட்டச் செயலாளர்களான நாங்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரெண்டு பேரை ஒருங்கிணைப்பாளர்களா கொடுத்திருக்கோம். வந்த அழைப்புகள் பத்தின விவரங்களை அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு தலைமை அலுவலகம் அனுப்புவாங்க. அவங்க அதைப் பிரிச்சு அந்தந்தப் பகுதியில இருக்குற திமுக நிர்வாகிகளுக்கு அனுப்பி உதவி செய்யச் சொல்வாங்க. இதுதான் திட்டம்.

உதாரணத்துக்கு, இங்க தென்சென்னைல 72 வட்டங்கள் இருக்கு. இதுல 72 வட்டச் செயலாளர்கள், 11 பகுதிச் செயலாளர்கள், ரெண்டு தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், எட்டு பொதுக்குழு உறுப்பினர்கள், ஆறு மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட வாரியான அமைப்பாளர்கள் 18 பேர்னு எல்லாத்தையும் சேர்த்து ஒரு வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தினாங்க.

தகவல்கள் எங்ககிட்ட வந்ததும் சம்பந்தப்பட்ட வட்டச் செயலாளருக்கு ‘இந்த இடத்துல உதவி கேட்டிருக்காங்க’னு அனுப்பிடுவோம். அவர் தகவல் வந்த ஒரு மணி நேரத்துக்குள்ளயே அவங்களுக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வாங்கிக் கொடுத்திடுவார். அதை அப்படியே போட்டோ எடுத்து தகவலும் சொல்லிடுவார்.

இந்தப் போட்டோவை அந்த வாட்ஸ்அப் குரூப்ல போட்டுடுவாங்க. அது தலைமைக்கும் போயிடும். இதேபோலதான் மற்ற மாவட்டங்கள்லயும் செய்றாங்க. எங்க தகவல் தொழில்நுட்பக் குழு ஒவ்வொரு நாளும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப்னு போடுறதால பொருட்கள் வாங்கிக் கொடுத்தவங்களுக்கு மரியாதை கிடைக்குது. அதனால, இப்ப எல்லோரும் போட்டி போட்டுக்கிட்டு உதவி செய்றாங்க.

தவிர, அரசால் மட்டுமே நிறைவேற்ற முடிகிற கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர்கள்கிட்ட கொடுக்கச் சொல்லி யிருக்கார் தலைவர். சென்னையில மட்டும் 40 ஆயிரம் இ-பெட்டிசன்களை மாவட்ட ஆட்சியர்கிட்ட கொடுத்திருக்கோம்...’’ என்கிறார் தென்சென்னை மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை எம்எல்ஏவுமான மா.சுப்ரமணியன்.

‘‘தலைவர் ஸ்டாலின் இந்தத் திட்டத்தை ஆரம்பிச்சதுடன் மட்டும் நிறுத்திக்கல. மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள்னு எல்லார்கிட்டயும் தனித்தனியாக ஜூம் ஆஃப்ல மீட்டிங்கும் நடத்தினார்.
இப்படி ஜூம் ஆஃப் வழியா அரசியல் கட்சி மீட்டிங் போட்டது முதன்முதல்ல திமுகதான். இந்த மாதிரியான கூட்டம் தினமும் நடந்திட்டு இருக்கு. இப்படியே போயிட்டு இருக்கும் போது பயனாளிகள் கிட்டயும் தலைவர் நேரடியா பேச ஆரம்பிச்சார்.

ஒரு நாள் ராத்திரி சைதாப்பேட்டையில ஒரு அம்மாவுக்குப் போன் பண்ணி ‘உதவி கேட்டீங்களே… கிடைச்சுதா’னு கேட்டிருக்கார். அவங்க, ‘ரொம்ப மகிழ்ச்சிங்க. அரிசி, காய்கறி எல்லாம் கொடுத்தாங்க. நான் ஒரு இதயநோயாளி. எனக்கு மாத்திரைகள் வேணும்’னு அடுத்த கோரிக்கையை வைச்சிருக்காங்க.

உடனே எனக்கு பத்து மணிக்கு தலைவர்கிட்ட இருந்து அழைப்பு. நான் ஓர் ஆளை அனுப்பி மாத்திரைகள் வாங்கிக் கொடுத்தேன். அந்த அம்மா திருப்பி தலைவருக்கு  போன் பண்ணி நன்றி சொல்லியிருக்காங்க. உடனே, தலைவர் 11 மணிக்கு மறுபடியும் என் லைன்ல வந்து, ‘அந்த அம்மா நன்றி சொன்னாங்க’னு சொன்னார்...’’ என்கிறார் மா.சுப்ரமணியன் நெகிழ்வாக! இத்திட்டம் பற்றி சில மாவட்டச் செயலாளர்கள், அமைப்பாளர்களிடம் பேசினோம்.

சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த மகளிரணி மாவட்ட அமைப்பாளர் ரத்னா லோகேஷ், ‘‘இதுவரை பத்து அழைப்புகளுக்கு தேவையானதை செய்து கொடுத்திருக்கேன். நான் பார்த்தவரை மக்கள் கொரோனா பத்தியோ, தங்களோட உடல்நிலை பத்தியோ எந்தக் கவலையும் படல. தினமும் ஒருவேளையாவது சாப்பாடு கிடைச்சா போதும்னுதான் நினைக்கிறாங்க. அந்தளவுக்கு இந்த ஊரடங்குல சிரமப்பட்டுட்டு இருக்குற நிறைய பேரைச் சந்திச்சேன்.

எங்க வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளி ஒரு சலவைத் ெதாழிலாளி குடும்பம் இருக்கு. சாப்பாட்டுக் கஷ்டத்த வெளியில சொல்ல கூச்சப்பட்டுட்டு ‘ஒன்றிணைவோம் வா’ல அழைச்சாங்க. எனக்கு அந்த அழைப்பு பத்தின தகவல் வந்துச்சு. போய் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் அதிர்ச்சியாகிட்டாங்க. ‘நீங்க எப்படி’னு கேட்டாங்க.

‘தலைமையில இருந்து சொன்னாங்க’னு சொன்னேன். கண்ணீர்விட்டு அழுதுட்டாங்க. அவங்களுக்குத் தேவையான அரிசி, மளிகை, காய்கறிகள்னு எல்லாத்தையும் வாங்கிக் ெகாடுத்திட்டு, தேவைன்னா கூப்பிடுங்கனு சொன்னேன். இதுமாதிரி நிறைய சம்பவங்களை தினமும் நாங்க சந்திக்கறோம். உண்மையில, இந்த இக்கட்டான நேரத்துல இத்திட்டம் ஒரு வரப்பிரசாதம்னுதான் சொல்வேன்...’’ என்கிறார் ரத்னா லோகேஷ்.  

கோவை சிங்காநல்லூர் எம்எல்ஏவான கார்த்திக், ‘‘நான் ஒரு சட்டமன்ற உறுப்பினரா நிறைய உதவிகளை செய்திட்டு வர்றேன். இருந்தும், அந்தத் தாக்கத்தைவிட தலைவரின் அலுவலகத்துக்குப் போன் பண்ணி அங்கிருந்து எங்களுக்குக் கோரிக்கைகள் வந்து, நாங்க உதவி செய்யும்போது அதன் மதிப்பு அதிகமாயிடுது.

உண்மையில் கஷ்டப்படுறவங்களும், முடியாதவங்களும் தேவைனு கேட்கும் போது அவங்களுக்குப் போய் கொடுக்குறது தனி மகிழ்ச்சி தான். அதுதான் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் சிறப்பே! ஆரம்பத்துல நாம் நல்லா செய்றோம்னு ஆளுங்கட்சிக்காரங்க தலைமைக்குச் சொல்லியிருக்காங்க. இதனால அமைச்சர் வேலுமணி, முதல்வர் எடப்பாடி கிட்ட சொல்லி செய்தித் துறை மூலம் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்துக்கு தடைவிதிச்சார். பிறகு, தலைவர் நீதிமன்றத்தை அணுகி அதுக்கு தடையுத்தரவு பெற்றார்.

அந்த வழக்குல, மாவட்ட ஆட்சியர்கிட்ட கடிதம் கொடுத்திட்டு பண்ணச் சொன்னாங்க. நாங்களும் கொடுத்தோம். ஆனா, அரசு சார்புல நியமிக்கப்பட்ட வட்டாட்சியர்கள், ‘என்கிட்டதான் தரணும். நாங்க பார்த்துப்போம்’ன்னாங்க. சில கட்டுப்பாடுகள் போட்டாங்க. அப்புறம் நாங்க மாவட்ட ஆட்சியர்கிட்ட எடுத்திட்டு போனோம்.  

அதேபோல உணவு கொடுக்குறதுலயும் தன்னார்வலர்கிட்ட கொடுக்கக் கூடாது. எங்ககிட்ட கொடுக்கணும்னு கண்டிப்பு காட்டினாங்க.
இந்தமாதிரி சில தடங்கல்களைத் தாண்டித்தான் இந்தத் திட்டத்தை திமுக உணர்வுபூர்வமா செய்திட்டு இருக்கு. சாதாரண அடிமட்டத் தொண்டன் கூட தன்னால் முடிஞ்ச அளவு வேலைகள செய்திட்டு இருக்கான். ஒரு வார்டுக்கு 50 பேர்ல இருந்து மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் இதுல ஈடுபட்டிருக்காங்க. இது ஒரு பெரிய நெட்வொர்க்.  

எங்க கோவை தெற்கு மாவட்டத்துக்கு 1500 கால் வந்திருக்குனு வைங்க. அதை நாங்க 30 பேர்கிட்ட ஐம்பது ஐம்பதா பிரிச்சுக் கொடுத்திடுவோம். அவங்க அந்த ஐம்பது பேர்கிட்ட போன்ல பேசி ‘நீங்க பொருள் கேட்டு இருந்தீங்கல்ல… எங்க குடியிருக்கீங்க’னு கேட்பாங்க. எல்லாத்தையும் உறுதிப்படுத்திட்டு அதை அங்குள்ள பகுதிச் செயலாளருக்கு அனுப்பிடுவோம். அவர் அந்தப் பகுதியில உதவி கேட்டவர் இருக்கிறதையும், பொருள் வேண்டினதையும் உறுதிப்படுத்திட்டு சொல்வார். பிறகு, அவர் கேட்ட பொருளை வாங்கிக் கொடுக்கச் சொல்லிடுவோம்.

இப்படி 1500 பேருக்கு போன் பண்றது சாதாரணமல்ல. ரொம்ப பெரிய விஷயம். அதுவும் ரெண்டு மூணு தடவை போன் செய்வாங்க. 24 மணிநேரத்துல அவங்களுக்கான பொருளைக் கொண்டு சேர்க்கறோம். சிலர் மருந்து வாங்க பணம் கொடுங்க, நாங்களே வாங்கிக்கிறோம்னு சொன்னப்ப கூட பணமா கொடுத்திட்டு வந்திருக்கோம்.

தவிர, தன்னார்வலர்கள் மதியம், இரவுனு சாப்பாடு கொண்டு போய் கொடுக்கிறாங்க. உணவை நேரடியா சமைச்சும், கேட்டரிங்ல இருந்து வாங்கியும் கொடுத்திட்டு வர்றோம். எங்க பகுதியில ஒரு நாளைக்கு சுமார் 3 ஆயிரம் பேர் வரை ‘ஒன்றிணைவோம் வா’ மூலம் உணவு சாப்பிட்டுட்டு இருக்காங்க. இதனால, இந்தத் திட்டத்திற்கு மக்கள்கிட்ட நிறைய ரெஸ்பான்ஸ்.

அரசாங்கமே தராதபோது திமுக தருதுனு மக்கள் மகிழ்ச்சியோடு ஏத்துக்கிடுறாங்க. இது தமிழக வரலாற்றுல யாரும் செய்யாத ஒரு செயல்திட்டம்...’’ என்கிறார் கார்த்திக். அரியலூர் மாவட்டச் செயலாளரான எஸ்.எஸ்.சிவசங்கர், ‘‘இதுவரை 2 ஆயிரத்து 500 அழைப்புகளுக்கு உதவியிருக்கோம். இதுல ஓர் அழைப்புல நாலஞ்சு பேர் பயன்பெறுவாங்க.

அப்படிப் பார்த்தா பத்தாயிரம் பேருக்கு மேல் இந்தத் திட்டத்தால பயன்பெற்று இருக்காங்க. நிறைய பேர் அரிசி, மளிகைதான் கேட்கறாங்க. சிலர்தான் மருந்து வேணும்னு சொல்றாங்க. இன்னைக்குக் கூட ஒரு பெண் ‘ஒன்றிணைவோம் வா’ நம்பருக்குப் பேசியிருக்காங்க. அவங்க கணவர் இதய அறுவை சிகிச்சை செய்தவராம். மருந்து மாத்திரைகள் வாங்க முடியலனு சொன்னாங்க. எங்களுக்கு தகவல்கள் வந்ததும் உடனே போய் கொடுத்தோம்.

அதிமுக, பாமக கட்சிக்காரங்க உண்மையானு சோதிக்க அழைப்பாங்க. நாங்க எந்தக் கட்சிப் பாகுபாடும் பார்க்கல. கஷ்டப்படுகிற எல்லா கட்சிக்காரர்களுக்கும் பாகுபாடு இல்லாம உதவறோம். ‘உண்மையில செய்றீங்களா... இல்லை உங்க கட்சிக்காரர்களுக்கு மட்டும் உதவறீங்களானு பார்க்கதான் போன் செஞ்சோம்’னு மாற்றுக் கட்சிக்காரங்க ரெண்டு பேர் என்கிட்ட சொல்லி மன்னிப்பு கேட்டாங்க.

எங்க தலைவர் முன்னெடுத்திருக்கும் இந்தத் திட்டம் எல்லா இடத்திலும் நல்லா ரீச் ஆகியிருக்கு. இதுதவிர, கட்சி சார்பா தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள், வயதான ஆதரவற்றவர்கள்னு நிறைய உதவிகள் பண்ணிட்டு இருக்கோம்...’’ என்கிறார் எஸ்.எஸ்.சிவசங்கர்.

திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளரான அப்துல் வஹாப், ‘‘கடைகள் திறக்கல. கையில தொழிலும் இல்லனு அன்றாட கூலித் தொழிலாளிகள் ரொம்ப உடைஞ்சிட்டாங்க. இந்த இக்கட்டான சூழல்ல அவங்களுக்கு இத்திட்டம் ஒருபெரிய ஆறுதலை தந்திருக்கு. இந்த லாக்டவுன் ஆரம்பிச்சப்ப நாங்க சும்மாவே உட்கார்ந்திட்டு இருந்தோம். இப்ப நிற்கக்கூட நேரமில்லாம வேலை பார்த்திட்டே இருக்கோம்.

ஒரு வீட்டுல அப்பா, பையன், பொண்ணுனு மூணு பேருமே உதவி கேட்டு போன் பண்ணியிருக்காங்க. போய் பார்த்துப் பொருட்கள வாங்கிக் கொடுத்திட்டு வந்தோம். திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகள்ல இருந்து 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட அழைப்புகள் வந்துச்சு. எல்லாத்தையும் சிறப்பா செய்திருக்கோம்.

இதுபோக கட்சிக்காரங்க வார்டு வார்டா நிறைய உதவிகள் செய்திட்டு வர்றாங்க. தலைவரும் தினமும் போன் செய்து எங்கள ஊக்கப்படுத்திட்டு இருக்கார்...’’ உற்சாகத்துடன் சொல்கிறார் அப்துல் வஹாப்.

 மதுரை கிழக்குத் தொகுதி எம்எல்ஏவான மூர்த்தி, ‘‘இந்த ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்துல 15 ஆயிரம் அழைப்புகளுக்கு செய்திருக்கோம். 5 கிலோ அரிசி, பருப்பு, காய்கறிகள் கொடுக்குறப்ப மக்கள் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல. உணவுகள்தான் தினமும் எல்லா இடத்துலயும் கொடுத்திட்டு வர்றோம்.

தவிர, என் சொந்த நிதியில இருந்து 90 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா5 கிலோ அரிசி கொடுத்திருக்கேன். அப்புறம், சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு லட்சத்து 15 ஆயிரம் குடும்பங்களுக்கு கட்சிப் பாகுபாடின்றி கபசுர குடிநீர் கொடுத்திருக்கோம். இப்ப காய்கறிகள் கொடுத்துட்டு இருக்கோம்’’ என்கிறார்.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு நெருக்கடியான காலத்தில் மக்கள் சேவையை எந்த அரசியல் கட்சியும் முன்னெடுக்கவில்லை.
இதை பெருமையுடன் குறிப்பிடும் திமுக தலைவர் ஸ்டாலின், கொரோனா கால களப்பணிகள் தொய்வின்றி தொடரும் என்றும் அறிவித்திருக்கிறார்!
ஒன்றிணைவோம் வா!

பேராச்சி கண்ணன்