சாயி



வானம் உன்மீது விழுந்தாலும் கவலைப்படாதே, உன்னைக் காப்பாற்ற நான் இருக்கும்போது கவலை எதற்கு? என்மேல் நம்பிக்கை வை. என்னால் உனக்கு முடியாத காரியம் என்று எதுவுமே  இருக்க முடியாது. 
 பாபா மொழி

காற்று மசூதியைச் சுற்றிச் சுழன்றது. பாபாவின் பிட்சைப் பாத்திரம் காற்றின் சுழல்வேகத்தினால், சபை மண்டபத்தில் போய் விழுந்தது. அது கட்டை மேல் அடிபட்டு விழுந்ததால் பெரும் சத்தத்தை  எழுப்பியது. ‘‘நீ எவ்வளவு தூரம் ஆட்டம் போட முடியுமோ போடு. ஆனால், ஒன்றை மறக்காதே. நான்கூட இங்கு தான் இருக்கிறேன்’’  பாபா பெருங்குரலில் சொன்னார்.
அமைதி... அமைதி... யுத்தத்திற்கு முன் இருக்கும் அமைதி!

மாலை வந்தது. இப்போது காற்று பலமாக வீசியது. வானம் கறுத்தது. மேக மூட்டங்கள் சூழ்ந்தன. இடி இடித்தது. குப்பைக் கூளங்கள், மண், தூசி எல்லாம் சூறாவளிக் காற்றினால் ஆகாயத்தை  நோக்கிப் பறந்தன. மரங்கள் காற்றின் வேகம் தாங்காமல் முறிந்து விழுந்தன. பட்டுப் போன மரங்கள், வேரோடு சாய்ந்தன. பறவைகள் சூறாவளிக்கு ஈடு கொடுக்க முடியாமல் கத்தின. மிருகங்கள்  ஓலமிட்டன. நாய்கள் ஊளையிட்டன. மனிதர்கள் அலறினார்கள்.

பிரளயம் வந்துவிட்டதோ என்று எல்லோரும் பயந்தார்கள். சூறாவளி அப்படி பேய் ஆட்டம் போட்டது. கூடவே இடி, மின்னலும் சேர்ந்து கொண்டது. கனத்த மழை வேறு பெய்து, எல்லாவற்றையும்  நாசம் செய்துவிட்டு சற்று ஓய்ந்தது. ஷீரடிவாசிகளும் பக்தர்களும் நடுநடுங்கிப் போனார்கள். உயிரே போனது போல் உணர்ந்தார்கள். இந்த பயங்கரத்திலிருந்து எப்படி மீள்வது? யார் காப்பாற்றுவார் கள்?
இதற்கான ஒரே விடை...
பாபா!
சாய்பாபா!

முதலில் பாபா எச்சரிக்கை செய்ததால் எல்லோரும் அவரவர் வீட்டிலும், வீடில்லாதவர்கள் மசூதியிலும் தஞ்சம் புகுந்திருந்தார்கள். எங்கெங்கு இடம் கிடைத்ததோ, அங்கெல்லாம் நடுநடுங்கியபடியே  ஒண்டிக்கொண்டிருந்தார்கள். மறுபடியும் இடி இடித்தது. காற்றும் பயங்கரமாக வீசியது. மழை மீண்டும் இரண்டு மடங்கு வேகத்துடன் கொட்டியது. மாலை வேளையாக இருந்தாலும், எங்கும் இருள். எல்லாவிடத்திலும் தண்ணீர்.  நெற்பயிர்கள் நாசம். ஊரையே மூழ்கடிக்கும் ஆக்ரோஷத்துடன் மழை கொட்டிற்று.

பாபா அமைதி காத்தார். கூடியிருந்தவர்களைப் பார்த்தார். எல்லோரது முகத்திலும் மரண பயம். குழந்தைகளும் பெண்களும் ‘ஓ’வென்று ஓலமிட்டவாறு நடுக்கத்துடன் இருந்தார்கள். எல்லோரும் ப £பாவைப் பார்த்து கை கூப்பினார்கள். நான்கைந்து மின்னல்கள் வெட்டி, இடியோசை கிடுகிடுக்க வைத்தது. பாபா ஒருமுறை எல்லோர் மீதும் பார்வையைச் சுழற்றினார். இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர், பார்ஸி என எல்லா இனத்தினரும் ஒன்றாகக் கூடியிருந்தார்கள். இன்னல் வரும்போது எப்படி எல்லோரும் இணைந்து ‘மனிதர்கள்’ ஆகிறார்கள்!
‘‘பாபா’’  ஒரு சிறுவன் கத்தினான்.

‘‘எங்களைக் காப்பாற்றுங்கள்’’  அவனைத் தொடர்ந்து எல்லோரும் பாபாவை வேண்டினார்கள்.
பாபா தன் இருக்கையிலிருந்து எழுந்தார். அவருடைய தேகம் உஷ்ணமாயிற்று. கீழே இறங்கி, சபை மண்டபத்திற்கு வந்தார். மக்கள் விலகி வழிவிட்டார்கள். வானத்தைக் கிழித்தது போல ஊற்றும்  மழையில் நனைந்தபடி வெற்றிடத்திற்கு வந்தார். இரண்டு கைகளையும் மேலே தூக்கி வானத்தை நோக்கி, ‘‘நான் உனக்கு அனுமதி கொடுக்கவில்லை. அப்படி இருந்தும் நீ பிரளயத்தைப் போல த £ண்டவமாடி விட்டாய். நான் எங்கே இருக்கிறேன் என்பதுகூட உனக்குத் தெரியவில்லையா?’’ என்று கர்ஜித்தார்.

அவருடைய குரல், இடியை விட பெருத்த ஓசையாக எழுந்தது. தங்களைக் காப்பாற்றுவதற்காகப் பஞ்சபூதங்களுடன் பாபா சண்டையிடும் அதிசயத்தை பக்தர்கள் நேரில் கண்டார்கள். அவர் மேல் பக்தி  இன்னும் கூடியது. மழையோ ஓய்வதாக இல்லை. ‘‘நீ ருத்ர தாண்டவம் ஆடியது போதும். இல்லாவிடில் நான் உன்னை சந்திப்பேன். இதற்கு மேல் ஒரு சொட்டு, காற்றின் ரீங்காரம், ஏதும் என் காதில் விழக்கூடாது. நான் அதைப் பொறுத்துக்கொள்ள  மாட்டேன். என்ன நினைத்துக் கொண்டாய்? இந்த சாய்பாபாவுக்கு உலகத்தைக் காப்பாற்றக் கூடிய ஆற்றல் உண்டு. நிறுத்து, உன்னுடைய ஆட்டத்தை... நிறுத்து... நிறுத்து...’’

அவருடைய கர்ஜனையின் பலனாக ஓர் அதிசயம் நிகழ்ந்தது. மேகங்கள் மறைந்தன; மின்னல்கள் ஓடி விட்டன; மழையின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. காற்று திருடனைப் போல ஓடி  ஒளிந்தது. சற்று நேரத்தில் இருள் விலகி, வெளிச்சம் பரவியது. பக்தர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். மழை நின்றதும் எல்லோரும் பாபாவிடம் ஓடினார்கள். அவரைச் சுற்றிலும் சேறும், சகதியும் குவிந்திரு ந்தன. எதையும் பொருட்படுத்தாமல், அவர் காலைத் தொடத் துடித்தார்கள்.

பாபா இப்போது அமைதி தவழும் முகத்தோடு இருந்தார். நடுவில் கோபத்துடன் காணப்பட்ட முகம், இப்பொழுது பழையபடி பிரகாசமடைந்தது.
உற்சாக மேலீட்டால், ‘‘சாய்பாபாவுக்கு ஜே!’’ என்று யாரோ கத்தினார். பாபாவின் அந்த அற்புதச் செயலின்போது சில கிறிஸ்துவ பக்தர்களும் இருந்தார்கள். அவர்களுக்கும் ஆச்சரியம். காரணம், பைபிளில் இயேசு நாதரும் இப்படித்தான் ஓர் அதிசயத்தைச் செய்ததாகக்  கதையில் படித்திருந்தார்கள். மறுநாள், நிறைய பேர் தங்கள் உயிரைக் காப்பாற்றிய பாபாவை வணங்கக் குழுமியிருந்தார்கள். பாபாவின் ஆரத்தியைப் பாடினார்கள். பாபா சந்தோஷமடைந்தார்.

ஒரு கிறிஸ்துவ பக்தர் வந்து பாபாவின் பாதத்தைத் தொட்டு வணங்கி, ‘‘பாபா, பைபிளில் இதே மாதிரி சம்பவம் நடந்த கதையைப் படித்திருக்கிறேன்’’ என்றார்.
‘‘நானும் பைபிள் படித்திருக்கிறேன். அருமையான கிரந்த நூல். அதில் உள்ள ஒரு தத்துவத்தைக் கடைப்பிடித்தாலே, உலகத்தில் அமைதி சாம்ராஜ்யம் நிர்மாணமாகும். நீ எந்தக் கதையைச் சொல் கிறாய்?’’ என்றார் பாபா பிரசன்ன வதனத்துடன்.

‘‘பகவான் இயேசு, இம்மாதிரி இயற்கையின் சீற்றத்தை சாந்தப்படுத்தினார். நேற்று நான் உங்களில் இயேசுபிரானைக் கண்டேன்.’’
பாபா சிரித்தார். ஆகாயத்தை நோக்கிக் கையைக் காட்டி, ‘‘நான் இயேசுவாக இருந்தேன். புத்தர், மகாவீரராகவும் இருந்தேன். எல்லோராகவும் இருந்தேன். அடேய், ஒரு சாதாரண தத்துவம் இது.  எல்லோருக்கும் எஜமானன் ஒருவனே. அப்படியிருக்க, நாமெல்லாம் எப்படி வெவ்வேறாக இருக்க முடியும்? இந்த எல்லா பிரிவினைகளையும் விட்டொழியுங்கள். ‘மனிதன்’ என்று எல்லோரும் சமமா குங்கள். ஒருவரை ஒருவர் பரஸ்பரமாக நேசியுங்கள். உலகிலுள்ள எந்தவொரு மகானும் இதைத்தானே சொல்லுகிறார்.’’
‘‘ஆமாம்.’’

‘‘God bless you my child’’  பாபா புன்சிரிப்புடன் அவனுக்கு உதி கொடுத்துக்கொண்டே சொன்னார். மறுபடியும் வணங்கி விட்டு, அவன் மனநிறைவுடன் சென்றான்.
சித்திக் பாளங்கேவின் மனத்தில் வெவ்வேறு பாவங்கள் தோன்றின. அவர் ஷீரடிக்கு வந்து ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. இதன் நடுவில் பாபாவின் அநேக அதிசய சம்பவங்களைப் பார்த்தும் கேட்டும்  தெரிந்துகொண்டார். அவர் மேல் பக்தி நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வந்தது.

ஆனால் ஒரு விஷயத்தைக் குறித்து, அவர் வேதனைப்பட்டார். பாபா அவரைத் தன் அருகிலேயே நெருங்கவிடவில்லை. பல சமயம் அவர் மசூதிக்குச் சென்றிருந்தார். பாபா சாவடிக்குச் செல்லும்போ தும், லேண்டிக்குச் செல்லும் வழியிலும் சித்திக் நின்றிருந்தார். ஆனால், அவர் கண்கள் இவரைக் கண்டுகொள்ளவே இல்லை. எல்லா பிரயத்தனங்களும் வீணாகின. அவர் கவலையால் மனம்  வெதும்பினார்.

நான் ஹாஜி. மெக்கா, மதினாவிற்குப் போய் தரிசனம் செய்து வந்திருக்கிறேன். நான் என்றும் யாரையும் நோகடித்ததில்லை. தொந்தரவு கொடுத்ததில்லை. எந்த பாவச் செயலையும் செய்யவில்லை.  எப்பொழுதும் தர்ம சிந்தனைதான். அப்படியிருக்க, பாபா ஏன் என்னை அருகில் நெருங்க விடவில்லை? நான் அப்படி என்ன கொடுமை செய்துவிட்டேன்?
பாபா ஏன் இப்படி நடந்து கொள்கிறார்? என்னை சோதிக்கிறாரா? அப்படித்தான் இருக்கும்.

ஒன்று மட்டும் நிச்சயம். பாபாவின் கிருபை எப்பொழுது கிட்டுகிறதோ, அதுவரை ஊருக்குத் திரும்புவதில்லை!
ஒரு நாள், காலை வேளையில் துனி அருகில் பாபா அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பாக்யாவைப் பார்த்து, ‘‘அடேய் பாக்யா, அவள் ஏன் இன்னும் வரவில்லை?’’ எனக் கேட்டார்.
‘‘யார் பாபா?’’
‘‘அமனிடா!’’

‘‘வருவாள். சற்று நேரத்தில் உங்களுடைய மடியில் உட்கார்ந்து சாப்பிடாவிட்டால், அவள் வயிறுதான் எப்படி நிரம்பும்?’’  பாக்யா சிரித்துக்கொண்டே சொன்னான். அதற்குள் சத்தம் வந்தது.
‘‘பாபா, சாய்பாபா... நான் வந்திருக்கிறேன்...’’ ‘‘வா என் செல்லமே... வா வா...’’  பாபா சிரித்தவாறே கூறினார்.

அமனி தாவி பாபா அருகில் வந்தாள். அவள் முகம் சந்தோஷத்தால் பூரித்தது.
ஷீரடியில் கோண்டாஜி என்னும் பாபாவின் பரம பக்தன் இருந்தான். அவன் மனைவியின் பெயர் ஜமலி. அவளும் பாபாவை தெய்வமாகப் போற்றினாள். இவர்களின் மகள்தான் அமனி. அவளுக்கு  நான்கு வயசு இருக்கும். துறுதுறுவென்றிருப்பாள்.
‘‘அமனி... இன்று ஏன் தாமதம்?’’
‘‘பாபா, அம்மாதான் என்னைப் போகவிடவில்லை...’’
‘‘ஏன்?’’

‘‘ ‘நீ பாபாவுக்கு ரொம்பவும் தொந்தரவு கொடுக்கிறாய். அப்படிச் செய்யாதே. பாபா கடவுள்’ என்றாள் அம்மா!’’
‘‘ஜமலி அப்படியா சொன்னாள்?’’  பாபா வெகுளித்தனமாகக் கேட்பது போல் கேட்டார். குழந்தைகளுடன் பேசுவது அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.
‘‘ஆமாம். ஆனால் பாபா... நீங்கள் சொல்லுங்கள், நான் தினமும் உங்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறேனா?’’
‘‘இல்லைடா கண்ணு. யார் எது வேணுமானாலும் சொல்லட்டும். எந்தக் குழந்தையும் எனக்குத் தொந்தரவு கொடுப்பதில்லை. மாறாக, அவர்களுடன் விளையாடுவதால், பேசுவதால், எனக்குப் புத்து ணர்ச்சி உண்டாகிறது.’’
அமனிக்கு ஒன்றும் புரியவில்லை.

‘‘பாபா... பா...’’  அவர் மடியில் உட்கார்ந்துகொண்டு, அவர் கொடுத்த ஒரு கவளத்தை வாயில் போட்டுக்கொண்டு, ‘‘நீங்கள் கடவுளா?’’ என வினவினாள் அவள்.
‘‘சேச்சே!’’
‘‘பின் அம்மா அப்படி சொன்னாளே..?’’
‘‘பைத்தியம்!’’
‘‘என் அப்பாவும் அதையே சொன்னார்.’’
‘‘அவரும் பைத்தியம்!’’

‘‘ஆனால், எல்லோரும் உங்களை தெய்வம் என்கிறார்கள். அவர்கள் எல்லோரும் கூட பைத்தியமா?’’
‘‘ஆமாம்... ஆமாம்... இந்த உலகம் முழுக்க பைத்தியக்காரர்கள்! மூன்றே பேர்தான் புத்திசாலிகள் மற்றவர்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள்!’’
‘‘வெறும் மூணு பேர்தானா?’’  கண்கள் விரிய அவள் கேட்டாள்.
‘‘ஆமாம்!’’
‘‘யார் அவர்கள்?’’

‘‘சொல்லட்டுமா? நான் ஒரு புத்திசாலி. இரண்டாவது புத்திசாலி யார் என்றால், அது நீ...’’
‘‘ஹை ய்யா... நான் புத்திசாலியா? எனக்குத் தெரியாதே! சரி, மூன்றாவது யார்?’’
‘‘சிரிக்கக் கூடாது.’’
‘‘சரி, சிரிக்கலை.’’

‘‘மூன்றாவது புத்திசாலி, நம்முடைய நாநாவல்லி.’’  பாபா அனுமனைப் போல வாயை உப்பி, நாநாவல்லி போல முகத்தை வைத்துக்கொண்டார். இதைக் கண்டு அமனி ‘கெக்கே...’ என்று பெரி தாகச் சிரித்தாள்.
அவளுடைய சிரிப்பில் பாபாவும் பாகேஜியும் கலந்து கொண்டார்கள். சிற்றுண்டியை முடித்ததும், “பாபா, எனக்குக் காசு கொடுங்கள்’’ என்றாள் அமனி.
அவளை அன்புடன் அள்ளி முத்தம் கொடுத்த பாபா, அவள் நீட்டிய டப்பாவில் ஒரு ரூபாயைப் போட்டார்.

‘‘பாபா, நான் போகட்டுமா?’’  அவள் டப்பாவை ஆட்டி, சத்தமிட்டுக்கொண்டே ஓடினாள். அவள் ஓடுவதையே நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தார் பாபா.
பாபா எல்லோரிடமும் தட்சிணை வாங்கி சேகரித்தார். சேகரித்த பணத்தை தனக்கு விருப்பமானவர்களுக்குப் பிரித்துக் கொடுப்பார். அதிலும் அவருக்கு ஏதோ எண்ணம் இருக்கும் போல. லேண்டி  தோட்டத்திற்குப் போகும்போது அமனி மறுபடி தாவிக் கொண்டே வருவாள். அவளுக்கு ஒரு ரூபாய், ஜமலிக்கு ஆறு ரூபாய், தாதா கோல்கருக்கு ஐந்து ரூபாய், பக்கீர் பாபாக்களுக்கு பதினைந்து ரூப £ய் முதல் ஐம்பது வரை மற்றும் ஏழை பாழைகளுக்கு எட்டு ரூபாய் இப்படி விநியோகித்து விடுவார்.
இது அவருடைய பழக்கமாக இருந்தது!

பாபா, யாரிடமிருந்து தட்சிணை பெற்றுக்கொண்டாரோ அவர்களுடைய வாழ்க்கை வளமாகியது. அதேபோல, யாருக்கு தட்சிணை கொடுத்தாரோ, அவர்களும் வாழ்க்கைப் போராட்டத்தில் நிறைவு  கண்டார்கள். இரண்டு பிரிவினருக்கும் பாபா, வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தினார். வாழும் வாழ்க்கைக்கு அழகூட்டினார்!

(தொடரும்...)

‘‘இந்த சாய்பாபாவுக்கு உலகத்தைக் காப்பாற்றக் கூடிய ஆற்றல் உண்டு. நிறுத்து, உன்னுடைய ஆட்டத்தை... நிறுத்து... நிறுத்து...’’

பா, யாரிடமிருந்து தட்சிணை பெற்றுக்கொண்டாரோ அவர்களுடைய வாழ்க்கை வளமாகியது. யாருக்கு தட்சிணை கொடுத்தாரோ, அவர்களும் நிறைவு கண்டார்கள்.