உலகை உலுக்கிய உயிர்கொல்லி நோய்கள்!மினி தொடர் 5

13,000 ஆண்டுகள் ஜப்பானைக் கலக்கிய அம்மை நோய்அது கி.பி.735ம் வருடம். ஜப்பானியர்கள் மொழியில் சொன்னால் டென்ப்யோ காலம். ஜப்பானியர்களின் காலப் பகிர்மானம் தனித்துவமானது. அவர்கள் ஒவ்வொரு இருபது ஆண்டுகளையும் இப்படி ஒவ்வொரு பெயரால் குறித்துக் கொள்வார்கள்.

அந்நாட்களில் ஆசியப் பிராந்தியத்தில் இருந்தாலும் ஜப்பான் ஒரு தனித் தீவாக, தான் உண்டு தன் கடமை உண்டு என்று வாழ்ந்துகொண்டிருந்தது.

அரசர் ஷோமு டென்னோ கடவுள் பக்தி மிக்கவர். குறிப்பாக, பெளத்தத்தின் மேல் அவருக்கு மிகவும் பற்றுண்டு.
நான்கு புறமும் சூழ்ந்து நின்ற எதிரிகளை ஒழித்து, உள்நாட்டில் அமைதியை நிலைநாட்டி உற்பத்தியைப் பெருக்கி ஜப்பானை வளர்ச்சிப் பாதையில் நடத்திக்கொண்டிருந்தார் ஷோமு.ஆனால், விதி ஒரு மீனவன் வடிவில் வந்தது.

ஆம். கி.பி 735ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் க்யூஸு பிராந்தியத்தின் ஃபுகுவோகா டஜாய்ஃபூ நகரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கொரிய தீபகற்பத்துக்கு மீன் பிடிக்கச் சென்றார். அவர் திரும்ப வரும்போது விநோதமான நோய் ஒன்றால் பீடிக்கப்பட்டிருந்தார்.
அது பெரியம்மை.

அவரது வீட்டிலிருந்து ஒவ்வொரு வீடாகப் பரவத் தொடங்கிய அந்தக் கொள்ளை நோய் அதே ஆண்டுக்குள் வடக்கு க்யூஸு பிராந்தியம் முழுதுமே பரவிவிட்டிருந்தது. ஒவ்வொரு குடிமகனும் நோயில் விழுந்து பாயில் படுத்தனர். விவசாயம் கெட்டுக் குட்டிச்சுவரானது. ஒரு கட்டத்தில் உணவு உற்பத்தி முற்றிலும் நின்றதால் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியது.

அடுத்த ஆண்டு பஞ்சமும் வறுமையும் கொடூர கொள்ளை நோயும் பரவிக்கொண்டிருந்த வடக்கு க்யூஸூ பகுதிக்கு விபரீதம் புரியாமல் தலைநகரிலிருந்து வந்தனர் சில அரசவை அதிகாரிகள்.கொரிய தீபகற்பத்துக்குப் போக வேண்டும் என்பது அவர்கள் திட்டம். ஆனால், வந்த இடத்தில் கொள்ளை நோயின் கோர தாண்டவத்தைப் பார்த்து விட்டுப் பதறியடித்துத் தலைநகருக்கே திரும்பினர். அதுவும் சும்மா திரும்பவில்லை; நோயைச் சுமந்துகொண்டே திரும்பினர். வழியிலேயே அந்தக் குழுவில் சிலர் இறந்தனர்.

இந்த அரசவை அதிகாரிகளால் பெரியம்மை ஜப்பானின் கிழக்குப் பகுதியான நராவுக்கும் பரவியது. அடுத்த இரண்டு ஆண்டுகள் அந்தப் பகுதியில் தனது கோர தாண்டவத்தை நிகழ்த்திவிட்டுத்தான் ஓய்ந்தது.இந்தக் கொள்ளை நோயால் ஒட்டுமொத்த ஜப்பானின் மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர், அதாவது மூன்றில் ஒருவருக்கு மேல் மரணமடைந்தனர். எண்ணிக்கையில் சொன்னால் சுமார் இருபது லட்சம் பேருக்கு மேல் மரணித்திருக்கலாம் என்கிறார்கள். எஞ்சியவர்களில் பலர் நோய்த் தொற்றுக்கு ஆளாகி எப்படியோ உயிர் பிழைத்தனர்.

சீனர்களைப் பார்த்து, மக்களிடம் பரவும் நோய்கள் உள்ளிட்ட தகவல்களை கவனமாகப் பதிவு செய்துகொள்ளும் வழக்கத்தைக் கற்றுக்கொண்ட ஜப்பானியர்கள், இப்படியான கொள்ளை நோய்களுக்கான மருந்துகளையும், அதைத் தடுப்பதற்கும், எதிர்கொள்வதற்குமான வழிமுறைகளையும் அறிந்திருக்கவில்லை. இதனால், இந்தக் கொள்ளை நோய்க்கு ஜப்பானியர்கள் அதிக விலை கொடுக்க வேண்டியதாயிற்று.

அரசு மக்களைக் காப்பாற்ற இயலாமல் தவித்தது. அரசர் தன்னால் இயன்றதைச் செய்தார் என்றே சொல்ல வேண்டும். ஜப்பான் முழுதுமே கொள்ளை நோய் காலங்களில் வரி விதிப்பைத் தளர்த்தினார். ஆனால், அதையும் மீறி வரி செலுத்த இயலாது என்று நாடு முழுதும் விவசாயிகள் கிளர்ச்சியில் இறங்கினர்.

ஜப்பானின் அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது இந்தக் கொள்ளை நோய். அரசர் ஷோமுவின் அதிகாரத்தையே ஆட்டிப்பார்த்தது. பொருளாதாரம் முற்றாகச் சரிந்ததோடு உள்நாட்டுக் குழப்பங்களையும் உருவாக்கியது.

விவசாய நிலங்கள் தரிசாக மாறத் தொடங்கின. அரசர் விளைநிலங்களைத் தானமாகக் கொடுக்க முன்வந்தும் பலரும் மண்ணில் இறங்கி விவசாயம் பார்க்க அஞ்சினர். உயிர் பயத்தால் நாடு முழுதும் மக்கள் அங்கும் இங்கும் அலைந்ததால், விவசாயக் கூலிகள் தட்டுப்பாடு உருவானது.
அரசவையில் மிகவும் வலுவான இடத்தில் இருந்த ஃபுஜிவாரா வம்சத்தினரின் நான்கு சகோதரர்களான ஃபுஜிவாரா நோ முசிமாரோ, ஃபுஜிவாரா நோ புசாசகி, ஃபுஜிவாரா நோ உமாக்கி, ஃபுஜிவாரா நோ மரோ ஆகியோர் இந்நோயால் இறந்தனர்.

ராஜதந்திரத்திலும் போர்க் கலையிலும் இணையற்ற இந்த வீரக் குடும்பத்தினர் மரணம் அரசர் ஷோமுவுக்கு பேரிழப்பு. அவரின் முக்கிய எதிரியான தச்சி பானா நோ மோரே அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்புக்கு வர நேர்ந்தது. குறுநில மன்னர்கள் ஆதிக்கம் நிறைந்த அந்நாட்களில் இந்த சம்பவம் அரசருக்கு கடும் நெருக்கடியாக மாறியது.

நாடெங்கும் தலைவிரித்தாடிய கொள்ளை நோய்க்கு பயந்து அரசர் கடவுளிடம் சரணடைந்தார். ஜப்பானின் புகழ்பெற்ற தாய் புத்சுவில் அமைந்துள்ள டோடை-ஜி புத்த விகாரையை அரசர் ஷோமு அப்போதுதான் கட்டினார். அது மட்டும் அல்லாது, ஜப்பான் முழுதுமே கோகுபுன்ஜி எனும் சற்றே பெரிய புத்த விகாரைகளை நிர்மாணித்தார். நாடு முழுதும் புத்தருக்கு சிலைகள் எழுப்பினார். இதற்காக அரசு கஜானாவில் இருந்த கொஞ்ச நஞ்ச செல்வத்தையும் வாரி இறைத்தார்.

அப்போது தொடங்கிய பெரியம்மை, ஜப்பான் மக்களின் நீண்டகால அச்சுறுத்தலாக மாறியது. ஆம்! எட்டாம் நூற்றாண்டில் தொடங்கி போன நூற்றாண்டின் பாதி வரைக்கும் சுமார் 1300 வருடங்கள் அடிக்கடி ஜப்பானில் அம்மை நோய் பரவி கொத்துக் கொத்தாக மக்களைக் கொன்றுகொண்டிருந்தது. பெரியம்மைக்கு நவீன மருத்துவம் மருந்தைக் கண்டுபிடித்து, தடுப்பூசியிட்ட பிறகுதான் ஜப்பானில் இந்தக் கொடூர கொள்ளை நோயின் தாக்கம் முடிவுக்கு வந்தது.

இந்த பதிமூன்று நூற்றாண்டுகளில் பல லட்சம் ஜப்பானியர்கள் அம்மையால் இறந்துகொண்டே இருந்தார்கள். ஒவ்வொருமுறை ஜப்பானில் இது தனது கோர தாண்டவத்தைத் தொடங்கிய போதும் அப்போதைய ஜப்பானிய அரசு நிலைகுலைந்தது. மனிதர்கள் தங்கள் கனவுகளை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும்போது இப்படித்தான் இந்தக் கண்ணுக்குத் தெரியாத எதிரி காலங்காலமாக அரூபமாக மறைந்திருந்து நம்மைத் தாக்கிக்கொண்டே வந்திருக்கிறது.

ஐரோப்பாவோ ஆசியாவோ ரோமோ ஜப்பானோ எந்த நிலமாக இருந்தாலும் இந்தக் கண்ணுக்குத் தெரியாத எதிரியிடம் மக்கள் மிகப் பெரிய விலை கொடுத்தே தங்கள் வரலாற்றை வளர்த்திருக்கிறார்கள்.  

(உயிர்க்கொல்லிகளுக்கு எதிரான போர் தொடரும்)

- இளங்கோ கிருஷ்ணன்