ஆயிரம் வெள்ளப் பெருக்கை தாங்கி நிற்கும் கோயில்!



300 அல்ல 950 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது

திருநெல்வேலி என்றதும் முதலில் நெல்லையப்பர் கோயில்தான் அனைவரின் நினைவுகளிலும் நிழலாடும். இதற்கடுத்து பிரசித்தி பெற்றது தாமிரபரணி ஆற்றின் நடுவில் அமைந்துள்ள குறுக்குத்துறை முருகன் கோயில்! 
எப்போதெல்லாம் தாமிரபரணியில் வெள்ளம் பாய்ந்தோடுகிறதோ அப்போதெல்லாம் அனைத்து ஊடகங்களிலும் இந்தக் குறுக்குத்துறை முருகன் கோயிலே முதன்மையாகக் காட்டப்படும். அந்தவகையில் தமிழகத்திலுள்ள அனைவருக்கும் பரிச்சயமான கோயில் இது.   

இந்தக் கோயில், 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது. கோயிலின் தலவரலாற்றிலும்கூட 300 ஆண்டுகள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இக்கோயில் 950 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை நிரூபித்துள்ளனர் நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர்களும், ஆய்வு மாணவி ஒருவரும்.
இதுமட்டுமல்ல. இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகளாக எப்படி ஆற்றின் வெள்ளத்தைத் தாங்கி அசைக்க முடியாததாக நிற்கிறது என்பதையும் நம் முன்னோர்களின் தொழில்நுட்பத்தையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.  

இதுகுறித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தொல்லியல் துறைத் தலைவர் பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியத்திடம் பேசினோம். ‘‘முதல்ல இந்த ஆய்வு எப்படி ஆரம்பிச்சதுனு சொல்லிடுறேன். 

நான் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துல பயோடெக்னாலஜி துறை பேராசிரியராக பணியாற்றுறேன். ஆரம்பத்துல மூலக்கூறு வைராலஜியில் பிஹெச்.டி முடிச்சிட்டு அமெரிக்காவில் பத்து ஆண்டுகள் வேலை செய்தேன். அப்புறம், 2007ம் ஆண்டில் இங்க பேராசிரியராக பணியில் சேர்ந்தேன்.

எனக்கு தொல்லியல் மீது அதீத ஈடுபாடு உண்டு. பல நாடுகளுக்கும், ஊர்களுக்கும் பயணிக்கிறப்ப தொல்லியல் இடங்களைப் பார்க்கிறதும், புரிஞ்சுக்க முயற்சி செய்றதுமாக இருந்தேன்.

இப்படி இருந்த சமயம், 2019ம் ஆண்டு துணைவேந்தராக இருந்த பேராசிரியர் பிச்சுமணி, சென்டர் ஆஃப் ஆர்க்கியாலஜினு ஒரு தொல்லியல் மையத்தை பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பிச்சார்.

காரணம், திருநெல்வேலி அருகே ஆதிச்சநல்லூர், சிவகளையில் அகழாய்வுகள் பெரிய அளவில் நடந்திட்டு வருவதுதான். அதனால், இந்த மையத்தைத் தொடங்கினார். நானும் விடுமுறை நாட்கள்ல என் ஊருக்குப் போகும்போது வழியில் உள்ள சிவகளைக்கும், ஆதிச்சநல்லூருக்கும் போயிட்டு போவேன். 

அதனால் இந்த மையத்திற்கு என்னை இயக்குனராக நியமிச்சார். இதன்பிறகு முனைவர் என்.சந்திரசேகர் துணைவேந்தராக வந்ததும் அவர் இதை ஒரு துறையாக ஆரம்பிப்போம்னு 2023ம் ஆண்டு எம்.ஏ. கோர்ஸுடன் தொல்லியல் துறையைத் தொடங்கினார்.  

இதுல நிறைய மாணவ - மாணவிகள் சேர்ந்தாங்க. என் ஆர்வத்தால் இந்தத் துறைக்கும் என்னையே தலைவராக நியமிச்சாங்க. இதுல இரண்டாமாண்டு படிக்கிற மாணவ - மாணவிகள் ஆராய்ச்சி மேற்கொள்ளணும். அப்பதான் மீனா என்கிற மாணவிக்கு அவள் வசிக்கிற பகுதியிலேயே ஒரு ஆய்வு செய்யும்விதமாக குறுக்குத்துறை கோயிலை பண்ணும்படி அறிவுறுத்தினேன்.

ஏன் குறுக்குத்துறைனா, இந்த ஊரைச் சேர்ந்த என் நண்பர் பேராசிரியர் நமசிவாயம் கணேஷ்பாண்டியன் ஜப்பான்ல இருக்கார். அவர்தான் முதல்முதலாக என்னை குறுக்குத்துறை கோயிலுக்கு அழைச்சிட்டு போனார். அவர் கோயில்ல யாகமும், தரிசனமும் செய்ய வந்தார். எனக்கு அதில் நம்பிக்கை கிடையாது.

அதனால், நான் கோயிலை சுத்திப் பார்த்தேன். ஐம்பது முறையாவது சுத்தியிருப்பேன். ரொம்ப வித்தியாசமாக இருந்தது. எப்படி ஆற்றுக்கு நடுவுல இவ்வளவு நாட்கள் தாக்குப்பிடிச்சு இந்தக் கோயில் நிற்குதுனு ஒரு கேள்வி எழுந்தது. அப்ப அங்க 300 ஆண்டுகள் பழமையான கோயில்னு எழுதி வச்சிருந்தாங்க. 

ஆனா, எனக்கு இந்தக் கோயில் இன்னும் பழமையானதாக இருக்கும்னு மனசுல தோணுச்சு. அதனால், இதனை ஆய்வு பண்ணச் சொல்லி மாணவி மீனாவிடம் கொடுத்தேன். ஆரம்பத்துல அந்த மாணவிக்கும் இந்த ஆய்வு பிடிக்கல. பெரிய கோயிலாக எடுத்துப் பண்ணணும்னு ஆசைப்பட்டாங்க.

ஆனா, எனக்காக ஆய்வை மேற்கொண்டாங்க. பிறகு ஆய்வுல கிடைச்ச தகவல்களைப் பார்த்ததும் மாணவி மீனாவுக்கு அவ்வளவு ஆச்சரியம். இதனால், ரொம்ப ஆர்வமாகிட்டாங்க. ஆரம்பத்துல அந்தக் கோயில் முழுவதும் ஆய்வு பண்ணினதுல முந்நூறு, நானூறு ஆண்டுக்கான கல்வெட்டுகள்தான் கிடைச்சது. வேறெதுவும் கிடைக்கல.

அப்புறம், கடைசியாக வெளிப்பிரகாரத்தில் ஒரு கல்வெட்டு கிடைச்சது. மாணவி மீனாதான் அந்தக் கல்வெட்டை கொண்டு வந்தாங்க. இங்குள்ள என் பேராசிரியர்கள் முருகன், மதிவாணன் ஆகியோர் அதை படிக்க உதவினாங்க. பிறகு எல்லோரும் சேர்ந்து எத்தனை ஆண்டுகள் பழமையானதுனு பார்த்தோம். 

அப்பதான் 950 ஆண்டுகள்னு தெரிஞ்சது. பிறகு, கோயில்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி செதுக்கின தூண்கள் இருப்பதையும் கண்டுபிடிச்சோம். அதனால், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை உறுதிப்படுத்தினோம். எப்படி ஆயிரம் ஆண்டுகளாக தண்ணீருக்கு நடுவே இருக்குதுனு யோசிச்சோம். வேறு எதுவும் கல்வெட்டு கிடைக்குமானு கோயிலை சுத்திச் சுத்தி வந்தோம்.

அப்ப கருவறை விமானம் முழுவதும் கற்களால் ஆனதுனு தெரிஞ்சது. கல்லில் செதுக்கியிருந்தாலும் அது எங்கேயும் ஜாயிண்ட் பண்ணினமாதிரி தெரியல. நாங்க ஒரே கல்லில் விமானம் பண்ணியிருக்காங்கனு நினைச்சோம்.ஆனா, அப்படி இருக்கல. பல கற்களில் ரொம்ப வலுவானதாகவும், அழகாகவும் செதுக்கியிருக்காங்க. இது ரொம்ப ஆச்சரியமா இருந்தது. இதைவிட இன்னும் ஆச்சரியமான விஷயம் கோயிலின் தொழில்நுட்பங்கள்தான்...’’ என்கிறவர், அதுகுறித்து பேசினார்.

‘‘இந்தக் கோயிலை கணித முறைப்படி ரொம்ப நுட்பமாக பார்த்து பார்த்து உருவாக்கியிருக்காங்க. குறிப்பாக எண்கோணம், அறுங்கோணம், ஐங்கோணம், செவ்வகம் உள்ளிட்ட வடிவங்கள்ல கோயிலை அமைச்சிருக்காங்க.  முதல்ல கருவறையை செவ்வகமாக வடிவமைச்சிருக்காங்க. அது ரொம்ப சின்ன இடம்தான். ஐந்தடி அகலமும். ஏழு அடி நீளமும்தான் இருக்கும். அடுத்து கருவறையைச் சுற்றிலுள்ள சுவர் எண்கோணத்துல அமைக்கப்பட்டிருக்கு.

அப்படினா, இங்க ஒரு குன்று இருந்திருக்கணும். அந்த குன்றினை வெட்டி எண்கோணமாகப் பண்ணியிருக்கணும். அதாவது மலையைக் குடைந்து கருவறை பண்ணி
யிருக்காங்க. அதற்கு மேல் விமானம் வச்சிருக்காங்க. இதனால், அசைக்கமுடியாததாக இருக்கு. இன்னும் விரிவாக சொல்லணும்னா ஆற்றில் ஒரு குன்று இருந்திருக்கு. அதுல இந்தக் கோயிலினை குடைந்திருக்காங்கனு தெரிய வருது. இது ஒரு குடைவரைக் கோயில்.   

இந்த எண்கோணத்திற்கு அடுத்துள்ள வெளிப்புற சுவர் ஐங்கோணத்தால் ஆனது. இதில் பாறையை வெட்டி தூண் தூணாக செதுக்கியிருக்காங்க. இதற்கு அடுத்துள்ள வெளிச்சுவர் அறுகோணத்துல பண்ணியிருக்காங்க. இந்த அறுகோணம்தான் ரொம்ப வலுவானது. ஆற்றின் வெள்ளத்திலிருந்து கோயிலைக் காப்பாத்திட்டு வருவதும் இதுதான். 

அதாவது இந்த அறுகோண சுவரை படகின் முன்பகுதிபோல் உருவாக்கியிருக்காங்க. இதனால் வெள்ளம் வரும்போது இந்த அறுகோண சுவரின் படகு போலான பகுதியில் தண்ணீர முட்டும்.
தண்ணீரில் படகு செல்லும்போது அதன் முன்பகுதி தண்ணீரை கிழித்துச் செல்லும் இல்லையா… அதேபோல, இந்த அறுகோண சுவர் வெள்ளத் தண்ணீரை இரண்டாகப் பிரித்து அனுப்புது. இதனால் கோயில் வெள்ளத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கிறது.

அடுத்து கோயிலில் உள்ள அனைத்து தூண்களையும் ஒரு தூணை ஆணாகவும், ஒரு தூணை பெண்ணாகவும் உருவகப்படுத்தி  செய்திருக்காங்க. அதாவது ஒரு தூணில் இன்னொரு தூணை சொருகி வச்சிடுவாங்க. ஆங்கிலத்தில் இதற்கு இன்டர்லாக்கிங்னு பெயர்.ஆக, கோயில் முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டது போல் வடிவமைச்சிருக்காங்க. இதனால் எந்த நிலநடுக்கம், மழை வந்தாலும் தாங்கும் திறனை கோயில் பெற்றிருக்கு.

அப்புறம், இந்தக் கோயிலின் பள்ளமான பகுதினா அது கருவறைதான். கருவறையும் ஆற்றின் மட்டமும் ஒன்றாக இருக்கு. ஆற்றில் நீர்வரத்து அதிகரிச்சால் கருவறைக்குள் தண்ணீர் வந்திடும்.

இப்படி வரும் தண்ணீர் மெல்ல மெல்ல மேலே ஏறும்போது மேல்பகுதியில் துவாரங்கள் எதுவும் இல்லனா, தண்ணீர் நிலைப்படியைத் தாண்டும்போது காற்று அடைபட்டுவிடும். காற்று அடைபட்டால் கோயில் மிதக்க ஆரம்பிச்சிடும். இதனால் ஒரு வருடத்திலேயே கோயில் சின்னாபின்னமாகிவிடும்.

இதைத் தவிர்க்க வேண்டி கோயிலின் கருவறையைச் சுத்தி மேல்பகுதிகள்ல 24 துவாரங்கள் போட்டு வச்சிருக்காங்க. இதன்வழியாக காற்று அடைபடாமல் வெளியேறிடுது.
அதேநேரம் கோயில் முழுவதும் தண்ணீர் ஏறிநிற்கும். அந்தத் தண்ணீர் ஓடாது, உள்ளே தேங்கியிருக்கும். 

ஆக, ஆற்று வெள்ள அளவு மட்டமும், உள்ளே தேங்கி நிற்கும் தண்ணீரின் அளவும் ஒரே அளவில் இருக்கும். இந்நிலையில் கோயிலின் மொத்த எடை அதிகரிக்கும். இதனால், வெளியில் உள்ள வெள்ளத் தண்ணீரால் கோயிலை எதுவும் செய்யமுடியாது. அந்தக் காலத்திலேயே இவ்வளவு தொழில்நுட்பங்களையும் யோசிச்சு கோயிலை செதுக்கியிருக்காங்க.

அதேபோல், இந்தக் கோயில் அமைந்துள்ள குன்று சாதாரண கல் கிடையாது. ஒரு கிரானைட் குன்று. இந்த கிரானைட் கல்லின் கீழ்ப் பகுதியில் இன்டர்லாக்கிங் செய்திருக்காங்க. இதற்கு மேலே விமானம் அழுத்தி உட்கார்ந்திருக்கு. 

இதனால், கோயிலை அசைக்கமுடியாது. இதுவும் ஒரு தொழில்நுட்பம். இதுதவிர, இந்தக் கோயிலுக்கு மேற்கே இயற்கையாகவே ஒரு பெரிய குன்று இருக்கு. அதனை அனுமன் குன்றுனு சொல்றாங்க. வெள்ளம் அதிகம் வரும்போது இந்த அனுமன் குன்று தண்ணீரை மறைச்சு கொடுக்குது. இதையும் கவனத்தில் எடுத்து இந்தக் கோயில் குன்றினை தேர்ந்தெடுத்திருக்காங்க.

அப்ப இடத்தைத் தேர்வு செய்ததும் ஒரு தொழில்நுட்பம்தான். அதனால், தண்ணீரை எப்படி பிரிச்சிவிடணும், என்ன பண்ணணும்னு எல்லாம் முன்னாடி தெரிஞ்சே செய்திருக்காங்க. இதுக்கு ஒரு கல்வெட்டும் கிடைச்சது.  ஆனா, அது முழுவதும் இல்ல. அரைகுறையாக இருக்கு. இந்தக் கல்வெட்டும் 950 ஆண்டுகளுக்கு முன்பானது. இந்தக் காரணத்தினால்தான் கோயில் ஆயிரம் ஆண்டுகளாக பலம் வாய்ந்ததாகவும் ஆற்றின் வெள்ளத்தைத் தாங்கியபடியும் நிற்குது...’’ என்கிறவர், மேற்கொண்டு தொடர்ந்தார்.

‘‘இப்ப மேலே 24 துவாரங்கள் இருக்குனு சொன்னேன் இல்லையா... அந்த 24 துவாரங்கள்லயும் தொழில்நுட்பங்கள் அடங்கியிருக்கு. இந்தத் துவாரங்களிலிருந்து வரும் வெளிச்சம் கீழே விழும்போது வட்டமாக விழாது. ஏன்னா, இந்த துவாரங்களை கொஞ்சம் சாய்வாக போட்டிருக்காங்க. அதாவது சூரிய வெளிச்சம் இந்த சாய்வான துவாரங்கள் வழியாகப் போய் டியூப் லைட் மாதிரி பரவலான வெளிச்சத்தை அந்தப் பகுதியில் தரும். வெளிச்சத்தை பரவலாக்க இதுமாதிரி செய்திருக்காங்க.

அப்புறம், இந்தத் துவாரங்கள் வழியே காற்று வரும்போது சுருங்கி, பிறகு உள்ளே மறுபடியும் விரிவடையும். இதனால் வெளியிலிருந்து வரும் வெப்பக் காற்று உள்ளே வந்ததும் குளிர்ந்துவிடும். இதனால், கோயில் உள்புறத்தில் குளுமையாக இருக்கும். இதுதான் இன்றைய ஏசி மெக்கானிசம். இதனை அப்பவே யோசிச்சிருக்காங்க. அடுத்து, ஒரு பெரிய அறையில் நாம் பேசினால் எக்கோ அடிக்கும். ஆனா, இங்க துவாரங்கள் வழியாக காற்று வருவதால் பாடினாலோ அல்லது பேசினாலோ எக்கோ அடிக்காது. சத்தமும் சிறப்பாகக் கேட்கும்.

ஆக, இந்த துவாரங்கள் கோயிலை மிதக்கவிடாமல் ஒரே இடத்தில் இருக்க பயன்படுது. உள்ளே வெளிச்சத்தை பரவலாகக் கொண்டுவர பயன்படுது. வெப்பத்தைக் குறைக்க உதவுது. நல்ல காற்றோட்டமாக இருக்க உதவுது. எக்கோ எழாமல் இருக்க பயன்படுது. இப்படி ஐந்து வகை பயன்கள் அந்த 24 துவாரங்கள் வழியாக கிடைக்குது. இப்படியான ஒரு தொழில்நுட்பத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்திருப்பதுதான் ஆச்சரியம்.

இதைக் கட்டினவரை நினைத்துப் பார்த்தால் ரொம்ப வியப்பாக இருக்கு. இன்னைக்கு ஆற்றின் மேல் போடப்படும் பாலங்கள் எல்லாம் சீக்கிரமே பழுதாகிடுது. ஆனா, அன்னைக்கு ஆற்றின் உள்ளே இப்படியொரு கட்டுமானம் செய்திருப்பது தமிழர்களின் கட்டுமான அறிவுக்கும் தொன்மைக்கும் மிகப்பெரிய சான்றுனு சொல்லணும். இதில் முக்கியமான இன்னொரு விஷயம் - கோயில் வெளிப்பிரகாரத்தில் கிடைத்த கல்வெட்டுதான் 950 ஆண்டுகள். அப்படினா கருவறை எப்ப வந்ததுனு ஒரு கேள்வி வருது.

இது அதுக்கும் முன்னாடி இருந்திருக்கலாம் என்பதுதான் எங்கள் அனுமானம். வெளிப்பிரகாரத்திற்கு முன்னாடியே கருவறை வந்திருக்கும். அதனால், எங்கள் அனுமானத்தின்படி இந்தக் கோயில் 1,250 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும்னு நினைக்கிறோம். ஆனா, ஆதாரம் இல்ல. 

இதிலுள்ள பொறியியல் தொழில்நுட்பங்களை எல்லாம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஸ்டாலின் என்கிற பொறியியலாளரை அழைச்சிட்டுப் போய் டீகோட் செய்தோம். அப்படியாக வெள்ளத்தைத் தாங்கி நிற்கும் குறுக்குத் துறை கோயிலின் ரகசியங்களை வெளிக்கொண்டு வந்திருக்கோம்...’’ என சந்தோஷமாகச் சொல்கிறார் பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம்.
 
ராஜராஜசோழன் காலத்து எழுத்து இது!

இதுகுறித்து பேசிய மாணவி மீனா, ‘‘சார் சொன்னமாதிரி எம்.ஏ இரண்டாமாண்டு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க வேண்டிதான் இந்த ஆய்வினை கடந்த ஆறு மாசமாக பண்றேன். இதுசம்பந்தமாக நூல்களோ, கல்வெட்டு ஆதாரங்களோ எதுவும் இல்ல. அதனால், இந்தக் கோயில் ஆய்வினை முடிச்சிட்டு வேறு கோயில் செய்யலாம்னு நினைச்சிருந்தேன். ஆனா, ஆய்வு உள்ளே போனதும் கட்டடக்கலை சம்பந்தமாக சில ஆதாரங்கள் கிடைச்சது.

அப்பவே இது முந்நூறு ஆண்டுகள் இருக்காதுனு தோணுச்சு. ஏன்னா, பொதுவா கட்டடக்கலையில் சோழ, சேர, பாண்டியர் பாணிகள்னு இருக்கு. அப்படியாக சோழா கட்டடக்கலையும், பின்னாடி ஆண்ட பாண்டியர் கட்டடக்கலையும் கிடைச்சது. ஆனா, இதையும் உறுதியாகச் சொல்லமுடியாதுதான். 

ஏன்னா, பாண்டியர் காலத்தில் சோழா பாணி கட்டடக்கலையைப் பின்பற்றி இருக்கலாம்.இதனால், இன்னும் சீரியஸாக தேட ஆரம்பிச்சேன். அங்க 15 ஆற்றுமண்டபங்கள் இருக்குது. அங்கெல்லாம் தேடும்போது ஒரு மண்டபத்திற்கு அடியில் 950 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு கல்வெட்டு கிடைச்சது.

இந்தக் கல்வெட்டு ஆற்றின் படிக்கட்டில் இருந்தது. இந்தக் கல்வெட்டின் மேல் தூண் எழுப்பியிருக்காங்க. பாதி கல்வெட்டு தூணுக்கு அடியில் இருக்கு. பொதுவா, யாரும் எழுதிட்டு அதை அடியில் வைக்கமாட்டாங்க. அதனால், இந்தக் கோயிலின் கட்டுமானங்கள் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் உடைஞ்சிருக்கணும். இந்த உடைஞ்ச கற்களை மறுகட்டமைப்பு பண்ணும்போது மீண்டும் பயன்படுத்தியிருக்கணும்னு முடிவு பண்ணினோம்.

இந்தக் கல்வெட்டு எல்லாம் சின்ன சின்னதாகவே கிடைச்சிருக்கு. அதிலுள்ள எழுத்தைக் கொண்டே இது தஞ்சாவூர் பெரிய கோயில் எழுப்பினபோது இருந்த ராஜராஜ சோழன் காலத்து எழுத்து வகைனு தெரியுது. அதனால், குறுக்குத்துறை முருகன் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதுனு உறுதியா சொல்லலாம்...’’ என்கிறார் மாணவி மீனா.

பேராச்சி கண்ணன்