ஜெய் ஹிந்த் வார்த்தையை உருவாக்கி இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியவர் எங்க தாத்தாதான்!



யார் இந்த செண்பகராமன்  பிள்ளை?

சென்னை காந்தி மண்டபத்தை எல்லோருமே அறிந்திருப்போம். 1956ல் மகாத்மா காந்தியின் நினைவாக உருவாக்கப்பட்ட இடம் அது. அந்த வளாகத்தில்தான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராசர், பக்தவத்சலம் ஆகியோரின் நினைவிடங்களும் உள்ளன.
ஆனால், அதே வளாகத்தில் வெண்கலச் சிலையில் கம்பீரமாக நிற்கும் செண்பகராமன் பிள்ளையைப் பற்றி தெரிந்திருக்கிறோமா?

தமிழகம் மறந்த போராளி அவர். அவரின் உருவச் சிலையை அதனுள் அமைத்தவர் முன்னாள் முதல்வரான கலைஞர் கருணாநிதி. இன்று, அச்சிலைக்கு ஒவ்வொரு வருடமும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறது செண்பகராமனின் குடும்பம்.1914ம் ஆண்டு முதல் உலகப்போரின் போது ஜெர்மானிய போர்க் கப்பலான ‘எம்டன்’ சென்னையில் குண்டுமழை பொழிந்தது. துறைமுகம், பர்மா ஷெல் ஆயில் டேங்குகள், உயர்நீதிமன்றம், செயின்ட்ஜார்ஜ் கோட்டை எனப் பல இடங்களில் குண்டுகள் விழுந்து வெடித்தன.

பின்னர், ஆங்கிலேயர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திவிட்டு மாயமாக மறைந்து போனது எம்டன் கப்பல். அதில், பொறியாளராக இருந்தவரே செண்பகராமன் பிள்ளை. இந்திய விடுதலையின் மீது தீரா பற்றுக் கொண்டிருந்த தமிழரான இவரே, ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையை வகுத்தவர்!

‘‘நாங்க, செண்பகராமன் பிள்ளையின் உடன்பிறந்த தம்பி சோமசுந்தரம் பிள்ளையின் வாரிசுகள். சோமசுந்தரம் பிள்ளையின் ஒரே மகனான நவநீதகிருஷ்ணனுக்கு பிறந்தவர்கள். அவருக்கு நான்கு பிள்ளைகள்.

மூத்தவர் ரவீந்திரனும் இளையவர் கணேசனும் இறந்துட்டாங்க. நானும் கடைசி தங்கச்சி கலாவும்தான் இப்ப இருக்கோம். எங்கப்பா நவநீதகிருஷ்ணன்தான் 1966ல் செண்பகராமனின் அஸ்தியை அவரின் மனைவி லட்சுமிபாய் பம்பாய்க்கு கொண்டு வந்ததும் போய் பார்த்தார். பிறகு, கரமணை ஆற்றில் கரைத்தார்...’’ என ஒரு இன்ட்ரோ தந்தபடியே பழைய நினைவுகளில் மூழ்கினார் செண்பகராமன் என்கிற ஜெயகுமார்.

அவரைத் தொடர்ந்தார் ஜெயகுமாரின் அண்ணன் ரவீந்திரனின் மனைவியான மலர்க்கொடி: ‘‘செண்பகராமன் பிள்ளையின் பூர்வீகம் தமிழகத்தின் நாஞ்சில் பகுதி. அவர் 1891ம் ஆண்டு பிறந்திருக்கார். அவரின் அப்பா சின்னசாமிப் பிள்ளை தலைமைக் காவலர். அம்மா பெயர் நாகம்மாள். செண்பகராமனுக்கு அடுத்து பாப்பாத்தி அம்மாள்னு ஒரு பொண்ணும், சோமசுந்தரம்னு ஒரு பையனும் பொறந்தாங்க.

பிழைப்புக்காக திருவனந்தபுரத்துல குடும்பமா குடியேறினாங்க. அங்க மகாராஜா உயர்நிலைப் பள்ளியிலதான் செண்பகராமன் படிச்சார். பள்ளிநாட்கள்லயே விடுதலைப் போராட்ட வீரரா இருந்திருக்கார். அப்பவே, பசங்கள சேர்த்துக்கிட்டு ‘பாரத மாதா வாலிபர் சங்கம்’னு ஒரு சங்கத்தை ஆரம்பிச்சு தேசத்தின் விடுதலைக்காகப் போராடியிருக்கார்.

இதுக்குக் காரணம், அவங்க வீட்டுப் பக்கத்துல கிருஷ்ணசாமி அய்யர்னு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் விடுதலைப் போராட்டத் தலைவர்களின் படங்களை விற்பனை செய்தும், அவங்களைப் பத்தின தகவல்களைப் பரிமாறியபடியும் இருந்ததுதான்.

இது அவர் மனசுல ஆழமா பதிஞ்சு, விடுதலைக்காகப் போராடணும்னு உறுதி ஏற்பட்டிருக்கு. ஆரம்பத்துல அப்பாவும், அம்மாவும் அவரைக் கண்டிச்சிருக்காங்க. ஆனா, எதுக்கும் அவர் பயப்படல. இந்நேரம், அதே மகாராஜா கல்லூரியில மேற்படிப்புக்கு சேர்ந்திருக்கார். அங்க, கல்லூரி முதல்வர், பேராசிரியர்களைப் பார்க்கிறப்ப வலது கையை உயர்த்தி ‘ஜெய் ஹிந்த்’னு சொல்லி மரியாதை செலுத்தியிருக்கார். ‘ஜெய் ஹிந்த்’ என்கிற வார்த்தைைய முதலில் உருவாக்கியது அவர்தான். அவருக்குள்ள சுதந்திரத் தீ கனல்விட்டு எரிஞ்சிருக்கு...’’ என மலர்க்கொடி நிறுத்த, கணேசனின் மனைவியான லதா தொடர்ந்தார்:

‘‘இந்நேரம், ஜெர்மன் உளவாளியான வால்டர் வில்லியம் ஸ்டிரிக்லேண்ட்னு ஒருத்தர் இவரின் செய்கையைக் கண்காணிச்சிட்டே இருந்திருக்கார். அவர் ஒரு ஆராய்ச்சியாளர். இதனால, மக்கள் அவரை பைத்தியக்காரர்னு நினைச்சிருக்காங்க. பிறகு, செண்பகராமனும் அவரின் நண்பர் பத்மநாபனும் வால்டர் வீட்டுக்கு அடிக்கடி போக ஆரம்பிச்சிருக்காங்க. இதனால, அப்பா சின்னச்சாமி கையாலயே அடிவாங்கியிருக்கார்.

ஒருநாள் வால்டர் இவரிடம், ‘ஜெர்மனுக்கு வா. உன்னை படிக்க வைக்கிறேன்’னு அழைச்சிருக்கார். இதுக்கிடையில பையனைப் பத்தி கவலைப்பட்ட சின்னச்சாமி பிள்ளை ஜாதகம் பார்த்திருக்கார். அதுல, பையன் நல்லா படிப்பான். மேல்நாடுகளுக்கு எல்லாம் போவான்னு சொல்லி யிருக்காங்க.
அப்புறம் இவரும், நண்பர் பத்மநாபனும் ஜெர்மன் போறாங்க. முதல்ல இத்தாலிக்குப் போய் அங்குள்ள கல்லூரியில பிறநாட்டு மொழிகளைக் கற்கறாங்க. அப்புறம், பெர்லினில் அரசியல், பொருளாதாரம் மற்றும் பொறியியல் கல்வியை படிக்க வால்டர் ஏற்பாடு செய்திருக்கார். டாக்டர் பட்டம் வாங்குறார்.

கல்லூரி விடுமுறை நாட்கள்ல அங்குள்ள மற்ற நகரங்களுக்குப் போய் பிரிட்டிஷாரின் அநீதிகளையும், இந்தியர்கள் படும் வேதனைகளையும் செண்பகராமன் பிரசாரம் செய்திருக்கார். அங்க இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையான மேடம் பிகாஜி காமா, ஜெர்மன் மன்னர் கெய்ஸர் ஆகியோரைச் சந்திச்சுப் பேசியிருக்கார்.

இந்த மன்னர் மூலமே அவர் 1914ல் ஜெர்மன் கடற்படையில் சேர்ந்து கடற்படையின் கமாண்டரான வான்முல்லரின் கீழ் பணியாற்றி இருக்கார். ஒருகட்டத்துல அவருக்கு உதவியாளராவே மாறியிருக்கார். அப்பதான் எம்டன் கப்பல்ல வந்து சென்னை மீது குண்டுமழை பொழிந்த நிகழ்வு நடந்துச்சு...’’

நெகிழ்ச்சியுடன் லதா முடிக்க, தொடர்ந்தார் பேத்தியான கலா: ‘‘ஜெர்மன்ல இருந்தபடியே இந்திய விடுதலைக்காக தாத்தா செண்பகராமன் போராடிட்டு இருந்தார். இதுக்கிடையில பத்மநாபன் பிள்ளை இறந்துடறார். இந்நேரம், பிரிட்டிஷாருக்கு எதிரா செயல்பட்டு ஜெர்மனியில் தஞ்சமடைந்த இந்தியர்களின் நிலைமை சிக்கலாச்சு.

அப்ப மேடம் பிகாஜி காமா பெர்லின் வந்தார். அவருடன் அவரின் வளர்ப்பு மகள் லட்சுமி பாயும் வந்தார். தாத்தா செண்பகராமனும் லட்சுமிபாயும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டுச்சு. இருவரும் காதலிக்க, இருவருக்கும் மேடம் காமா 1931ம் ஆண்டு திருமணம் செய்துவைத்தார்.
1933ம் ஆண்டு வியன்னாவில் நடந்த ஒரு மாநாட்டிற்கு செண்பகராமன் செல்ல, அங்க நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களும் வந்திருக்கார். செண்பகராமன் அவரைக் கண்டதும் ‘ஜெய் ஹிந்த்’னு சொல்லி வாழ்த்தைத் தெரிவிச்சிருக்கார். அது நேதாஜியின் உடம்புல ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. அங்க இருவரும் இந்தியாவின் விடுதலைக்காக விவாதிச்சாங்க.

அப்புறம், ஹிட்லர் ஆட்சி வந்ததும் அவருடனும் தாத்தாவுக்கு நல்ல நட்பு ஏற்பட்டுச்சு. அப்ப ஒரு கூட்டத்துல இந்தியர்களைப் பத்தி ஹிட்லர் தவறா பேச, உடனே எழுந்து அது தவறுனு சுட்டிக்காட்டியிருக்கார். அப்புறம், ஹிட்லர் அதுக்கு மன்னிப்புக் கோரியிருக்கார்.

இதை நாஜிக்கள் இழுக்கா பார்த்தாங்க. தாத்தா செண்பகராமனுக்கு பதிலடி கொடுக்கணும்னு நினைச்சாங்க. ஒரு விருந்து நிகழ்ச்சியில அவரின் உணவுல ஏதோ கலந்துட்டதா சொல்றாங்க. அப்புறம், அவர் நடக்க முடியாம படுத்த படுக்கையாகிட்டார். இதுக்கு இத்தாலியில சிகிச்சை எடுத்திருக்கார். மனைவி லட்சுமிபாய்தான் கூடவே இருந்து கவனிச்சிருக்காங்க. பிறகு, அவர் வீட்டை நாஜிகள் சூறையாடியிருக்காங்க.

குணமாகி வந்ததும் இதை கவனிச்ச தாத்தா, ஹிட்லர்கிட்ட சொல்லணும்னு போயிருக்கார். ஆனா, வழியிலேயே அவரைத் தாக்கிட்டாங்க. மறுபடியும் மருத்துவமனையில சேர்க்கப்பட்டார். அப்பதான், ‘நம்ம தேசம் சுதந்திரம் அடைஞ்ச பிறகு, சுதந்திரக் கொடி பறக்கும் கப்பல்லதான் நாட்டுக்குத் திரும்புவேன். இது என் லட்சியம். ஒருவேளை நான் இறந்திட்டா என்னுடைய அஸ்தியை பத்திரப்படுத்திவை. சுதந்திரம் அடைஞ்சபிறகு என் தாயாரின் அஸ்தி கரைக்கப்பட்ட கரமணை ஆற்றுல ஒரு பகுதியை கரைச்சிடு. மீதியை தமிழ்நாட்டின் வயல்கள்ல தூவிடு’னு சொல்லியிருக்கார்.

1934ம் ஆண்டு மே மாதம் 26ம் ேததி தாத்தா இறந்திடுறார். அப்ப அவருக்கு வயசு நாற்பத்தி ரெண்டுதான். அவரை, பெர்லின் இல்லத்துல சந்திக்காத இந்தியத் தலைவர்களே இல்லனு சொல்லலாம். முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு கூட சந்திச்சுப் பேசியிருக்கார். நேருவுடன்
இந்திராகாந்தி அம்மையாரும் சின்னப் பெண்ணாக இருந்தப்ப போயிருக்காங்க. அப்ப அவர்கிட்ட கண்ணாடி சரவிளக்கு கொடுத்திருக்கார். அது இன்னைக்கும் ஆனந்தபவன்ல இருக்கு.

சுதந்திரம் அடைஞ்சதும் 1949ல் பம்பாய் காங்கிரஸ் மாளிகையில தாத்தாவின் உருவப்படத்தை பம்பாய் மாகாண காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.பாட்டில் திறந்து வச்சிருக்கார். 1966ல் பிரதமர் இந்திராகாந்தியைச் சந்திச்சு தாத்தாவின் ஆசையை லட்சுமிபாய் சொல்லி யிருக்காங்க.

பிறகே, 32 ஆண்டு களாக பாதுகாத்து வந்த அந்த அஸ்தி, ‘ஐ.என்.எஸ்.டில்லி’ கப்பல்ல சுதந்திர இந்தியாவின் மூவர்ணக் கொடி பறக்க பலத்த மரியாதையுடன் எடுத்துச் செல்லப்பட்டிருக்கு. கொச்சி துறைமுகத்துக்கு வந்து அங்கிருந்து திருவனந்தபுரம் கரமணை ஆற்றுல கொஞ்சம் கரைச்சிட்டு மீதியை அவர் ஆசைப்படியே வயல்கள்ல தூவினாங்க.

இந்த அஸ்தியைக் கரைக்கதான் எங்க அப்பா நவநீதகிருஷ்ணன் போயிட்டு வந்தாங்க...’’ என்றார் கலா நெகிழ்வாக!‘‘இப்படிப்பட்ட ஒரு மகத்தான சுதந்திரப் போராட்ட வீரருக்கு 2008ல் கலைஞர் கருணாநிதி முதல்வரா இருந்தப்ப கிண்டி காந்தி மண்டபத்துல சிலை வச்சார். இப்ப நாங்க முக்கியமான நாட்கள்ல அவருக்கு மாலை அணிவிச்சு மரியாதை செலுத்திட்டு வர்றோம்.

ஆனா, எங்க ஆசையெல்லாம் நாங்க அவர் வாரிசுனு அரசு எங்கள அடையாளப்படுத்தினாலே போதும் என்பதுதான். இதைத்தான் நாங்க ரொம்பப் பெருமையா நினைக்கிறோம். அந்த கௌரவத்தை அரசு எங்களுக்குக் கொடுக்கணும்...’’ கோரிக்கையாகச் சொல்கிறார்கள் செண்பகராமனின் குடும்ப வாரிசுகளான இந்த நால்வரும்.  

பேராச்சி கண்ணன்