சிறுகதை - மூக்குப்பொடி!



‘‘நாலு பேரு இருக்குறப்பவும் மூக்குப்பொடியப் போட்டு உறிஞ்சிக்கிட்டு... அந்த கருமத்த விட்டுத்தொலைங்கன்னு சொன்னா கேட்டாத்தான!’’ராஜாராமனை அவரது மனைவி திட்டித்திட்டி ஓய்ந்து போனதுதான்  மிச்சம். பேரறிஞர் அண்ணாவின் பேச்சுக்கு ரசிகராக இருந்த ராஜாராமன், அவரது மூக்குப்பொடி போடும் பழக்கத்தையும் அவர்மீதான ஈர்ப்பில், தனது இளமைப் பருவத்திலேயே கற்றுக்கொண்டார்.

அப்போதெல்லாம் குறைந்த அளவிலிருந்த அப்பழக்கம், வயது ஏற ஏற அதிகரித்துவிட்டது. செயின் ஸ்மோக்கர் என்று சொல்வதுபோல் மூக்குப்பொடியையும் தொடர்ச்சியாக உறிஞ்சப் பழகிவிட்டார்.ஆசிரியப்பணி காரணமாக பாடம் நடத்தும் வேளைகளில் மட்டும் மூக்குப்பொடியை உறிஞ்சுவதில்லை. மற்ற நேரங்களிலெல்லாம் ‘‘சர்ர்ர்ர்... சர்ர்ர்ர்...’’ என உறிஞ்சுவது வழக்கமாகிவிட்டது.

அவரது மனைவியின் வருத்தம், அவர் ‘சர்ர்ர்...’ ‘சர்ர்ர்...’ரென மூக்குப்பொடியை உறிஞ்சுவது குறித்தானது மட்டுமல்ல. பொடி போடும்போது மூக்கைத் துடைப்பதற்காகப் பயன்படுத்தும் துண்டுகளாகட்டும், கைக்குட்டைகளாகட்டும், அனைத்திலும் மூக்குப்பொடியை இழுவிவிட்டு, அழுக்காக்கிவிடுவதால் அதைத் துவைப்பது கடுப்பான வேலையாக இருக்கும்.

‘‘கர்ச்சீப்பெல்லாம் கர்ச்சீப் மாதிரியா இருக்கு? எல்லாத்துண்டுலயும் மூக்குப்பொடிய இழுவி வச்சா எவ துவைப்பாளாம்? வேலைக்காரிதான் வைக்கணும்... வேலைக்காரியும்கூட நீங்க பொடி போடுற லட்சணத்தப் பார்த்தா அடுத்த  மாசமே வேலைய விட்டுப் போயிடுவா!’’ என்று குத்தலாகவும் பேசிப் பார்த்தாச்சு. 

அதுபோக, அந்த மூக்குப்பொடி நெடியோடு படுக்கையில் மனைவியை நெருங்கி வந்தால் காமமா வரும்? மனைவிக்கு தும்மல்தானே வரும்? அதுவும் பிள்ளைகளுக்கு தெரியாமல் ரகசியமாக நெருங்கிவரும் சூழலில் அந்த தும்மலே காட்டிக்கொடுத்துவிடுமே!

ஆக, ராஜாராமனின் மனைவி, அவரது மூக்குப்பொடி போடும் பழக்கத்தை வெறுப்பதற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன.ராஜாராமனின் ஆசிரியப்பணிக்கும் சரி, அவருக்கு இருக்கும் உலக அறிவுக்கும் சரி, அவரோடு பழகும் அனைவரும் அவரை மெச்சுவார்கள். அவரது கையெழுத்து அச்சு அச்சாக இருக்குமென்பார்கள். எந்தத் தகவல் வேண்டுமென்றாலும் ‘ராஜாராமன் சார்ட்ட கேட்டால் சொல்வார்’ என்றளவுக்கு நம்பிக்கையைப் பெற்றிருந்தார்.

மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளுக்கு எழுதித்தருவதில் பெயர்பெற்றவர். அவர்களுக்கெல்லாம் ராஜாராமனின் பொடிபோடும் பழக்கமெல்லாம் ஒரு பொருட்டேயல்ல.
ஆனால், ராஜாராமன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்... ஊரே மெச்சும் அறிவாளியாக இருந்தாலும், அவரது மனைவியைப் பொறுத்தவரை அவரது பொடி போடும் பழக்கத்தாலேயே அவர்மீது கோபத்திலிருப்பார்.

ராஜாராமனின் மகள் குழலியும், மகன் விஷ்வாவும் ஓரளவு வளர்ந்ததும், அவர்களையே மூக்குப்பொடி வாங்கிவர கடைக்கு அனுப்பத் தொடங்கினார். அதுவும், என்.வி.எஸ். பட்டணம் பொடி விற்கும் கடையில்தான் வாங்கிவரச் சொல்வார். 

விஷ்வாவுக்கு மூக்குப்பொடி வாங்கச்செல்வது ரொம்பவே பிடித்த விஷயம். மூக்குப்பொடி கடையில், பொடியை வைத்திருக்கும் சீனக் களிமண்ணால் செய்யப்பட்ட ஜாடி, மூக்குப்பொடியை அள்ளுவதற்காகப் பயன்படுத்தப்படும் கம்பிபோல் நீண்ட கரண்டி, அதை வைத்து லாவகமாகப் பொடியை அள்ளி, டப்பாவில் லாவகமாக நிரப்புவதை ரசித்துப் பார்ப்பான்.

அதையெல்லாம் தாண்டி அவனுக்கு அந்த பொடி வாசனை பிடிக்கும். ஆனால், சோதனை முயற்சியாக ஒருமுறை பொடியை மூக்கால் உறிஞ்சிப் பார்த்து, தொடர்ச்சியாகத் தும்மல் வந்து, கண்ணில் நீர் கோர்க்க, அப்போதே பொடி போடும் ஆசையை விட்டுவிட்டான். வாங்கிக் கொடுப்பதோடு சரி.

அப்பா பொடி போடுவது பற்றி விஷ்வாவுக்கு எந்த வருத்தமும் இல்லை. பொடி போடுவதெல்லாம் சிகரெட், மதுப்பழக்கங்களைப்போல் அப்படியொன்றும் உடலுக்குத் தீங்கானது இல்லையென்றும், அதிலொன்றும் கவுரவக் குறைச்சல் இல்லையென்றுமே நினைத்திருந்தான்.

ஆனால், ஒரு மருத்துவ நண்பன், சிகரெட்டைவிட பொடி போடும் பழக்கம் உடல்நலத்துக்கு மிகவும் கெடுதி என்று சொன்னபின்னரே, பேரறிஞர் அண்ணா புற்று நோயால் உயிரிழந்ததையெல்லாம் ஒப்பிட்டுப்பார்த்து, அப்பாவின் பழக்கம் தவறானதென்ற தெளிவுக்கு வந்தான்.

அவனும் சரி, அவனது அக்கா குழலியும் சரி, அப்பாவை அம்மா திட்டும்போதெல்லாம் தங்கள் பங்குக்கு அப்பாவினருகே வந்து ரகசியமாக, ‘‘அம்மாதான் திட்டுறாங்களே... மூக்குப்பொடி போடுறத விடலாம்லப்பா’’ என அன்புக்கோரிக்கையாகக் கேட்டுப் பார்ப்பார்கள்.

 ‘‘நானும் விட்டுடலாம்னு தான் பார்க்கிறேன்... முடிய மாட்டீங்குதே!’’ என்றுதான் பதிலளிப்பார். ஒருபோதும் தனது பொடி போடும் பழக்கத்தை ஆதரித்து விவாதிக்க மாட்டார். எப்போதும் அவரது கையிலோ, தூங்கும்போது அவரது தலையணை அருகிலோ மூக்குப்பொடி டப்பா மட்டும் அவருக்கு உற்றதுணையாக இருக்கும்.

பிள்ளைகளின் வேண்டுதலுக்காக ‘‘இனி பொடி போட மாட்டேன்...’’ எனக்கூறிவிட்டு, இரண்டு மூன்று நாட்களுக்கு பொடி போடாமல், அதற்குப்பதிலாக கடலை மிட்டாயை வாங்கிச் சாப்பிட்டெல்லாம் பார்ப்பார். கட்டுப்படுத்த முடியாத சூழலில் பிள்ளைகளிடமே, ஒரு நாளைக்கு ரெண்டே ரெண்டு தடவை பொடி போட்டுக்கறேனே என்பார். அப்படியே அந்த ரெண்டு நான்காகும்... நான்கு எட்டாகும்... பின் வழக்கம்போல் இஷ்டத்துக்கு பொடி போடத் தொடங்குவார்.

இதேபோல் பொடியை விடுவதற்காக நான்கைந்து முறை முயன்று, தோற்றிருக்கிறார்.ஒரு காலகட்டத்தில் அந்த என்.வி.எஸ். பட்டணம் பொடிக் கடைக்காரர் அந்தத் தொழிலையே விட்டுவிட்டு வேறொரு ஊருக்குச் சென்றபின்னர், வேறு வழியில்லாமல் டி.எஸ். பட்டணம் பொடிக்கு மாறினார். ஆனாலும், என்.வி.எஸ். போல இல்லையென்று அப்பா சொல்வதைக் கேட்டு விஷ்வாவுக்கு ஆச்சர்யமாக இருக்கும். ‘‘ரெண்டும் ஒரே பொடி தானப்பா? இதுல என்ன வித்தியாசம்?’’ என்று கேட்பான்.

‘‘இதைவிட அது காட்டமா இருக்கும்...’’ என்று அப்பா சொல்வதைக் கேட்டு, ‘நமக்கு எல்லா பொடியும் காட்டமாத்தான இருக்கு... அப்பாவுக்கு மட்டும் எப்படி வித்தியாசம் தெரியுதோ!’ என யோசிப்பான். ஆனால், கல்லூரிக் காலத்தில் வந்த சிகரெட் பழக்கத்தால், ஒவ்வொரு பிராண்ட் சிகரெட்டுக்கும் இருக்கும் வித்தியாசம் புரிந்ததால், மூக்குப்பொடியிலும் வித்தியாசம் இருக்குமென்பதைப் புரிந்துகொண்டான்.

காலங்கள் உருண்டோட, ராஜாராமன் ரிட்டயராகி, வீட்டிலேயே டியூசன் எடுத்தபடி, வீட்டுக்குள்ளேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்தபோது, அவருக்கும் அவரது மனைவிக்குமான மூக்குப்பொடி சண்டைகள் அதிகரிக்கத் தொடங்கின. அப்போது குழலிக்கு திருமணமாகி பேரக்குழந்தையும் வந்திருந்தது. ‘பேரக்குழந்தைக்கு மூக்குப்பொடி நெடி ஒத்துக்காது. மூக்குப்பொடி போடுவதாக இருந்தால் குழந்தையைத் தூக்கவே கூடா’தென்று தடுத்தார்.

இதெல்லாம் ராஜாராமனின் தன்மானத்தையே சீண்டுவதாக இருந்ததால் காலப்போக்கில் மனைவியோடான சண்டை, பேச்சுவார்த்தையே கட்டாகுமளவுக்கு போனது.
ஒருமுறை ராஜாராமனுக்கு ஹார்ட் அட்டாக் வர, மருத்துவமனையில் அட்மிட்டாகி, ஆபரேஷன் ஏதுமின்றி, உணவுப்பழக்கவழக்கத்தை மாற்றிக்கொள்ளும்படியான அறிவுறுத்தலோடு வீடுவந்து சேர்ந்தார்.

மருத்துவமனையிலும் மருத்துவருக்கே தெரியாமல் திருட்டுத்தனமாக மூக்குப்பொடியை உறிஞ்சியவர், மனைவியிடம் பிடிபட, ‘இந்த மனுஷன் என்னைக்கும் திருந்த மாட்டாரென’ மருத்துவமனையிலேயே அவரது மனைவி சண்டை பிடித்தார். 

பக்கத்து அறைகளில் இருந்தவர்களெல்லாம் வேடிக்கை பார்க்குமளவுக்கு அசிங்கமாகிவிட்டது.
தனது ஆசிரியப்பணியில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் பேப்பர்களைத் திருத்திய ராஜாராமனின் பொடிப்பழக்கத்திலிருந்து அவரைத் திருத்த முடியாமல், அவரோடு கத்திக்கத்தியே அவரது மனைவி உயிரையே விட்டுவிட்டார்.

மனைவியின் இறப்புக்குப்பின், அவரைக் காலமெல்லாம் திட்டிக்கொண்டிருந்த ஒரு குரல் இல்லாமல் போனது அவரை ரொம்பவே வெறுமையில் தள்ளியது. அப்போதும் அதே மூக்குப்பொடிதான் அவருக்கு துணையானது. 

ஆனால், இப்போது அவரது மனைவியின் இடத்தில் மகன் விஷ்வாவின் மனைவி அவரது காதுபடவே, ‘‘உங்கப்பாவோட மூக்குப்பொடித் துணியையெல்லாம் நான் துவைக்க முடியாது... வாஷிங் மெஷின்லயும் அதெல்லாம் போட்டா மத்த துணியெல்லாம் பாழாப்போகும். அந்த பழக்கத்த நிறுத்தச்சொல்லுங்க...’’ எனச்சொல்ல, அன்றிலிருந்து அவரது துண்டு, கர்ச்சீப்பையெல்லாம் அவர் குளிக்கும்போது அவரே அலசிப்போட்டுக்கொள்ளப் பழகினார். அப்போதுதான் மனைவியின் கோபம்... அருமை அவருக்குப் புரிந்தது.

அப்பா தனக்குத்தானே துண்டு, கர்ச்சீப்பை துவைப்பது பார்த்து விஷ்வாவுக்கு தாங்க முடியவில்லை. மனைவியைக் கடுமையாகக் கண்டித்தவன், அப்பாவிடம் வந்து, ‘‘ஏம்ப்பா, இப்டியெல்லாம் கஷ்டப்பட்டு மூக்குப்பொடியப் போட்டுத்தான் ஆகணுமாப்பா? அதை விட்டால்தான் என்ன?’’ எனக் கேட்டபோது, ‘‘அம்மாவும் இப்ப இல்ல... எனக்கு இது மட்டும்தான் இனி...’’ எனச் சொன்னது கேட்டு அவனால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இப்போது உரிமையாகக் கோபிக்கக்கூட யாருமில்லாத நிலை ராஜாராமனுக்கு மன அழுத்தத்தை அதிகரித்தது. அந்த நினைப்பிலேயே அவரது உடல் பலகீனமாகி, தனது அறைக்குள்ளேயே பெரும்பாலும் முடங்கிப்போனார். 

முன்புபோல் நினைத்தபோதெல்லாம் பொடி வாங்க இயலாததால் பேப்பர் போடுபவரிடம் சொல்லி, பெரிய டப்பாவாக பொடியை வாங்கி வைத்துக்கொண்டு, அதிலிருந்து பொடி டப்பிக்கு நிதானமாக மாற்றி நிரப்பிப் பயன்படுத்தப் பழகினார்.

இந்நிலையில், திடீரென ஒருநாள் ராஜாராமன் மயக்கமாகி விழ, அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தார்கள். பல்வேறு சோதனைகளுக்குப்பின் மூளையில் நுண்ணிய இரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். 

மயக்கத்திலிருந்து சுயநினைவுக்கு அவர் வந்தபோதும், பெரிய அளவுக்கு அவருக்கு நினைவு தப்பியிருந்தது. அவரால் முன்போல் பேனா பிடித்து எழுத முடியவில்லை. கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அவரது மனைவியின் இறப்பே அவருக்கு நினைவில்லாமல் ‘உங்கம்மா எங்கே’யென விசாரித்தபோது விஷ்வாவாலும், குழலியாலும் தாங்கவே முடியவில்லை.

இனி ஓரளவுக்குத்தான் நினைவு திரும்புமெனக்கூறி, வீட்டுக்கே அனுப்பிவிட்டார் மருத்துவர். வீட்டில் ராஜாராமனைப் படுக்கவைப்பதும், அமர வைப்பதும், உணவு ஊட்டிவிடுவதும், டயபர் மாற்றுவதுமாக குழந்தைபோலவே மாறிவிட்டார். தாத்தாவையே பார்த்துக்கொண்டிருந்த குழலியின் மகன், ராஜாராமனின் அறைக்குச் சென்று, அவர் பயன்படுத்திய பொடி டப்பாவை எடுத்துவந்தான்.

அதை அவரது இடக்கையில் கொடுக்க, அவரால் அதைப் பிடிக்கவே முடியாமல் தடுமாறினார். கைக்கு அழுத்தம் கொடுக்க, மெல்ல இறுகப் பற்றினார். பின்பு அவரது வலது கையை எடுத்து பொடி டப்பாவின் மேல் வைக்க....மெல்ல இரு விரல்களால் பொடியை எடுத்தவர் கையைத் தூக்கத் தடுமாற, மெல்ல வலது கையைப் பிடித்துத் தூக்கி  மூக்கினருகே நீட்ட, அந்த வாசம் உணரவும், ‘சர்ர்ர்’ரென உறிஞ்சிவிட்டு, தும்மல் போட, அவரது கண்ணில் நீர்கோர்த்தது.அவரது பிள்ளைகள் இருவருக்கும் மீண்டும் அப்பாவைப் பார்த்த மகிழ்ச்சியில் கண்கள் குளமாகின!  

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்