உலகக் கடலின் தனிமையான இடத்தைக் கடந்து சாதித்த பெண்கள்!



‘‘உனக்கு வாழ்க்கையில் எந்த போட்டியும் இல்லை அல்லது எதிலும் ஆர்வம் இல்லை என்றால் இந்த வாழ்க்கையே கடினமாகிவிடும் என்பதுதான் என்னுடைய தந்தையிடமிருந்து நான் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம். இந்தப் பாடம்தான் என் வாழ்க்கைப் பாதையை வடிவமைத்தது...’’ என்கிற தில்னா, யாராலும் நெருங்க முடியாத பல சாதனைகளைப் படைத்து வருகிறார்.
கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் பிறந்து, வளர்ந்தவர் தில்னா. இவருடைய தந்தை இராணுவத்தில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். தந்தையின் வார்த்தையை வேத வாக்காக எடுத்துக்கொண்டு, ஒரு துறையில் மட்டுமல்லாமல், பல்வேறு துறைகளிலும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டு, போட்டியிட்டார்.

ஆம்; விடுமுறை நாட்களில் அப்பா வீட்டுக்கு வரும்போது எல்லாம், அவருடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது தில்னாவின் வழக்கம். கிரிக்கெட்டின் மீதான ஆர்வம் அதிகரிக்க, 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். தனது ஆர்வத்தை கிரிக்கெட்டுடன் மட்டுமே அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. யெஸ்; அவரது ஆர்வம் துப்பாக்கி சுடுதல் பக்கம் திரும்பியது. துப்பாக்கி சுடுதலிலும் பல தேசிய சாதனைகளைச் செய்தார். அப்போதும் தில்னாவின் ஆர்வம் நின்றுவிடவில்லை.

ஆம்; புல்லட் ஓட்டிப் பழகி, அவரது ஊரில் ‘புல்லட் கேர்ள்’ ஆக வலம் வந்தார். புல்லட் ஓட்டுவதிலும் கூட எல்லோரையும் விட வேகமாக ஓட்ட வேண்டும் என்பது அவர் தனக்குத் தானே வைத்துக்கொண்ட போட்டி.  மட்டுமல்ல, தந்தையைப் போலவே இராணுவத்தில் சேர வேண்டும் என்பது தில்னாவின் கனவு. இதற்காக ஐந்து முறை முயற்சி செய்தும், அவருக்கு இராணுவத்தில் இடம் கிடைக்கவில்லை.ஆறாவது முயற்சியின் போதுதான் கப்பற்படையில் இடம் கிடைத்தது.

இன்று கப்பற்படையில் லெப்டினன்ட் கமாண்டராக இருக்கிறார் தில்னா. கப்பற்படையில் சேர்ந்த பிறகும் கூட, தன்னுடைய வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க தில்னா விரும்பவில்லை. வேலையிலும் கூட மற்றவர்களைவிட ஒரு படி முன்பு இருக்க வேண்டும் என்பது அவரது இலக்கு.

அத்துடன் கப்பற்படையில் என்னென்ன சாகசங்களை நிகழ்த்த முடியுமோ, அதையெல்லாம் நிகழ்த்திப் பார்க்க வேண்டும் என்பது அவரது ஆர்வம். கடந்த அக்டோபர் மாதம் லெப்டினன்ட் கமாண்டரான ரூபாவுடன் இணைந்து, கடல் வழி பயணமாக உலகைச் சுற்றச் சென்றார் தில்னா. இந்தப் பயணத்தின்போது, ஜனவரி 29ம் தேதி பாயின்ட் நீமோ என்ற ஆச்சர்யமான ஓர் இடத்தைக் கடந்து, தில்னாவும், ரூபாவும் சாதனை படைத்திருக்கின்றனர்.

பாயின்ட் நீமோவில் அப்படி என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா?

பசிபிக் பெருங்கடலில் வீற்றிருக்கிறது, பாயின்ட் நீமோ. பூமியிலேயே மிகவும் தனிமையான இடம் இதுதான். பாயின்ட் நீமோவிலிருந்து 2,575 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த நிலப்பகுதியும் இல்லை. மட்டுமல்ல, இந்த இடத்துக்குச் செல்வது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை என்று பயண ஜாம்பவான்கள் சொல்கின்றனர்.

விண்வெளி வீரர்கள் மட்டுமே பாயின்ட் நீமோவிற்கு அருகில் இருக்கின்றனர். அதாவது, பாயின்ட் நீமோவிற்கும், விண்வெளி வீரர்களுக்கும் இடையில் உள்ள தூரம், 416 கிலோ மீட்டர்.
இந்தப் பகுதியை விண்கலங்களின் மயானம் என்கின்றனர். ஆம்; பயன்படுத்தப்பட்ட 250க்கும் மேலான பணி நீக்கம் செய்யப்பட்ட விண்கலங்களுக்கும், விண்வெளிக் குப்பைகளுக்கும் பாயின்ட் நீமோதான் பாதுகாப்பான குப்பைத் தொட்டி. இப்படியான ஓர் இடத்தைத்தான் தில்னாவும், ரூபாவும் கடந்து, சாதனை படைத்திருக்கின்றனர்.

த.சக்திவேல்