நான்... ஓவியர் ஸ்யாம்



அரிசியில் ‘ஆ’னா போடுவதற்கு பதிலாக வீணையை வரைந்தவன் நான். அந்த வயசிலேயே ஓவிய ஆர்வம் வந்துடுச்சு.  ராஜபாளையம்தான் பிறப்பு. வசதியான பண்ணைக் குடும்பம். அப்பா ஸ்ரீரங்க ராஜா, அம்மா சத்தியபாமா. அப்போதெல்லாம் சரஸ்வதி பூஜைன்னா படிப்பு நல்லா வரணும்னு அரிசியிலே அ... ஆ,.. எழுதச் சொல்லுவாங்க. நான் சரஸ்வதி கையிலிருந்த வீணையைப் பார்த்து அப்படியே வரைஞ்சேன். ‘இவன் வீணையே வரைகிறான், படிப்பு ஏகபோகமாக வரப் போகுது’னு ஆளாளுக்கு சந்தோஷப்பட்டாங்க.

ஆனா, எனக்கு சுத்தமா ஸ்கூலுக்கு போகவோ படிக்கவோ பிடிக்கவேயில்ல. வீட்டு வற்புறுத்தலுக்காக ஸ்கூலுக்கு போனேன். அங்கயும் ‘ஏ செக்‌ஷன் மிஸ்தான் அழகா இருக்காங்க.அந்த வகுப்புல என்னை சேர்த்தாதான் படிப்பேன்’னு எங்க பாட்டிகிட்ட சொன்னேன். எங்க பாட்டி எனக்கு அவ்வளவு சப்போர்ட் பண்ணுவாங்க. அதனால என்னைக் கூட்டிட்டு ஸ்கூலுக்கு வந்து, ‘யார் அந்த அம்பிகா மிஸ்..? அவங்க வகுப்புலயே என்  பேரனை சேர்த்துடுங்க’னு சொன்னாங்க.

இப்படி அம்பிகா மிஸ் வகுப்புல சேர்ந்து ராஜபாளையம், சக்கனியம்மா பள்ளில என் ஸ்கூல் வாழ்க்கை ஆரம்பமாச்சு. அம்பிகா மிஸ்ஸுக்கு செல்லப்பிள்ளையா மாறினேன். படிக்கறேனோ இல்லையோ அந்த மிஸ்ஸோட நடை உடை பாவனைகளை கவனிச்சு வீட்டுக்கு வந்து சுவத்துல அப்படியே வரைவேன்.

நான் படம் வரையறது எங்க வீட்ல யாருக்கும் பிடிக்கலை. ஆனா, என் கொள்ளுத் தாத்தா எனக்காகவே ஒரு பெரிய அறையை காலி பண்ணி கொடுத்து ‘இங்க இருக்கற சுவர்ல வரை’னு சொன்னார்! போதாதா... நான் வளர வளர என் ஓவியத்திறமையும் சேர்ந்து வளர ஆரம்பிச்சது. வீட்லயும் எதிர்ப்புகள் அதிகமாச்சு. ஓவியத்தால என் படிப்பு வீணாகறதா வீட்ல நினைச்சாங்க.

என்னை யாரெல்லாம் திட்டறாங்களோ, அவங்களைப் பழிவாங்க... அதாவது என் கோபத்தையும், சோகத்தையும் வெளிப்படுத்த... ஓவியத்தை பயன்படுத்திக்கிட்டேன்.வீட்ல பார்த்தாங்க... இப்படியே விட்டா இவன் சரிப்பட மாட்டான்னு ஆறு வயசுல என்னை குருகுலக் கல்வில சேர்த்து விட்டாங்க. அங்க ரொம்ப வித்தி யாசமான கல்விமுறையா இருந்துச்சு.

காலைல சீக்கிரம் எழுந்திருக்கணும், தியானம், குருபூஜை... இப்படி நிறைய விஷயங்களை அங்க கத்துகிட்டேன். ஒரு கோடு போட்டு அந்தக் கோட்டுக்குள்ளதான் தூங்கணும். உப்பில்லாத பொங்கல் கொடுப்பாங்க. அதுக்கு சட்னி, சாம்பார் எதுவும் கிடையாது.

ஆனா, அப்படியொரு ருசியான பொங்கலை இதுவரை வேற எங்கயும் நான் சாப்பிடலை! அந்தப் பொங்கலுக்காகவே குருகுலக் கல்வி எனக்கு பிடிச்சுப் போச்சு!ஆனா, ஒரு கட்டத்துல ‘இவங்க தன்னைத்தானே ஏமாற்றி ஒழுக்கமா நடிக்கறாங்க’னு தோணிச்சு. அந்த நொடியே இந்த இடம் வேண்டாம்னு முடிவு பண்ணி வீட்ல அடம் பிடிச்சு நின்னுட்டேன்.

இதுக்கு அப்புறம் எங்க சித்தப்பா, என்னை காஷ்மீர் பார்டருக்கு கூட்டிட்டுப் போனார். அவர் இராணுவத்துல வேலை பார்த்தார். துப்பாக்கி துடைக்கற பையன்கள்ல ஒருத்தரா என்னை சேர்த்துவிட்டார். அதாவது பன்றிக் கொழுப்பால துப்பாக்கியைத் துடைக்கணும். எனக்கு அதை தண்டனையா அவர் கொடுத்தார். அங்கயும் நான் சும்மா இல்ல. சில்க் ஸ்மிதா டான்ஸ் ஆடறா மாதிரி கைல வரைஞ்சேன். அதைப் பார்த்த மத்த பசங்க தங்கள் கைலயும் அப்படி வரைஞ்சு  கொடுக்கும்படி கேட்கவே... எல்லாருக்கும் வரைஞ்சு கொடுத்தேன்!

இதைப் பார்த்த ஒரு சீனியர் ஆபீஸர், என்னை அதிகாரிகளின் குழந்தைகளுக்கு டிராயிங் மாஸ்டரா நியமிச்சார்!இதைப் பார்த்து எங்க சித்தப்பா ஆடிட்டார்! ஓவியமே நான் வரையக் கூடாதுனுதான் என்னை காஷ்மீருக்கு கூட்டிட்டுப் போனார்... அங்க நான் டிராயிங் மாஸ்டராவே மாறிட்டேன்! அவ்வளவுதான். உடனே என்னை ஊருக்கு கூட்டிட்டு வந்து விட்டுட்டார்.

அடுத்து கோவில்பட்டியில் ஒரு அத்தை வீடு. அவங்க பயங்கர ஸ்ட்ரிக்ட். அவங்க வீடு பார்க்க பேய் பங்களா மாதிரியே இருக்கும். அதையே சாக்கா வைச்சு ஒரு பேய் டிராமா போட்டேன். அதைப் பார்க்க என் பாட்டிக்கு போன் செஞ்சு வரவைச்சேன். பாட்டி, தனியா வராம அம்மா, சித்தினு எல்லாரையும் கூட்டிட்டு வந்தாங்க!எனக்கு கோவில்பட்டி பிடிச்சுப் போச்சு. அங்கிருந்த அப்பாவோட நண்பரின் லாட்ஜுல ரூம் எடுத்து 8, 9, 10வது படிச்சேன். 10வதுல ஃபெயில் ஆவேன்னு தெரிஞ்சே எக்சாம் எழுதினேன்.

ரிசல்ட் வந்தா வீட்ல திட்டு விழும். பிரச்னையாகும். அதனால கோவில்பட்டில இருந்து சென்னைக்கு பஸ் ஏறினேன்.
சென்னைல வந்து இறங்கின எனக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எங்க திரும்பினாலும் ‘ஸ்யாம் கைது’ போஸ்டர்! அப்புறம்தான் அது
‘தராசு’ அரசியல் வார இதழோட ஆசிரியர் ஸ்யாம்னு தெரிஞ்சுது!

சென்னைக்கு வந்த எல்லாரும் என்ன செய்வாங்களோ அதை செய்தேன்! நடிகர்களைப் பார்க்கலாம்னு ஏவிஎம் ஸ்டூடியோ போனேன். அங்கிருந்த அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்கிட்ட பேசினேன். ஓவியம் வரைவேன்னு தெரிஞ்சதும் பக்கத்துல இருந்த ‘அம்புலிமாமா’ பத்திரிகைக்கு போகச் சொன்னாங்க.

அங்க நேர்முகத் தேர்வு நடந்துட்டு இருந்தது. ரஜினி, கமல் ரெண்டு பேரையும் ஏற்கனவே பேப்பர்ல வரைஞ்சு வைச்சிருந்தேன். அதை அவங்ககிட்ட காட்டினேன். ‘எங்களுக்கு ராஜா ராணி ஓவியம்தான் வேணும்’னு சொன்னாங்க. கொஞ்சம் கூட யோசிக்காம கமலை ராணியாவும் ரஜினியை ராஜாவாகவும் அங்கயே மாத்திக் கொடுத்தேன். அசந்து போனவங்க கைல ரூ.350 கொடுத்து டீயும் குடிக்கக் கொடுத்தாங்க. அதோடு ஒரு சின்ன கேபின்ல என்னை உட்கார வைச்சாங்க!

நான் வேலைக்கு செலக்ட் ஆகியிருக்கேன்னே தெரியாம ஒரு வாரம் ஆபீஸ் போயிட்டு இருந்தேன்! இந்த நேரத்துல ஒரு எல்.ஐ.சி. ஏஜெண்ட், ‘சார் வீடு வாங்கறீங்களா... லோன் வேணுமா’னு சாதாரணமா கேட்டார். தங்க இடம் இல்லாம அல்லாடிட்டு இருந்த எனக்கு இது பெரிய
விஷயமா பட்டது. ‘ஆமா... வேணும்’னு உடனே ஓகே சொல்லிட்டேன்.அப்ப எனக்கு வயசு 15தான்! தவணை போட்ட மறுநாளே வீடு கிடைச்சுடும்னு நினைச்சு ஏகப்பட்ட திட்டங்கள் போட்டேன். ஆனா, எதுவும் நடக்கலை!

ஒருநாள் ‘அம்புலிமாமா’ ஆபீஸ்ல விளம்பரம் கொடுப்பவர் என் பக்கத்துல வந்தார். ‘இப்படியே நீ உட்கார்ந்திருந்தா வேலைக்கு ஆவாது... நாளைக்கு என் கூட வா... மத்த பத்திரிகை ஆபீஸ்களுக்கு உன்னை கூட்டிட்டுப் போறேன்... எல்லா பத்திரிகைகளுக்கும் வரைஞ்சாதான் உன்னால வருமானம் பார்க்க முடியும்’னு சொன்னார்.

அதுமாதிரியே மறுநாள் என்னை ‘குமுதம்’ பத்திரிகைக்கு கூட்டிட்டுப் போனார். ‘இங்கயே உட்காரு... நான் போய் பேசிட்டு வரேன்’னு என்னை ரிசப்ஷன்ல உட்கார வைச்சுட்டு அவர் மட்டும் உள்ள போனார்.நான் பபுள்கம்மை மென்னுகிட்டே சேரை டக்கு டக்குனு அடிச்சுட்டு இருந்தேன். அப்ப ஒருத்தர் அங்க வந்தார். அவர்தான் பாக்கியம் ராமசாமி என்கிற ஜ.ரா.சுந்தரேசன்னு பின்னாடிதான் எனக்கு தெரியும். ‘யார்றா நீ’னு கேட்டார். ‘ஆர்ட்டிஸ்ட்’னு சொன்னேன்.

ஏற இறங்க என்னைப் பார்த்தார். ‘முதல்ல பபுள்கம்மை துப்பிட்டு வா’னு சொன்னார். அப்படியே வெளிய போய் துப்பிட்டு வந்ததும் என்னைக் கூட்டிட்டு உள்ள போனார்.ஒரு ரூம்ல உட்கார வைச்சு, ‘ஆர்ட்டிஸ்ட்டா... படம் வரைவியா’னு கேட்டார். ‘ஆமா சார்’னு சொன்னேன். ‘சரி... ஒரு சீன் சொல்றேன்...’ அப்படீன்னு தொண்டையைக் கனைச்சுட்டு காட்சியை விவரிச்சார்.

‘ஒரு பெண் கட்டில்ல படுத்து லேம்ப் பக்கத்துல புத்தகம் படிச்சுட்டு இருக்கா... அவ அருகில் இருக்கிற கண்ணாடில ஒருத்தன் உருவம் தெரியுது... அவன் கைல கத்தி இருக்கு... இந்த சீனை வரைஞ்சு நாளை கொண்டு வா...’‘நாளை வரை எதுக்கு..? இப்பவே வரைஞ்சு தரேன்’னு அங்க இருந்த பேனாவையும் பேப்பரையும் எடுத்து உடனே வரைஞ்சு கொடுத்தேன். கண்கொட்டாம அதைப் பார்த்தவர், ‘இரு...’ அப்படீன்னு சொல்லிட்டு என் ஓவியத்தோடு எடிட்டர் ரூமுக்கு போனார். நான் அப்படியே பராக்கு பார்த்துட்டு இருந்தேன்.

கொஞ்ச நேரம் பொறுத்து வந்தார். ‘இதே மாதிரி தொடர்ச்சியா முகம் மாறாம படம் வரையணும்... சரியா... ம்... எவ்வளவு சம்பளம் வேணும்..?’
‘ரூ.350 வாங்கறேன்’னு சொல்றதுக்கு பதிலா வாய் தவறி ‘ரூ.3500 வாங்கறேன்’னு சொல்லிட்டேன்!அவர் அதிர்ச்சியடையாம, ‘உனக்கு நாலாயிரமே தர்றோம்... இதே மாதிரி தொடர்ந்து படம் வரைஞ்சு கொடு’னு சொன்னார். ‘சரி’னு சொல்லிட்டு வந்துட்டேன்.

பிறகுதான் தெரியும் அந்தப்படம் ராஜேஷ்குமார் சார் தொடர்கதைக்கான படம்னு!ஒரு சின்ன வாடகை வீட்டுல ஸ்டவ் சகிதமா சென்னைல செட்டிலானேன். ‘அம்புலிமாமா’ ஆபீஸ்ல இருப்பு, ஆனா, ‘குமுதம்’ பத்திரிகைல படம்னு என் வாழ்க்கை போச்சு. இந்த நேரத்துல ‘நக்கீரன்’ கோபால் சார் ஒருமுறை கல்யாணப் பத்திரிகை கொடுக்க வந்தார். நான் படம் வரையறதைப் பார்த்தவர், ‘ஆபீஸ்ல வந்து என்னைப் பார்’னு முகவரி கொடுத்துட்டுப் போனார்.

அவர் பார்க்க போலீஸ்காரர் மாதிரி பெரிய மீசையோடு இருந்ததால பயந்தேன். ஏற்கனவே சென்னைல கால் வைச்சதும் ‘ஸ்யாம் கைது’ போஸ்டரை வேற பார்த்திருந்தேனே! அதனால கோபால் சாரைப் பார்க்க நான் போகலை.வாடகை வீட்ல தூங்கறப்ப எல்லாம் சொந்த வீடு ஞாபகம் வந்துச்சு. பொறுக்க முடியாம எல்ஐசில என்னை லோன் போடச் சொன்ன பெரியவரைப் போய் பார்த்தேன். ‘என்னை ஏமாத்தப் பார்க்கறீங்களா..? ஹவுசிங் லோன் என்ன ஆச்சு’னு அவரை தொந்தரவு செய்தேன்.

‘சரி... சாலரி சர்டிஃபிகேட் வாங்கிட்டு வா... முயற்சிக்கலாம்’னு சொன்னார். உடனே எனக்கு ‘நக்கீரன்’ கோபால் சார் நினைவு வந்தது. தாமதிக்காம அவரைப் போய் பார்த்தேன். ‘பத்திரிகை ஆரம்பிக்கறேன்... அதுல நீ தொடர்ந்து படம் வரையணும்’னு சொன்னார்.‘கண்டிப்பா வரையறேன்... முதல்ல எனக்கு சாலரி சர்டிஃபிகேட் வேணும்’னு சொன்னேன். காரணம் கேட்டார். விபரம் சொன்னேன். உடனே கொடுத்தார். கையோடு ஆபீஸ்ல இருந்த எல்லாருக்கும் என்னை அறிமுகப்படுத்தி, ‘இந்தப் பையன் நம்ம ஆபீஸ்ல வேலை செய்யறான்... எல்ஐசி ஏஜெண்ட் யாராவது வந்து கேட்டா இப்படியே சொல்லுங்க... அப்பதான் இந்தப் பையனுக்கு வீடு கிடைக்கும்’னு சொன்னார். நெகிழ்ந்துட்டேன்.

கோபால் சார் கொடுத்த சர்டிஃபிகேட்டோடு எல்ஐசி ஏஜெண்ட் பெரியவரைப் பார்த்தேன். அவர் என்னை அப்ப அட்மின்ல இருந்த கீதா மேடம்கிட்ட கூட்டிட்டுப் போனார்.என்னை ஏற இறங்க கீதா மேடம் பார்த்தாங்க. ‘இதுவரை ஒரு தவணை கூட நீ பாலிசி கட்டலை... வயசுலயும் சின்னவனா இருக்க... உனக்கு எப்படி லோன் கொடுக் க’னு கேட்டாங்க. ‘தவறாம கட்டுவேன்’னு சொன்னேன். ‘முடிஞ்சதை செய்யறோம்... அப்புறம் கடவுள் விட்ட வழி’னு என்னை நேர்முகத்தேர்வுக்கு அனுப்பினாங்க.

மானேஜர்கிட்ட என் நிலைமையை சொன்னேன். ‘சரி... என்னை இப்படியே ஒரு ஓவியமா வரைஞ்சு கொடு... அது பிடிச்சிருந்தா உனக்கு லோன் சாங்ஷன் பண்றேன்’னு சொன்னார்.உடனே அவரை முருகன் கட்டி அணை ச்சிருக்கறா மாதிரி ஓவியம் வரைஞ்சு கொடுத்தேன். பார்த்தவர் அப்படியே துள்ளிக் குதிச்சு ரெண்டே முக்கால் லட்சத்துக்கு லோன் கொடுத்தார்.

லோன் கிடைச்ச மூணே மாசத்துல சொந்த வீட்டு சாவி என் கைக்கு வந்துடுச்சு! வாடகை வீட்ல எப்படி இருந்தேனோ அதே செட்டப்ல வரைவதற்கான ஒரு மேஜை, ஸ்டவ் சகிதமா சொந்த வீட்டுக்கு வந்துட்டேன்.வீட்டு ஞாபகம் வந்தது. ‘சொந்த வீடு வாங்கிட்டேன். என் மேல நம்பிக்கை இருக்கற யார் வேண்டுமானாலும் வரலாம்’னு ரெண்டே வரில கடிதம் எழுதி போஸ்ட் செஞ்சேன். இதுக்கு ‘எங்க... எப்படி கொள்ளை அடித்தாய்’னு என் மாமா பதில் எழுதினார்! அவ்வளவுதான். திரும்பவும் வீட்டு மேல ஆர்வமும் பாசமும் குறைஞ்சுடுச்சு.

ஆனா, அப்பாவும் அம்மாவும் உடனே கிளம்பி வந்தாங்க. எங்க குடும்பம் விவசாயக் குடும்பம். வசதியான வீடு, வாசல்னு இருக்கும். சென்னைல நான் வாங்கின வீட்டோட மொத்த பரப்புல ஊர்ல எங்க வீட்டு குளியலறை இருக்கும். எங்கூடவே சில நாட்கள் அப்பாவும் அம்மாவும் தங்கிட்டு பாட்டியை என்கிட்ட விட்டுட்டு அவங்க ஊருக்குப் போனாங்க.

15 - 16 வயசுல சொந்த வீடு வாங்கினது இப்ப வரை எனக்கு பெருசா தெரியலை... சொல்லப் போனா அது பத்தி நான் யோசிக்கறதும் இல்ல.
எந்த ஓவியம் வரைஞ்சா என் வாழ்க்கை சீரழிஞ்சிடும்னு எங்க வீட்ல நினைச்சாங்களோ அந்த ஓவியக் கலைதான் இப்ப வரை எனக்கு சோறு போடுது. எனக்குப் பிடிச்சதை பிடிச்ச நேரத்துல பிடிச்சா மாதிரி செய்யறேன்.

தினமும் காலைல அஞ்சரைக்குள்ள எழுந்திருப்பது, நிறைய தண்ணீர் குடிப்பது, அளவா சாப்பிடுவது... இதெல்லாம் குருகுலக் கல்வில நான் கத்துக்கிட்டது. இப்ப வரை அதை கடைப்பிடிக்கறேன். அத்தை வீடு மிலிட்டரி கேம்பஸ். அது எனக்கு சொல்லித் தந்த கட்டுப்பாடு, இப்ப கைகொடுக்குது.

ஒருமுறை இயக்குநர் கே.பாலசந்தர் சார், என்னை ஹீரோவா நடிக்க கேட்டார். எங்க ஓவிய ஆர்வம் குறைஞ்சிடுமோன்னு மறுத்துட்டேன். அப்ப மறுத்த சினிமா சான்ஸ், இப்ப ‘கட்டில்’ படத்துல ஒரு கேரக்டர்ல நடிப்பது வழியா வந்து சேர்ந்திருக்கு.

எனக்கு ஓவியம்தான் வாழ்க்கை. மூச்சு. நாம செய்யற செயல்ல எந்தத் தவறும் இல்லைனு நம்ம மனசுக்கு தோன்றினா அதை யோசிக்காம செய்யணும்... எப்பவும் உண்மையா வெளிப்படையா இருக்கணும். வெளிப்படைத்தன்மைக்கு இருக்கும் அழகு வேறு எதுக்கும் இல்ல!  

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்