பேய்களை துப்பறிபவர்!
பரபரப்பான திரில்லர் கதை சொல்லல், ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கும் யுக்தி, பார்வையாளனை சீட்டு நுனிக்கு இழுத்து வரும் திரைக்கதை என இயக்குநர் அறிவழகன் வெங்கடாசலம் படங்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். பேய் படத்திலும் விதிவிலக்காக சினிமா கிளிஷேக்கள் இல்லாத ‘ஈரம்’ படம் கொடுத்தவர்.  அடுத்து ஹாரர் எப்போது என்கிற கேள்விக்கு இப்போது ‘சப்தம்’ தயார் என்கிறார். ‘‘‘ஈரம்’ முடிஞ்ச உடனேயே நிறைய ஹாரர் கதைகள் கேட்டுதான் வந்தாங்க. ஆனால், நான் கறாரா ஒரு டெம்ப்ளேட்டுக்குள்ள மாட்டிக்கக் கூடாது என்பதில் தெளிவா இருந்தேன்...’’ நிதானமாக பேசத் துவங்கினார் இயக்குநர் அறிவழகன்.  படத்தலைப்பு டிசைனில் இருந்தே கதை சொல்பவர் நீங்கள்... இதிலும் ‘சப்தம்’ ஒலியாகவே கேட்கிறதே..?
தேங்க்ஸ். உழைப்பு வீணாகலை. அடிப்படையில் நான் ஒரு ஆர்ட்டிஸ்ட். என்னுடைய தலைப்பு உட்பட கதை சொல்லணும்னு நினைப்பேன். அப்படித்தான் டைட்டில் வரைவேன். பிறகுதான் போஸ்டர் டிசைன் வேலைகள் துவங்கும். ‘சப்தம்’ என்கிற வார்த்தையை உச்சரித்து அதை சவுண்ட் அலைவரிசையா பார்த்தால் ஒரு வடிவம் கிடைக்கும் . அந்த வடிவத்திலேயே டைட்டிலை டிசைன் செய்திருப்போம்.
என்ன கதை..?
ஹாலிவுட் படங்களில்தான் இந்த கோஸ்ட் அல்லது பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டரை பார்த்திருப்பீங்க. அதாவது அமானுஷ்யங்களை அறிவியல் ரீதியா ஆராய்ச்சி செய்து அதன் விசாரணை முடிவுகளை கொடுக்கிறவங்க. ‘கான்ஜுரிங்’ மாதிரியான படங்களில் இதை நீங்க பார்க்கலாம்.
ஆனால், இந்தியாவில் இந்த கேரக்டரை அடிப்படையாகக் கொண்ட படங்களை நான் அதிகம் பார்த்ததில்லை. உண்மையில் இந்தியாவிலேயே புகழ்பெற்ற அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் ஒரு சிலர் இருக்காங்க. கௌரவ் திவாரி அதில் டாப். அவருடைய மரணம் கூட மர்மமாதான் இருந்துச்சு.
அப்படியான ஒரு பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர்தான் ஆதி. அவருடைய ஒரு ஹாரர் செக்மென்ட்தான் கதை. ஒரு கல்லூரி... அங்கே நடக்கும் தொடர் மர்மக் கொலைகள்... அதை ஆய்வு செய்ய வரும் ஒரு அமானுஷ்ய இன்வெஸ்டிகேட்டர்... அதைத் தொடர்ந்து நிகழும் சம்பவங்கள்தான் கதைக்களம்.
‘ஈரம்’ படத்துக்கும் ‘சப்தம்’ படத்துக்கும் தொடர்பு உண்டா?
நிச்சயம் கிடையாது. அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் இருக்கும் ஒரே கனெக்ஷன் நான் + ஆதி + தமன். இந்த வெற்றிக் கூட்டணி சேர்ந்து மீண்டும் ஒரு ஹாரர். அப்படிதான் இந்தப் படம் உருவானது. இன்னொரு ஒற்றுமை அங்கே தண்ணீர், இங்கே சப்தம். அமானுஷ்யங்கள் தங்களை ரியல் உலகத்துடன் கனெக்ட் செய்துக்க ஒரு மீடியம் தேவை. ‘ஈரம்’ படத்தில் தண்ணீர், இங்கே சப்தம்.
ஆதி, லட்சுமிமேனன், சிம்ரன்... இன்னும் யார் யாரெல்லாம் படத்தில் இருக்காங்க?
அளவான கேரக்டர்கள் கொண்டு முந்தைய படங்களில் கதை சொல்லி இருப்பேன். ஆனால், இந்தக் கதையில் கொஞ்சம் பெரிய நடிகர்கள் குழு இருக்காங்க. ஆதி கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டர், லட்சுமிமேனன் ஒரு டாக்டர்.
சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி... இவங்க கேரக்டர் எல்லாம் இப்போ சொல்லிட்டா சுவாரஸ்யம் போயிடும். அபிநயா ஒரு கெஸ்ட் ரோல் செய்திருக்காங்க. இவங்க இல்லாம கல்லூரிக் காட்சிகளிலும் சில முக்கியமான நடிகர்கள் நடிச்சிருக்காங்க. ‘ஈரம்’ படத்தில் அமானுஷ்ய தண்ணீருக்கு ஒரு வடிவம் கொடுத்திருந்தீங்க... அப்படி இந்தப் படத்தில் வித்தியாசமான சப்தம் உண்டா?
வவ்வால் சப்தம்... இப்பவும் கடவுள் நம்பிக்கையே இல்லாத மனுஷங்க கூட வவ்வால் சப்தத்துக்கு கொஞ்சம் தயக்கம் காட்டுவாங்க. அந்த வவ்வால் ஒலியும் மேலும் டிரெய்லரில் மிகை ஒலி கான்செப்ட்டில் ஒரு சீன் பார்த்திருப்பீங்க... அப்படியான ஒரு சவுண்டும் பயன்படுத்தியிருக்கோம்.
இதற்கு சவுண்ட் டிசைனிங் செய்திருக்காங்க சிங்க் சினிமா மற்றும் ஆடியோகிராபர் உதய் குமார். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு. இவர் மனோஜ் பரமஹம்சா அசிஸ்டென்ட். இதற்கு முன்பு ‘மகாமுனி’ செய்திருக்கார். என்னுடைய ஆஸ்தான தேசிய விருது புகழ் எடிட்டர் சாபு ஜோசப் எடிட்டிங். நான் டைட்டில் டிசைனில் இருந்தே கதை சொல்வதாக சொன்னீங்க... அந்த டிசைனிங் கிரெடிட் பவன் டிசைன்ஸுக்குதான். தமன் கூட நாலாவது படம். எனக்கும் அவருக்கும் நிறைய இடங்களில் ஒரே மாதிரியான சிந்தனைகள் இருப்பதை கவனிச்சிருக்கேன். இந்தப் படத்திலும் ‘ஈரம்’ போலவே நல்ல பாடல்கள் இருக்கு. பேக்ரவுண்ட் ஸ்கோர் நல்லாவே வந்திருக்கு.
மிரட்டுமா இந்த ‘சப்தம்’..?
ஓர் இயக்குநரா தியேட்டரில் படம் பார்க்கறதையும், பார்க்க வைக்கிறதையும்தான் நான் எப்பவும் விரும்புவேன். பொதுவாக திரில்லர் கதைகள் அந்த தியேட்டர் மொமெண்ட்களை சுலபமா கொடுக்கும். ஆனால், அதற்கான கதை சரியா உருவாக்கணும். ஒரு தியேட்டர் விரும்பியா என்னுடைய ஸ்டைல் திரில்லர்தான்.
அதில் ஹாரர் திரில்லர், கிரைம் திரில்லர், ஆக்ஷன் திரில்லர் இப்படி நான் கதைகளை பிரிச்சுப்பேன். இது ஹாரர் திரில்லராக நல்ல தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும்.இந்தப் படம் ரிலீஸுக்குப் பிறகு ‘பார்டர்’ காத்திருப்பில் இருக்கு. தயாரிப்பு தரப்பு அந்தப் படத்துக்கான வேலையும் ஆரம்பிப்பாங்க. நானும் அந்தப் படத்துக்காக காத்திருக்கேன்.
ஷாலினி நியூட்டன்
|