களைகட்டும் மகா கும்பமேளா...



கடந்த ஒரு மாதமாகவே இந்தியாவின் அத்தனை ஊடகங்களிலும் தொடர்ந்து இடம்பெற்று வரும் செய்தி பிரயாக்ராஜில் (முந்தைய பெயர் அலகாபாத்) நடந்துவரும் மகா கும்பமேளாதான். இது பட்ஜெட் பரபரப்பைவிட விஞ்சிவிட்டது என்றால் வியப்பில்லை.ஆரம்பத்தில் இந்தக் கும்பமேளாவிற்கு வந்த அகோரிகளும், நாக சாதுக்களும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டனர். பின்னர் பாசிமணி விற்ற பெண்மணி ஒருவர் புகழ்பெற்றார்.

இதனையடுத்து நடிகை மம்தா குல்கர்னி துறவறம் பூண்டதும், பின்னர் அந்த அமைப்பிலிருந்தே அவர் நீக்கப்பட்டதும் பேசுபொருளாகின. தொடர்ந்து தை அமாவாசை அன்று இரவில் புனித நீராட கூட்டமாகத் திரண்ட பலர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தது இந்தியாவை உலுக்கியது. பிறகு பிரதமர் மோடி உள்பட பல்வேறு விவிஐபிகள் புனித நீராடினர். 
குறிப்பாக ஒன்றிய அமைச்சர்கள், பூடான் அரசர், பல்வேறு நாட்டைச் சேர்ந்த தூதர்கள் எனப் பலர் கும்பமேளாவில் கலந்துகொண்டு பூஜித்தனர். இப்படி நாளொரு பொழுதும் பொழுதொரு வண்ணமுமாக மகா கும்பமேளா நடந்து வருகிறது.

கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்வு பிப்ரவரி 26ம் தேதி வரை நடக்கவுள்ளது. மொத்தமாக 45 நாட்கள் கொண்ட இந்த மகா கும்பமேளா பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

*கும்பமேளா என்பது...

பொதுவாக கும்பமேளா, உலகின் ஓர் அமைதியான ஆன்மிக திருவிழா என வர்ணிக்கப்படுகிறது. குறிப்பாக பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியிலிருந்து தங்கள் ஆன்மாக்களை விடுவித்து உலகில் உள்ள தீமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் இந்தக் கும்பமேளாவில் கூடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகின்றனர்.

புராணத்தின்படி, பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தத்தின் புனித குடத்திற்காக (கும்பம்) தேவர்களும் அசுரர்களும் சண்டையிட்டனர். அப்போது பகவான் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமிர்த கும்பத்தை எடுத்துச் சென்றார். 
அப்போது அதன் சில துளிகள் பூமியின் ஹரித்துவார், உஜ்ஜயினி, நாசிக் மற்றும் பிரயாக்ராஜ் என நான்கு புனித தலங்களில் விழுந்தன.பகவான் விஷ்ணுவின் இந்தப் பயணம் 12 நாட்கள் நீடித்ததாகக் கூறப்படுகிறது. இது 12 மனித ஆண்டுகளுக்குச் சமம். இதனைக் கொண்டாடும் விதமாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதே கும்பமேளா.

இதில் அமிர்தம் விழுந்ததாகச் சொல்லப்படும் இந்த நான்கு நகரங்களில் நடைபெறும் கும்பமேளாவே சிறப்பு வாய்ந்ததெனக் கொண்டாடப்படுகிறது. இதிலும் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளா கூடுதல் சிறப்பைக் கொண்டுள்ளது. 
இதற்குக் காரணம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி என மூன்று நதிகள் சங்கமிப்பதும், படைக்கும் கடவுளான பிரம்மா இங்குள்ள தசாஷ்வமேத படித்துறையில் அஸ்வமேத யாகம் செய்து பிரபஞ்சத்தைப் படைத்தார் என்ற நம்பிக்கையுமே ஆகும்.   

*கும்பமேளாவின் நான்கு வகைகள்...

மொத்தம் நான்கு வகையான கும்பமேளாக்கள் இருக்கின்றன. முதலில் மகா மேளா. இது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் பிரயாக்ராஜில் மட்டுமே நடக்கும் நிகழ்வாகும். இது கும்பமேளா எனச் சொல்லப்படுவதில்லை. மகா மேளா என்றே குறிப்பிடப்படுகிறது. அப்போது பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடி கடவுளை வணங்குகின்றனர்.

இரண்டாவது ஆர்த், அதாவது அர்த்த கும்பமேளா. இதில் ஆர்த் (அர்த்த) என்றால் பாதி எனப் பொருள்படும். ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் ஒருமுறை இந்தக் கும்பமேளா ஹரித்துவார் மற்றும் பிரயாக்ராஜில் நடக்கும். 

இது பூர்ண கும்பமேளாவிற்கு தயார்படுத்தும் விதமாக நடத்தப்படுகிறது. மூன்றாவது, பூர்ண கும்பமேளா. இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹரித்துவார், உஜ்ஜைன், நாசிக் மற்றும் பிரயாக்ராஜ் என நான்கு இடங்களில் நடத்தப்படுகிறது. இதற்கான நேரமும், காலமும் வியாழன் கோள், சூரியன், சந்திரன் ஆகியவற்றின் இடநிலைகளைப் பொறுத்துதீர்மானிக்கப்படுகிறது.

குறிப்பாக இந்த பூர்ண கும்பமேளா வியாழன் கோள் ஒருமுறை சூரியனைச் சுற்றிவர எடுக்கும் 12 ஆண்டு கால முடிவில் நடத்தப்படுகிறது. இதேபோல்தான் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம் கொண்டாடப்படுகிறது. இடைப்பட்ட ஆண்டுகளில் இதுவே மாசிமகம் திருவிழாவாக நடக்கிறது.

அடுத்து நான்காவதாக மகா கும்பமேளா. இதுவே அதிக சக்தி வாய்ந்தது என நம்பப்படுகிறது. அதுமட்டுமல்ல. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது. இதனை கோள்களின் சேர்க்கையைக் கொண்டு தீர்மானிக்கின்றனர். குறிப்பாக, 12 பூர்ண கும்பமேளாக்கள் சேர்ந்தது ஒரு மகா கும்பமேளா. இது பிரயாக்ராஜில் மட்டுமே நடக்கும் நிகழ்வாகும். அப்படியாக இந்த ஆண்டு மகா கும்பமேளா வந்துள்ளது.

இது ஒருவர் வாழ்வில் அரிதாக வரும் நிகழ்வு என்பதால் உலகின் பல இடங்களிலிருந்தும் மக்கள் பிரயாக்ராஜில் குவிந்துள்ளனர். இந்த மகா கும்பமேளா, மகர சங்கராந்தி அன்று துவங்கி மகா சிவராத்திரி வரை நடக்கிறது. இந்நேரம் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் நீராடினால் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.  

இதனால் மகா கும்பமேளாவிற்கு அனைத்து மதப் பிரிவுகளிலிருந்தும் யாத்ரீகர்கள் வருவதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன் கடுமையான ஆன்மிக ஒழுக்கத்தைப் பின்பற்றும் துறவிகள், நாக சாதுக்கள், அகோரிகள் ஆகியோர் கும்பமேளாவின்போது மட்டுமே தங்கள் தனிமையை விட்டு வெளியேறி இந்த சங்கமத்திற்குள் ஐக்கியமாகின்றனர்.

*நாக சாதுக்களும், அகோரிகளும்...

உலக உடைமைகளையும் ஆசைகளையும் துறந்து ஆன்மி கத்திற்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் நாக சாதுக்கள். முதலில் அகதா எனப்படும் ஆன்மிகப் பாதையைத் தேர்வு செய்து நாளடைவில் பல்வேறு கட்ட சோதனைகள், சவால்களுக்குப் பிறகு நாக சாதுக்களாக மாறுகின்றனர்.

ஆடைகளின்றி, உடல் முழுவதும் சாம்பல் பூசியபடி எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கடுமையான ஒழுக்கம், யோகா, தியானம் என இருப்பவர்கள் இவர்கள். அவர்களின் இறுதி இலக்கான மோட்சத்தை அடைய தனிமையில் அடர்ந்த வனங்கள், குகைகள் என மறைவான இடத்தில் வாழ்வார்கள்.

அப்படிப்பட்டவர்கள் கும்பமேளா, மகா கும்பமேளா காலங்களில் மட்டுமே வெளியே வருவார்கள். இவர்களில் பெண் நாக சாதுக்களும் உள்ளனர். இவர்கள் காவி உடையணிந்து ஆன்மிக வாழ்க்கையை மேற்கொள்பவர்கள். 

இவர்களும் இந்த மகா கும்பமேளாவில் கலந்துகொண்டுள்ளனர். இந்த மகா கும்பமேளாவில் நாக சாதுக்கள் பிரம்மாண்ட ஊர்வலங்கள், திரிசூலங்கள் மற்றும் வாள்களுடன் வலம் வருவது என இருக்கின்றனர். இதனால், இவர்களைக் காணவும், வணங்கி ஆசீர்வாதம் பெறவும் மக்கள் அதிக அளவில் கூடுகின்றனர். தவிர, இந்த மகா கும்பமேளாவில் சில நாக சாதுக்கள் கார், பைக் ஓட்டி வந்து பலரை கவனிக்கவும் வைத்தனர்.

இதேபோல் அகோரிகளும் கூட்டமாக இந்த கும்பமேளாவில் கலந்துகொண்டுள்ளனர். அகோரிகளும், நாக சாதுக்களும் சிவனை வழிபடுபவர்கள் என்றாலும் இவர்களிடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. உணவு, வாழ்க்கைமுறை, சமூகத்துடன் சேர்ந்திருப்பது என பல விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன.

*கூட்ட நெரிசல்...

இந்த மகா கும்பமேளாவில் நடந்த பெரிய அசம்பாவித சம்பவம் தை அமாவாசை அன்று கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததுதான். கும்பமேளா நடக்கும் 45 நாட்களும் நீராடலாம் என்றாலும் குறிப்பிட்ட ஆறு தினங்கள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.இதில் கடந்த 13ம் தேதி வந்த பவுச பூர்ணிமா, 14ம் தேதி நடந்த மகர சங்கராந்தி, 29ம் தேதி வந்த மவுனி அமாவாசை, பிப் 3ம் தேதி வந்த பசந்த் பஞ்சமி, 12ம் தேதி வந்த மாகி பூர்ணிமா, 26ம் தேதி வரவுள்ள மகா சிவராத்திரி ஆகியவை அடங்கும்.

மவுனி அமாவாசை அன்று அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் திரிவேணி சங்கமத்தில் குளிப்பது, ‘அமிர்த ஸ்நானம்’ என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு குளித்தால் செய்த பாவங்கள் எல்லாம் கழுவப்பட்டு புனிதமடைந்து மோட்சத்திற்குச் செல்லலாம் என்றும், இனி பிறப்பு, இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுதலை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கை இந்து மத மக்கள் மனங்களில் பாரம்பரியமாக ஆழமாகப் பதிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் ஜனவரி 29 மவுனி அமாவாசை அன்று வழக்கத்தை விட அதிகமாக மக்கள் நீராடக் கூடினர். அந்தக் கூட்ட நெரிசலில் சிக்கியே உயிரிழப்புகள் நடந்தன.

*தொடர்ந்து நடக்கும் உயிரிழப்புகள்...

கும்ப மேளாக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவது ஒரு தொடர்கதையாக இருக்கிறது. வட இந்தியாவில் பிரயாக்ராஜ், ஹரித்துவார், நாசிக், உஜ்ஜயினி ஆகிய நான்கு இடங்களிலும் ஏதாவது ஓரிடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடந்து வருகிறது.

இதில் ஒவ்வொரு முறையும் பல உயிர்கள் பலியாகி வருவது வாடிக்கையாக உள்ளது. 1954 பிப்ரவரியில் இதே பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் 800 பேர் இறந்துள்ளனர். 2013 பிப்ரவரியில் நடந்த கும்ப மேளாவில் 42 பேர் உயிழந்துள்ளனர்.எனவே, இனிவரும் கும்பமேளாவில் இதுபோன்ற துயரங்கள் ஏற்படாதவண்ணம் ஒன்றிய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பு.

*வசதிகளும் வருவாயும்...

உத்தரப்பிரதேச அரசு, இந்த மகா கும்பமேளாவிற்கு முன்பே சங்கமம் பகுதியில் 12 கிமீ தொலைவிற்கு குளியல் தளங்களை உருவாக்கியது. இதில் கங்கை நதியில் உள்ள தசாஷ்வமேத தளம் 110 மீட்டர் நீளமும், 95 மீட்டர் அகலம் உடையது. இதில் உட்கார்வதற்கான இடம், பார்க்கிங், ஆர்த்தி பகுதி, தியான மையம் என பல வசதிகளைச் செய்துள்ளது.

இதற்கடுத்து யமுனை நதியில் கிளா தளம் 60 மீட்டர் நீளமும், 70 மீட்டர் அகலமும் கொண்டது. இதனுடன் சரஸ்வதி குளியல் தளம், மோரி தளம், காளி தளம், ஷஹட்நாக் தளம், மஹேவா தளம் ஆகியவை இருக்கின்றன. இருந்தும் கட்டுக்கடங்காத கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறும் நிலையே ஏற்படுகிறது.  

இதுதவிர விவிஐபிக்கள் குளிப்பதற்காக மிதக்கும் ஜெட்டிகளும் நதிகளின் சங்கமம் பகுதியில் பல்வேறு வசதிகளுடன் ஒரு தனியார் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளன. 4 முதல் 5 பேர் வரை அமரும் வகையிலான இந்த ஜெட்டிகளில் லவுஞ்ச், பிரத்யேக உடைமாற்றும் அறை, இரவில் குளிப்பதற்கு வசதியாக சோலார் லைட் என பாதுகாப்பான நீராடலுக்கு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்ததாக இந்த மகா கும்பமேளாவில் இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலாசார நிகழ்வுகளும் தினம் தினம் நடந்துவருகின்றன. இந்த மகா கும்பமேளாவிற்கு 45 நாட்களில் 45 கோடிப் பேர் வருவார்கள் என உத்தரப்பிரதேச அரசு முன்பே கணக்கிட்டது.இதற்காக அரசு தோராயமாக 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவழிக்கிறது. 

ஒவ்வொரு பார்வையாளரும் இந்த டிரிப்பிற்கு சுமார் 5 ஆயிரம் ரூபாய் செலவழித்தால்கூட ரூ.2 லட்சம் கோடி வருவாய் எளிதாக வரும் என அகில இந்திய வர்த்தகக் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது.

இதில் ஹோட்டல்கள், லாட்ஜ்கள், கெஸ்ட்ஹவுஸ்கள் வழியாக மட்டுமே 40 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்கிறது வர்த்தகக் கூட்டமைப்பின் கணிப்பு. அவர்கள் கணிப்பு போலவே இப்போதுவரை மகா கும்பமேளாவிற்கு 37 கோடிப் பேர்களுக்கும் மேல் வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றன தகவல்கள்.

பேராச்சி கண்ணன்