விளையாட்டுப் பசங்க!



இருக்கும் புகழை வைத்து நடிகர் / நடிகைகள் அரசியல், பிசினஸ்  உட்பட வெவ்வேறு துறைகளில் இறங்குவார்கள். சிலர் தங்கள் சிறுவயது விருப்பப்படி அவர்களே தேடிப்போவதும் உண்டு. அவர்களுக்குக் கிடைத்திருக்கும் புகழை வைத்து அவர்களைத் தேடி வருவதும் உண்டு.பரதம் தெரிந்தவர்களாக இருந்தால் அவர்கள் வசிக்கும் ஊரிலேயே பரதத்துக்கான பயிலகம் ஆரம்பித்து தங்களை பிசியாக வைத்துக்கொள்வார்கள். காஸ்டியூம் துறையில் ஆர்வமுள்ள நடிகர், நடிகைகள் சொந்தமாக துணிக்கடை ஆரம்பித்து தங்கள் வருமானத்தை பன்மடங்கு பெருக்கிக் கொள்வதுண்டு.

அப்படி விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்ட நடிகர், நடிகைகள் பலருண்டு. அந்த ஆர்வத்தின் வெளிப்பாடாக பல சினிமா நட்சத்திரங்கள் கிரிக்கெட், கால்பந்து, கபடி உட்பட பல்வேறு விளையாட்டு அணிகளை பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் சொந்தமாக வாங்கி வருமானம், புகழ் மேல் புகழ் பார்த்ததுண்டு. அவர்களைப் பற்றிய விவரங்களை சுருக்கமாகப் பார்க்கலாம்.

ஷாருக்கான்

பாலிவுட்டின் மூன்று கான் நடிகர்களில் முதன்மையானவர் ஷாருக்கான். சினிமா சார்ந்த பல்வேறு துறைகளில் இவர் முதலீடு செய்திருந்தாலும் அடிப்படையில் இவர் தீவிர விளையாட்டு ரசிகர். குறிப்பாக கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம். அதன் காரணமாகவே ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியை ஏலம் எடுத்து அந்த அணியை சொந்தமாக்கிக் கொண்டார். தவிர, டிரின் பேகோ நைட் ரைடரஸ் என்ற கிரிக்கெட் அணிக்கும் இவர்தான் உரிமையாளர்.

சமந்தா

தமிழ்நாட்டில் பிறந்து ஆந்திராவில் வெற்றிக்கொடி பறக்கவிட்டவர் சமந்தா ரூத் பிரபு. சொந்த வாழ்க்கையில் விவாகரத்து, ஆரோக்ய குறைபாடு என புயல் வீசினாலும், மன ஆரோக்யத்தில் வலிமை பெற்றவராக வலம் வந்து அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்பவர். தற்போது இவர் உலக பிக்கிள்பால் லீக்கில் (WPBL) சென்னை சூப்பர் சாம்ப்ஸ் என்ற அணியின் உரிமையாளராக உள்ளார்.

அது என்ன பிக்கிள் பால்?

‘ஊறுகாய் பந்து’ என்றுதான் இந்த விளையாட்டை மொழிபெயர்த்துள்ளது வீக்கிப்பீடியா. இந்த விளையாட்டு டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பேட்மின்டன் போன்ற விளையாட்டுகளை ஞாபகப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும். இந்த விளையாட்டின் பிறப்பிடம் அமெரிக்கா. ஆரம்பத்தில் குழந்தைகள் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் இந்த ஆட்டத்தை விளையாட ஆரம்பித்தார்கள். 1965ம் ஆண்டிலிருந்து இந்த விளையாட்டு அறியப்பட்டாலும், 2022ம் ஆண்டில்தான் அங்கு அதிகாரபூர்வ மாநில விளையாட்டாக அறிவிக்கப்பட்டது.

டென்னிஸ் கோர்ட் போன்ற தளம் இந்த விளையாட்டு ஆடத் தேவைப்படும். உள் அரங்கத்திலும், வெளி அரங்கத்திலும் விளையாடலாம். லீக் போட்டிகளில்  ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு, கலப்பு இரட்டையர் என பல பிரிவுகளாக விளையாடலாம். அத்துடன் சிறியவர் முதல் பெரியவர் வரை எந்தவித வயது வித்தியாசம் இல்லாமல் விளையாடலாம்.  விளையாடுவதற்கு பிளாஸ்டிக் வலை, மரத்தில் அல்லது ஃபைபர் மெட்டீரியலில் செய்யப்பட்ட செவ்வக வடிவிலான பெரிய மட்டை, பிக்கிள் பந்து தேவை.

மட்டையை ராக்கெட், பெடில் (Racket, Paddle) என்று அழைக்கிறார்கள். ஓட்டைகள் உள்ள பிக்கிள் பந்தை ‘விப்பிள்’ (Wiffle) என்று அழைக்கிறார்கள். உள் அரங்கத்தில் விளையாடும் பந்தில் இருபது ஓட்டைகளும், வெளி அரங்கத்தில் விளையாடும் பந்தில் நாற்பது ஓட்டைகளும் இருக்கும்.இந்த விளையாட்டின் விதி சற்று விநோதமானது என்று சொல்லலாம். எதிர்ப்புறத்தில் இருந்து வரும் பந்தை, அதாவது சர்வர் முதன் முறையாகசர்வீஸ் ஆரம்பிக்கும்போது பந்து ஒன்று அல்லது இரண்டு பவுன்ஸ் ஆனபிறகுதான் ரிசீவர் அடிக்க வேண்டும்.

ஆனால், பிளாஸ்டிக் பிக்பால் டென்னிஸ் பால் போல் அவ்வளவு எளிதில் வேகமாக பவுன்ஸ் ஆகாது. அப்படி இந்த விளையாட்டுக்கு திறமை எவ்வளவு முக்கியமோ அதேயளவுக்கு பொறுமையும் முக்கியம். அதே சமயம் குழந்தைகள், முதியவர்கள் காயம் ஏற்படாமல் விளையாடுவதற்கு இவ்வகை பந்து பிரத்யேகமாக பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகளவில் இந்த விளையாட்டு அறியப்பட்டாலும் ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் உட்பட எந்தவொரு சர்வதேச விளையாட்டிலும் வகைப்படுத்தப்படவில்லை.

தமிழ்நாட்டில் பல இடங்களில் இந்த விளையாட்டுக்கான அரங்கங்கள் செயல்படுகின்றன. ஒரு மணி நேரம் விளையாட 800 ரூபாய், 1000 ரூபாய் என உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பகல், இரவு ஆட்டமாக ஆடப்படும் இந்த விளையாட்டுக்கு இரவு நேரத்துக்குத்தான் அதிக டிமாண்ட் உள்ளதாம்.

ப்ரீத்தி ஜிந்தா

இவர் சிரித்தால் கன்னத்தில் விழும் குழி அழகில் விழாத ஆடவர்கள்  இல்லை. வசீகரமான தோற்றத்தால் திரைப்படங்களில் எப்படி ரசிகர்களின் மனதை கவர்ந்தாரோ அதுபோல் விளையாட்டு உலகிலும் ரசிகர்களின் மனதை வென்றவர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் சொந்தக்காரரான இவர் அணியை வாங்கியதோடு தன் வேலையை நிறுத்தாமல், மைதான வாசலில் நின்று தன் அணியைச் சேர்ந்தவர்களை உற்சாகப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

ரன்பீர் கபூர்

இந்தி சினிமாவில் தவிர்க்க முடியாத பெயர் கபூர் ஃபேமிலி. அந்தப் பின்னணியில் சினிமாவுக்கு வந்தவர் ரன்பீர் கபூர். இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் இடம் பிடித்தவர். இவர் தீவிர கால்பந்து விளையாட்டு வீரர். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் எங்கேயாவது கால்பந்து போட்டி நடந்தால் அங்கே இவரைப் பார்க்க முடியும். கால்பந்துக்காக இந்தியன் சூப்பர் லீக் நடத்தும் போட்டிகளில் மும்பை அணி இவருக்குச் சொந்தமானது.  

ராணா டகுபதி

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராணா டகுபதி. தமிழில் ‘பாகுபலி’ வில்லன் நடிகர் என்றால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். இவர் இந்திய சூப்பர் லீக் நடத்தும் போட்டிகளில் ஹைதராபாத் கால்பந்து கிளப் அணியின் உரிமையாளராக உள்ளார்.

அபிஷேக் பச்சன்

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் கலை வாரிசாக சினிமாவுக்கு வந்தவர் அபிஷேக் பச்சன். இவருக்கும் விளையாட்டில் ஆர்வம் உண்டு. ‘ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்’ என்ற கபடி டீம், சென்னையின் கால்பந்து அணி, ஐரோப்பா டி 20 போட்டிகளில் ஒரு அணி என பல விளையாட்டு அணிகளுக்கு உரிமையாளராக உள்ளார். கால்பந்து விளையாட்டில் பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி இவருடைய தொழில்முறை பங்குதாரராக உள்ளார்.

சூர்யா

விளம்பரம் தேவைப்படாத நடிகர் சூர்யா. அப்பா பிரபல நடிகர் என்றாலும் இளம் வயதில் சராசரி வாழ்க்கை வாழ்ந்தவர் என்று பல பேட்டிகளில் தெரிவித்தவர். அந்த வகையில் இவரும், தான் வசித்த இடத்தில் உள்ளூர் நண்பர்களுடன் பல விளையாட்டுகளில் ஆர்வமாக பங்கேற்றவர். சினிமாவில் பிசியாக இருந்தாலும் தன் விளையாட்டு ஆர்வத்துக்கு தீனி போடும் விதமாக தற்போது இந்தியன் ஸ்ட்ட் பிரீமியர் லீக் நடத்தும் போட்டிகளில் சென்னை சிங்கம்ஸ் என்ற அணியின் உரிமையாளராக உள்ளார்.

இந்தப் போட்டிகளில் டென்னிஸ் பால் பயன்படுத்துவதுதான் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. இந்த லீக் போட்டிகளில் மற்ற அணிகளின் உரிமையாளர்களாக ஹிருத்திக் ரோஷன் (பெங்களூர் ஸ்டிரைக்கர்ஸ்), ராம் சரண் (ஃபால்கான் ரைசர்ஸ், ஹைதராபாத்), சயீப் அலிகான், கரீனா கபூர்கான் (டைகர்ஸ் ஆஃப் கொல்கத்தா), அமிதாப்பச்சன் (மாஜி மும்பை), அக்‌ஷய் குமார் (நகர் கே வீர்) போன்ற பிரபல சினிமா நட்சத்திரங்கள் உரிமையாளர்களாக இருக்கிறார்கள்.  

டாப்ஸி

தமிழில் எத்தனையோ பாடல்கள் வந்தாலும் ‘வெள்ளாவி வெச்சு வெளுத்தாங்களா...’ பாடலை மறக்க முடியாது. அந்த வரிகளுக்கு தன் தோற்றப் பொலிவால் பலம் சேர்த்தவர் டாப்சி.
விளையாட்டு பிரியையான இவர் இல்வாழ்க்கையிலும் விளையாட்டு வீரர் மத்தியாஸ் போ என்பவரை மணந்துகொண்டார். இவரது கணவர் கடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மின்டன் அணிக்கு பயிற்சி கொடுத்தவர்.

கணவர் எவ்வழியோ மனைவியும் அவ்வழியே என்பதை நிரூபிக்கும் விதமாக இவருக்கும் பேட்மின்டன் மீது காதல் அதிகம். அதன் காரணமாக ‘புனே 7 அக்சஸ்’ என்ற பேட்மின்டன் அணியின் உரிமையாளராக உள்ளார். அத்துடன் பஞ்சாப் பேட்ரியாட் டென்னிஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளார்.

இது எல்லாம் தெரிந்த செய்தி என்று வாசகர்களாகிய உங்கள் மன ஓசை கேட்காமல் இல்லை. இது என்ன விளையாட்டு என்பதுபோல் விளையாட்டு  உலகில் புது வரவாக வந்துள்ளது ‘பிக்கிள் பால்’. அதிகம் கேள்விப்படாத இந்த விளையாட்டு சமந்தா மூலம் அதிகம் அறியப்பட்ட விளையாட்டாக மாறியுள்ளது.

ஜான் ஆபிரகாம்

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம், சிறு வயது தொடங்கி கால்பந்து விளையாட்டில் நாட்டம் உள்ளவர். சினிமா துறைக்கு வருவதற்கு முன் தொழில் முறை கால்பந்து விளையாட்டு வீரராக தேசிய அளவில் பல போட்டிகளில் கலந்துகொண்டவர். இந்திய கால்பந்து அணியின் ‘ஏ’ பிரிவு வீரராக பலமுறை களம் கண்டவர்.  இவர் இந்தியன் சூப்பர் லீக் நடத்தும் போட்டிகளில் ‘நார்த் ஈஸ்ட் யுனைட்டட்’ அணியை வாங்கி  கால்பந்துக்கும் தனக்குமான பந்தத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

ஜூஹி சாவ்லா

சினிமாவுக்காக ஷாருக்கானுடன் பல படங்களில் டூயட் பாடியவர் ஜூஹி சாவ்லா. இவர் கிரிக்கெட் அணி வாங்குவதிலும் ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்து கேகேஆர் அணியை வாங்கி அதில் பல முறை வெற்றிக்கொடி பறக்கவிட்டுள்ளார்.

சஞ்சய் தத்

பிபல பாலிவுட் நடிகர் சுனில் தத் மகனாக பாலிவுட்டில் நுழைந்தவர். இந்தி மட்டுமல்லாமல், தென்னிந்திய சினிமாவிலும் தடம் பதித்தவர். ‘லியோ’வில் விஜய் அப்பாவாக வில்லத்தனம் செய்ததை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அடிப்படையில் இவருக்கும் விளையாட்டு மீது ஆர்வம் உண்டு. அதன் காரணமாக பல விளையாட்டு அணிகளை சொந்தமாக வாங்கி தனது விளையாட்டு ஆர்வத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்தும் லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் ‘பி லவ் கேன்’ என்ற அணியின் உரிமையாளராக உள்ளார். அத்துடன் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஜிம் ஆப்ரோ டி 10 கிரிக்கெட் போட்டிகளில் ‘ஹராரே அரிக்கேன்ஸ்’ என்ற அணிக்கும் உரிமையாளராக உள்ளார்.

ஷில்பா ஷெட்டி

இந்தி, தமிழ் உட்பட பல மொழிகளில் ஆதிக்கம் செலுத்தியவர் ஷில்பா ஷெட்டி. தனது சினிமா மார்க்கெட் சரிவை சந்திக்கும் முன்பே ராஜ் குந்த்ரா என்ற தொழில் அதிபரை மணந்துகொண்டார். சினிமா சார்ந்த பல முதலீடுகளைச் செய்துள்ள இவர் தன் கணவருடன் சேர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியை வாங்கியதன் மூலம் அதன் உரிமையாளரானார். நாளடைவில் எழுந்த சர்ச்சையின் காரணமாக தனது அணியை பங்குதாரர் வசம் ஒப்படைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதோடு, முழுமையாக தன்னை ராஜஸ்தான் அணியிலிருந்து விடுவித்துக்கொண்டார்.

எஸ்.ராஜா