தனியார்மயமாகிறதா இந்திய மின்துறை..? மின்சார மசோதா 2020-ஒரு பார்வைநவீன தேசம் ஒன்றுக்கு அச்சாணி மின்சாரம்தான். அதுதான் ஒரு தேசத்தின் ஆற்றல் கேந்திரமாக இருப்பது. மனிதவளம், தாதுவளம் என எத்தனை வளங்கள் இருந்தாலும் அதனை உற்பத்திப் பொருளாக்கி, சந்தைக்கு எடுத்துச் செல்ல மின்சாரம் வேண்டும். இந்தியா மின்சார உற்பத்தியில் தன்னிறைவை அடைந்த பிறகுதான் இந்தியாவின் இப்போதைய வளர்ச்சி என்பதே சாத்தியமானது.

உலகின் ஒவ்வொரு நாடுமே மின்சார உற்பத்தியைப் பெருக்குவது, அதைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆகியவற்றின் வழியாகவே தனது அதிகாரத்தை உலக அரங்கில் நிலை நாட்டுகிறது.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மின்சாரத் துறையில் மிகப் பெரிய மாற்றங் களைக் கொண்டுவரவுள்ள புதிய மின்சார சட்டத்துக்கான வரைவு ஒன்றை ஏப்ரல் 17ம் தேதி சத்தமின்றி வெளியிட்டிருக்கிறது இந்திய மின்சாரத்துறை.

உலகமே கொரோனா அச்சத்தில் பீடிக்கப்பட்டிருக்கும் சூழலில், மக்கள், எதிர்க்கட்சிகள், மீடியா உட்பட அத்தனை பேரும் கொரோனாவில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது சத்தமில்லாமல் இந்த மின்சார திருத்த மசோதா 2020 கொண்டுவந்திருப்பது குறித்து பல எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.கடந்த 2014ம் ஆண்டே மத்திய அரசு இந்த வரைவைக் கொண்டு வர முயன்றது. மின்சாரப் பகிர்மானத்தில் பல முக்கியமான மாற்றங்களை அது முன்வைத்தது.

குறிப்பாக பயனீட்டாளர்கள் தங்களது மின்சார சேவை நிறுவனங்களை விரும்பினால், சிம்கார்டு கம்பெனிகளை மாற்றிக்கொள்வது போல மாற்றிக்கொள்ளலாம் என்பது உட்பட பல்வேறு மாற்றங்கள் அதில் இருந்தன. அதற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு உருவாகவே அப்போது அந்த மசோதா கைவிடப்பட்டது. ஆனால், விடாக்கண்டனான மத்திய அரசு மீண்டும் 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் கொண்டு வர முயன்றது. அப்போதும் எதிர்ப்பு வலுக்கவே இந்த கொரோனா காலத்தில் சத்தமில்லாமல் இந்த மசோதாவைத் தாக்கல் செய்திருக்கிறது.

அதுவும் இந்த மசோதா தாக்கல் செய்த மூன்று வார காலத்துக்குள்ளாக கருத்துகள் சொல்ல வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன்!  கடுமையான தொற்றுநோய் காலத்தில் இந்த கால அவகாசம் போதாது என்றே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் இறுதிவரையாவது இந்தக் கருத்துக் கேட்புக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் உள்ளிட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மின்சாரத்துறையை மாநில அரசுகளின் கையிலிருந்து மத்திய அரசின் கைப்பிடிக்குள் கொண்டு செல்வதற்கான முயற்சியாகவும், மின்சார உற்பத்தி - மின்சாரப் பகிர்மானம் போன்றவற்றிலும் தனியாரை அனுமதித்து, ஒட்டுமொத்த மின்சாரத் துறையையுமே தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கான எத்தனமாகவே அரசியல் நோக்கர்கள் இந்தப் புதிய மசோதாவைப் பார்க்கிறார்கள்.

இந்தப் புதிய வரைவு மசோதாவின் முக்கிய அம்சங்களை கொள்கை சார்ந்த திருத்தங்கள் (Policy Amendments), செயலாக்கம் சார்ந்த திருத்தங்கள் (Functional Amendments) என்று இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.கொள்கை சார்ந்த திருத்தங்களில் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்திக் கேந்திரங்கள் தொடர்பான திருத்தங்கள் முக்கியமானவை.

தேசிய புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்திக் கொள்கையை வடிவமைப்பதற்கான முயற்சியில் இனி மத்திய அரசும் ஒரு பங்கேற்பாளராக இருக்கும். மாநில அரசின் உதவியுடன் நிகழும் இந்த நடவடிக்கைகளில் மின்சார உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தியாளர்களுக்கு மானியங்கள் வழங்குவது தொடர்பாக பல்வேறு முடிவுகளை மத்திய அரசு எடுக்கும் என்கிறார்கள்.

மின்சார உற்பத்தியில் தனியாரை நுழைத்து, அவர்களுக்குத் தேவையான உட்கட்டுமானங்களைச் செய்து தருவது, அவர்களிடம் மின்சாரத்தை வாங்கி அதனை விநியோகிப்பது, அவர்களுக்கு மானியங்களை வாரி வழங்குவது அரசின் புதிய கொள்கை என்கிறார்கள். இத்தனைக் காலமும் அரசிடம் இருந்த நீர்மின் நிலையங்கள் இனி தனியார் வசம் ஒப்படைக்கப்படப் போவதன் புனுகு பூசிய சொற்கள்தான் இந்தத் திருத்தம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

எல்லை கடந்த மின்சார விற்பனை என்பதும் முக்கியமான கொள்கை முடிவுகளில் ஒன்று. அதாவது இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரம் இனி இந்தியர்களுக்கு மட்டுமே கிடையாது. தனியார் முதலாளி களிடம் மின்சார உற்பத்தி போனால் அவர்களுக்கு இந்தியனும் ஒன்றுதான் மற்ற நாட்டவர்களும் ஒன்றுதான்.

இந்த க்ராஸ் பார்டர் ட்ரேட் என்பதன் சிக்கல்கள் என்னென்னவாக இருக்கும் என்று இப்போதைக்குச் சொல்வது கஷ்டம். ஆனால், உள்நாட்டு வணிகத்திலேயே ஆயிரத்தெட்டு பஞ்சாயத்து என்றால் அந்நிய வணிகத்தில் என்னென்ன சிக்கல்கள் வருமோ தெரியவில்லை.இன்னொரு முக்கிய கொள்கை முடிவு - மின்சார ஒப்பந்த விவகாரங்களுக்கான ஆணையம் (Electricity Contract Enforcement Authority - ECEA) எனப்படும் அமைப்பு ஒன்று உருவாக்கப்படுவது தொடர்பானது.

இதற்கான சட்ட வரைவு ஒன்று கடந்த 2014ம் ஆண்டே கொண்டுவரப்பட்டது. இதில், ஜென்கோஸ் (Generation Companies) எனப்
படும் மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கும், டிஸ்காம்ஸ் (Distribution Companies) எனப்படும் மின்சாரப் பகிர்மான நிறுவனங்களுக்கும் இடையே உருவாகும் சட்ட சிக்கல்களுக்குத் தீர்ப்பு சொல்வது தொடர்பான ஆணையமாக இது இருக்கும் என்கிறார்கள்.

ஏற்கெனவே மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (Appellate Tribunal - APTEL) போன்ற நிறுவனங்களும், அதில் முறையான நியாயம் கிடைக்கவில்லை எனில் உச்சநீதி மன்றத்தை அணுகலாம் என்ற ஏற்பாடும் இருக்கும் நிலையில் இந்த புதிய சட்ட அமைப்பு குழப்பத்தையே ஏற்படுத்தும் என்கிறார்கள். தவிர, மாநில அரசு கையில் இருக்கும் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுவதற்கான அதிகாரமாகவும் இது இருக்கும் என்று அஞ்சுகிறார்கள்.

நடைமுறை சார்ந்த மாற்றங்களிலும் நிறைய வில்லங்கங்கள் இருக்கின்றன. குறிப்பாக, மின்சாரக் கட்டண வசூலிப்பு, ஆணையங்கள், தீர்ப்பாயங்களுக்கான ஆட்கள் தேர்வு தொடர்பான விதிமுறைகள், மானியங்கள் வழங்குவது தொடர்பான விதிமுறைகள், கட்டண விகிதங்களுக்கான கால நிர்ணயம், மின்சாரப் பகிர்வில் துணை நிறுவனங்களை அனுமதிப்பது, துணை லைசென்ஸ்கள் வழங்குவது, கோழிக் கடைகளுக்கு ஃப்ரான்சிஸ் அனுமதிப்பது போன்று மின்சாரப் பகிர்மான நிறுவனங்களுக்கு உள்ளூர் பிரமுகர்களைக் கொண்டு ஃபிரான்சிஸ்களை அனுமதிப்பது உட்பட பல்வேறு முக்கியமான திருத்தங்கள் இதில் உள்ளன.

மின்சாரம் போன்ற அடிப்படைக் கட்டுமானத் தொழில்கள் அரசின் கைகளில் இருப்பதுதான் என்றுமே நல்லது. அது தனியாருக்குத் தாரை வார்க்கப்படும்போது மக்கள் நலன், தேச நலன் என்பதைவிடவும் அந்நிறுவனத்தின் நலனே முதன்மைப்படுத்தப்படும். இது நிச்சயம் நாட்டுக்கு நல்லது அல்ல.

எளிய மனிதர்களுக்குப் புரியும் இந்த விஷயங்கள்கூட நம் ஆளும் தரப்புக்குப் புரியாதா என்ன?

அதெல்லாம் நன்றாகவே புரியும். ஆனால், இவர்கள் காரியக்காரர்கள். மின்சாரத் துறையில் குறைபாடுகள் இருந்தால் அதனைக் களைவது எப்படி என்று யோசிப்பதுதான் நல்ல அணுகுமுறையே தவிர தன் பொறுப்பிலிருந்து கைகழுவுவது அல்ல. அரசு தனக்கு வருமானம் வரச் சாத்தியமான தொழில்களை ஒவ்வொன்றாக தனியாருக்குத் தாரை வார்த்துக்கொடுத்ததன் விளைவுகளைத்தான் இந்த கொரோனா நாட்களில் அனுபவிக்கிறோமே!

கையில் அடுத்த மாத செலவுக்குக் கூட காசில்லாமல், மதுக்கடைகளைத் திறந்தால்தான் ஊழியர்களுக்குச் சம்பளமே கொடுக்க இயலும் என்ற நிலையில் அரசின் கஜானா சென்றதற்கான காரணங்களில் பிரதானமானது இப்படி அரசுக்கு வருவாய் ஏற்படுத்தும் நிறுவனங்களை எல்லாம் விற்று ஏப்பம்
விட்டதுதானே..?இதை எல்லாம் நன்கு புரிந்திருந்தும் நமது மத்திய, மாநில அரசுகள் இதில் விடாப்பிடியாக இருப்பதுதான் நம் காலத்தின்
ஆகப் பெரிய துயரம்.

இளங்கோ கிருஷ்ணன்