மின்சாரம் இல்லாத உணவகம்!



இந்தியா முழுவதும் லட்சக்கணக்கில்  உணவகங்கள் உள்ளன. மாலை நேரங்களில் சாலையின் ஓரத்தில் இயங்கும் தள்ளுவண்டி உணவகம் முதல் நட்சத்திர ஹோட்டல்களில் அமைந்திருக்கும் சொகுசான உணவகங்கள் வரையிலான அனைத்து உணவகங்களும் இயங்குவதற்கு மின்சாரம் அவசியம். 
இதில் ஐம்பது சதவீத உணவகங்களில் எப்போதாவது மின்சாரத் தடை ஏற்பட்டால், அடுத்த நிமிடமே ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வந்துவிடும். அந்தளவுக்கு ஏற்பாடு செய்திருப்பார்கள்.

இந்நிலையில் இந்தியாவில் மின்சாரமே பயன்படுத்தப்படாமல் ஓர் உணவகம் இயங்கி வருகிறது. அதன் பெயர், ‘மோகன் மஹால்’. ஜெய்ப்பூரில் அரண்மனை போல கம்பீரமாக அமைந்திருக்கிறது, ‘த லீலா பேலஸ்’ எனும் நட்சத்திர ஹோட்டல். 

இந்த ஹோட்டலுக்குள்தான் வீற்றிருக்கிறது, ‘மோகன் மஹால்’. இந்தியாவில் மின்சாரம் பயன்படுத்தப்படாத முதல் உணவகம் இதுதான். இங்கே வெளிச்சத்துக்கு மெழுகுவர்த்தியை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

கண்களைக் கூசாமல் மின்னுகின்ற கண்ணாடிச் சுவர்கள், அழகழகான வளைவுகளைக் கொண்ட நுழைவாயில், தனித்துவமான காற்று, பிரசித்திபெற்ற அரண்மனையைப் போன்ற உள் கட்டமைப்புகள், மனதை அமைதிப்படுத்தும் சுவர் அலங்காரங்கள், உயர்தரமான உணவு மேசைகள் மற்றும் இருக்கைகள் என  வியக்க வைக்கிறது, ‘மோகன் மஹால்’.

முகலாயர்களின் கட்டடக்கலையைப் பின்பற்றி இந்த உணவகத்தை டிசைன் செய்திருக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கட்டடக் கலைஞர்கள், 3 வருடம் வேலை செய்து இந்த உணவகத்தைக் கட்டியிருக்கின்றனர்.

இந்த உணவகத்தின் சுவர், தரை என அனைத்தும் 3.5 லட்சம் கண்ணாடிகளால் ஆனது. அந்த கண்ணாடிகளின் மீது மெழுகுவர்த்திகளின் வெளிச்சம் பிரதிபலிப்பதைப் பார்ப்பதற்காகவே வாடிக்கையாளர்கள் வருகின்றனராம். 

உள் கட்டமைப்பைத் தாண்டி, இங்கே கிடைக்கும் உணவுகளின் சுவையும் அள்ளுகிறது என்கின்றனர். இதுபோக வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக லைவ்வில் இராஜஸ்தானி இசை நிகழ்வும் நடக்கும்.  

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே மதிய உணவு சேவை இருக்கிறது. தினமும் இரவு உணவு கிடைக்கும். பல்வேறு இடங்களிலிருந்து இந்த உணவகத்துக்கு வாடிக்கையாளர்கள் வருகின்றனர். 

அதனால் முன்பதிவு அவசியம். பாதுகாப்பு கருதி 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதியில்லை. உணவைத் தாண்டி, வித்தியாசமான, மறக்க முடியாத அனுபவத்தைத் தேடுபவர்கள் இந்த உணவகத்துக்கு விசிட் அடிக்கலாம்.

த.சக்திவேல்