சிக்கன் பிரியாணி பிடிக்காத இந்திய நாய்கள்!
மோப்ப சக்தியில் நாய்களை மிஞ்சக்கூடிய விலங்கு இல்லை எனச் சொல்வார்கள். இதனால்தான் பல்வேறு குற்றங்களைக் கண்டுபிடிக்க நாய்களை காவல்துறை உலகளவில் பயன்படுத்துகிறது.
ஆனால், இந்தியத் தெரு நாய்களைப் பொறுத்தளவில் கலர் கலரான பாத்திரங்களில் இருக்கும் சிக்கன் பிரியாணியைவிட காலியாக இருக்கும் மஞ்சள் நிறப் பாத்திரம்தான் அவற்றின் கண்களைப் பறிப்பதாக ஓர் இந்திய ஆய்வு கண்டுபிடித்திருக்கிறது.அறிவியல் கல்வி மற்றும் அதற்கான ஆராய்ச்சிக்கான நிறுவனம் ‘இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் ரிசர்ச்’. இது கொல்கத்தாவில் செயற்படும் ஓர் ஒன்றிய அரசு அமைப்பு.
 இந்த நிறுவனம்தான் பல்வேறு நிறங்களிலான உணவுப் பாத்திரங்களை தெரு நாய்களுக்கு காண்பித்து,நாய்களுக்கு பாய் கடை சிக்கன் பிரியாணிப் பாத்திரத்தைவிட காலியாக இருக்கும் மஞ்சள் நிறப் பாத்திரம்தான் ஈர்ப்பானது எனும் உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறது.
இந்த ஆய்வு எப்படி செய்யப்பட்டது?
நான்கு வகையான ஆய்வுகளால் இந்த முடிவுக்கு வந்திருக்கிறது இந்த அமைப்பு. முதல் ஆய்வில் 76 நாய்களை எடுத்துக்கொண்டது. பிறகு நீலம், சாம்பல் மற்றும் மஞ்சள் நிறத்திலான எல்லாப் பாத்திரங்களிலுமே பிஸ்கட்டை நிரப்பிவிட்டார்கள். இதில் 42 நாய்கள் மஞ்சள் நிறத்தில் இருந்த பிஸ்கட் பாத்திரத்துக்கும், 18 நாய்கள் சாம்பல் பாத்திரத்துக்கும், 16 நாய்கள் நீலப் பாத்திரத்துக்கும் ஈர்க்கப்பட்டன.
சரி... இதைக்கூட மற்ற நிறங்களைவிட மஞ்சள் நிறத்துக்கு இரட்டிப்பு ஆதரவுதானே என்று ஆறுதல் அடையலாம். ஆனால், அடுத்த ஆய்வு?
அடுத்து 58 நாய்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதிலும் அதே நிறத்திலான பாத்திரங்கள்தான். ஆனால், இதில் எதிலும் உணவு இல்லை. இதிலுமே 30 நாய்கள் மஞ்சளுக்கும், 14 நாய்கள் முறையே நீலத்துக்கும், சாம்பல் பாத்திரத்துக்கும் ஈர்க்கப்பட்டன. இதுவும் பாதிக்குப் பாதிதான் மஞ்சள் நிறத்துக்கான வெற்றி என முடிவு கட்டலாம். ஆனால், அடுத்த ஓர் ஆய்வு மேலும் மஞ்சள் மகிமையைப் பறைசாற்றுகிறது.
இதில் 52 நாய்கள். இதில் நாய்களுக்குப் பிடித்த சாம்பல் நிறம் மற்றும் மஞ்சள் நிற பாத்திரங்கள் மட்டும்தான். ஆனால், என்ன... சாம்பல் நிறப் பாத்திரத்தில் பிஸ்கட்டுகள் நிரப்ப்பபட்டன. மஞ்சள் நிறப் பாத்திரத்தில் ஒன்றுமே இல்லை. காலி டப்பா. ஆனால், 52 நாய்களில் 41 நாய்கள் காலி டப்பா மஞ்சள் பாத்திரத்தைத்தான் நோக்கி வந்தன. வெறும் 11 நாய்கள் மட்டுமே பிஸ்கட் பாத்திரங்களான சாம்பல் நிறப் பாத்திரத்தை மோப்பமிட்டன.
சரி, இது பிஸ்கோத்து ஆய்வுதானே என்று சலிப்படைபவர்களுக்கு மேலும் ஓர் உறுதியான டெஸ்டும் நடத்தப்பட்டது. அது சிக்கன் பிரியாணி.சிக்கன் பிரியாணி டெஸ்டில் 61 நாய்கள் கலந்துகொண்டன. இதில் சாம்பல் நிறப் பாத்திரத்தில் சிக்கன் பிரியாணிநிரப்பப் பட்டது. ஆனால், மஞ்சள் நிறப் பாத்திரங்கள் காலியாக விடப்பட்டன. இதிலும் 14 நாய்கள் மட்டுமே சிக்கன் பிரியாணி கொட்டப்பட்ட சாம்பல் நிறப் பாத்திரத்தை நோட்டமிட்டன. மீதம் 47 நாய்கள் காலி டப்பா மஞ்சள் நிறப் பாத்திரத்தைத்தான் மோந்து மோந்து பார்த்துக் கொண்டிருந்தன.
இதிலிருந்துதான் தெரு நாய்களுக்கு மூக்கைவிட பார்வைதான் முக்கியம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் இந்த ஆய்வைச் செய்தவர்கள். ‘‘பொதுவாக இந்திய தெரு நாய்கள் மஞ்சளும், சிகப்பும் கலந்த மசாலா தடவிய அசைவ உணவுகளுக்குத்தான் போட்டா போட்டி போடும். இந்த மஞ்சள், சிகப்பு நிறங்கள் இந்திய தெரு நாய்களின் ஜீன்களில் நினைவுகளாக படிந்திருக்கலாம். இது வாசனையைவிட மஞ்சள் நிறத்துக்கான ஈர்ப்பை இந்திய நாய்களுக்கு கொடுத்திருக்கலாம்.
நாய்களின் பார்வையில் சிகப்பு அல்லது பிங்க் நிறத்திலான கறிகள்கூட மஞ்சளாக மாற்றம் பெறக்கூடிய சாத்தியங்கள் உண்டு. இது எல்லாம் சேர்த்து நாய்களுக்கு மஞ்சள் நிறத்தின் மேல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம். இதுவே மஞ்சள் நிறத்திலான பாத்திரங்களை நோக்கியும் அவற்றை ஈர்த்திருக்கலாம்...’’ என்று சொல்கிறார்கள் இந்த ஆய்வைச் செய்த ஆய்வாளர்கள்.
கலிஃபோர்னியாவில் செய்த ஓர் ஆய்வில் வீட்டு நாய்களுக்கு நீலம், மஞ்சள், கருப்பு, வெள்ளை, சாம்பல் நிறங்கள் எல்லாமே ஈர்ப்புடையன எனக் கண்டுபிடித்திருக்கையில் இந்தியத் தெரு நாய்களுக்கு மஞ்சள் மேல் ஈர்ப்பு என்பது உலக விலங்குகள் நல ஆர்வலர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
டி.ரஞ்சித்
|