அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சூறையாட அரசு முயற்சிக்கிறது!



புலம்பெயர் தொழிலாளர்களின் கதையை முடித்த கையோடு அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சூறையாட அரசு முயற்சிக்கிறது!

ஜூன் மாதம் பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்தக் கூடாது!
அழுத்தமாகச் சொல்கிறார் கல்வியாளர் ச.மாடசாமி


சுமார் 186 நாடுகளைச் சேர்ந்த 130 கோடி குழந்தைகள் லாக்டவுனில் வீட்டுக்குள் அடைந்துள்ளனர். அப்போதும் சில நாடுகளில் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
ஆன்லைனில் நடந்த வகுப்புகள், மாணவர்களுக்கும் - பெற்றோர்களுக்கும் ஒருவிதமான ஏமாற்றத்தைத்தான் கொடுத்துள்ளன. வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடப்பது குழந்தைகளுக்கும் சலிப்பான அனுபவத்தைத்தான் தந்துள்ளன.

குறிப்பாக தங்களது நண்பர்களைப் பார்க்க முடியவில்லை என்று நிறைய குழந்தைகள் கருத்து தெரிவித்துள்ளனர். தவிர, மேற்குலகம் முன்வைக்கும் ஹோம் ஸ்கூலிங் என்ற திட்டம் கூட லாக்டவுன் நாட்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.பள்ளிகளைத் திறக்க ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தற்காலிகமாக சில முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இங்கிலாந்தில் தொற்று பரவல் குறையும் போது பள்ளிகளைத் திறப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நார்வே, டென்மார்க்கில் ஜூனியர் பள்ளிகளைத் திறந்துவிட்டார்கள். அங்கு பெற்றோர்களும் வேலைக்குத் திரும்பிவிட்டார்கள். இஸ்ரேலும் பள்ளிகளைத திறக்க முனைப்புடன் இருக்கிறது. அங்கு பள்ளிகள் மூடியே கிடப்பதால், ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் ஒரு பில்லியன் டாலர் செலவு பிடிக்கிறது என்று ‘த பேங்க் ஆஃப் இஸ்ரேல்’ மதிப்பிட்டுள்ளது.

கொரோனா போன்ற தொற்றுநோய் காலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த முடிவெடுப்பது சற்று சிரமமான காரியம். இன்னொரு பக்கம் பள்ளிகள் திறப்பதற்கு பல நாடுகளிலும் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜெர்மனியைச் சேர்ந்த 15 வயது மாணவன், “நாங்கள் தான் எதிர்காலத்தில் ஓட்டுபோடப் போகிறோம். எங்களின் உடல் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாதவர்களை ஒருபோதும் நாங்கள் மறக்கமாட்டோம்...” என்று அறிவித்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மற்றொருபக்கம் குழந்தைகள் வைரஸை பரப்ப மாட்டார்கள், லாக்டவுனுக்குப் பிறகு திறக்கப்பட்ட அலுவலகங்களை விட பள்ளிகள் பாதுகாப்பானது, குழந்தைகளை அவ்வளவு சீக்கிரத்தில் இந்த வைரஸ் தாக்காது, அப்படியே தாக்கினாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம், குழந்தைகளின் உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும் என்று ஆய்வுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் அரசு எப்போது பாதுகாப்பு என்று உணர்கிறதோ அப்போதுதான் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“கொரோனா வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது: பொருளாதாரத்தைப் புரட்டிப் போட்டிருக்கிறது: ஏராளமான உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது: சக மனிதனையே எட்டத்தில் நிறுத்துகிறது. கல்வி மட்டும் நின்ற இடத்தில் அப்படியே நிற்குமா..? நிற்கும் என நினைப்பவர்கள் அப்பாவிகள் அல்ல; ஒரு திட்டத்தை மனதில் வைத்து எளிய வீட்டுக் குழந்தைகளைப் பலிவாங்க நினைப்பவர்கள். சற்றும் இரக்கமற்றவர்கள்...’’ என்று காட்டமாக பேசத் தொடங்கினார் கல்வியாளர் ச.மாடசாமி.

‘‘கொரோனா ஏழைக் குழந்தைகளின் வாழ்வைச் சூறையாடியிருக்கிறது. கால் வயிறும் அரை வயிறுமாக அவர்கள் இந்தக் காலத்தைக் கழித்திருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர் வேலையிழந்து நிற்கிறார்கள். வெளியூர் போன பிள்ளைகளில் பலர் இன்னும் வீடு திரும்பவில்லை. இவர்கள் அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள்.

மத்திய வர்க்கக் குழந்தைகளின் தனிமை அல்ல - ஏழைக் குழந்தைகளின் கண்ணீரும் கதறலுமே இன்று கல்விப் பாதையைத் தீர்மானிக்க வேண்டிய காரணிகள். வசதி படைத்த மேற்கத்திய நாடுகளே மூன்று விசயங்களில் தீர்மானமாக இருக்கின்றன.

ஒன்று, இந்த வருடம் கட்டாயம் கல்வியாண்டின் அளவு குறையும். எட்டு மாதத்துக்கு மேல் இருக்க வாய்ப்பில்லை. இரண்டு, பாடத்திட்டத்தின் அளவும் குறையும். மூன்று,  தேர்வின் கனம் மிக மிகக் குறையும். முடிந்தால் புத்தகத்தைப் பார்த்து எழுதும் தேர்வுகளை ஊக்கப்
படுத்தலாம்.

இவை கொரோனா உருவாக்கி இருக்கும் சிந்தனைகள். இச் சிந்தனைகளின் அடிப்படை - குழந்தைகளின் உயிர் முக்கியம் என்பது. உயர் படிப்பு, வேலை போன்றவற்றில் தேவையான மாற்றங்களை எப்போதும் செய்யமுடியும்; செய்திருக்கிறோம். 1970களின் இறுதியில் கல்லூரியில் இருந்த பியூசியை ஒழித்து பள்ளியில் பிளஸ் டூ கொண்டு வந்தது அப்படியொரு மாற்றம்தான். உயிரைப் பறிகொடுத்து விட்டால் எந்த அரசாலும் காப்பாற்றித் தரமுடியாது...” என்ற மாடசாமி, ஜூன் மாதம் தமிழக அரசு பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்துவதும் சரியல்ல என்கிறார்.

“கொரோனாவின் வேகமும் வேதனையும் கூடிவரும் நேரத்தில், அவசர அவசரமாகத் தமிழக அரசு பத்தாம் வகுப்புத் தேர்வை அறிவிப்பது எதற்காக? மே 31 வரை ஊரடங்காம். ஜூன் மாதம் தேர்வாம்!எந்த மாநில அரசும் இது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. மேற்கத்திய நாடுகள் பல செப்டம்பருக்குப் பிறகுதான் பள்ளி திறப்பது குறித்தே யோசிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றன.

இப்போது தேர்வு எழுத பிள்ளைகளை அழைத்தால் அவர்கள் உயிருக்கு ஆபத்து என்று இங்குள்ள ஆசிரியர்களும், கல்வியாளர்களும், சமூக சிந்தனையாளர்களும் எச்சரித்தபடி இருக்கிறார்கள். இந்த எச்சரிக்கை வெற்றுக் கூச்சலா?பணக்காரப் பள்ளிகளைத் திருப்திப்படுத்த, அப்பள்ளிகளின் கல்வி வியாபாரத்துக்குத் துணைபோக, அரசு எடுத்த முடிவு இது என்று ஊரெல்லாம் பேசுகிறதே! இந்த அவதூறு தமிழக அரசுக்குத் தேவையா?

கடந்த 2 மாதங்களாக இத்தேசத்தில் கைதட்டல், விளக்கேற்றல், மலர் தூவல் என்று நாடகங்கள் பல நடந்தன. அதே நேரம், புலம்பெயர் தொழிலாளிகள் நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தனர்; வழியில் பசியால் செத்தார்கள்; களைப்பால் இறந்தார்கள்; விபத்தால் மரணமடைந்தார்கள். இரண்டு மாதம் கழித்து இப்போது ஐயோ! பாவம்! என்கிறது தேசம்.

அடுத்த குறி அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைப் பிள்ளைகளா? அரசாங்கங்கள் வெளிப்படுத்தும் போலி இரக்கத்திற்காக அருமைப் பிள்ளைகளைப் பறிகொடுப்பதா?எப்போது பள்ளி திறந்தாலும் முதல் பத்து நாட்கள் பகிரும் வகுப்பறை (Sharing Classroom) வேண்டும். கொரோனா அனுபவங்களை எல்லாம் பிள்ளைகள் ஆசிரியரிடம் கொட்ட வேண்டும். உளவியல் ரீதியாக இது முக்கியம்.

அடுத்த இருபது நாட்கள் பாடத்தில் உள்ள சந்தேகங்களைக் களையும் வகுப்பறை வேண்டும். ஆசிரியர் - மாணவரின் இந்த ஒரு மாத சந்திப்புக்குப் பிறகு, உங்கள் தாகம் தீர தேர்வுகளை நடத்துங்கள். வினாத் தாள்கள் மிக மிக எளிமையாக இருக்கவேண்டியது அவசியம்...” என்றவரிடம், இப்போது ஆன்லைன் கல்வி பற்றி பேச்சு எழுந்திருக்கிறதே... இது எல்லா தரப்பினருக்கும் பொருந்துமா... என்ற கேள்வியை முன்வைத்தோம்.

“இணையவழிக் கல்வியை நாம் பொத்தாம் பொதுவாக எதிர்க்கவில்லை. அதன் தேவையை உணர்ந்தே இருக்கிறோம். ஏழைப் பிள்ளைகள் கல்வி கற்கவும் அந்த வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், இந்த நேரத்தில் இணையக் கல்வி பாரபட்சத்தின் வடிவமாக மாறியிருக்கிறது.

ஏழைக் குழந்தைகள் ரொட்டிக்காகப் பசியோடு காத்திருக்கையில், மெட்ரிகுலேஷன் பள்ளிப் பிள்ளைகளுக்கு Zoom மூலம் பாடங்கள் நடைபெறுகின்றன.
இரண்டு பேரும் ஒரே நேரம் ஒரே பரீட்சை எழுத வேண்டும். இது நவீன வர்ணாசிரமம். நவீன வன்முறை. அதனால்தான் இத் தருணத்தில் - குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டும் கிடைக்கும் இணையக் கல்வியை எதிர்க்கிறோம்...” அழுத்தம்திருத்தமாக சொல்கிறார் ச.மாடசாமி.l

அன்னம் அரசு