காதல் மார்க்கெட்டில் இது புதுசு!
தனிமனிதர்களே இன்று தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள வித்தியாசமான யுக்திகளைக் கையில் எடுக்கும்பொழுது உலக பிராண்டுகள் கிடைக்கும் கேப்பை விடுவார்களா?! இதோ உலகமே ஒன்றுபட்டு கொண்டாடும் காதலர் தினத்தை மனதில் கொண்டு பிராண்டுகள் பலவாறு தங்களது ப்ராடக்டுகளை ப்ரொமோட் செய்து விற்பனை செய்து வருகின்றன. அதில் வித்தியாசமாக தரைமட்டத்துக்கு இறங்கி அலசி காதலர்களை கவர்ந்திழுத்த வியாபார செம்மல்களின் பட்டியல் இதோ...
கியூபிட் டெட்பூல்
உலக அளவில் மார்வெல் காமிக்ஸ் மற்றும் அதன் சூப்பர் ஹீரோக்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட காதலர்களை சிறப்பிக்கும் விதமாக மார்வெல் கேரக்டர்களில் மிகவும் குறும்புத்தனமான சூப்பர் ஹீரோ டெட்பூல் கேரக்டரை கியூபிட் கெட்டப்புக்கு மாற்றி கிரீட்டிங் கார்டுகள், ஸ்டிக்கர்கள், மொபைல் கவர்கள்... என வித விதமாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது மார்வெல். மேலும் பெண்களைக் கவரும் விதமாக மார்வெல் கேரக்டர்களான ஸ்பைடர், டெட்பூல் முகம் உள்ளிட்டவை கொண்ட நகைகளையும் அறிமுகம் செய்திருக்கிறது.
 சிங்கிளா இருந்தாலும் பரவாயில்லை
அமெரிக்காவில் ஏற்கனவே உயிரியல் ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் கரப்பான் பூச்சிகளுக்கு உங்கள் முன்னாள் காதலன் / காதலி பெயரை சூட்டி மகிழுங்கள் என சிங்கிள்களுக்கு அழைப்பு விடுத்து பல வருடங்களாக அந்தப் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.தற்போது ‘லவ் யுவர்செல்ஃப்’ என்கிற tag பயன்படுத்தி தந்திரமாக காதல் வலையில் விழாதவர்களையும் கமர்சியல் வலையில் விழ வைத்துக் கொண்டிருக்கின்றன சில பிராண்டுகள்.
 அதாவது ‘லவ் யுவர்செல்ஃப்’ அல்லது ‘ட்ரீட் யுவர்செல்ஃப்’ என்னும் hashtag பயன்படுத்தினால் இணையதளத்தில் காதலர் தின சிறப்பாக பல ஆஃபர்களை நிறைய பிராண்டுகள் சிங்கிள் மக்களுக்கு வழங்குகின்றன. காதல் இல்லை என்றால் என்ன, உங்களை நீங்களே காதலியுங்கள்... இந்தாங்க ஆஃபர் என இறங்கியிருக்கிறார்கள்.
 லவ் யுவர் ஸ்டொமக்
‘ஹாய் டியர், ஐ நோ யு ஆர் ஹங்ரி...’ என தற்சமயம் நம்மை அதிகம் காதலிப்பது ஆன்லைன் ஃபுட் டெலிவரி செயலிகள்தான். அதுவும் Swiggy மற்றும் Zomato இரண்டு நிறுவனங்களும் ஒரு படி மேல் போய் ‘யூ & ஐ இன் திஸ் பியூட்டிஃபுள் ேவர்ல்ட்’ என கைகோர்த்து போஸ்ட் போட்டது மட்டுமின்றி ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
 கேலன்டைன்’ஸ் டே
சிங்கிள்களிலும் பெண்களை தனியாகப் பிரித்து நீங்க பெண்களா, உங்களை நாங்கள் கொண்டாடுவோம் என்னும் வாசகத்துடன் பல காஸ்மெட்டிக்ஸ் மற்றும் ஃபேஷன் ப்ராடக்டுகள் கேலன்டைன்’ஸ் டே ஆஃபர் கொடுத்து வருகிறார்கள். அதற்குதான் மகளிர் தினம், அன்னையர் தினம் இருக்கே... என்றால் அட அட்வான்சா பிட்டு போடுவோமே... என களத்தில் குதித்திருக்கின்றன சில டாப் பிராண்டுகள்.
எங்க கிளையன்டா இருங்க!
கனடாவைச் சேர்ந்த இவான்ஸ் ஹன்ட் என்னும் விளம்பர ஏஜென்சி தங்களைத் தேடி வந்து விளம்பரம் குறித்து விபரங்கள் கேட்க வருவோரையும், தங்களது கிளையன்ட்களையும் கவரும் விதமாக ‘Be My KPI ’ ( KPI - Key Performance Indicator) என பொறித்த ஹார்ட்டின் மிட்டாய்களை அன்பளிப்புகளாக கொடுக்கிறார்கள்.
அங்கிள் காம்பெய்ன்
இந்த வருஷம் 2K டிரெண்டுக்கெல்லாம் எண்ட், அங்கிள்ஸ் பக்கம் ஆங்கிளை மாத்து என்கிறது சாக்லேட் கம்பெனி. வேலன்டைன்’ஸ் டே இளசுகளுக்கு மட்டும்தானா என்ன... இளசுகளுக்கு நிகராக தன்னையும் டிரெண்டில் வைத்திருக்கும் 40 + ஆண்கள், பெண்கள், 40+ தம்பதியரை டார்கெட் செய்து ‘நீங்கள்தான் உண்மைக் காதலர்கள்’ என்னும் விளம்பரப் பலகையைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதுவும் காதல்
Necco எனும் அமெரிக்க மிட்டாய் கம்பெனி தங்களது 55வது காதலர் தினத்தை சற்றே வித்தியாசமாக இரண்டு ஓரினக் காதலர்களை, அதுவும் 60 வயதைக் கடந்த இரு ஆண்கள் தங்களது பிணைப்பு குறித்து பேசுவதை அப்படியே லவ்வர்ஸ் டே விளம்பரமாக உருவாக்கியிருக்கிறது.
கபாலத்தை காயப்படுத்தும் காதல் கடிதங்கள் எதற்கு?
Who Gives a Crap (WGAC) என்னும் சுலபமாக மக்கும் மற்றும் இயற்கையான மூலிகை டாய்லெட் பேப்பர்களை உருவாக்கும் நிறுவனம் ‘Flush Your Ex’ என்னும் பெயரில் வித்தியாசமான விளம்பரத்தை செய்துள்ளது.அதாவது உங்களது பழைய காதல் கடிதங்களை அல்லது உங்கள் முன்னாள் கேர்ள் ஃப்ரெண்ட் அல்லது பாய் ஃபிரண்ட் கொடுத்த பொய்யான வாக்குறுதிகள் அத்தனையையும் மின்னஞ்சலில் இவர்களுக்கு அனுப்பினால் அவற்றை பிரத்தியேகமாக டாய்லெட் பேப்பர்களில் பிரிண்ட் செய்து கொடுக்கிறார்கள்.
தினமும் இந்த டாய்லெட் பேப்பர்களை பயன்படுத்தும்போது காயப்பட்ட மனது ஆறுதல் பெறும் என்கிற நோக்கத்தில் காதல் முறிவுக்கு இவர்கள் இப்படியான அன்பளிப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். Ex-க்கு தேள் அன்பளிப்பு
பதறாதீர்கள்... Topo Chico Hard Seltzer என்னும் குளிர்பான கம்பெனி தங்களது வாடிக்கையாளர்களுக்கு விவகாரமான காதலர் தின அன்பளிப்பை உருவாக்கி விற்பனைக்கு கொண்டு வந்து கடந்த ஓரிரு வருடங்களாகவே ஹிட் அடித்து வருகிறது.
பொதுவாக சோடா குளிர்பானங்களை விற்கும் இந்த Topo Chico காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்ட்ராபெரி எசன்சில் மூழ்கடிக்கப்பட்ட இனிப்பு தேளை உங்களது முன்னாள் காதலன் / காதலிக்கு அன்பளிப்பாகக் கொடுங்கள் என விளம்பரப்படுத்தி வருகிறது. ‘காயப்பட்ட உங்கள் ஆழ்மனதிற்கு இது ஆறுதல் கொடுக்கும்’ என்னும் வாசகத்துடன் இந்த அன்பளிப்பை உருவாக்கி இருக்கிறது. ஹார்ட்டின் வடிவ பெட்டியில் இந்த கருந்தேள் இனிப்பு உங்களது முன்னாள் காதலரை ஒருசில வினாடிகள் மூச்சுத் திணற வைத்துவிடும்.
கவ் ஹக் டே
எங்கும் தேட வேண்டாம்... இது நமது இந்தியாவில் கடந்த சில வருடங்களாக நிகழும் பிப்ரவரி 14 கொண்டாட்டம். மனித இனத்திற்காக தன்னை அர்ப்பணிக்கும் பசுக்களைக் கொண்டாடும் விதமாக Cow Hug Day இந்துத்துவா மக்களால் உருவாக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.l
ஷாலினி நியூட்டன்
|