சொந்த தேசத்தின் அகதிகள்!



லாக்டவுனால் அதிகம் பாதிக்கப்பட்டது புலம்பெயர் தொழிலாளர்கள்தான்...
இவர்களைப் புரிந்துகொள்வது எப்படி?தமிழ்நாட்டில் தள்ளுவண்டிக் கடைகளில் ஃப்ரைட் ரைஸ் வறுக்கும் இளைஞன் முதல் டிராஃபிக் சிக்னல்களில் பலூன் விற்கும் சிறுமி வரை எல்லாருமே புலம்பெயர் தொழிலாளர்கள்தான். குடும்பத்தைக் காக்க புலம்பெயர்ந்து வாழும் இவர்களுக்கு நாம் வைத்திருக்கும் பொதுப்பெயர் இந்திக்காரன், வடநாட்டுக்காரன். இந்தியாவின் உழைக்கும் வர்க்கத்தில் இவர்களின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம். பொருளாதார உற்பத்தியில் 10 சதவீதம்.

சுருக்கமாகச் சொல்வதென்றால், சமூக விமர்சகரான ராஜன் குறை குறிப்பிடுவது போல்,  இம்மக்கள் ‘கண்ணுக்குப் புலப்படும்  மக்கள்... ஆனால், நம் கருத்துக்குப் புலப்படாத மக்கள்...’ இந்திய தேசத்துக்கே முதுகெலும்பாக இருக்கும் இம்மக்களை வெளிச்சம் போட்டுக்காட்டியது கொரோனாதான். பிழைக்க வந்த இடத்தில் அகதிகளாக இம்மக்கள், அதுவும் சொந்த நாட்டிலேயே அல்லல்பட்டது கொரோனா நோயைவிட கொடுமை.

‘‘இந்தியா முழுக்க லாக்டவுனால் அதிகம் பாதிக்கப்பட்டது புலம்பெயர் தொழிலாளர்கள்தான். ஒரு மனிதன் நோயால் இறந்தால் மரணம். பட்டினியால் இறந்தால் அதை கொலை என்றுதான் சொல்ல வேண்டும்...’’ அழுத்தத்துடன் பேச ஆரம்பித்தார் சென்னை லயோலா கல்லூரியில் ஒரு பிரிவாக இயங்கும் சமூக அறிவியலுக்கான  ஆய்வு மையத்தின் பேராசிரியரும் புலம்பெயர் தொழிலாளர் தொடர்பாக பல்வேறு  ஆய்வுகளைச் செய்துகொண்டிருப்பவருமான பெர்னார்ட் டி சாமி.

‘‘சென்னை மவுலிவாக்கத்தில் புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்தபோதுதான் வடநாட்டுத் தொழிலாளர்களைப் பற்றிய கவனம் தமிழக அரசுக்கு வந்தது. அப்போது அரசே ஓர் ஆய்வை மேற்கொண்டது. அதில் தமிழ்நாட்டில் மட்டும் வடநாட்டுத் தொழிலாளர்கள் சுமார் 10 லட்சம் பேர் இருப்பதாக அரசு ஒப்புக்கொண்டது. இது கடந்த ஆண்டுகளில் அதிகரித்திருக்கலாம்...’’ என்ற பெர்னார்ட், இந்திய அளவில் புலம்பெயர்வின் விவரங்களைப் பட்டியலிட்டார்.

‘‘இந்தியாவிற்குள் சுமார் 13 கோடிப் பேர் வேலைக்காக பல்வேறு மாநிலங்களுக்கும் மாநிலங்களுக்கு உள்ளேயும் இடம் பெயர்கின்றனர். இடம்பெயர்வதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அவர்களைச் சொந்த இடத்திலிருந்து எது வெளியே தள்ளுகிறது..? அடுத்து , அப்படி தள்ளப்பட்டவர்களை எந்த இடம் ஈர்க்கிறது..?

இந்த அடிப்படையில் பார்க்கும்போது சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் அதிகம் தம் மக்களைத் தள்ளும் மாநிலங்களாக இருக்கின்றன. ஈர்க்கும் மாநிலங்களாக மகாராஷ்டிரா, தில்லி, குஜராத், கேரளா, தமிழ்நாடு போன்றவை வருகின்றன.
சொந்த மாநிலத்தில் வேலையில்லா நிலை, குறைந்த ஊதியம், ஜமீன் முறை, சாதிக் கொடுங்கோன்மை போன்ற விஷயங்கள் இந்தத் தொழிலாளர்களை அதிகம் தள்ளக்கூடிய காரணிகள்...’’ என்கிற பெர்னார்ட், அரசு இந்தத் தொழிலாளர்கள் தொடர்பாக செயற்பட்ட விதத்தையும் விவரித்தார்.
‘‘புலம்பெயர் தொழிலாளர்களைக் காக்க சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், இந்தச் சட்டத்தைக் கொண்டு அவர்களைக் காப்பது கடினமாகவே உள்ளது.

உதாரணத்துக்கு, புலம்பெயரும் தொழிலாளர்களை அதிகம் வெளித்தள்ளும் மாநிலமான ஒடிசா அந்தத் தொழிலாளர்களின் நலனைக் காக்க 1975ல் இயற்றிய ஒப்பந்தக் கூலி சட்டத்தைச் சொல்லலாம். இதை அடிப்படையாக வைத்தே மத்திய அரசும் 1979ல் புலம்பெயரும் தொழிலாளர்
களுக்கான சட்டத்தை இயற்றியது. ஆனால், இந்தச் சட்டத்தை பல மாநிலங்கள் கண்டும் காணாததுபோல இருக்கின்றன.

2015ல் புலம்பெயர் தொழிலாளர்களைக் காப்பதற்காக பாஜக அரசு இந்தச் சட்டத்தில் ஒரு திருத்தம் செய்தது. இதைக்கொண்டு வந்தவர் அப்போது நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தில் அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு. ‘புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பிரத்யேகமான சட்டங்கள் தேவையில்லை, தொழிலாளர்களுக்காக இருக்கும் மற்ற சட்டங்கள் எல்லாமே இவர்களுக்கும் பொருந்தும்’ என்பதே அந்தத் திருத்தம்.

ஆனாலும் அந்தத் தொழிலாளர் சட்டத்தின் பாதுகாப்பு அம்சங்கள் கூட புலம்பெயர் தொழிலாளர்களைப் பாதுகாக்கவில்லை என்பதைத்தான் காணமுடிகிறது. உதாரணமாக, குறைந்தபட்ச கூலி, தொழிற்சாலையில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள், அவர்களை ஒரு மாநிலம் பதிவு செய்வது என்பது எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டன. இந்த விஷயத்தில் கேரளா, ஒடிசா மாநிலங்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன என்பதைத்தான் கொரோனா காலத்தில் பார்க்கிறோம்...’’ என்கிற பெர்னார்ட் இந்த இரு மாநிலங்கள் எடுத்த முயற்சிகளையும் சொன்னார்.

‘‘கேரளாவில் பாதிக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்காக சுமார் 15,000 முகாம்கள் திறக்கப்பட்டன. ஒரு தொழிலாளிகூட பசியால் வாடக்கூடாது என்பதற்காக கம்யூனிட்டி கிச்சன் ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல ஒடிசா மாநிலத்தில் இருந்து வெளியே போகும் தொழிலாளர்கள் பற்றிய விவரங்கள் அந்த மாநிலத்தின் ஏடுகளில் இருக்கிறது. ஒரு ஒடிசா தொழிலாளி புலம்பெயரும்போது அவரது குழந்தைகளை அரசு நடத்தும் பள்ளிக்கூடம் மற்றும் விடுதிகளில் விட்டுச் செல்லலாம். அதேமாதிரி சென்ற இடத்தில் ஏற்படும் பிரச்னைகளையும் ஒடிசா அரசு கேட்டறிந்து, அந்தப் பிரச்னைகளைத் தீர்க்க களத்தில் நிற்கிறது.

இதையெல்லாம் பிற மாநிலங்களும் பின்பற்றும்போதுதான் நம் தேவைகளை முகம் சுளிக்காமல் பூர்த்தி செய்யும் புலம்பெயர் தொழிலாளர்களைக் காக்கமுடியும்...’’ என்ற பெர்னார்ட்டிடம், ‘வடநாட்டுத் தொழிலாளர்களால்தான் தமிழர்களுக்கு இங்கு வேலை இல்லை என்ற பேச்சு இருக்கிறதே...’ என்றோம்.

‘‘தொழிலாளர்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, முழுமையான தொழில் திறனுள்ள தொழிலாளர்கள். இரண்டாவது, பாதி திறனுள்ள தொழிலாளர்கள். மூன்றாவது, திறனே இல்லாத தொழிலாளர்கள். உழைப்புக்கான தேவை மற்றும் அதை பூர்த்தி செய்யக்கூடிய வசதியைப் பொறுத்தே தொழிலாளர்கள் இடம்பெயர்வார்கள்.

தமிழ்நாட்டில் மூன்று வகையிலுமே தொழிலாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்துக்கு வந்து வேலை செய்யும் வடநாட்டுத் தொழிலாளர்களில் கடைசி இரண்டு பிரிவில் உள்ளவர்களே அதிகம். உலகமயமாக்கலின்போது தமிழகத்தில் கட்டடத் தொழில் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு அதிகமான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இதை பூர்த்தி செய்வதற்காக கடைசி இரண்டு பிரிவில் உள்ள தொழிலாளர்களே போதுமானது என்று முதலாளிகள் நினைத்திருக்கலாம். இதனால்தான் இவர்களுக்கு கொடுக்கும் கூலியும் குறைவாக இருந்தது.

ஆனால், போகப்போக இவர்களும் முழுத்திறனுள்ள தொழிலாளர்களாக மாறினார்கள். ஆனாலும் குறைந்த கூலியையே முதலாளிகள் இவர்களுக்குக் கொடுக்கின்றனர். இதுவும் ஒருவகை சுரண்டல்தான். இதனால் திறனுள்ள தமிழ் தொழிலாளிகள் பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.
உதாரணமாக கர்நாடகா, மகாராஷ்டிரா, சூரத் போன்ற இடங்களுக்கு தமிழர்கள் அதிகமாக வேலைக்குச் சென்றார்கள். கர்நாடகத்தில் உழைக்கும் வர்க்கத்தில் சுமார் 40 சதவீதத்தினர் தமிழர்கள்தான். இங்கே கிடைக்கும் கூலியைவிட அங்கே அதிகம். அதேபோல கேரளாவிலும் தமிழர்களுக்குக் கூலி அதிகம். ஒருநாளில் 1000 ரூபாயாவது சம்பாதித்துவிடலாம்.

ஆகவே, எங்கே உழைப்புக்கான தேவையும் அதற்கேற்ப கூலியும் இருக்கிறதோ அங்கேதான் தொழிலாளர்கள் இடம்பெயர்வார்கள். இதைவிட்டுவிட்டு தமிழர்களின் வேலையை வடநாட்டவர்கள் தட்டிப்பறித்துவிட்டார்கள் என்பது எல்லாம் உழைப்பின் மதிப்பை மதிப்பிட முடியாதவர்களின் வீண்பேச்சு...’’ என்று காட்டமாக முடித்தார் பெர்னார்ட்.                         

வர்க்க வித்தியாசத்தை நாம் பார்க்கவேண்டும்...

வறுமை, கிராமப்புற மக்களின் இடப்பெயர்வு குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர் பி.சாய்நாத். ‘ராமன் மகசேசே விருது’ பெற்றவர். புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து மே 13 அன்று இவர் ‘First Post’ இணைய இதழுக்கு பேட்டி ஒன்று அளித்தார். அதன் சுருக்கப்பட்ட
வடிவம் இது:

இடப்பெயர்ச்சி பல பத்தாண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே... அவர்களின் வாழ்நிலை ஏற்கெனவே மோசமாகத்தானே இருக்கிறது..?
பலவிதமான இடப்பெயர்வுகள் உண்டு. அதில் உள்ள வர்க்க வித்தியாசத்தை நீங்கள் பார்க்க வேண்டும். நான் சென்னையில் பிறந்தேன். உயர் கல்வியை புதுதில்லியில் முடித்தேன். அங்கு நான்கு ஆண்டுகள் இருந்தேன். பின்பு மும்பைக்குச் சென்று 36 ஆண்டுகளாக வசித்து வருகிறேன்.

ஒவ்வொரு முறை இடம் பெயர்ந்தபோதும், அதனால் நான் பலன் அடைந்தேன். ஏனெனில் நான் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன். குறிப்பிட்ட வர்க்கத்தைச் சார்ந்தவன். எனக்கு சமூக மூலதனமும், வலைப் பின்னல்களும் உண்டு. பருவ காலங்களில் நடக்கும் இடப்பெயர்வுகள் (seasonal migrants) உள்ளன. உதாரணமாக மகாராஷ்டிராவில் உள்ள கரும்பு விவசாயிகள் கர்நாடக மாநிலத்தில் ஐந்து மாதங்கள் மட்டுமே வேலை செய்து, பிறகு தங்கள் சொந்த கிராமங்களுக்குச் செல்வார்கள்.

வேறு சில பிரிவினர் உண்டு. இவர்கள் அடித்தளமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (footloose migrant workers). இவர்கள்தான் நமது கவனத்திற்கு உரியவர்கள்.அவர்கள் இறுதியாகச் செல்லும் இடம் எதுவென்று அவர்களுக்குத் தெளிவாகத் தெரியாது. மும்பையில் ஓர் ஒப்பந்தக்கார
ரிடம் மூன்று மாதங்கள் ஒருவர் பணிபுரிவார். அதன்பிறகு வேறு ஒருவரிடம், மகாராஷ்டிராவில் எங்கோ ஓரிடத்தில் அவர் இருப்பார். இப்படியே இது தொடரும். அவர்களின் வாழ்க்கை கொடூரமானது. நிச்சயமில்லாதது. இப்படி இலட்சக்கணக்கானவர்கள் உள்ளனர்.

இடப்பெயர்வுக்கு முக்கியமான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்..?

விவசாயத்தைச் சிதைத்துவிட்டோம். இதனால் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் நிலைகுலைந்தது. கைத்தறி, கைவினைப்பொருட்கள் போன்றவை விவசாயத்திற்கு அடுத்த பெரிய தொழில்கள். மீனவர்கள், கள் இறக்குபவர்கள், பொம்மை செய்பவர்கள், நெசவாளர்கள் என ஒவ்வொருவரின் தொழிலும் போனபிறகு அவர்கள் வேறு என்ன செய்ய முடியும்? வெகு காலத்திற்கு முன்பே கிராமங்களில் அவர்களுக்கு இருந்த வாய்ப்புகளை அழித்து விட்டோம். இதன் மூலம் நமக்கு மலிவான உழைப்பைத் தரும் படையை உருவாக்கியுள்ளோம்.

வீட்டிற்குத் திரும்பும் பெரும்பாலான தொழிலாளர்கள், இளைஞர்கள் கோபமாகப் போகிறார்கள். நாம் எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறோமா..?
எரிமலை வெடித்துக் கொண்டு இருக்கிறது. அதைப் பார்க்காமல் இருக்க நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். அரசாங்கங்களின், ஊடகங்களின், ஆலை முதலாளிகளின் ஒரு சமூகமாக நம்முடைய பாசாங்கு (hypocrisy) மாறியிருக்கிறது.

மார்ச் 26ம் தேதி வரை நமக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து தெரியாது. திடீரென்று இலட்சக்கணக்கான தொழிலாளர்களை நாம் சாலைகளில் பார்த்தோம். அதை நாம் உணர்ந்தோம். ஏனெனில் அவர்களுடைய சேவை நமக்கு கிட்டவில்லை. 26ம் தேதி வரை அவர்களைத் திட்டிக்கொண்டிருந்தோம். சமமான உரிமைகள் உள்ள மனிதர்களாக அவர்களை நாம் நினைக்கவில்லை.

ஒரு பழைய பழமொழி உண்டு. ‘ஏழைகள் படித்துவிட்டால், பணக்காரர்கள் பல்லக்குத் தூக்கிகளை இழப்பார்கள்’. திடீரென்று நாம் பல்லக்குத் தூக்கிகளை இழந்து விட்டோம்!

இடப்பெயர்வு பெண்களையும், குழந்தைகளையும் எப்படி குறிப்பாக பாதிக்கிறது..?

ஊட்டச்சத்துக்கு பற்றாக்குறை ஏற்படும் போது பெண்களும், சிறுமிகளும்தான் மோசமாக பாதிக்கப் படுகிறார்கள். சுகாதாரக் குறியீட்டில் நம்ப முடியாத அளவுக்கு பாதிப்புக்கு ஆளாகிறார்கள். நாடு முழுதும் உள்ள இலட்சக்கணக்கான சிறுமிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் கிடைத்து வந்தது. திடீரென்று பள்ளிகள் மூடப்பட்டன; சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படவில்லை.

இவர்கள் நிலைமைகள் மேம்பட என்ன செய்ய வேண்டும்..?

நாம் இப்போது தேர்ந்தெடுத்துள்ள வளர்ச்சிப் பாதையிலிருந்து ஒட்டுமொத்தமாக தொடர்பற்று (delink) போக வேண்டும். சமத்துவமின்மைக்கு எதிராக பெருந்தாக்குதலை நடத்த வேண்டும். சமமற்ற சூழலின் காரணமாகவே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அல்லல்படுகிறார்கள்.‘அனைவருக்கும் நீதி: சமூக,பொருளாதார, அரசியல்...’ என்று அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளவைகளை அடையாமல் இதைச் செய்ய முடியாது.

சமூகம், பொருளாதாரம் என்பது அரசியலுக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது யதேச்சையானது அல்ல. அரசியலமைப்பை எழுதியவர்களுக்கு தெளிவான முன்னுரிமை இருந்திருக்கிறது என்றே கருதுகிறேன். அரசியலமைப்பே வழிகாட்டுகிறது.இந்திய மேட்டிமை குடிகளும், அரசாங்கமும் எப்பொழுதும் போலவே செல்லலாம் என்று நினைக்கிறது; அந்த நம்பிக்கை நம்ப முடியாத அளவுக்கு கொடுங்கோன்மைக்கும் அடக்குமுறைக்கும், வன்முறைக்குமே இட்டுச் செல்லும்!

டி.ரஞ்சித்