நாய்க்கு கருணை காட்டிய பாடகி!
பிரேசிலைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகி, டாட்டி கேர்ள். ஏழ்மையான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர். அவரது நான்கு வயதிலேயே அம்மா இறந்துவிட்டார். பன்னிரண்டு வயதில் தங்குவதற்கு வீடு இல்லாமல், ஒரு நாடோடி போல வாழ்ந்தார். சிறு வயதில் அனுபவித்த வறுமையும், கடினமும் அவரை இசையின் பக்கம் நகர்த்தியது. பிரேசிலில் இருந்த முன்னணி இசைக்குழுக்களில் சேர்ந்து பாட ஆரம்பித்தார்.
 பாடுவது மட்டுமல்லாமல், இசையமைக்கவும் கற்றுக்கொண்டார். இதுபோக பிசினஸும் செய்து வருகிறார். இன்று பிரேசிலின் முன்னணி பாடகி, பிசினஸ்வுமன், இசையமைப்பாளர், இன்ஸ்டா பிரபலம் என பன்முக ஆளுமையாக வலம் வருகிறார். இன்ஸ்டாகிராமில் டாட்டியை 23 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். விஷயம் இதுவல்ல. கடந்த வாரம் பிரேசிலில் டாட்டியின் இசை நிகழ்ச்சி நடந்தது. பத்தாயிரத்துக்கு மேலான அவரது ரசிகர்கள் அந்த இசை நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். டாட்டியின் மேடைக்கு அருகில் ஒரு நாய் இருந்தது.
இசை நிகழ்ச்சியின் இடையே ரசிகர்களை உற்சாகப்படுத்த பட்டாசுகள் வெடிப்பது வழக்கம். டாட்டி அந்த நாயைப் பார்த்துவிட்டார். நாய் பயந்துவிடும் என்பதால் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் என்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் டாட்டி சொல்லிவிட்டார். நாயின் மீது டாட்டி காட்டிய அன்புக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
த.சக்திவேல்
|