கொங்காடி த்ரிஷா...
சமீபத்தில் ஐசிசி அண்டர் 19 மகளிர் டி20 இரண்டாவது உலகக் கோப்பை போட்டிகள் மலேசியாவில் நடந்து முடிந்தன. இதில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பை சாம்பியன் ஆனது இந்திய அணி.  ஏற்கனவே 2023ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் அண்டர் 19 மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியிலும் ஷஃபாலி வர்மா தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்திருந்தது. 
இப்போது தொடர்ந்து இரண்டாவது உலகக் கோப்பையையும் தன்வசப்படுத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு வித்திட்டவர் இந்திய அண்டர் 19 அணியின் ஆல்ரவுண்டரான கொங்காடி த்ரிஷாதான்.
அவர் இந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் 33 பந்துகளில் 44 ரன்கள் ஆட்டமிழக்காமல் எடுத்து சிறந்த வீராங்கனை விருதினை தட்டிச்சென்றதுடன், தொடரின் நாயகி விருதினையும் வென்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார்.
இந்த டி20 உலகக் கோப்பையில் மட்டும் அவர் மொத்தமாக ஒரு சதம் உட்பட 309 ரன்கள் குவித்தார். அதுமட்டுமில்லாமல் ஏழு விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு அரணாக விளங்கினார்.
தவிர, ஐசிசி மகளிர் அண்டர் 19 உலகக் கோப்பையில் சதம் அடித்த ஒரே வீராங்கனை என்ற பெயரையும் பெற்றார். தெலுங்கானா மாநிலம் பத்ராசலம் நகரைச் சேர்ந்தவர் கொங்காடி த்ரிஷா. 2005ம் ஆண்டு பிறந்தவர். அப்பா ராமி ரெட்டி பத்ராசலத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஃபிட்னஸ் பயிற்சியாளராக வேலை செய்தார். அம்மா மாதவி ஹவுஸ்வொய்ஃப்.
இரண்டு வயதிலிருந்தே அப்பா ராமி ரெட்டி, அவருக்கு பிளாஸ்டிக் கிரிக்கெட் பேட் மூலம் பயிற்சி அளித்துள்ளார். பின்னர் ஜிம்மிற்கும் அழைத்துச் சென்றுள்ளார். அவரின் திறமையை உணர்ந்து தொடர்ந்து கிரிக்கெட் விளையாட பெற்றோர் இருவரும் ஊக்கப்படுத்தியுள்ளனர்.
பின்னர் அவரின் கனவிற்காக ஏழு வயதில் குடும்பம் பத்ராசலத்திலிருந்து செகந்தராபாத்திற்கு குடிபெயர்ந்தது. இதற்காக அப்பா ராமி ரெட்டி தன் வேலையைத் துறந்து செகந்தராபாத்தில் செயிண்ட் ஜான்ஸ் கிரிக்கெட் அகடமியில் த்ரிஷாவைசேர்த்தார். நிலையான வேலையைவிட்டு இங்கே நகர்ந்ததால் அவரின் கையிலிருந்த சேமிப்பு பணம் முழுவதும் கரைந்துபோனது. இதனால் பத்ராசலத்திலிருந்த தனது நான்கு ஏக்கர் நிலத்தைத் தன் மகளுக்காக விற்றார் ராமி ரெட்டி. த்ரிஷாவுக்கு எம்.எஸ்.தோனியும், இந்திய மகளிர் அணியின் கேப்டனாக இருந்த மிதாலி ராஜுவுமே ஆதர்சம். மாநில அண்டர் 16 அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டபோது த்ரிஷாவின் வயது எட்டுதான். பின்னர் 11 வயதில் மாநில அண்டர் 19 மற்றும் அண்டர் 23 அணிகளுக்காக ஆடினார். 12 வயதில் தெலுங்கானா மாநில சீனியர் அணியிலும் இடம்பிடித்தார்.
இதன்பிறகு அவரின் 16 வயதில் இந்திய அண்டர் 19 அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023ம் ஆண்டில் இந்திய அண்டர் 19 டி20 உலகக் கோப்பை அணியிலும் இடம்பிடித்தார். இதன் இறுதிப்போட்டியில் 24 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இப்போது இரண்டாவது உலகக் கோப்பையில் 309 ரன்கள் குவித்தார். அவரின் பேட்டிங் சராசரி 77.25.
இந்த உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியை நேரில் காணச் சென்றிருந்த த்ரிஷாவின் தந்தை ராமி ரெட்டி, ‘‘இது ஒரு மகிழ்ச்சியான, பெருமையான தருணம். எங்களின் தியாகம் ஒருபக்கம் இருந்தாலும், அவளின் கடின உழைப்புதான் இவ்வளவு பெரிய இடத்திற்கு அவளைக் கொண்டு வந்திருக்கிறது...’’ என நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டார். இப்போது தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கொங்காடி த்ரிஷாவை நேரில் பாராட்டியதுடன் அவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
பேராச்சி கண்ணன்
|