Must Watch
 கிண்டா பிரக்னன்ட் ‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஆங்கிலப்படம், ‘கிண்டா பிரக்னன்ட்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. சிறுமிகளான லைனியும், கேட்டும் நெருங்கிய நண்பர்கள். லைனி குழந்தையைப் பெற்றெடுப்பது போலவும், கேட் உடன் இருப்பது போலவும் கற்பனை செய்து விளையாடுகின்றனர். இருவரும் வளர்ந்த பிறகு ஒரே பள்ளியில் ஆசிரியைகளாக வேலை செய்கின்றனர். லைனிக்கு அம்மாவாக வேண்டும் என்பதுதான் பெருங்கனவு.
இந்நிலையில் கேட்டுக்குக் கல்யாணமாகி, கர்ப்பமடைகிறாள். லைனியின் பாய் ஃபிரண்ட் வெளியே செல்ல அழைக்கிறான். இருவருக்கும் இடையில் பிரச்னை உருவாகிறது. மன உளைச்சலுக்கு ஆளாகும் லைனி, பள்ளியிலும் சரியாக வேலை செய்ய முடியாமல் திணறுகிறாள். கேட் கர்ப்பமடைந்த விஷயம் தெரிய வர, அவளது ஏக்கம் அதிகமாகிறது. இதுபோக லைனியைவிட இளம் ஆசிரியை ஒருவரும் கர்ப்பமாக இருக்கிறார். இது மேலும் லைனியை ஏக்கம் கொள்ள வைக்கிறது. இச்சூழலில் லைனி என்ன செய்தாள் என்பதே நகைச்சுவை திரைக்கதை. கல்கலப்பான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் டைலர் ஸ்பைண்டெல்.
பொகோட்டா: சிட்டி ஆஃப் த லாஸ்ட்
கொரியன் பட விரும்பிகள் தவறவிடக்கூடாத ஒரு க்ரைம் திரில்லர் , ‘பொகோட்டா : சிட்டி ஆஃப் த லாஸ்ட்’. இப்போது ‘நெட்பிளிக்ஸில்’ காணக்கிடைக்கிறது இந்த கொரியன் படம். தொண்ணூறுகளில் ஆசியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இளைஞன் ஹீயின் குடும்பம் வாழ்வாதாரத்துக்குத் திணறுகிறது. பிழைப்பைத் தேடி குடும்பத்துடன் பொகோட்டா நகரத்துக்குக் குடிபெயர்கிறது ஹீயின் குடும்பம்.
முன்பின் பழக்கமில்லாத ஓர் இடம் பொகோட்டா. 19 வயதான ஹீ, பணம் ஈட்டுவதற்கான வழிகளைத் தேடுகிறான். கொரியன் வணிகர்களைத் தன் கைக்குள் வைத்திருக்கும் பார்க் என்பவரிடம் வேலை செய்ய ஆரம்பிக்கிறான் ஹீ. பார்க்கிற்கு ஹீயை ரொம்ப பிடித்துப் போகிறது. பார்க்கின் சட்டத்துக்கு விரோதமான பிசினஸில் ஹீ ஈடுபட ஆரம்பிக்கிறான். அப்போது ஒரு முறை பார்க்கின் பொருட்கள் சுங்கத்துறையிடம் மாட்டாமல் தப்பிப்பதற்கு ஹீ உதவ, சூடுபிடிக்கிறது திரைக்கதை.
ஆரம்பம் முதல் இறுதிவரை எங்கேயும் சலிப்புத் தட்டாமல் சுவாரஸ்யமாகச் செல்கிறது இந்தப் படம். வெறும் க்ரைம் திரில்லராக மட்டுமல்லாமல், பொருளாதார நெருக்கடி களின் பாதிப்பையும் கோடிட்டுக் காட்டுகிறது இந்தப் படம். இதன் இயக்குநர் கிம் சியோங் ஜி.
த மேக்தா பாய்ஸ்
‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகியிருக்கும் இந்திப் படம் இது. மும்பையில் வசித்து வரும் இளம் ஆர்க்கிடெக்ட், அமய் மேத்தா. எப்போதுமே வேலை என்றே இருப்பவன். தன்னுடைய டிசைனை பாஸிடம் காட்டி, அவரது பாராட்டுகளைப் பெற விரும்புகிறான் அமய். ஆனால், தன்னம்பிக்கை குறைவால் தன் டிசைன்களை அவன் பாஸிடம் காட்டுவதில்லை. டிசைனில் ஏதோவொரு குறை இருக்கிறது என்று தவிர்த்துவிடுகிறான். அவனுடைய காதலி “நீதான் பெஸ்ட்...’’ என்று நம்பிக்கை தந்து அமயை ஊக்குவிக்கிறாள்.
இச்சூழலில் அமய்யின் அம்மா இறந்துவிடுகிறார். அம்மாவின் இறுதிச்சடங்கிற்காக சொந்த ஊருக்குச் செல்கிறான் அமய். அப்பாவுடன் அமய்க்கு நல்ல உறவு இல்லை. இருவருக்கும் இடையில் எப்போதுமே பிரச்னை.
அதனால் அமய்யின் அப்பா வெளிநாடு செல்லும் திட்டத்தில் இருக்கிறார். அம்மாவின் இறுதிச்சடங்கு முடிந்த பிறகு அப்பாவும் அமய்யும் ஒரே இடத்தில் இரண்டு நாட்கள் இருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த இரண்டு நாட்களில் இருவருக்குமிடையில் என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதே மீதிக்கதை. படத்தின் இயக்குநர் பொம்மன் இரானி. மர்யாதே பிரஸ்னே
‘அமேசான் ப்ரைமி’ல் பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்குன் கன்னட மொழிப்படம் , ‘மர்யாதே பிரஸ்னே’. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்களான சூரி, சதிஷா, மஞ்சா ஆகிய மூவரும் பல வருடங்களாக நெருங்கிய நண்பர்கள். பெரிய அரசியல்வாதியாகி, மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பது சூரியின் கனவு.
உணவு டெலிவரி செய்யும் வேலையைச் செய்து வருகிறான் சதிஷா. அவனுடைய தந்தைக்கு ஞாபகமறதி பிரச்னை இருக்கிறது. அம்மா தினமும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். மஞ்சா கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். பெங்களூருக்கு வருகின்ற தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் படுகின்ற அவஸ்தைகளை மூன்று நண்பர்களின் வாழ்க்கையும் பிரதிபலிக்கின்றது. இந்நிலையில் சதிஷாவின் பிறந்த நாள் வருகிறது.
கொண்டாட்டத்துக்குப் பிறகு ஒரு கார் விபத்தில் மரணமடைகிறான் சதிஷா. இந்த விபத்துக்குப் பின்னணியில் ராக்கி என்ற பணக்காரன் இருக்கிறான். சூரியும் மஞ்சாவும் சேர்ந்து எப்படி ராக்கியைப் பழிவாங்குகின்றனர் என்பதே மீதிக்கதை. பழிவாங்குவதை மட்டுமே முக்கியமாக வைக்காமல், வர்க்க பேத அரசியலைப் பேசியிருக்கிறது இந்தப் படம். இதன் இயக்குநர் நாகராஜ் சோமயாஜி.
தொகுப்பு: த.சக்திவேல்
|