யார் இந்த சந்திரிகா டாண்டன்?



திரைப்படத் துறைக்கு ஆஸ்கர் விருது, தொலைக்காட்சித் துறைக்கு எம்மி விருது, நாடகத் துறைக்கு டோனி விருது போல வருடந்தோறும் இசைத் துறையில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு ‘கிராமி விருது’ வழங்கப்படுகிறது. 
அதுவும் இசைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது. சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸில், 67வது கிராமி விருது வழங்கும் விழா நடந்தது. இதில் ‘பெஸ்ட் நியூ ஏஜ், ஆம்பியன்ட் ஆர் சான்ட் ஆல்பம்’ என்ற கிராமி விருதைத் தட்டியிருக்கிறார் சந்திரிகா டாண்டன் என்கிற அமெரிக்க வாழ் இந்தியர்.

யார் இந்த சந்திரிகா டாண்டன்?

சென்னையில் பிறந்து, வளர்ந்தவர் சந்திரிகா. ‘பெப்சி’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த இந்திரா நூயியின் சகோதரி இவர். சந்திரிகாவின் அம்மா ஓர் இசைக் கலைஞர்; தந்தை வங்கியில் வேலை செய்தார். 
சந்திரிகாவுக்கு ஒரு சகோதரரும் இருக்கிறார். குடும்பத்தில் முதல் மகள் என்பதால், 18 வயதிலேயே சந்திரிகாவுக்குத் திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், சந்திரிகாவுக்கு மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது ஆசை.

திருமண ஏற்பாடுகள் துரிதமாக நடந்ததால், சந்திரிகாவைக் கல்லூரிக்கு அனுப்ப அவரது அம்மா மறுத்தார். சந்திரிகாவின் தாத்தா அவரது கல்விக்கு உறுதுணையாக இருந்தார். மேற்படிப்புக்கு அம்மா மறுத்ததால் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்திருக்கிறார்.சந்திரிகா படித்த பள்ளியின் தலைமையாசிரியை, அவரது அம்மாவைச் சமாதானம் செய்து, சந்திரிகா கல்லூரியில் சேர உதவியிருக்கிறார்.

இளங்கலைப் படிப்பை முடித்த பிறகு, தாத்தாவைப் போல சட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார். ஆம்; சந்திரிகாவின் தாத்தா நீதிபதியாக இருந்தவர். ஆனால், சந்திரிகாவுக்குப் பாடம் எடுத்த பேராசிரியர் ஒருவர், அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்மில் சேர்ந்து படித்து, பிசினஸில் ஈடுபடச் சொல்லியிருக்கிறார். 

பேராசிரியரின் வழிகாட்டல் சந்திரிகாவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. ஐஐஎம்மில் சேர்வது அவ்வளவு சுலபமல்ல. ஆயிரக்கணக்கானோர் ஐஐஎம், அகமதாபாத்தில் சேர்வதற்கு விண்ணப்பித்து, அதற்கான நுழைவுத்தேர்வை எழுதினார்கள்.

தேர்வெழுதிய நூற்றுக்கணக்கான பெண்களில், எட்டு பெண்களுக்கு மட்டுமே ஐஐஎம்மில் இடம் கிடைத்தது. அந்த எட்டு பெண்களில் ஒருவர், சந்திரிகா என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றாகப் படித்து, 1975ல் ஐஐஎம்மில் பட்டப்படிப்பை முடித்தார். லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் அமைந்திருந்த சிட்டி பேங்கில் வேலை கிடைத்தது. 

அப்போது லெபனானில் உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற நிறுவனமான ‘மெக்கன்சி அண்ட் கம்பெனி’யில் உயர் பதவி வகித்தார். விரைவிலேயே அந்நிறுவனத்தில் பங்குதாரரும் ஆனார்.

‘மெக்கன்சி’யின் பங்குதாரரான முதல் இந்தியன் - அமெரிக்கன் சந்திரிகாதான். தொண்ணூறுகளில் ‘டாண்டன் கேப்பிடல் அசோசியேட்ஸ்’ எனும் நிறுவனத்தை ஆரம்பித்து, உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு ஆலோசகராக மாறினார். இதற்கிடையில்தான் தனது இசைப் பயணத்தையும் நிர்வகித்து வருகிறார்..இந்துஸ்தானி, கர்நாடிக், மேற்கத்திய பாரம்பரிய இசை வல்லுநர்களிடமிருந்து முறையாக இசைப் பயிற்சி பெற்றவர், சந்திரிகா. இவரது முதல் ஸ்டூடியோ ஆல்பம் ‘சோல் கால்’.

‘கிராமி’ விருதின் ‘சமகால உலக இசை’ என்ற பிரிவில் போட்டியிட்டு, இறுதி வரை சென்றது இந்த ஆல்பம். கடந்த வருடம் ‘திரிவேணி’ என்ற ஆல்பத்தை வெளியிட்டிருந்தார். இதற்குத்தான் ‘கிராமி’ விருது கிடைத்திருக்கிறது. இப்போது சந்திரிகாவின் வயது 70.

த.சக்திவேல்